Monthly Archives: November 2011

Tamil Songs 101-110

வாலாஜா பேட்டை மணி ஐயர், கொடைக்கானல் கூடுகைக்கு வர இயலாதது பற்றி எழுதிய போது, பதிலாக நான் எழுதிய கடிதம்:

 

101. பருப்பில்லாத கல்யாணம்

 

பருப்பில்லாத கல்யாணமாம்

மணி ஐயர் இல்லாத கூடுகையாம்

கேட்டதுண்டோ உலகினிலே

கேளீரோ இந்த வேடிக்கையை

உப்பில்லாத பத்தியம் உண்டு

உடல் நலம் இல்லாதவர்க்கு

உப்பே இல்லாமல் சாப்பிட்டால்

அதுவே நோயாகும் பிறகு

எனவே மணி இல்லாத கூடுகை

உப்பில்லாத உணவாகும், அதனால்

தப்பில்லாமல் கொடை வந்து

சுவையாக்க வேண்டும் கூடுகையை

 

30-04-1999. ஈரோடு.

 

மனித வாழ்வில் மட்டும் ஏன் இத்தகைய போராட்டம்? இதைப்பற்றி ஒரு வாலிபனுடன் பேசிய பிறகு எழுதிய பாடல்:

 

102.  எவ்வளவோ நமை

 

மிருகமாய் இருந்துவிட்டால்

எவ்வளவோ நன்மை

வேண்டாத போராட்டம்

பல இல்லாமல் வாழ

பகுத்தறிவு என ஒன்றை

பயனின்றி ஏன் தந்தான்

“பகுத்தே” அறிந்தபின்னும்

“வகுத்து” அதன்படி வாழாமல்

சிந்தை போன போக்கில்

சித்தமும் தான் போக

சுய புத்தியும் இழந்து

செய்வதறியாமல் தடுமாறும்

சிறுமையான இவ்வாழ்வில்

மிருகமாய் இருந்துவிட்டால்

எவ்வளவோ நன்மை

மேன்மையான் வாழ்க்கை

மேதினியில் நாம் வாழ.

20-06-1999. ராணிகேத் (உத்திரா காண்ட்)

 

 

எவ்வளவு கேள்விகள் வாழ்வில் இருந்தாலும், அவற்றுக்கு நிச்சயம் விடையும் உண்டு. ஆனால் நம் பிரச்சனை அந்த விடைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதுதான். இதைக்குறித்து சிந்தித்தபோது எழுதிய பாடல்:

 

103. தெளிவான வழி

 

விடையாக வாழ்க்கையில்

பலவேறு வழிகளை

வகையாகத் தேடினோம்

வேடிய வழிகளும்

கூறிய விடைகளைக்

கைக்கொள்ளத் தயங்கினோம்

தேடிய முறகளே

தெளிவாக இல்லாது

விடைகளை நாமடைந்தால்

போகின்ற வழியுமோ

பொழுது போக்காகி

ஊர்போக உதவிடாது

தேடுமுன் விடைகளை

தெளிவாக ஒன்றைநாம்

மனதினில் கொள்ளவேண்டும்

தெய்வத்தின் அருளொடு

தேர்ந்த வழியிலே

துணிந்தே செல்லவேண்டும்

10-01-2000. ஈரோடு.

 

இன்று மாலை மழை வந்தது. ஆனால் பலத்த காற்று வந்து சற்று நேரத்தில் அதைக் கலைத்தபோது எழுதிய பாடல்:

 

104. கூட்டணி சரி இல்லை

 

வானம் திறந்து நீ வாராயோ

வையம் குளிர உனைத் தாராயோ

வரண்ட நிலத்தையும் வாடிய பயிரையும்

வருடி அணைத்திட நீ வாராயோ?

 

இருண்டது வானம் இடித்தது மேகம்

மகிழ்ந்தது உள்ளம் உன் வரவை எண்ணி

ஆனால் கட்டியம் கூறிய காற்றோ சற்றும்

கருணை காட்ட மறுத்தது ஏனோ?

 

கோடையின் வெப்பம் தகித்திடும் போது

கொஞ்சமும் கருணை காட்டாத காற்று

உன் வரவைக் கூற வந்திடும் போது

விரைந்து உன்னை விரட்டுவது ஏனோ?

 

காறும் மழையும் கலந்தே என்றும்

கூட்டணி அமைப்பது சரியே இல்லை

தனித்தே வந்து அவை தந்திடும் சுகம்

அதை வர்ணிக்க வார்த்தை என்னிடமில்லை.

 

மத்திகிரி, 16-04-2004.

 

என் சீடர்களில் என்னை மிகவும் நேசித்து என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து கீழ்படியும் ஒரே சீடன் பிரசாத்தான். அவன் விபத்தில் இறந்தபின் அவனை எண்ணி எழுதிய பாடல்:

 

105. பிரசாத்

 

பிரிவினைத் துயரிலே தவிக்கவிட்டு

பிரியா விடைபெற்று சென்றுவிட்டான்

பெயரிலே கருணை கொண்டிருந்தும்*

செயலிலே ஏன் அதை மறந்துவிட்டான்

பிரியமுடன் மணந்த பிரியாவின் மீது

பிரியாத காதல் கொண்டிருந்தும்

பரிதபித்து அவள் தவித்திடவே

பிரிந்து செல்ல ஏன் துணிந்துவிட்டான்?

ஆர்வமுடன் ஈன்ற பிள்ளைகள் மன

ஏக்கத்தைல் வாழ்விட்டு எங்கு சென்றான்?

மடிமீது போட்டு வளர்த்த அன்னை

மனதினை துயரிலே மிதக்கவிட்டான்

நேசமாய்ப் பெற்ற தந்தை மனத்

துயரிலே என்றுமே இறக்கிவிட்டான்

பாசமாய் கூடவே வளர்ந்த தம்பி

பாரினில் தனியே தவிக்க விட்டான்

அன்புடன் அரவணைத்த சுற்றமெல்லாம்

என்றுமே எண்ணி புலம்ப விட்டான்

நாளெலாம் நட்பு பாராட்டிய

நண்பர்கள் மனம் திகைக்க விட்டான்

உபதேசம் அருளிய குருவும் கூட

ஓயாமல் எண்ணி புலம்ப விட்டான்

சென்றுவிட்டான் இனி செய்வோமினி

தெய்வமே உன்னிடம் வந்துவிட்டான்

“பிரசாத்” என்ற பெயருக்கேட்ப

பிரசாதமாய் உலகிலே வாழ்ந்துவிட்டான்

அவன் இட்ட வித்துகள் இனி

ஆல்போல் தழைத்து பலன் கொடுக்க

இறைவனே அருளுவாய் உன் பிரசாதம்

என்றுமே உன்புகழ் நிலைத்து நிற்க.

27-06-2006. மத்திகிரி.

*”பிரசாத்” என்ற சொல்லிற்கு கருணை, கிருபை என்ற அர்த்தம்.

 

106. துறந்த இல்லறம்-சிறந்த துறவறம்

 

இல்லறம் துறவறம்

இரண்டும் நல்லறம்

ஆயினும் இல்லறம்

அமைய சிறப்புடன்

வேண்டும் துறவறம்

சற்றே அவரிடம்

“நான்” என்ற

ஆணவம் துறந்து

“நமதே” என்ற

எண்ணம் அமைந்து

பிறர்க்கு உழைக்க

தன் “நலம்” பேணி

அனைவரும் வழ்வில்

அனைத்தும் பெற்றிட

மனதில் “துறந்து”

வாழ்வில் உயர்ந்து

ஒன்றாய்க் கூடி

இன்பம் துய்த்து

வாழ்ந்தால் இல்லறம்

என்றும் உயர்ந்திடும்

துறவறம் என்பதும்

துறப்பது அல்ல

துணிவாய் சில

தேவையை மறுத்து

பிறர்க்கு என்றே

வாழ்வைத் தந்து

உலகம் உய்ய

தவமே இருந்து

தன்னுள் தானே

நிறைவைக் கண்டு

தனித்தே வாழ்ந்து

தாழ்வுடன் இருந்து

அமைதி காப்பது

ஒன்றே துறவறம்

25-09-2011. குருகுலம்.

 

 

அந்தமானுக்குச் சென்றிருந்தபோது, மாயாபந்தரிலிருந்து, கதம்தலா வழியாக போர்ட் ப்ளேயருக்கு வந்திருந்த போது நிர்வாணமாய் வாழும் ஜெரவா இனமக்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களை நாகரீக மக்களாக்குகிறோம் என்றபெயரில் செய்யப்படும் செயல்கள் சரியல்ல என்பது என்கருத்து. அதைக்குறித்து சென்னைக்குச் மீண்டும் கப்பலில் திரும்பிகொண்டிருந்தபோது எழுதிய பாடல்:

 

107.        மெய் ஞானிகள்

 

“நிர்வாணம்” (முக்தி) அவர்க்குப் புதிதல்ல

நிர்வாணமாய் அவர் வாழ்வதினால்

“மெய்ஞானம்” அவர்க்குப் புதிரல்ல

“அஞ்ஞானம்” என்னவென்று அறியாததால்

வானமே கூறையாய் ஆனபின்னே

வாழ்வதற்கு அவர்க்கு வீடெதற்க்கு

காற்றே ஆடையாய் ஆனபின்னே

மாற்றுடை தேடும் மனம் எதற்கு

 

இயற்கையோடு இணைந்து வாழும்

“ஜெரவா” என்னும் மெய்ஞானிகள்

ஐயகோ ஆவார்கள் “அஞ்ஞானிகள்”

நம்முடன் தொடர்பு கொள்ளும்போது!

 

“நாகரீகம் தருகிறோம்” என்றெபெயரில்

நாம் செய்வதும் வீண் அஞ்ஞானமே

நம்மிடை வாழ அவர் வந்துவிட்டால்

நலன் ஏதும் பெறார் இதுதிண்ணமே!

 

இயற்கையுடன் வாழ அவரைவிடுங்கள்

இதுவே அவர்க்கு செய்யும் நன்மையாகும்

அவர்கேட்கவில்லை நம்வாழ்வை

ஆகவே செய்யாதீர் இவ்வநியாயம்

 

108   .     எது புதுமை

 

சிலகணம் சேர்ந்து

சிலகணம் பிரிந்து

மறுமணம் புரிந்து

மறுபடி பிரிந்து

வாழ்வதென்பது

வழக்கம் ஆனது

“புதுமை” கூறும்

சிலரது வாழ்வு

 

வாழ்வின் அர்த்தம்

அறியா வரையில்

வாழ்வின் நெறிகள்

புரியா வரையில்

எடுத்தேன் கவிழ்த்தேன்

என்பது போன்று

வாழ்வதல்ல

“புதுமை” என்பது!

 

வாழ்ந்து முடித்த

முன்னோர் வழியில்

வள்ளுவன் காட்டிய

வாழ்க்கை நெறியில்

பெற்றோர் வாழ்ந்த

புரிதலின் நிலையில்

தொடர்ந்து செல்வதும்

“புதுமை” ஆகும்!

25-09-2011. குருகுலம்.

 

109.       இரு முதியவர்

 

வடக்கில் ஓர் முதியவர்

விரதமிருந்தார்

ஊழலை எண்ணியே வருந்தி

தெற்கில் ஓர் முதியவர்

உள்ளே குமுறுரார்

ஊழலை செய்தே விரும்பி

“வடக்கு வாழ்கிறது

தெற்கு தேய்கிறது”

என்று இதைத்தான்

அன்றே சொன்னாரோ?

29-08-2011.

 

பல புதுக்கவிதைகள் நீண்ட வார்த்தைகளை மடித்துப் போட்டு அர்த்தமில்லாமல் இருக்கின்றது. அப்படி ஒரு கவிதையை, ஒரு மிகப்பெரும் சினிமாப் பாடலாசிரியர் எழுதிய புதுக்கவிதையை ஒரு புத்தகத்தில் படித்த உடன், அதுபோன்று ஒன்றை உடன் நான் எழுதினேன்:

 

 

110.  சமரசம்

 

நீ சொல்வதை

நான் கேட்க வேண்டும்

நான் சொல்வதை

நீ கேட்க வேண்டும்

இதுநம்மிடை ஏற்படும்

சமரசம் அல்ல

வாழ்வின் உண்மை

சாராசம்

2011.

