Monthly Archives: January 2000

Bhakti Song 1 – Come Let Us Worship Him

போற்றித் துதிப்போம்

 

பொழுது புலர்ந்தது புள்ளினம் கூவிற்று

போற்றித் துதிப்போம் புனிதன் (முக்தே)ஈசனை*

அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்

ஆனந்தப் பண்பாடி அண்ணலைப் போற்றுவோம்

பூவினம் மலர்ந்தது, பூதளம் விழித்திற்று

போற்றித் துதிப்போம் புனிதன் (முக்தே)ஈசனை

ஆலய மணி ஓசை அன்பரை அழைத்தது

ஆனந்தப் பண்பாடி அண்ணலைப் போற்றுவோம்

தூயவர் போற்றினர், தூதர்கள் பணிந்தனர்

துங்கவன் ஈசனின் தெய்வீக நாமத்தை

துயர் துடைப்போனை தூய்மை அளிப்போனை

தொழது பணிந்திட தொண்டர்கள் வாரீர்

தேசங்கள் போற்றின திருமறை வாழ்த்திற்று

திருப்பாதம் பணிந்துநாம் தினமும் வாழ்த்துவோம்.

 

 

Song 1 (Audio)

 

Comments

ஆரம்ப நாட்களில் முக்தேசனில் நான் கொண்ட பக்தியை ’அறிவுப்’ பூர்வமாக உணர்வதைக் காட்டிலும் அவனுடன் எனக்குள்ள உறவை கொண்டாடுவதிலேயே அதிகம் கவனம் செலுத்தினேன். சில குறிப்பிட்டவர்களைத் தவிர்த்து, இது அனேகமாக அனைத்து இந்துக்களுக்கும் உள்ள ஒரு ஆன்மீக நிலை. பெரும்பான்மையான இந்துக்கள் தங்களின் ’பக்தியைப்’ பற்றி சித்தாந்தத்தின் அடிப்படையில் புரிந்துகொள்வதைவிட, இறைவனுடன் தங்களுக்கு உள்ள தனிப்பட்ட உறவிலேயே அதிகம் நிறைவும், மகிழ்வும் அடைகின்றார்கள். நம் சமய வரம்பிற்கு அப்பாற்சென்று புதிய எண்ணங்களையும், கருத்துக்களையும், இறைவனையும் ஏறுக்கொள்கின்ற என்போன்றோருக்கு அறிவுப்பூர்வமாக தங்கள பக்தியை மறையின் அடிப்படையில் அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருந்தபோதும், என் ஆரம்ப நாட்களில் முக்தேசனுடன் எனக்குள்ள தொடர்பே அதிகமுக்கியமாக இருந்தது. சில சமயம் முக்தி வேதத்தின் பல சித்தாந்தங்களைப் புரிந்து கொள்வது எனக்கு கடினமாக இருந்தபோதெல்லாம், முக்தேசனுடன் எனக்குள்ள உறவே எனக்கு நங்கூரமாக உதவியது. சித்தாந்தக்கடலில் அறிவு பலமுறை அலைக்கழிக்கப்பட்டபோது, என் பக்தியே இறைவனுள் என்னை நிலை நிறுத்தியது.  என் ஆரம்பப்பாடலே இவ்வாறு அமைந்தது, அதுவும் எனக்கு மிகவும் பிடித்த பூபாளத்தில் இருந்தது மிகவும் மன நிறைவைத் தருகின்றது.

 

15-10-2014