Song 750

நீதந்த அழைப்பு

எனக்கொருஅழைப்பை நீகொடுத்தாய்
அதற்கென வரங்கள் சிலஅளித்தாய்
அதன்படி அனுதிம் வாழாமல்
அலசடிப் படுகிறேன் பலவற்றில்

இலக்கை என்றும் முன்வைத்து
நானும் ஓட நீயழைத்தாய்
ஆயினும் அடிக்கடி அதைவிடுத்து
அவதிப் படுகிறேன் பலநினைந்து

வலமும் இடமும்விலகாமல்
வகுத்துத் தந்த பாதையிலே
பொறுமையாய் ஓடி முடிசூட
போகும்படிதான் நீ சொன்னாய்

இலக்கை என்றோ துறந்துவிட்டேன்
இடமும் வலமும் ஓடிவிட்டேன்
இடையே பலமுறை நின்றுவிட்டேன்
இப்போ பாதையை மறந்துவிட்டேன்

இனிமேல் ஓடத் தெம்பில்லை
இலக்கும் சரியாய்த் தெரியவில்லை
இனிஎன்ன செய்ய புரியவில்லை
உன்னை விட்டால் கதியில்லை

அழைப்பை அடிக்கடி நிவுறுத்து
அதைவிட்டு விலகினால் பயமுறுத்து
அப்பவும் மீறினால் துன்புறுத்து
எப்படி யேனும் கரையேத்து

குருகுலம், 26-9-2017, இரவு 9.30

Song 749

பழிவாங்குதல்

பழிவாங்கத் தேவை
கடவுளுக் கில்லை
பழிவாங்க அவனும்
படைக்கவும் இல்லை

நம்பாவம் நம்மைத்
தொடர்ந்து பிடிக்கையில்
பழிவாங்க ஒருவன்
தேவையே இல்லை

நாம்செய்யும் தவறுக்கு
நாமன்றோ காரணம்
நமக்கது புரிந்தாலும்
ஏற்கத்தான் காணோம்

நமக்குள்ளே நாம்கொண்ட
பேதங்கள் ஆயிரம்
அதற்காக அவன்மீது
ஏன்குறை சொல்லணும்

தவறுக்குத் தண்டனை
நிச்சயம் உண்டு
யாராதைத் தருவது
எனும்கேள்வி கொண்டு

அதற்கானத் தீர்ப்பையும்
தாங்களே கண்டு
அதனை நிறைவேற்ற
முனைந்திடும் போது

மவுனமாய் மனசாட்சி
நம்மிடம் பேசும்
எவர்தந்த உரிமை
என்றுமே கேட்கும்

குற்றம் அற்றவன்
எரியட்டும் கல்லை
என்றுமே கல்லையும்
நம்மிடம் கொடுக்கும்

கொடுத்த கல்லுமோ
கைதளர வீழ்ந்தது
நம்காலை முதலிலே
பதமுமே பார்த்தது

நாமே நம்மை
பழிவாங்கிக் கொண்டபின்
எவரை குறைசொல்ல
எனும்கேவி எழுந்தது

குருகுலம், 26-9-2017, காலை. 11.10

Song 748

இதுவே நேரம்

திருவடி தேடி வருகின்ற நேரம்
திருமுகம் பார்த்து கிடக்கின்ற நேரம்
வேறே எதற்கும் வேலையே இல்லை
மற்றதை சிந்திக்க மனதுமே இல்லை

அமைதியாக நான் உன்னடி அமர்ந்து
அருளை மட்டும் மனதிலே நினைந்து
உறவை மட்டும் எண்ணி மகிழ்ந்து
உன்னுடன் பேசி இருந்திடும் நேரம்

அடங்க மறுக்கும் சிந்தையும் கூட
அமைதல் அடையும் உன்னடி நாட
சஞ்சலம் கொண்ட நெஞ்சமும் கூட
சற்றே அடங்கும் உன்னடி அமர

இதுபோன்ற தருணம் அடிக்கடி நாடி
என்மனம் ஏங்கும் திருவடி தேடி
அதனை அறிந்து நீவரும் போது
மனம் ஆனந்தம் கொள்ளும் பாடல்பாடி