Tamil Songs 81-100

ஏதோ ஒருதேடுதல் உள்ளில் இருந்து கொண்டே இருக்கின்றது. இதைக் குறித்து சிந்தித்த போது எழுதிய பாடல்:

 

81. தேடுதல்

 

ஏதோ ஒன்றைத் தேட

எத்தனிக்கும் போதினிலே

என்னுள் நான் மூழ்கி

ஏமாந்து போனேனே

தேடியது எதுவென்று

தெளிவாய்த் தெரியவில்லை

தொலைந்தது பொருளல்ல

நானே என்பதனால்

மூழ்கிய போதெல்லாம்

மூச்சுத் திணறியதால்

மீண்டும் மேல் வந்தேன்

சற்றே இளைப்பாற

ஆனால் வெளிஉலகின்

அவலங்கள் எனைத்தாக்க

மீண்டும் மூழ்கினேன்

மூச்சே திணறினாலும்

இழுபறியாய் போராட்டம்

என்னுள் தொடர்ந்திடவே

தேடியதும் கிடைக்கவில்லை

தேறுதலும் பெறவில்லை

(இறக்கவும் இயலவில்லை

இளைப்பாறுதல் பெறவுமில்லை)

 

இன்று ’சுயநீதி’, குற்றம் காணுதல் போன்ற சில கருத்துக்களைப் பற்றி சிலருடன் பேசியபின் எழுதிய பாடல்:

 

82.   நீதி

 

உள்ளத்தில் உண்மை உள்ளவனை

உலகினில் இதுவரை காணவில்லை

போடுவெதெல்லாம் வெளிவேஷம்

உள்ளத்தின் நிலையோ பரிதாபம்

“தன்வரை உண்மை உள்ளவனாய்

தரணியில் நீயும் வாழ்ந்துவிடு”

தத்துவம் கூறுவார் தாராளமாய்

ஆனால் தடுமாறுவார் தன்வரையில்

“உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

உனக்கு நீதான் நீதிபதி

மனிதன் எதையோ பேசட்டுமே

மனச பாத்துக்க நல்லபடி”*

கூறினான் கவிஞ்ஞன் வார்த்தையிலே

குணமறியாத மனிதருக்கே

“தன்வரை நீதி” என்பதெல்லாம்

“சுயநீதியாய்” போனதிங்கே

எடுத்துக் கூறியே என்னபயன்

எல்லாம் பொய்யாய் போனபின்னே

ஆயினும் மனதுள் புலம்புகிறேன்

அது என் ’நீதி” ஆனதினால்!

* இவை கவிஞ்ஞர் கண்ணதாசனின் வரிகள்.

பொகரா, நேபாள். 06-02-1997.

 

சிலசமயம் மனதுடன், மனிதருடன் உள்ள போராட்டங்களை எண்ணிப்பார்க்கும்போது, அவறிலிருந்து எனக்கு என்று விடுதலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் எழுதிய பாடல்:

 

83. போர்க்களம்

 

எனக்கோர் விடுதலை வேண்டும்

அதுவும் என்னிடமிருந்தே வேண்டும்

நிலை தடுமாறும் உலகவாழ்வில்

நீந்திக் கரைசேர வேண்டும்

சிந்தையில் சிறைப்பட்ட ஆன்மா

தன் சுதந்திரம் பெறவேண்டும்

தேகத்தில் சிறைப்பட்ட சிந்தை

தன் சீர்பெற்று வாழவேண்டும்

புலன்கள் பொறியிடம் தோற்க

மனதும் புலன்களை ஏய்க்க

சிந்தையும் சிலமுறை தடுமாற

செயலிழந்ததே என் ஆன்மா

ஒன்றுடன் ஒன்று மோத

ஓயாத போர்க்களமானதே

வென்றது யாருமே இல்லை

இங்கு வீழ்ந்ததால் அனைவரும் ஒன்றாய்!

 

பொக்கரா, நேபாள். 09-02-1997.

 

பக்தி, நம்பிக்கை, ஆன்மீகம், சன்மார்க்கம் என பல நிலைகள் இருந்தாலும், மனித வாழ்வு பெரும் போராட்டமாகவே உள்ளது. பல சமயம் வாழும் வாழ்வில் அர்தமே இல்லாததுபோல் தோன்றுகின்றது. “எங்கே வாழ்க்கை தொடங்கும்; அது எங்கே எவ்விதம் முடியும்; இதுதான் பாதை, இதுதான் பயணம்; என்பது யாருக்கும் தெரியாது” என்ற கவிஞ்ஞர் கண்ணதாசனின் வரிகள் மிகவும் நிதர்சனமாக உள்ளது. இதைப்பறி எண்ணியபோது எழுதிய பாடல்:

 

84. நம் கதை

 

முடிவே இல்லா தொடர்கதை

வாழ்வு முடிவில்லாத சிறுகதை

தொடங்கி வைத்த இறைவனுக்கே

முடித்து வைக்கத் தெரியவில்லை

ஆயிரம் ஆண்டாய் தொடர்ந்துவரும்

அர்த்தமற்ற பெரும் கதை

அதனால் அதன் பாத்திரமெல்லாம்

அறியவில்லை தம் நிலை

தோன்றி வாழ்ந்து மறைந்துவிட்ட

சரித்திரம் இதனிடை ஆயிரம்

தொடர்ந்து செல்லும் இதின் எல்லை

தெரிந்தவர் இங்கு யாரும் இல்லை

வாழ்வின் எல்லையை அடைந்தவர்கள்

“வெறுமை” என்றார் இதன்நிலை

ஆனால் “வாழ்க்கை வாழ்வதற்கே” என்றார்

புதிதாய்த் தோன்றிய தலைமுறை

உண்மை நிலை இதில் என்ன?

உள்ளபடி நான் அறியவில்லை

ஆயினும் வாழ்வைத் தவிர்க்க இயலவில்லை

அதனால் நானும் வாழுகின்றேன்

உன் சித்தம் என்றே எண்ணுவதோ

இல்லை லீலை என்றே சொல்லுவதோ

இறைவா என் கேள்விக்கே

இதுவரை உன்னிடம் பதில் இல்லை.

 

16-03-1997, மதுபனி, பீஹார்.

 

“உடலின் தேவைகள் ஏன் மனதிற்கு முழுமையான சுகத்தை தருவதில்லை? அவற்றை பெரும்முன் மனதிலும், சரீரத்திலும் பலவிதப் போராட்டங்கள். ஆனால் அவற்றை பெற்றபின் ஒருவித ஏமாற்றமே ஏற்பட, மீண்டும் அவற்றை வேறு வகைகளில் தேட முயலுகின்றோம். ஆனால் இப்போராட்டத்திற்கு உயிர் உள்ளவரை முடிவே இல்லை”, என்பது குறித்து கேஷ்வ் மிஸ்ராவின் கிராமத்தில் (கெகரஹா, ரீவா, ம.பி) சிலருடன் பேசிய பின் எழுதிய பாடல்.

 

85.        ஏமாற்றம்

 

அன்றாட வாழ்வு ஒரு போராட்டம்

அதனிடை எண்ண கொண்டாட்டம்

மன்றாடும் மனதினை வென்றேக முடியாத

மனிதா உன்பாடு பெரும் திண்டாட்டம்

பொய்யை மெய்யென்று எண்ணி

போகமே வாழ்வென்று நம்பி

மாயைபின் ஓடிடும் மனிதா உன்

மதிகெட்ட நிலை என்ன சொல்ல?

அனுபவிக்கும் முன் எத்தனை ஆத்திரம்

அடைந்தபின்னோ பெரும் ஏமாற்றம்

கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத

கேவலமான ஒரு போராட்டம்

அறிந்த பின் அவைபின்னே ஓடும்

உன அவலத்தின் நிலையை எண்ணி

போக்கிரி என்றே ஒதுங்கவோ

பேதை என்றே புலம்பவோ?

23-03-1997.

 

“மனதை எவ்வாறு அடக்குவது” என்பது என்னிடம் பலமுறை பலரால் கேட்கப்படும் கேள்வி. பலவித எண்ணங்களால் அலைகழிகப்பட்டு ஆன்மாவில் நிம்மதியே இல்லை! ஆனால் இப்போராட்டங்களுக்கு இருப்பிடம் எது? மனமா, அறிவா, மூளையா, இதயமா, ஆன்மாவா? போன்றவை குறித்து கேஷவ் மற்றும் சிலருடன் பேசியபின் எழுதிய பாடல்:

 

87.  விடுதலை உண்டு

 

உள்ளமே நீ கலங்காதே

உண்டு உனக்கு ஓர் விடுதலை

ஓயாத அலைபோல் ஆயிரம்

எண்ணங்கள் உன்னில் தோன்றினும்

கரை மோதி மீண்டுமே

கடல் திரும்பும் அலைபோல

மனம் மோதி மீண்டுமே

மொளனமாகும் உன்னிலே

அலைபோடும் இறைச்சலில்

அண்டிடாமல் உறுதியாய்

மனம் கூறும் வார்த்தையை

மொளனமாக தியானித்தால்

உள்ளமே நீ உணருவாய்

உண்மையான அமைதியை

உள்ளமே என்ன கூறுவேன்?

உள்ள படிநான் அறிந்தவரை

மனம்வேறு நீவேறல்ல

மதிமயங்கிய காரணத்தால்

உண்மையினை அறிந்தபின்னும்

உளறிவிட்டேன் வார்த்தையில்

மதிமயக்கம் என்பதும்

மனமே இங்கு வேறல்ல

அலைகள் போடும் இரைச்சலில்

அரண்டுவிட்ட ஆன்மாவின்

இருண்டுவிட்ட நிலையின்

எதிரொளியே ஆகுமே!

23-07-1997. கெகரஹா (ரீவா, ம.பி)

 

டில்லியில் ஒரு சீடனுடன் (வீரேந்தர் மிஸ்ரா?) சில காரியம் குறித்து பேசியபோது, “முயன்றால் முடியாத செயல் என்று ஒன்று இல்லை” என்பது குறித்து கூறியபின் எழுதிய பாடல்

 

87. முன்னேறு

 

முடியாதென்பது

முடிவானால்

முடிந்தவரையில்

முன்னேறு

தடுமாறிவிடும்

போதெல்லாம்

திகைத்திடாமல்

தொடர்ந்துவிடு

முழுமையாய்

வாழ்ந்தவர்கள்

உலகில் எங்கும்

கிடையாது

அதனால் நம்

வாழ்வினிலும்

அரைகுறை

என்பது கிடையாது

முடியாதென்பதும்

முடிவல்ல-அது

மனதின் சுய

பரிதாபம்

ஆனால் அதனை

ஏற்காமல்

முன்னேற நீ

முயன்றுவிடு

`19-04-1997.

 

என்சீடன் (மணிஐயர், வாலாஜா பேட்டை) ஒருவனுக்கு கடிதம் எழுதும் இயல்பே கிடயாது. பல கடிதங்கள் எழுதியும், ஒரு கடிதமும் அவனிடமிருந்து வராததால் பின் வரும் பாடலையே ஒரு கடிதமாக எழுதி அனுப்பினேன்.

 

88. ஓர் களைப்பு

 

எழுதி எழுதியே களைத்துவிட்டேன்

எனதரும் நண்பா உனக்கே நான்

என்ன செய்வது பின் நினைவுவந்தது

ஒன்று உன்னிடம் இல்லை என்பது

அதை அனுப்ப இயலாததால் நான்

மீண்டும் ஒருமுறை துணிவுகொண்டே

எழுதுகிறேன் இக்கடிதம் இங்கு

காகிதம் எழுதுகோல் இருந்திட்டாலும்

ஒன்று நிச்சயம் தேவை உனக்கு

காசு கொடுத்தே வாங்கிவிட

அது கடையில் கிடைக்கும் பொருளல்ல

“கரிசனை” என்மீது இருக்குமானால்

எடுத்துவிடு உன் எழுதுகோலை

தொடுத்துவிடு உன் மடலை இன்று.

14-05-1997. ஈரோடு.

 

நன்மை செய்யத்தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருப்பது சரியல்ல. தீமை செய்யாவிட்டாலும் அது நடக்கும்போது தட்டிக்கேட்காமல் இருப்பது அதற்கு மறைமுகமாக துணைபோவதாகும். இதனிடைய நடக்கும் நம் மனப்போராட்டத்தை எண்ணியபோது எழுதிய பாடல்

 

89. என்ன செய்ய?

 

வந்து போகின்ற வாழ்வினிலே

வாழ்ந்தாக வேண்டுமே இடையினிலே

நன்று-தீது தினம் நாம் பார்த்தால்

“நாளும்” செல்லாது உண்மையிலே

என்ன செய்வது இதனிடையே

என்பதே நம் மனப்போராட்டமே

நன்மை செய்ய நாம் மறுத்தால்

அமைதி இல்லை நம்மனதில்

தீமை செய்வதை நாம் எதிர்த்தால்

தனித்தே நிற்போம் சமூகத்தில்

நன்மையோ தீமையோ ஆனாலும்

நாளும் வாழும் வாழ்வினிலே

தீமையை வெறுத்து நன்மை செய்ய

முடிந்தவரையில் முயன்றிடுவோம்

ஈரோடு, 20-06-1997

 

நான் ஒரு கவிஞ்ஞன் அல்ல. ஆனால் என் எண்ணங்களை எழுதுக்களாக வடிப்பது எனகு ஒரு தவிர்க்க முடியாத நிர்பந்தமாகி விட்டது. எனவே என்பார்வையில் கவிஞ்ஞன் யார் என்று எணிய போது எழுதிய பாடல்:

 

90.  கவிஞ்ஞன்

 

எண்ணங்களை வண்ணங்களாக்கி

எழுத்துக்களை வடிவங்களாக்கி

கருத்துக்களை கவிதையாக்கி

வடிப்பவனே கவிஞ்ஞன் ஆவான்

உணர்ச்சிகளின் பிழம்பாய் மாறி

உள்ளூரும் எண்ணங்களை

வெளிப்படுத்த முயலும்போது

வெடிப்பவையே கவிதையாகும்

உணர்வு இல்லா மனிதனே

உலகத்தில் எங்கும் இல்லை

அதை உணர்ச்சியின் வடிகாலாக்கி

ஊற்றுவதே கவிதையாகும்

உலகத்தின் உணர்வுகலெல்லாம்

உருண்டோடும் வாய்க்காலாக்கி

கருத்துக்களை வடித்துக்காட்டும்

கலைஞ்ஞனே கவிஞ்ஞனாவான்

16-09-1997. லக்னோ

 

பொறுமை எல்லாவற்றிற்கும் மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட பிரச்சனைகளும், போராட்டங்களும் எப்படி கொஞ்ஞம் கொஞ்ஞமாக சேர்த்தோமோ, அதுபோல் அவை மெல்ல மெல்லத் தான் மறையும். அதற்கு முக்கியம் வேண்டியது பொறுமை. இதைக்குறித்து ஒரு வாலிபனுடன் பேசிய பின் எழுதிய பாடல்:

 

91. அவசரம் கூடாது

 

உள்ளான மாறுதல்

ஓர்நாளில் வாராது

உன்மனதின் போராட்டம்

உடனடியாய் மறையாது

மெள்ள மெள்ள நீசேர்த்த

எல்லா சோதனையும்

மெதுவாகத்தான் மறையும்

அவசரம் இதில் கூடாது

வீசிய காற்றினிலே

வீழ்ந்தது துணி முள்மீது

வேகமாய் எடுத்தாலோ

வீணாவது நிச்சயமே

பொறுமை என்பதுவோ

புண்நீக்கும் நல்மருந்து

ஆனால் அதன்செயலோ

அமைதியாத்தான் நடக்கும்.

சென்னை. 02-01-1998.

 

வருடா வருடம் கொடைக்கானலில் ஆஸ்ரமத்தில் தங்கியபின் போகும்போது நம் எண்ணங்களை ஆஸ்ரம நோட்டில் எழுதவேண்டும். இவ்வாண்டு இப்பாடலை எழுதிவைத்தேன்

 

92. நன்றி கோடி

 

ஆண்டுதோறும் இங்கு வந்தாலும்

அனுபவம் என்னவோ புதியதே

இயற்கை அன்னையின் அரவணைப்பும்

இனிய உங்கள் உபசரிப்பும்

என்றும் இங்கேயே தங்கிவிட

ஏங்க வைக்கும் எங்களையே

ஆயினும் கீழே சமவெளியில்

ஆயிரம் பணிகள் செய்திட்டவே

போகவேண்டி காரணத்தால்

விடை இப்போது பெற்றாலும்

மீண்டும் இங்கு வரும்வரை

ஏந்திச் செல்கின்றோம் நினைவுகளை

அடுத்த ஆண்டு காணும்வரை

ஐயனின் அருளும் கூடவர

வேண்டி நிற்கும் எங்களையே

ஆசிகூறி அனுப்பும் உங்கள்

நேசமான உளத்திற்கு

நன்றி கூறுகிறோம் பலகோடி

25-05-1998. கொடைக்கானல்.

 

சிலசமயம் எண்ணங்கள் பெருக்கெடுதாலும் கவிதையாக எழுத வார்த்தையே கிடைக்காது. அப்படி ஒரு வறட்சியான சமயம் எழுதிய பாடல்

 

93. வற்றாத ஊற்று

 

கவிதை வரவில்லை

கருத்தும் எழவில்லை

கற்பனை வரண்டுபோக

காலம் செல்வதும் ஏன்?

முழு வாழ்வையுமே

மொத்தமாக ஓர் நாளில்

வாழ்ந்திட முடியாது

உலகின் நடப்பேஇது

எண்ணத்தின் ஓட்டமுமே

எத்தனை இருந்தாலும்

கண்மூடும் நேரத்தில்

கவிதை அவையாகாது

உள் ஊறும் உணர்வுகள்

ஊற்றாகப் பாய்ந்தோட

எண்ணத்தை சொல்லாக்கி

எழுதுவதே கவிதையாகும்

உணர்வென்னும் ஊற்று

ஒருகாலும் வற்றாது

அதை உணராதபோதே

சொல்லேதும் வாராது!

ஈரோடு. 15-06-1998.

 

குங்குமம் வாரப்பத்திரிக்கையில் நடிகர் சிவாஜி கணேசன், “கண்ணதாசனையும் மிஞ்சிவிட்டார் வைரமுத்து” என்று கூறிய வார்த்தைகளைத் தொலைக்காட்சியில் கேட்டவுடன், என்போன்ற பல கண்ணதாசனின் அபிமானிகள் வெகுண்டெழுந்தனர். என்னைப் பொறுத்தவரை கண்ணதாசனுக்கு இணையன ஒரு கவிஞ்ஞன் அவர் சமகாலத்தில் கிடையாது. எனவே சிவாஜி கணேசனுக்கு என் எதிர்ப்பை காட்ட எழுதிய பாடல்:

 

94. ஊர்க்குருவி பருந்தாகுமோ

 

உயர உயரப் பறந்தாலும்

ஊர்க்குருவி பருந்தாகுமோ?

ஓராயிரம் கவிஞ்ஞர் வந்தாலும்

ஓர் கண்ணதாசனுக்கு ஈடாமோ

வைரம் “முத்தாக” வாரியிறைத்தாலும்

வகைப்படுத்தினால் அவைகளையே

செயற்கை “முத்தான” சொற்களினால்

செய்த போலி “வைர” மாலையே

சொல்லின் நயத்தால் வண்ணம் காட்டியே

சிந்தை நிறைந்த கவிவேந்தனின்

கால்தூசியாகுமோ பிறர் பாடலுமே!

செய்நன்றி மறந்த சிவாஜிகணேசனே

உன்நடிப்பு சற்றே மிகையானாலும்

உலகம் மறந்திடும் ஓர்நாளிலே

காலம் காலமாய் மக்கள் மனதிலே

கோலோச்சுவான் கவியரசு கண்ணதாசனே!

19-06-1998. ஈரோடு.

 

மீண்டும் ஒரு கவிதை வறட்சி ஏற்பட்ட போது எழுதிய பாடல்:

 

95. ஓர் வறட்சி

 

உணர்ச்சிகள் உறைந்து போனதால்

உணர்வுகள் இருண்டு போனதே

உணர்வுகள் இருண்டு போனதால்

கற்பனை வறண்டு போனதே

கற்பனை வறண்டு போனதால்

சொற்களும் தொலைந்து போனதே

சொற்களும் தொலைந்து போனதால்

எண்ணங்கள் தேங்கிப் போனதே

எண்ணங்கள் தேங்கிப் போனதால்

எழுத்துக்கள் உலர்ந்து போனதே

எழுத்துக்கள் உலர்ந்து போனதால்

என்னுள் வறட்சி வந்ததே

என்னுள் வறட்சி வந்ததால்

ஏதுமே எழுத இயலவில்லை.

10-10-1998. மஹரி (ரீவா. ம.பி.)

 

இந்நாட்களில் ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் அதிகமாக பயணம் செய்துகொண்டும், அதிகமாக படித்துக் கொண்டும் இருந்தேன். அப்போது எழுதிய பாடல்:

 

96.   புரியவில்லை

 

வேடிக்கையான உலகினிலே

விந்தையான இவ் வாழ்வினிலே

ஓடித் தேடியும் உண்மை சுகம்

ஒன்றையும் இதுவரை காணவில்லை!

படிக்கும் ஆயிரம் புத்தகங்கள்

பலப்பல கருத்தைக் கூறுவதால்

உண்மை அதில் என்னவென்று

உறுதியாய் நான் அறியவில்லை

பல ஆயிரம் மைல்கள் நான்

பயணம் செய்து பார்த்த போதும்

நிலையாக வாழவென்று ஓர்

நிரந்திர இடம் பார்க்கவில்லை

கருத்துக்களை பரிமாற, கவனமாய்

என்னை உபசரிக்க, நண்பர்கள் பலர்

இருந்தாலும், ஒருமித்த மனம் கொண்ட

உண்மை நண்பனை அடையவில்லை

சரீர சுகம்  என்னவென்று

சரியாய் இன்னும் அறியாததால்

கற்பனையில் நான் காணும் சுகம்

சொப்பனமாய் இன்னும் புரியவில்லை

ஏதோ ஒன்றை நான் தேடி

இன்றும் ஓடும் ஓட்டத்திலே

எத்தனை நாட்கள் இன்னும் ஓடுவது

இறைவா ஒன்றும் புரியவில்லை

அலகாபாத். 22-10-1998

 

வாழ்க்கையின் ஓட்டத்தை பற்றி எண்ணியபோது எழுதிய பாடல்:

 

97.        ஓர் ஓட்டம்

 

எதை அடைய இந்த ஓட்டம்

ஏன் நம்முள் இத்தனை தடுமாற்றம்

ஒன்றை அடைய நாம் ஓடுகின்றோம்

அது என்னவென்று புரியாமலே

“வாழ்க்கை வாழ்வதற்கே” என்பது

நம் “கூவலாகவே” என்றும் உள்ளது

ஆனால் வாழ்க்கையும் என்ன என்பது

வெறும் கேலியாகவே என்றும் உள்ளது

சிற்றின்பம்-பேரின்பம் என்றே

சில சொற்களில் வித்தைகள் காட்டி

அதில் விளம்பரங்களையும் கூட்டி

வியாபாரம் ஆக்கினோம் வாழ்வையே

விடைகாண்கின்றோம் என்ற பெயராலே

விலையாகிப் போனது ஆன்மீகமே

ஆக, சிற்றின்பம்-பேரின்பம் இரண்டும்

கண்ணா மூச்சி விளையாட, அவை

இடையில் மாட்டிக் கொண்ட “அகமே”

உன் நிலை என்றும் பரிதாபமே

இந்த புரியா இலக்கை அடைய, வழி

தெரியாத பாதையில் விரைவாக ஓடி

நம் பாதையில் தடுமாறும் போது

நின்று  மீண்டும் கண்கட்டை அவிழ்த்து

தெரிந்த இலக்கு ஒன்று வைத்து

வழி திருந்திய பாதையில் ஓடி

புது முயற்சி செய்வோம் மீண்டும்

நிறைவாக ஓர் வாழ்க்கை வாழ.