இதற்கெனத் தந்தாய் இந்த வாழ்வு
எனக்கெனத் தந்தாய் இந்த மகிழ்வு
அதனால் அடைந்தேன் உன்னில் உயர்வு
அறியேன் அடிமை இனி ஒருத்தாழ்வு

துதிகள் பாடி போற்றிக் கொண்டாடி
தெய்வமே உன்னை வாழ்த்திப் பாடி
சன்னதி வந்தேன் உன்னடி தேடி
சரணம் அடைந்தேன் உன்னருள் நாடி

குருகுலம், 26-9-2017, காலை, 10.30

Song 747

அதனால் பாடுவேன்

பாடினால் பரவசம்
பாடுவேன் அவசியம்
பதம்தந்து மீட்டாய்
அதுவன்றோ அதிசயம்

பாடப் பாட
பக்தியும் பெருகுது
பக்தியும் பெருகிட
பாடலும் வருகுது

பாடலின் பொருளானாய்
பாடவரம் தந்தாய்
பாடியே தொழும்போது
மகிழ்ந்துமே வருகின்றாய்

பாட்டென்னும் பாமாலை
பலவிதம் புனைந்துனை
பாடியே பரவுதல்
பக்திக்கு அழகன்றோ

பலவிதப் பொருள்கொண்டு
பலவிதம் தொழுதாலும்
பாடல் ஒன்றுக்கு
அவையும் இணையாமோ

பலர்கூடி வேண்டினும்
பலசொல்லிப் போற்றினும்
பாடியே துதிக்காமல்
பக்திக்கு நிறைவுண்டோ

பக்தியை விளக்கிட
உரைபல சமைத்தாலும்
பாடலின் எளிமை
அவற்றுக்கும் வருமோ

பாட்டென்னும் மொழியோடு
பக்தியின் துணையோடு
பக்தரின் சபையோடு
பாடஉன் அருளுண்டு

குருகுலம், 25-9-2017, காலை. 6.00

Song 746

பணிவது எதற்கு

அறியாமல் இருந்தாலும்
அறிந்துனைத் தொழுதாலும்
அனைத்து உயிர்களும்
உனக்கே சொந்தம்

அறியாமல் இருந்தேன்
அறிந்துமே கொண்டேன்
அதனால் ஐயனே
அனுதினம் தொழுகிறேன்

அறியமனம் தந்தாய்
அறிந்திடும்வரம் தந்தாய்
அதனால் உன்னைப்
புரிந்துமே பணிகிறேன்

அறிய விழைவோருக்கு
அருகினில் இருக்கிறாய்
அழைத்தால் குரல்கேட்டு
ஓடியே வருகிறாய்

அறிய மனமின்றி
அறிந்திடும் திறனின்றி
அலைந்திடும் மனிதரை
பொறுத்துமே அருள்கின்றாய்

அறிந்தாலும் அதன்படி
வாழ இயலோர்க்கு*
(*இயலாதவர்களுக்கு)
அதனினும் அதிகம்
அருளை அளிக்கின்றாய்

அறிந்தும் அறியாத
அறிவிலி எனக்கோ
உன்னையே தந்து
ஐயனே மகிழ்கின்றாய்

அறிவேன் அறியேன்
அதற்காகக் கலங்கேன்
அடிமையை மீட்டாய்
அதைமட்டும் அறிந்தேன்

அதுபோதும் எனக்கு
அறிந்ததும் எதற்கு
அனுதினம் உன்னடி
பணிவது அதற்கு

குருகுலம், 25-9-2017 காலை 5.15

Song 745

உனக்குள்ள கடமை

கூப்பிட்டா போதும் வந்திட வேண்டும்
கூப்பிட்டு என்னைக் கேட்டிட வேண்டும்
எப்படி இருக்கிறாய் என்றுமே கேட்டு
என்னை அழைத்துநீ பேசிட வேண்டும்

இதைவிட உனக்கு வேறென்ன வேலை
என்போல் உனக்கு ஏதுண்டு கவலை
படைத்து உலகில் வைத்த பின்னே
பக்தனைப் புரப்பதே தலையாய வேலை

நெருக்கடி ஆயிரம் கொண்டுமே வாழ்வதால்
நினைத்திட எனக்கு நேரமே இல்லை
நேரமும் ஒதுக்கி உன்னிடம் வந்தும்
நின்று பேசிடும் நிலையிலே இல்லை

உடலோடு போராடி ஒருப்பக்கம் சோர
உலகோடு போராடி மறுப்பக்கம் சாய
இடையில் மனதோடு போராடி வீழ
எங்கிருந்து உன்னை நினைந்து கூப்பிட?