24-12-1998. ஈரோடு

 

 

98. எதைத் தேடி ஓட

 

எதைத் தேடி இங்கு ஓட

எதற்காக நான் இன்னும் ஓட

கரை காணா கடல் நடுவில்

தடுமாறும் சிறு தோணிபோல்

புரியாத இந்த வாழ்வில்

எதைத் தேடி நான் ஓட?

கல்வியைத் தேடி ஓடினேன்

பள்ளி நாட்களில் நானும்

பணம்-சுகம் தேடி ஆடினேன்

வாலிப வாழ்வினில் தானும்

நிறைவைத் தேடியே நடந்தேன்

நடுவயதிலே நாளும், ஓர்

முடிவைத் தேடியே தவழ்ந்தேன்

முதுமையிலே இங்கு தானும்

அதன் பின்பு என்னவாகும்

அதை அறியாமலே நானும்

மீண்டும் எதைத்தேடி நான் ஓட

எதற்க்காக இங்கு இன்னும் ஓட?

 

24-12-1998. ஈரோடு.

 

வாழ்வில் மனம்-உடல் இடையே நடக்கும் போராட்டம் ஏன் பல சமயம் வெறியும் தோல்வியுமாகி மாறி மாறி வருகின்றது என்ற ஒரு கேள்விக்கு, பதில் கூறிய பின் எழுதிய பாடல்:

 

99. ஓர் தொடர்கதை

 

எத்தனை நாள் செல்லும்

இத்தகைய வாழ்க்கை

எப்போது தான் முடியும்

என்மனதின் வேட்கை

வெல்வது யார் என்ற

கேள்விக்கே இடமில்லை

நான் கண்ட வெற்றியெல்லாம்

என் மனதின் தோல்விகளே

ஆவியொடு மாமிசமும்

அன்றாடம் போராட

தோல்வியும் வெற்றியும்

தொடர்கதை ஆனதே

 

07-02-1999. கொல்கத்தா

 

சஷி கிராமத்திற்கு வரும்போதெல்லாம் நான் கவிதை எழுதுவதை அறிந்த அவன், அதைப்பற்றி கேட்டபோது, என் கருத்தைக் கூறியபின் எழுதிய பாடல்:

 

100. எது கவிதை

 

ஊற்றுப் பெருக்கெடுத்தாற் போல்

உள் உணர்வையெல்லாம்

வாக்காய் மாற்றி வகைப்படுத்தியே

கூற முயல்வதே கவிதையாகும்

எதுகையோடு மோனை சேர்த்து

இணைப்பதல்ல கவிதை

உள்ளான உணர்வை சொல்லாக்கி

உறைப்பதே கவிதையாகும்

13-03-1999. மஹரி (ரீவா. ம.பி.)

Tamil Songs 61-80

சேர்வது பிரியும், நிற்பது வீழும், பிறப்பது மறையும் என்ற மஹாபாரதக் கருத்தை படித்த போது எழுதிய பாடல்:

 

61. ஓர் உண்மை

 

இழப்பதற்கு ஒன்று இல்லாவரை

என்றும் வாழ்வில் மகிழ்ச்சியே

சேர்ப்பது எல்லாம் இழக்கவே

நிற்பது எல்லாம் வீழுமே

நட்பும் முடியும் பிரிவிலே

பிறப்பின் இறுதி மரணமே

இதை அறிந்தால் நன்மையே

இது பாரதம் கூறும் உண்மையே

21-01-1996 லக்னோ

 

வாழ்க்கையின் பலவித போராட்டங்களை குறித்து ஒருவர் என்னுடன் பேசியபோது, என்கருத்தைக் கூறியபின் எழுதிய பாடல்:

 

62. ஒத்திகை

 

மனதினிலே போராட்டம்

மனதுடனே போராட்டம்

மாமிசத்தில் போராட்டம்

மனிதருடன் போராட்டம்

சொல்லிலே போராட்டம்

செயலிலே போராட்டம்

வாழ்க்கையில் போராட்டம்

வாழ்வுடனே போராட்டம்

எண்ணத்தில் போராட்டம்

என்னுடனே போராட்டம்

என்றுதான் முடியுமோ

இப்போராட்டம் என்றேதான்

ஏக்கமுடன் மரணத்தை

எதிர்பார்த்து காத்திருக்க

இன்னும் நாடகமோ

மேடையே ஏறவில்லை

இதுவரை நடந்ததெல்லாம்

ஒத்திகையே என்றார்!!

27-01-1996. லக்னோ

 

இயற்கையுடன் ஒன்றி இருப்பது எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று. அதிகமாக மனித ஆரவாரமில்லா இடத்தில், தனிமையாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மஹரியில் (ரீவா. ம.பி) சஷி கிராமத்தில் நதியோரம் சென்று அமரும்போது அத்தகைய உணர்வு ஏற்படும். அத்தகைய ஒரு சந்தர்பத்தில் எழுதிய பாடல்:

 

63. முடிவில்லா தொடக்கம்

 

இயற்கைக்கும் எனக்கும் மத்தியிலே

ஏதும் இடைவரா நேரத்திலே

ஓ! என்ன பேரின்பம்

தருகிறாள் அவள் என் உள்ளத்தில்

இதய வீணையை தன்விரலால்

இனிமையாக மீட்டி விட்டே

எழுப்புகின்றாள் என் உணர்வை

ஒன்றி அவளுடன் கலக்கையிலே

உள்ளத்தில் ஊறும் இப்பேரின்பம்

வெறும் உணர்ச்சியின் வடிவல்ல

அவள் தருவதோ ஆனந்தம்

ஆ! அதனை என்ன சொல்ல

ஒருவரில் ஒருவர் மூழ்கிநின்று

ஒன்றாய்க் கலந்த நேரத்திலே

முடிவே இல்லா தொடக்கமது

முழுமையை முடிவில் அடையும்வரை

24-02-1996. மஹரி (ம.பி.)

 

மஹரியில் சஷி சில நெருக்கடிகளை சந்தித்தபோது என்னுடன் பேசினான். அப்போது அவனுக்கு சில ஆலோசனைக் கூறியபின் எழுதிய பாடல்:

 

64. நடைபோடு

 

நெருக்கடிகளின் மத்தியிலே

நெஞ்சம் தளர்ந்த வேளையிலே

விரக்கியுற்றே வாழ்வினையே

விட்டு விடவும் கூடாது

முயன்ற வரையில் போராடு

முடிந்த வரையில் முன்னேறு

தோல்வி தன்னை ஏற்காமல்

தொடர்ந்தே நீயும் நடைபோடு

மஹரி. (ம.பி.) 17-02-1996.

 

தனிமை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மாலை வேளையில் உலவச் செல்லும்போது, தனிமையிலேயே செல்ல விரும்புவேன். இதை நன்கு உணர்ந்த சஷி பல சமயம் என்னுடன் வரமாட்டான். இன்று மாலை தனியாகச் சென்று நதிக்கரையில் அமர்ந்த போது அங்கு நிலவிய அமைதி, தனிமையை எண்ணி எழுதிய பாடல்:

 

65. இனிமையான தனிமை

 

தனிமை என்ற ஓர் இனிமை

தனித்திருக்கும் அந்த தன்மை

என்ன சொல்ல அவ்வுணர்வை

எவரும் அறியாத மென்மை

சஞ்சலம் நிறைந்த வாழ்வில்

சற்றே நம்மை மறந்து

நம்மிலே நாமே மகிழ்ந்து

திளைத்திருக்கும் ஓர் தன்மை

தேடி எங்குமே செல்லத்

தேவையில்லை அதைத் தேடி

நாடிச் செல்லும் போது

நம்மைத் தேடி வரும் ஓடி

ஆரவாரமான இவ் உலகில்

அமிழ்ந்து விட்ட மனிதரிடையில்

உணர்வு மிக்க ஒரு மனதில்

மகிழ்ந்திருக்கும் தன் வரையில்

17-02-1996. மஹரி (ம.பி).

 

இன்று மாலை மஹரியில் நதிக்கரையோரம் தனிமையாக அமர்ந்திருந்த போது இயற்கையுடன் ஒன்றிக் கலந்த அனுபவத்தை எண்ணி எழுதிய பாடல்:

 

66. இதவய வீணையை மீட்டி

 

தனிமையாக ஒரு மாலையிலே, நான்

தனித்திருந்த அவ் வேளையிலே

இனிமையான ஒரு உணர்வைத்தூண்டியே

இயற்கை அணங்குமே மெள்ள வந்தாள்

என்னுள் நான் அமிழ்ந்த வேளையிலே

இதய வீணையை மெள்ள மீட்டியே

தூங்கிக் கிடந்த என் உணர்வை

மெள்ள அவளும் சீண்டிவிட்டாள்

அவள் விரல் பட்ட அந்நேரமே

ஆர்ப்பரித்த என் உணர்வுமே

பொங்கிப் பாய்ந்ததே கவிதையாக

புகலடைந்ததே அவளின் மடியில்

மெள்ள அவளும் தன் மடியில் ஏந்தி

தஞ்சம் அடைந்த என் தலையை வருடி

அமைதியான ஓர் ஆன்ம உணர்வில்

அழைத்துச் சென்றாள் மீண்டும் என்னை

17-02-1996. மஹரி (ம.பி).

 

இன்றுமாலை சஷியின் சகோதரனுடன் பேசியபிறகு, அதைக்குறித்து ஆழ்ந்து யோசித்த போது எழுதிய பாடல்:

 

67. இதுவே உண்மை

 

எதுவுண்மை இவ்வுலகினிலே

எண்ணிப்பார்க்கும் போதினிலே

புலப்படாது விடையொன்றும்

புதிராய்த்தோன்றும் வாழ்க்கையிலே

அகம்புறம் என சிலவாறு

வகைப்படுத்தியே வாழ்வினையே

அலசிப்பார்த்த ஆன்றோறும்

வகுத்தே தந்தார் சிலநெறிகள்

ஆனால் அனுதின வாழ்வினிலே

போராடும் மனிதருக்கோ

நெறியினை சிந்திக்க நேரமில்லை

“சுயம்” எண்ணியே வாழ்வதாலே

அகமும் புறமும் வேறல்ல

அவற்றின் தன்மை அறிந்தவர்க்கு

சுயநலத்திடையே பொதுநலமெண்ணி

புரிந்துகொண்டே வாழ்பவர்க்கு

இதுவே உண்மை இவ்வுலகினிலே

எதுவரை நாம் வாழ்ந்திடினும்

புலப்படுமே விடையாவும்

சரியாய் வாழ்க்கை வாழும்வரை.