ஒருபக்கம் எனக்குள்ளே ஆயிரம் ஓலம்
மறுபக்கம் பலவித வெளியான தர்க்கம்
இவற்றிடை போராடி எத்தனை முயன்றும்
உன்னைக் கூப்பிட நேரமே காணோம்

இதையெல்லாம்நீ அறிந்த பின்னே
நீதானே எனைத்தேடி வரவேண்டும்
இருக்கின்ற நிலையை சரியாக அறிந்து
என்னோடு அமர்ந்து நீபேச வேண்டும்

மத்திகிரி, 20-9-2017, இரவு, 11.10

Song 744

இதுஎன் குணம்

இரக்கத்தை அறியேன்
இங்கிதம் அறியேன்
இன்சொல் ஒன்று
பேசிட அறியேன்

எதற் கெடுத்தாலும்
வாதம் செய்வேன்
எடுத்துச் சொன்னாலும்
கேட்க மறுப்பேன்

பணிவு அறியேன்
பண்பும் அறியேன்
பாசம் நேசம்
கொண்டிட அறியேன்

தானென்னும் எண்ணம்
தலைக்கு ஏற
தர்க்கங்கள் செய்து
வெல்ல முயல்வேன்

இதுபோல் எனது
குணத்தைச் சொல்ல
எண்களும் போதாது
எண்ணியே காட்ட

ஆனாலும் என்மீது
நீகொண்ட பரிவால்
அனைத்தும் அறிந்தும்
ஆட்கொண்டு உய்த்தாய்

அதைமட்டும் நாள்தோறும்
அடிமை எண்ணி
உளமாற உனைப்போற்றி
உன்னடிப் பணிகிறேன்

மத்திகிரி, 20-9-2017, மாலை, 5.30

Song 743

அறிந்து கொண்டேன்

கொண்டுமுன் செல்கிறாய்
கும்பிட்டுபின் வருகிறேன்
குருவே இதுவன்றி
செய்திட ஏதுமில்லை

குறைகளை எண்ணவில்லை
குற்றம்நீ காணவில்லை
கூறும்படி ஒன்றுமில்லை
கூப்பிட்டதும் ஓடிவந்தேன்

அதன்பின் நடந்ததெல்லாம்
அத்தனே நீயறிவாய்
எத்தனை செய்துமென்ன
என்னிடத்தில் பதிலுமில்லை

பின்னிட்டுப் பார்த்ததுண்டு
பேதலித்து நின்றதுண்டு
பித்தன்போல் உன்னைஏசி
நித்தம்நித்தம் வைததுண்டு

அத்தனையும் கேட்டுக்கொணடாய்
அமைதியாய் பொறுத்துக்கொண்டாய்
அமைதல் அடையும்மட்டும்
ஆறுதல் தந்துநின்றாய்

இத்தனை செயுதபின்னும்
எனக்குள்ள தயக்கமதை
எப்படிச் சொல்லிடுவேன்
என்னிடத்தில் வார்த்தையில்லை

போதுமினி சென்றுவிடு
பேதைஎன்னை விட்டுவிட்டு
பேசியே பயனுமில்லை
போதுமினி ஆளைவிடு

தனியே விடமறுத்து
தட்டினாலும் கைபிடித்து
உன்னிடத்தில் வந்தபின்னே
ஒருபோதும்கை விடமறுத்தாய்

உன்சொந்தம் ஆனபின்னே
என்னுரிமை ஏதுமில்லை
என்றுமே எடுத்துச்சொல்லி
தாங்கியே பிடித்துச்சென்றாய்

ஆதலால் பின்தொடர்ந்தேன்
அழைப்பை அறிந்துகொண்டேன்
அடிக்கடி சோர்ந்த போதும்
அழைப்பையும் ஏற்றுக்கொண்டேன்