மஹரி (ரீவா. ம.பி.) 17-02-1996

 

68. ஏழ்மை

 

வாழ்ந்திடும் வாழ்க்கையில் தானே

வறியவன் ஆனேன் நானே

பொன் பொருள் போகத்திலல்ல

மனதிண்மையில் எளிமையில் தானே

எல்லாலாம் இருந்திட்ட போதும்

ஏதும் இல்லாத ஏழைபோல்

வரண்டது வாழ்வுமே நாளும்

இருண்டது மனநிலை தானும்

ஏதோ ஒன்றை நாடிநானும்

ஓடுகின்றேன் இடைவிடாது நாளும்

எட்டிப்பிடிக்கின்ற போதும்

கைப்பற்றி பிடிக்கவில்லை நானும்

எட்டியது கிட்டவில்லை கையில்

கிட்டியதோ ஒட்டவில்லை என்னில்

முட்டி மோதிய போதில்

தட்டித் தடுமாறுகிறேன் வாழ்வில்

முடிவே இல்லாத ஓட்டம்

முடியாது வாழ்வின் போராட்டம்

ஆயிரம் ஆயினும் வாட்டம்

அடங்காது மனதின் நாட்டம்

காசி (வாரணாசி), 16-03-1996.

 

எனக்கும் என்சீடன் ஒருவனுக்கும் இடையே (ரீவா. ம.பி.) ஏற்பட்ட ஒருபிரச்சனையின் காரணமாய் எங்கள் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. என்னைப் பற்றி பலரிடம் அவன் கூறிய பல கருத்துக்கள் என் மனதை நெருடியது. அதைகுறித்து எண்ணியபோது எழுதிய பாடல். இப்பாடல் ரீவாவில் எழுத ஆரம்பித்து, தர்பங்காவில் (பீஹார்) முடித்தேன்

 

69.        உறவு

 

வின்தையான இந்த உலகினிலே

வேடிக்கையான இவ்  வாழ்வினிலே

கண்டுகொண்டேன் ஓர் உண்மையினை

இதுவரை காணாதிருந்த நிலையினிலே

ஆயிரம் கூறுவார் வாழ்க்கையிலே

ஆனால் கைக்கொள்ளார் நடைமுறையில்

தத்துவம் பேசுவார் தாராளமாய்

தன்வரை அதையே மறந்திடுவார்

ஆயிரம் நற்குணம் கண்டிடுவார்

ஆனால் பிறரின் வாழ்விலல்ல

அனைத்துமே தன்னிடம் உண்டுஎன

“அடக்கமாய்” பிறருக்கு அறிவிப்பார்

உத்திரம் கண்ணில் உறுத்தி நிற்க

உணராமல் அதை உள்ளபடி

ஊரார் கண்ணின் தூசியினை

நீக்கிட ஆவலாய் முனைந்து நிற்பார்

தன்னைத் தானே வெறுத்திடுவார்

“தன்நிலை” உள்ளபடி அறிந்திருந்தால்

போடுவதெல்லாம் வெளிவேடம், இது

புரிந்தால் என்றும் தாழ்ந்திருப்பார்.

18-03-1996

 

பல நிலைகளில் பலவிதமான போராட்டங்களை சந்திக்க நேர்ந்தபோது எழுதிய பாடல்:

 

70.              முடியாது

 

போராட முடியாது இனிமேலே

புவியின் இவ்வாழ்வில் என்னாலே

இப்புலம்பலே யன்றி மனதாலே

புலப்படவில்லை வழி தன்னாலே

ஆயிரம் எண்ணங்கள் ஆட்கொள்ளவே

அலைமோதும் மனதுடனே போராட்டமே

துரும்புபோல் தடுமாறும் என்வாழ்வு

அடிவானம் தொடுகின்ற கடல்மீது

நம்பிக்கை என்னும் அலை கரையொதுக்க

அவநம்பிக்கை மீண்டுமே உள்ளிழுக்க

கரைதொட்டு நீர்மீளும் துரும்பிற்கே

புலப்படவில்லை வழி ஒருமீட்பிற்கே

விதிவிட்ட வழி என்று ஓயவோ

மதிகாட்டும் வழிதனிலே ஓடவோ

விதி-மதி இரண்டுமே ஓய்ந்தபின்

அவன்விட்ட வழியென்று வாழவோ

வாழ்ந்தாக வேண்டுமே இவ்வாழ்வினிலே

வந்துவிட்ட காரணத்தால் உலகினிலே

போராட்டம் ஓயாது தன்னாலே

புலம்பாதே மனமே இனி வீணாலே

தொடங்கிய வாழ்விற்கு ஓர்முடிவுண்டே

தொடர்ந்தே நீ எவ்விதம் ஓடினாலும்

துவங்கியவன் முடித்திடுவான் தளராதே

துணிந்தே இனி போராடு மனதாலே

30-06-1996 (கவிடம், ஆந்திரா)

 

என் சீடர்கள் சிலரின் குடும்ப வாழ்வினிலே ஏற்பட்ட பிரச்சனைகளை கண்ணன்-சாரதாவிடம் (ஈரோடு) கூறியபின், இத்தகைய பிரச்சனைகளைக் கேட்டு அவற்றை தீர்க்க கலையிட்டு என் மனம் களைத்து விட்டது என்று கூறினேன். அப்போது எழுதிய பாடல்:

 

71. எதற்காக அழுவேனோ

 

எதற்காகத்தான் இனி அழுவேனோ?

இவ்வுலக வாழினிலே நான்

என்னை ஓர்சொல் கேட்காமலே

இவ்வுலகில் பிறக்க வைத்த

என்பெற்றோர் செயலை எண்ணி

ஏங்கியே நான் அழுவேனோ?

“சித்தம்” என்ற பெயராலே

சற்றும் என்னைக் கேட்காமலே

படைத்துவிட்ட இறைவனின்

பாங்கை எண்ணி அழுவேனோ?

சுற்றம் உற்றம் என்றுசொல்லி

சூழ்ந்து நிற்கும் மானிடரும்

சற்றும் என்நிலை எண்ணாமல்

செய்யும் செயலுக்காய் அழுவேனோ?

போராடும் மானிடருமே

புவியின் இவ் வாழ்வினிலே

போடுகின்ற வேடம் எண்ணி

புலம்பியே நான் அழுவேனோ?

எவ்வளவுதான் புலம்பினாலும்

புவியின் இவ் வாழ்வினையே

நிரந்திரம் என எண்ணும்

மானுடர்க்காய் அழுவேனோ?

அழுது புலம்பியே நான்

ஆர்பரித்த போதினிலும்

அவையாவையும் மறந்துவிட்ட

அவலநிலை யெண்ணி அழுவேனோ?

பிறக்கும் போது நான் அழுக

போகும் போது பிறர் அழுக

இடையில் உள்ள வாழ்வினிலே

எதற்காகத்தான் நான் அழுவேனோ?

27 & 30-07-1996. ஈரோடு (தமிழ் நாடு)

 

These days I am typing a thesis on Emily Dickinson for Shashikant of Mahari (Rewa, M.P.).  Her poems are obscure and without some help, I cannot understand them.  But, surprisingly, few of her poems are realistic, down to the earth and very simple to understand.  The following one much impressed me.  Living as a recluse, she would not have lived as she wished in this poem. Whereas when God provided such a life of wandering man, where there came several opportunities to serve others, why should regret for it.  Then I wrote the following poem in Tamil and Hindi.

 

72. வீணாகவில்லை

 

ஒருகுவளை நீரேனும் கொடுக்க

ஓர் வாய்ப்பேனும் கிடைத்தால்

உலகில் நான் வாழ்ந்தவாழ்க்கை

வீணாகவில்லை என்பேனே

ஓர்துளி கண்ணீரைத் துடைக்க

ஒருமுறையேனும் முயன்றால்

உலகில் நான் வாழ்ந்தவாழ்க்கை

வீணாகவில்லை என்பேனே

ஓர் மனிதனின் துயரத்தில்

சற்றேனும் நான் பங்கெடுத்தால்

உலகில் நான் வாழ்ந்தவாழ்க்கை

வீணாகவில்லை என்பேனே

முறிந்த ஓர் இதயத்தை

முயன்றவரையில் சீர்படுத்த

ஓர்சந்தர்ப்பமேனும் கிடைத்தால்

வீணாக வாழ்வில்லை என்பேனே

வந்தவண்ணமே போகின்ற

வேடிக்கையான இவ்வாழ்வினிலே

சேவைசெய்ய சந்தர்ப்பம்

சற்றேனும் நமக்குக் கிடைத்தால்

நாம் வாழ்கின்ற வாழ்க்கை

வீணாகாது என்பேனே!

ஆகஸ்டு, 1996.

 

 

 

மனித உறவு என்பது வேண்டும்-வேண்டா ஒன்றாகும். இதை ஆங்கிலத்தில் “Love and hate” என்பார்கள். ஆனால் உறவுகள் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. இதை பற்றி சஷிக்கு எடுத்துக் கூறியபோது எழுதிய பாடல்

 

73. இறை அறிவு

 

உறவின் மத்தியில்

இறைவனைக் காண்போம்

உலக வாழ்வினிலே

உள்ளம் நிறைந்த

நேயத்தை அருள்வோம்

பிறரின் வாழ்வினிலே

இதுவே அன்றி

“இறை அறிவு”

வேறே ஏதுமில்லை

இதை உணராமல்

போதிக்கின்றார்

பல வழிகளையே

துறந்தவன் எவனும்

உலகில் இல்லை

துணிந்தே கூறிடுவேன்

துறந்திட வேண்டாம்

மனித உறவை

அறிந்தே கூறிடுவேன்

இறைவனும் இவ்

உலகில் வந்ததும்

இதற் காகத்தானே

அவனைத் தொடர்ந்து

நாமும் இங்கு

அதன்படி செய்வோமே!

31-08-1996. மஹரி (ரீவா. ம.பி).

 

உள்ளத்தில் இருக்கும் இறைவனை வேறெங்கும் தேடவேண்டாம் என எண்ணியபோது எழுதிய பாடல்:

 

74. உளமே கோயில்

 

உருவத்தில் இல்லை அவன்

அருவத்தில் இல்லை அவன்

உள்ளத்தில் உள்ளவனை

ஊரெங்கும் தேடியே திரிகின்றார்

உளபடி அவர் அறியாமலே

காட்டினில் இல்லை அவன்

நாட்டினில் இல்லை அவன்

மனக் கூட்டில் உள்ளவனை

ஏடினிலும் எவ்வளவே தேடினும்

என்றும் அறியாரே அவனை

செம்பில் (சிலை) இல்லை அவன்

செயலிலும் (கர்மயோகம்) இல்லை அவன்

செம்மையான மனத்தில் உள்ளவனை

ஞானத்தின் மூலம் தேடிடமுடியாது

நானறிந்த உண்மை யிதே

காசி (வாரணாசி). 07-09-1996

 

நான் ஒரு தனிமை விரும்பி. அதேசமயம் உறவுகளை வெறுப்பவன் அல்ல. ஆனால் இவை இரண்டும் மிகைப்படும் போது ஏற்படும் போராட்டத்தை எண்ணியபோது எழுதிய பாடல்:

 

75. உறவா? துறவா?

 

இரு மனதிடை ஓர் போராட்டம்

இழுபறியாய் என்னுள் பேயாட்டம்

ஓர்மனமோ என்னை உள்ளிழுக்க

மறுமனமோ தாவிடும் மாயைக்கே

தனிமையில் இருக்கையில் சஞ்சலம்

தாறுமாறாய் ஓடிடும் இம்மனம்

மனிதருடன் வாழ எண்ணும்போதோ

சோர்வின் எல்லைக்கே அதுசென்றுவிடும்

உறவும் வேண்டும் இவ்வுலகினிலே

உள்ளான ஆன்மீக வாழ்விற்கே

தனிமையும் வேண்டும் இம்மனதிற்கே

தன்னையே ஆராய்ந்து பார்த்திடவே

உறவும்-துறவும் ஓர் வேடிக்கை

தொல்லைமிகு உலகில் இதுவாடிக்கை

ஆனாலும் அவையன்றி இவ்வாழ்க்கை

அறியாது என்றும் ஓர் நம்பிக்கை

07-09-1996. காசி (வாரணாசி).

 

இப்பாடலுக்கான பிண்ணனித் தேவையில்லை. இத்தகைய போராட்டம் வழக்கமாகிவிட்டது:

 

76. சுயசரிதை

 

உள்ளான உணர்வுகளை உறைத்திடவே

உறுதியான வார்த்தை இல்லையென்னில்

உறுத்திய மனமே மெல்லகூறி

ஓய்ந்தது என்னுள்ளே போராடி தன்னில்

தன்நெஞ்சறியவே பொய்த்த பின்பு

தன்னையே பலமுறை “சுட்டபோதும்”

பட்ட காயங்கள் பழகியதால், அவை

சுட்டது சற்றுமே ஒட்ட வில்லை

வீரத் தழும்புகள் இல்லை அவை

நான் பெற்ற வெற்றிக்கு அடையாளமாய்

போராடித் தோற்ற என் மனதின்

புண்பட்ட வடுக்களே அத்தனையும்

தோல்வியின் வடுக்களை மறைத்திடவே

தோன்றியதோ பலவழிகள் எனக்குதானும்

ஆனாலும் உள்மனம் வருடும் போது

பட்ட அவமானத்திற்கு எல்லை காணும்

ஆ! இனியும் நான் என்ன சொல்ல

அடிபட்ட மனதின் தன்மை சொல்ல

சுருக்கமாய்ச் சொன்னால் இது “சுயசரிதை”

சொல்லவோ வார்த்தை இல்லை என்னில்!

16-11-1996. மஹரி (ரீவா, ம.பி).

 

காசிக்குச் செல்லும் வழியில் பேருந்தில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பின் எழுதிய பாடல். பல சமயம் பிறர் போராட்டங்களை என்மீது ஏற்றி வைத்து பாடல் எழுதியுள்ளேன். எனவே அவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட போராட்டம் மட்டுமே இல்லை:

 

77. கானல் நீர்

 

கானல் நீரைத் தேடிய மானைப்போல

காலமெல்லாம் ஓடித் தேடினாலும்

நாடிய சுகம் ஒன்றும் இல்லை

நான் அறிந்தவரை நானிலத்தே

சில நொடி நேரம் நிலைக்கும்

சிற்றின்பம் எல்லாம் மாயையே

உணர்ந்த பின்பும் மீண்டும் அதை

நாடிச் செல்வதும் வேடிக்கையே

உணராதார் இங்கு யாருமில்லை

ஊரறிந்த இந்த உண்மையையே

உணர்த்த முயலுவார் பிறருக்கு, ஆனால்

கைக்கொள்ள இயலார் தன்வரையில்

ஊருக்குத்தான் எல்லா உபதேசம்

உனக்கும் எனக்கும் இல்லை அவை

என்பதே உண்மை யானபின்னே

நாம் கானல்நிர் தேடிய மானாமே!

25-11-1996. காசி (வாரணாசி)

 

புத்தாண்டு பிறப்பு, அதற்கான கொண்டாட்டங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. காலம் நித்தியமானால், புத்தாண்டு என்று ஒன்று வருவதில்லை. இவை நம் பயன்பாடிற்காக ஏற்படுத்திக் கொண்ட நாட்காட்டி ஆண்டுகள். எனவே என்னைப் பொருத்தவரை “புதியதாக” ஒரு ஆண்டும் வருவதில்லை. மனிதவாழ்வுதான் ஒரே மாதிரியாக சுற்றி வருகின்றது. இதை எண்ணி 01-01-1997-ல் வாலாஜா பேட்டையில் (தமிழ் நாடு) மணி வீட்டில் எழுதினேன்:

 

78. சுழற்சி

 

புதுவருடம் பிறந்ததென

புவியின் மாந்தருமே

ஆர்ப்பரித் தெழுந்தனர்

ஆரவாரமுடனே

“புதிதாய்” பிறந்ததென்ன?

புரியாமல் நானும்கேட்க

“புதுசிந்தை, புதுஎண்ணம்

புதுஉணர்வு” என உரைத்தார்

போனது சிலநாட்கள்

புதுவருடம் பிறந்தபின்னே

ஆர்வமுடன் நானும் ஓடி

ஆராய்ந்தேன் அவரின்வாழ்வை

ஆ! இனி என்சொல்ல

அந்தோ அவரின்நிலை

“புதியவை” அனைத்துமே

போனது சிலநாளில்

வழக்கம்போல் வாழ்வெண்ணும்

சக்கரமும் சுழந்றோட

முடிந்த இடம்தொடங்கி

மீண்டுமே சுழன்றுவந்தார்!

 

ஆன்மீகத்தைக் குறித்து சில காரியங்களை மணியிடம் பேசிய பிறகு எழுதியபாடல்”

 

79.   சமநிலை

 

சிறு தடுமாற்றம் சிந்தையிலே

தவரவிடும் நம் வாழ்வினையே

“சீலம்” என்பது வேறல்ல அது

சிந்தையில் தோன்றும் சம நிலையே

உணர்வும்-உள்ளமும் மோதும் போது

உணர்ச்சியில் தோன்றும் சங்கமம்

அதன் வேகத்தில் நிலைதடுமாறினால்

வேதனை ஒன்றே எஞ்சிடும்

உணர்ச்சியில் தோன்றும் உரசல் எல்லாம்

விரிசலின் எல்லையைக் கண்டிடும்

உள்ளம் ஓர் சமநிலைக் கண்டால்

உறவே நிலை நின்றிடும்

உணர்வு-உணர்ச்சி இவைகளின் இடையே

மனதின் சமநிலை முக்கியம்

அதை அடைவது எவ்விதம் என்பதே

ஆன்மீகத்தின் லட்சியம்.

01-01-1997. வாலாஜா பேட்டை (தமிழ் நாடு).

 

திருமணவாழ்வு, பாலுணர்வு என்பவை எல்லோருக்கும் அவசியமான ஒன்று. ஆனால் பலரது வாழ்வில் சில தவிர்க்கமுடியாத காரணங்களால், அவை மறுக்கப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் இதை உணராத சிலர் அவர்களின் உடல் தேவையை குறித்து (கேலியாக) கேள்விகள் கேட்பது சரியல்ல என்பது என்கருத்து. இதைப்பற்றி எண்ணியபோது எழுதிய பாடல்:

 

80. பத்தியம்

 

அடங்கி ஓட முயலுகின்றோம்

ஆகாதவராய் உலகில் போகாதபடி

ஆர்பரிக்கும் எங்கள் உணர்ச்சிகளை

அர்பணிக்க முயலுகின்றோம்

மாமிச உடலின் தேவையெல்லாம்

மானிட வாழ்வில் அவசியமே

ஆனால் “மனித” வாழ்வின் ஓட்டத்தில்

“மாமிச” சிந்தைகள் தீமைகளே

உணர்ச்சியே இல்லா வாழ்வென்பது

உப்பே இல்லா உணவுகளாம்

ஆனால் “பத்தியம்” என்பது சிலருக்குப்

பாங்காய் அமைந்த நியமங்களாம்

பலரின் வாழ்வின் நன்மைக்காய்

சிலரது தியாகங்கள் தேவைகளே

அதன் பலனை உலகில் காணும்போது

தோன்றும் உன்னத உணர்வுகளே!

ஈரோடு (தமிழ் நாடு), 22-01-1997

Tamil Songs 41-60

41. வாழ்வோ வீழ்வோ?

 

கணநேரத்தை பெரிதாக எண்ணி

நிகழ்கால நேரத்தை வீணாக்குவோரே

நிலையான சுகம் புவிமீது இல்லை

புரிந்திதை நேரத்தை பொன்னாக்குவீரே

சுகமென்ற பெயராலே தேகத்தை வீணாக்கி

வந்ததின் நோக்கத்தை அறியாமலே என்றும்

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று

மதிமயங்கி காலத்தை வீணாக்குவீரோ?

மூவாசை என்றும் முழுதானதில்லை

ஆனால் அவையின்றி வாழ்விங்கு இல்லை

அளவுடன் ஆண்டாலே அடைவதும் மேன்மை

அடிபணிந்தாள் அவைக்கு வீழ்வதும் உண்மை.

17-12-1994.

 

வாழ்க்கை என்னைப் பொருத்தவரை ஒரு வேடிக்கையாகவே இருக்கின்றது. இதை எண்ணியபோது எழுதிய பாடல்:

 

42. ஓர் வேடிக்கை

 

வேடிக்கை ஒன்று

வாடிக்கை யானது

விந்தையான உலகினிலே

விடிகின்ற நாளுமோ

முடிந்து போனது

புதுமை ஒன்றும்

இதில் காணாமலே

பிறந்தான் பிள்ளையாய்

நடந்தான் பேதையாய்

வளர்ந்தான் வாழ்க்கையில்

வளமுடன் வாலிபனாய்

பொழுதெல்லாம் எண்ணங்கள்

புதுப்புது கற்பனை

பொங்கியது அவன்

மனதினிலே தினம்

முதுமை பெற்ற

மனிதனாய் அவனும்

முயன்றிட்டான் உலகில்

முழுமை பெற

முடவன் தேனெடுக்க

முயன்றது போல

முடிந்தது மனதின்

எண்ணங்களும் இங்கு

கனவில் கண்ட

காசு பணமெல்லாம்

கவைக் குதவாது

என்பது போல

கழிந்தது இளமை

குறைந்தது வளமை

தளர்ந்தது மனதின்

எண்ணங்களும் நாளும்

தள்ளாடும் மனிதனாய்

தடிஊன்றி நடகையில்

மீண்டும் கண்டான்

அந்த வேடிக்கையை

1995, ஜனவரி.

 

கான்பூரில் சுமதி என்ற தமிழ் எழுத்தாளரின் பெற்றோரைச் சந்தித்தபோது, சுமதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட காரியம் கேட்டு, மிகவும் வருத்த முற்றேன். சுமதி பல தமிழ் புதினங்களை ஹிந்தியில் மொழி பெயர்த்துள்ளார். அவருக்கு அஞ்சலியாக, 04-01-1995 அன்று கோண்டா திரும்பியபின் எழுதியது:

 

43. ஓர் அஞ்சலி

 

மலரும்முன் மொட்டிலே கருகியதே

மாந்தரின் மன வெறியினால்

“மாக்களே” அவர் மக்களல்ல

மங்கை உன்வாழ்வை அழித்ததினால்

இந்திக்கும் தமிழுக்கும் இடையேபாலமாய்

இதுவரை நீ செய்த சேவையினை

தரணி உள்ளமட்டும் நிலைத்திருக்க

தங்கையே நாங்களும் விரும்பிடுவோம்

சுந்தரத் தமிழுக்கு மெருகு கூட்ட

சுமதி நீ செய்த சேவையினை

இழந்ததாள் அழுகின்றாள் தமிழன்னை’

யார் துடைப்பார் அவள் கண்ணீரை

அழுகின்றோம் நாங்களும் அவளுடனே

அதுவன்றி என்செய்வோம் இனிமேலுமே

பூதவுடல் உலகினிலே அழிந்தாலும், உன்

புகழ் என்றும் நிலைநின்று ஓங்கட்டும்

 

ஒருவர் மற்றவரின் வாழ்க்கையையுடன் தன் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமை படுவதோ, நிம்மதி கொள்வதோ பொய்யான ஒரு கற்பனை என்பதைக் குறித்து சிலருடன் பேசிக்கொண்டிருந்த போது எழுதிய வரிகள்:

 

44. அக்கரைப் பச்சை

 

இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதே

அனைவரின் வாழ்விலும் உண்மையே

அவரைப் போல் நானும் இல்லையே

என்பதே மனதின் ஏக்கமே

ஒப்பிட்டுப் பார்த்து வாழ்வதாலே

ஓயாத தொல்லைதான் மனதினிலே

அவரைப் போல் நாம் இருந்துவிட்டால்

ஐயகோ வேறேது தொல்லையே

ஒருவரைப் போலவே அனைவரும்

உலகில் எல்லோரும் இருந்துவிட்டால்

சுவையேதும் இராது வாழ்விலே

சற்றே எண்ணிப்பார் இவ்வுண்மையே

அடுத்தவர்க்குள்ள அழகு பணம்

ஆடம்பரமான வாழ்க்கை முறை

இவைமட்டுமே விரும்புகின்றோம்

உள்ளபடி அறியாது உண்மைநிலை

கரைமாறி நின்றே பார்க்கும் போது

கண்ணில் படும் அவர் உண்மைநிலை

அங்கிருந்து நாம் பார்க்கும்போது

அறிவோம் நம்கரையின் பசுமையினை

20-01-1995. லக்னோ

 

மஹரியில் (ரீவா, ம.பி) மாலை நேரத்தில் வழக்கப்படி நதிக்கரையோரம் உலவச்சென்ற போது, ஒரு மீன்கொதிப் பறவையின் செயலைக் கண்டு எழுதிய பாடல்:

 

45. முயல வேண்டும்

 

மீன்கொத்திப் பறவைப் போல

முயற்சியும் செய்திட வேண்டும்

முழுமூச்சாய் செயலிலேயும்

முழுமனம் வைத்தே நாமும்

வேகம் விவேகம் கொண்டு

நேர்த்தியாகவும் சென்று

இரையைக் கொத்தியே செல்லும்

திறமையும் என்னே! என்னே!