மத்திகிரி, 19-9-2017, மாலை 5.30

Song 742

உனக்கென்னத் தெரியும்

உன்னோட போராட
எனக்குமே முடியாது
இதற்கினி என்னிடம்
தெம்புமே கிடையாது
புரிந்தாலும் புரியாது
போலவே நடித்தால்
புரியவைக்க இனி
எனக்கிங்கு ஆகாது
உனக்கு விளையாட
நான்தான் கிடைத்தேனா
உனக்கெது விருப்பமோ
அதுதான் நியாயமா
இதையெல்லாம் கேள்வி
கேட்கவும் கூடாதா
எனக்குள்ள உரிமையை
மறுக்கநீ முடியுமா
ஏதோ வந்தாச்சு
இதுவரை இருந்தாச்சு
இனியும் இருப்பதால்
உனக்கென்ன பயனாச்சு
போதும் வேண்டாம்
சீக்கிரம் எடுத்திடு
என்று வேண்டினால்
மறுக்கக் கூடாது
கேட்காமல் உலகுக்கு
நீயே அனுப்பினாய்
கேட்டாலும் எடுக்க
ஏன்நீ மறுக்கிறாய்
இதுஎன்ன ஒருபக்க
உரிமையும் ஆனது
இதற்கு நீயென்ன
இறைவனாய் இருப்பது
இத்தனை எரிச்சல்
எனக்குமே ஆகாது
எனநீ சொல்வது
தெளிவாகக் கேட்குது
வேடிக்கை பார்ப்பதே
வாடிக்கை ஆனபின்
வேறென்ன செய்ய
நீவழி சொல்லு
எரிச்சல் படத்தான்
எனக்குமே தெரியும்
என்பக்க நியாயம்
உனக்கென்னப் புரியும்
என்னவோ நீசெய்
என்னையேன் கேட்கணும்
இறைவனாய் இருப்பதும்
ஒருவிதம் கடினம்.

மத்திகிரி, 18.9.2017, மதியம் 3.00

Song 741

யுகம் போதாது

உன்னருள் நினைக்க
யுகமொன்று போதாது
உன்னன்பை நினைக்க
என்மனம் போதாது
உன்தன்மை எண்ண
என்சிந்தை போதாது
உன்சேவை செய்ய
வாழ்வொன்று போதாது
எமக்கு எல்லையை
அறிந்துதான் தந்தாய்
அதற்குள் வாழ்ந்து
முடித்திட வைத்தாய்
இதற்கு உள்ளாக
உன்னருள் எண்ணி
உய்யும் வழியை
எமக்குமே அளித்தாய்
அதற்குள் எத்தனை
வாழ்க்கை வாழ்கிறோம்
ஆயிரம் ஆயிரம்
வேடங்கள் போடுறோம்
இதற்கே நேரம்
போதலை என்று
இறுதியில் குறைகள்
பலவும் சொல்கிறோம்
இந்த சிறிய
ஒட்டத்தை ஓட
என்னென்ன எத்னம்
நாங்களும் செய்கிறோம்
அதனை ஓடி
முடிக்கும் முன்னே
நோக்கத்தை மறந்து
வாடியே நிற்கிறோம்
இதற்கே இத்தனை
பாடுகள் என்றால்
எம்எல்லை விரிந்தால்
இனிஎன்ன ஆகும்
அதனால் எம்மேல்
இறங்கி நீயும்
குறுகிய எல்லையை
கருணையாத் தந்தாய்
அதன் உள்ளாக
உன்னருள் அடைய
ஐயனே இறங்கி
வழியினை வகுத்தாய்
அதை அறிந்தோர்கள்
உய்ந்து மீள்வார்
அறியாத பேர்கள்
புலம்பியே மாள்வார்
அதனை அறிந்து
அடிக்கடி வந்து
உன்னருள் நினைத்து
உன்னடி பணிந்து
தந்த வாழ்வை
உன்னுள் வாழ்ந்து
தமியனும் உய்ய
பேரருள் புரிவாய்

திருப்பூந்துருத்தி, 14-9-2017, மாலை, 6.50