நோக்கம் கொண்டுமே நாமும்

முழுமனதாய் முயன்றால் நாளும்

முடியாத செயலென்று ஒன்று

மேதினியில் இல்லை! இல்லை!!

01-03-1995.

 

எடுத்த தீர்மானத்தில் தோல்வி அடைந்த போது எழுந்த விரக்தியால் எழுதியபாடல்:

 

46.   நிழல் நிஜமல்ல

 

நிற்கின்றேன் என்று எண்ணியே நானும்

நிழலை நிஜமாக்க மாற்றிட முயன்றேன்

கானல் நீர் தேடியே ஓடிய மான்போல

ஏமாற்றம் கொண்டு சோர்வுற்று நின்றேன்.

16-03-1995

 

சிலசமயம் இருப்பதைக் காட்டிலும் இறப்பதே மேல் என்ற எண்ணம் தோன்றும். அப்படி ஒருமுறை தோன்றியபோது எழுதிய பாடல்:

 

47. மரணமே

 

மரணமே! நீ மட்டும் இல்லாதிருந்தால்

மானிடர் வாழ்வு ஓர் நரகமே

எதையோ எண்ணி ஓடுகின்றார்

ஒருநாளும் அதை அடையாமலே

உளுத்த அவர் வாழ்க்கைக்கு

நீயன்றி வேறில்லை பரிகாரமே

நீதரும் அந்த இளைப்பாறுதல் அறியாமல்

நாடுகின்றார் இவ்வுலக வாழ்வினையே

பேதையாம் அவர்செயல் பொறுத்தருள்வாய்

போராடும் எனக்கிங்கு புகல் அளிப்பாய்.

22-04-1995.

 

வாழ்க்கை துன்பம் இன்பம் நிறைந்த ஒரு தொடர்கதையாக உள்ளதை எண்ணியபோது எழுதிய வரிகள்:

 

48. தொடர் ககை

 

துன்பமும் இன்பமும்

நிறைந்த இவ்வாழ்க்கை

தொடர் கதையாகிப்

போனது வே

தொடக்கமோ எளிது

முடிப்பதோ அரிது

முடிவே தொடக்கமாய்

உள்ள வரை.

22-04-1995

 

மஹரியில் (ரீவா, ம.பி) சஷிகாந்திடம் தோவியை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி பேசியபின் எழுதிய பாடல்:

 

49. ஓர் சரித்திரம்

 

தோல்வி காணாத

நாளே இல்லை

தொல்லை மிகுந்த

இவ்வாழ்க்கையிலே

தொடங்கிய போராட்டம்

முடிவதோ இல்லை

புவியில் வாழ்ந்திடும்

நாள் வரையில்

தோல்வி காணாத

மனிதனும் இல்லை

வாழ்வு துவங்கிய

நாள் முதலே

ஆயினும் சரித்திரம்

அவர்தாய் இல்லை

ஆராய்ந்து கண்ட

உண்மை இதே

தோவி கண்டே

துவண்டிடாமல்

தொடர்ந்து நாமும்

முன்னேறினால்

தொடர்ந்திடும் வெற்றி

தொடர்கதைபோல

தொடங்கலாம் நாமும்

புதிய சரித்திரம்

17-10-1995

 

கீழ்வரும் பாடலை எழுதிய பின் எனக்குள் நானே சிரித்தேன். சிலர் எதிர்காலத்தில் என் பாடல்களைப் படித்தபின், என்னைப்பற்றி தவறான முடிவுகளுக்கு வரக்கூடும். ஆனால் கவிதை என்பது கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் ஒரு வகையே. ஒரு கவிஞ்ஞன் தன் கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் சுதந்திரம் உடையவன். பல முறை அந்த சுதந்திரம் உபயோகப் படுத்தும் வார்த்தைகளின் காரணமாக மிகைப்படுத்தலாகவும் அமைந்துவிடும்.  அதைக்கொண்டு ஒருவனின் வாழ்வை தீர்மானிப்பது தவறாக முடியும்.

 

50. ஒன்றேயாகும்

 

காமம் வேறென்பார் காதல் வேறென்பார்

கருத்தறியாத காரணத்தால்

காமமு, காதலும் ஒன்றேயாகும்

வகுத்தே பார்த்து வாழ்ந்தவருக்கு

ஆசைவேறென்பார் அன்பு வேறென்பார்

அவையறியாத காரணத்தால்

ஆசையும் அன்பும் ஒன்றேயாகும்

அனுபவித்தே வாழ்ந்தவருக்கு

மனம் வேறென்பார் மதி வேறென்பார்

சரியாய்ப்புரியா காரணத்தால்

மனமும் மதியும் ஒன்றேயாகும்

செயலை எண்ணிப் பார்க்கும்போது

வார்த்தை வேறென்பார்

வாழ்க்கை வேறென்பார்

வகை தெரியாத காரணத்தால்

வார்த்தையும் வாழ்க்கையும்

ஒன்றேயாகும் முடிவை

யெண்ணிப் பார்க்கும்போது

எதிர்மறையாகத் தோன்றுபவை யெல்லாம்

வார்த்தையில் காட்டும் வித்தைகளாகும்

வார்த்தையில் எத்தனை

வித்தைகள் காட்டினும்

வாழ்ந்திடும் வாழ்க்கை ஒன்றேயாகும்.

17-10-1995. மஹரி (ரீவா. ம.பி).

 

காசியிலிருந்து லக்னோவிற்கு ரயில் வந்துகொண்டிருந்தேன். அப்போது சிலருடன் பேசியபோது, அடிப்படையான உடல்தேவைகள் எல்லை மீறும்போது அது எப்படி நம் மன உணர்வை அழிக்கின்றது என்று கூறினேன். அதை ’மிருக உணர்வு’ அல்லது ’மிருக வெறி’ என்று கூறுவது தவறு என்பதையும் வாதிட்டநான், அவை உண்மையிலேயே மனிதவெறி என்று எடுத்துக்காட்டினே. அச்சமயம் வண்டியிலேயெ எழுதியபாடல்:

 

51. மனித வெறி

 

என்னையும் அறியாமல் ஒரு மிருக வெறி

மெல்ல என்னுள் தலைதூக்கியே

மென்மையான மன (மனித) உணர்வுகளை

என்னையும் மீறி மெள்ள அழிக்கின்றதே

இப்போராட்டம் இல்லாத மனிதருமே

இல்லை உலகினில் எங்குமே–ஆனால்

பொய் சாக்கு கூறியே நானும்

போடுகிறேன் தீனி என் வெறிக்கே

மிருக வெறி எனக்கூறிய நானும்

ஆராய்ந்து நோக்கினேன் அவை வாழ்வை

அறிந்து கொள்ள ’அவ்’ உணர்வின்

உண்மைத் தன்மையினை என் வாழ்வில்

என்னே ஆச்சர்யம்! அவை வாழ்வில்

இல்லை உண்மையில் ஒரு ’மிருக வெறி’

இயல்பாய்த் தம்வாழ்வை வாழ்வதினால்

இயற்கையோடு ஒன்றாய்க் கலந்ததினால்

வயிறு பசித்தால் மட்டும் இரைதேடும்

வாய் உலர்ந்தால் மட்டும் நீர் தேடும்

உடல் பசித்தால் மட்டும் துணைதேடும்

எல்லாம் இயல்பாய் ஒரு நியதிக்குள்

ஆனால் என்வெறிக்கு தீனி போட

அலைகின்ற மனதின் தன்மைக்கு

’மிருக வெறி’ என்றே கூறாமல்

’மனித வெறி’ என்றே கூறவேண்டும்

எனவே-என்னையும் அறியாமல் ’மனிதவெறி’

மெல்ல என்னுள் தலைத்தூக்கி என்மன

உணர்வை அழிக்கின்ற தென்பதே

இவ்வாழ்வின் உண்மை நிலை.

18-09-1995

 

நம்மிடம் இருக்கும் திறமை மற்றுள்ள வளங்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர பெருமையுடையவர்களாக மாறக்கூடாது என்று எண்ணியபோது எழுதிய பாடல்:

 

52. வேண்டாம்

அழகிலே பெருமை வேண்டாம்

அறிவிலே பெருமை வேண்டாம்

பெலத்திலே பெருமை வேண்டாம்

பண வளத்திலே பெருமை வேண்டாம்

குணத்திலே பெருமை வேண்டும்

கொள்கையில் திண்மை வேண்டும்

அடக்கமுடன் பணிவு வேண்டும்

அறிவிலே முதிர்ச்சி வேண்டும்

வந்த வண்ணமே போவாய்

வாராது ஏதும் உன்னுடன்

கூடச் செல்வதோ என்றால்

கருமத்தின் பலனே யாகும்

அறிவு, அழகு, பணம், பலமோ

பரமன் அளித்த ஈவேயாகும்

பாங்காய் அவற்றைக் கைக்கொண்டால்

பெறலாம் நன்மை வாழ்வினிலே!

16-11-1995. லக்னோ.

 

அன்றாட நாட்குறிப்பை (டைரி) எழுதும்போது உள்ளதை உள்ளபடி எழுதாமல், என்னைப் பற்றிய பல காரியங்களை எழுதாமல் விடுகின்றேன் என்பதை எண்ணியபோது எழுதிய பாடல்:

 

53. உண்மை நிலை

 

உள்ளதை உள்ளபடி பகிர்ந்து கொள்ளும்

உத்தமன் எவனும் உலகில் இல்லை

ஊர்மெச்ச கூறுவோம் பல பொய்கள்

உள்ளது அவை மறைக்க வழி நம்மில்

பார்மெச்ச வேண்டுமென நடித்தோம் நாமும்

’பாவலன்’ எனக் கூற மகிழ்ந்தோம் நாமும்

ஆ! என்சொல்ல நம் உண்மை நிலை

அந்தோ பரிதாபம் நம்மனதின் தன்மை

பெற்ற புகழினால் கர்வம் பெருகியது

கர்வம் பெருகியதால் கண்ணும் சொருகியது

குருடன் என உணரமல் வழிகாட்ட எத்தனிக்க

குழியில் விழுவதன்றி வழியும் வேரேது?

குற்றமில்லா மனசாட்சி, குறையில்லா வெளிவாழ்க்கை

மற்றவரை மதிக்கின்ற மாண்பான மனித நெறி

பணிவான வார்த்தை, பாசமுடன் சேவை

பாரில் இவையன்றோ பறைசாற்றும் நம்நெறியை

ஐயோ என்சொல்வேன் ஆடிடும் நாடகத்தை

போடுவதோ வேடம் மேடையில் ஆடும்வரை

ஆட்டம் முடிந்தபின்பு அனைவரும் சென்றபின்பு

வேடம் கலைந்தபின்பு, காண்கின்றேன் உண்மைநிலை!

13-12-1995

 

இந்நாட்களில் தென் தமிழகப்பகுதிகளில் நடக்கும் ஜாதி/குலச் சண்டை பற்றி எண்ணியபோது எழுதிய பாடல்:

 

54. நமக்கல்ல

 

“ஒன்றே குலமாகும்

ஒருவனே தேவனவன்”

நன்றே உரைத்தார்கள்

நானிலத்தவர்க்கு

ஒன்றே குலமானால்

குலத்தின் பெயராலே

குருதியும் பாய்வதுஏன்?

ஒன்றே தெய்வமென்றால்

இறைவன் பெயராலே

இத்தனை மதங்களும் ஏன்?

“சொல்லுதல் யார்க்கும்

எளிதாம், அறிதாம்

செல்லியவண்ணம் செயல்”

என்றே வளுவனும்

உரைத்த சொல்லதுவும்

உண்மை இவ்வுலகில்

கூறிடும் கொள்கையெல்லாம்

கூடிடும் மக்களுக்கே

ஊருக்குத்தான் உபதேசம்

உனக்கல்ல எனக்கல்ல

என்பதே உண்மை நிலை.

20-12-1995

 

பல சமயம் பத்திரிக்கைகளுக்கு நாம் அனுப்பும் கவிதை, மற்றும் கதைகளை–அங்கேயுள்ளவர்களே திருடி, சற்று மாற்றி வெளியிடுகின்றனர். இதைக்குறித்து எண்ணியபோது எழுதியது:

 

55. திறனிருக்கு

 

சொந்தமாகக் கவி எழுத

திறமை இல்லாவிட்டாலும்

திறனிருக்கு திருடுவதற்கு

பிறர் கருத்தை தனதாக்கி

சொல்லில் அதைவடித்து

உலா வருகின்றார் சிலர்

“புலவர்” என்ற பெயருடனே!

டிசம்பர், 1995.

 

உறக்கத்துடன் எனக்கு என்றுமே பெரும் போராட்டம். ஆனால் சிலசமயம் ஆழ்ந்து உறங்கி எழுந்தபின், இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என்று ஏங்குவேன். என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய நேரமென்றால், நன்றாக உறங்குவது ஆகும். எனவே அதை விரும்பி எழுதிய பாடல்:

 

56. தூக்கமே

 

உண்மையான சுகம் உண்டு என்றால்

உறக்கமன்றி உலகில் வேறு இல்லை

என்னை மறந்து நான் தூங்கையிலே

இல்லை ஓர் போராட்டம் வாழ்க்கையிலே

உறக்கம் கலைந்தே நான் எழும்போது

உதித்திடும் ஓராயிரம் நினைவுகளும்

வரிசையில் வந்திடும் கவலைகளும்

வாழ்வின்மீதே ஒரு வெறுப்பு வரும்

அமைதியான ஓர் வாழ்வென்றால்

ஆழ்ந்துறங்கும் போதன்றி வேறில்லை

ஆயினும் இச்சுகமும் உண்மை இல்லை

நிரந்திரமாக உண்மையில் “தூங்கும்” வரை

என்று வருவாய் என ஏக்கமுடனே

எதிர்பார்க்கின்ற இவ்வேழையிடமே

வருகின்றாய் நீ வெகு தயக்கமுடனே

வாராயோ விரைந்தருகே ஆர்வமுடன்.

23-12-1995, லக்னோ

 

மனப்போராட்டம் என்பது யாருக்கும் தவிர்க்கமுடியாத ஒன்று. அதை எண்ணியபோது எழுதிய பாடல்:

 

57. போடு ஆட்டம்

 

எவ்வளவு கற்றாலும்

ஏதருள் பெற்றாலும்

மனமே உன்னோடு

உள்ளதே பெரும்பாடு

வேண்டாத நினைவுகள்

விரும்பாத செய்கைகள்

வேண்டாம் இனிஎன

வெறுத்த போதும்

செக்கு மாடுபோல்

மீண்டும் மீண்டும்

சுற்றியே வருகின்றோம்

ஓர் வட்டத்தில்

உன்னோடு போராடி

நான் ஓய்ந்தபோதும்

ஓயாது ஓர்நாளும்

உன்சுற்று மட்டும்

உடல் உள்ளவரை

போடு நீயாட்டம்

கட்டை சாய்ந்தபின்

அடங்கும் உன்கொட்டம்

24-12-1995. லக்னோ

 

ஜனவரி ஒன்றாம் தேதியை புது வருடமாக கொண்டாடும் வழக்கம் எனக்கு வேடிக்கையாக இருக்கும். இது குறித்து எழுதிய பாடால்:

 

58. ஊஞ்சலாட்டம்

 

போனது ஒருவருடம்

வந்தது “புது” வருடம்

புலப்படவில்லை என்றும்

புதுமை இதில் ஒன்றும்

வருவதும் போவதும்

வாழ்க்கையில் உண்மை

இடையில் நடப்பதோ

நாடக ஒத்திகை

போடும் வேடமோ

சிலமணி நேரமே

ஒத்திகை பார்க்கவோ

நாள் பல ஆகுமே

எத்தனை ஒத்திகை

பார்க்கினும் நாளுமே

ஆட்டம் முடிந்தபின்

அத்தனையும் மறையுமே

போடும் வேடமும்

ஆடும் நாடகமும்

பொழுது போக்காகும்

உண்மை வாழ்க்கையில்

மேடையும் நமதல்ல

கூட்டமும் நிலையல்ல

போடும் வேடமோ

சொப்பனம் ஆகுமே

கனவு நினைவிடையே

காலம் முழுவதும்

ஊஞ்சல் ஆடிடும்

உண்மை வாழ்க்கையே

01-01-1996. லக்னோ

 

 

‘Publication is the Action of the Mind’, wrote Emily Dickinson.  She was right.  She never published her poems in her life time (except seven poems).  I too am not sending my poems (?) for publication, but not for the same reason.  This night after retired to bed when I thought about this, I wrote the following lines: (Lucknow?)

 

 

59. ஏலமே

 

சிந்தையின் ஓட்டத்தை

சொல்லில் வார்த்தெடுத்து

கருத்தை அதில் ஊட்டி

கவிதை வடித்த பின்பு

வெளியீடு செய்வதெல்லாம்

காசுக்காக கலையை

ஏலம் விடுவதே ஆகும்.

 

ஜனவரி, 1996. லக்னோ

 

எப்போதும் பரப்பரப்பாக இருப்பது சுறுசுறுப்பாகாது. அதுவும் ஒருவித மன இறுக்கமே. இதைக்குறித்து எண்ணியபோது எழுதிய பாடல்:

எப்போதும் பரப்பரப்பாக இருப்பது சுறுசுறுப்பாகாது. அதுவும் ஒருவித மன இறுக்கமே. இதைக்குறித்து எண்ணியபோது எழுதிய பாடல்:

 

60. பரபரப்பு

 

சுறுசுறுப்பென்ற பெயராலே

பரபரப்பாக வாழ்ந்தாலே

நேரம் கழிந்திடும் விரைவாக

பயனேதும் காணாமல் பொதுவாக

சுறுசுறுப்பு வேண்டும் சிந்தையிலே

சிறப்பாய் காரியம் செய்திடவே

அது பரபரப்பாகிப் போனாலே

பாழாகும் காரியம் வீணாகவே

சோம்பேறி ஆனான் சுமையாக

சமூகத்தில் வீண் பளுவாக

பரபரப்பாளியோ மாறாக

பயன்படான் எவர்க்கும் பொதுவாக

சோம்பேறி சற்று சுறுசுறுப்பாகி

பரபரப்பாளி சற்று பக்குவமாகி

சமநிலை அடைந்தாலே சமூகத்தில்

புரட்சியே தோன்றும் வெகுவிரைவில்

19-01-1996 லக்னோ

Tamil Songs 21-40

நானும் கேஷவ் மிஸ்ராவும் பேருந்தில் சுனொள்லியிலிருந்து சாக்காட்டுக்கு (ரீவா, ம.பி.) சென்றுன்றுகொண்டிருந்தபோது, பார்த்த காட்சிகளை சிந்தித்தபோது எழுதிய பாடல்

 

21. போராட்டம்

 

என்னதான் மனதின் நினைவுகளோ

எழுந்ததும் காலையில் மனிதனுக்கு

எப்படித்தான் செல்லும் இந்நாளுமே

என்பதே மனதின் தினப்போராட்டமே

ஓடாய்த்தேய்கிறான் உழைத்துதைத்தே

ஒருசுகம் இதில் அவன் காணாமலே

உண்ண, உடுக்க, உடல்சுகம் தேட

ஓடித்திரிகிறான் ஓய்வேதும் இல்லாமல்

ஒன்றனைப் பெற்றபின் மற்றதின் சிந்தனை

ஒன்றிலும் காணாமல் மனதில் நிறைவினை

கானல்நீர் தேடிய மான்போல் வாழ்வெலாம்

கதறியே தொடர்கிறான் உலகின் மாயையை

எவ்வளவு உரைத்தாலும் ஏற்காது அவன்மனம்

ஏதொ ஒன்றுள்ளது அதன்பின் ரகசியம்

’போதும்’ என்ற பொன்செயும் மருந்து

பெறவில்லை அவன் இந்நோய்க்கு மருந்து

20-04-1993

 

இதுவரை அனுப்பிஉள்ளேன்

 

வாழ்க்கையின் அன்றாட போராட்டங்களை எண்ணியபோது எழுதிய பாடல்.

 

22.   வாழ்க்கை

 

என்னதான் வாழ்விதுவோ?

எப்படித்தான் வாழ்ந்தாலும்

எஞ்சுவதோ என்றுமிதில்

ஏமாற்றம் ஒன்றுமட்டும்

தனக்கெனவே வாழவும்

தலைப்படும் மனிதனுமே

நிறைவேதும் காணாமல்

தேடுகின்றான் ஏதோஒன்றை

கிட்டியது எட்டவில்லை

எட்டியதோ கிட்டவில்லை

என்றாலும் போராட்டம்

எப்போதும் ஓய்வதில்லை

கைநிறைய சோறள்ளி

வாயருகில் சென்றாலும்

பல்தட்டிய காரணத்தால்

சிதறியது அத்தனையும்

ஆனாலும் தோல்விதனை

அப்படியே ஏற்காமல்

பொறுக்கி எடுக்கின்றான்

புழுதியது ஒட்டாமல்

நாளும் தொடர்ந்திடுமே

நானிலத்தில் உள்ளமட்டும்

வேண்டா இப்போராட்டம்

வேறென்ன செய்திடுவான்.

16-08-1993, கோண்டா, உ. பி.

 

மனதின் போராட்டங்களை எண்ணியபோது எழுதியபோது எழுதிய பாடல்.

 

23.              மனமே!

 

மனமே உன்தன் நிலைதான் என்ன?

மதிற்மேல் பூனைபோல் வாழ்கிறாய் நாளும்

நன்றும் தீதும் நன்கறிந்த போதும்

நீ நாடுவதேதோ புரியவில்லை நாளும்

உன்னுடன் போராடி ஓய்ந்துவிட்ட நானும்

உன்னிஷ்டம்போல் செய் உன்பாடு எனக்கென்ன?

என்றெண்ணிக் கைகழுவ எவ்வளவு முயன்றாலும்

என்னிடமே முறைக்கின்றாய் ஏற்றிடவும் மறுக்கின்றாய்

வேடிக்கை என்னவென்றால் என்வாழ்வில் நீயும்

வேண்டாத விருந்தினனாய் ஆகிவிட்ட போதும்

அழைத்துன்னைப் படைக்கின்றேன் அருஞ்சுவை உணவு

அதன்பின் தவிக்கின்றேன் என்செயல் நினைந்து

உன்னையன்றி என்னாலே வாழ்ந்திடவோ முடியாது

என்னையன்றி புகலிடம் உனக்குலகில் கிடையாது

எனவே வேண்டும் நம்மிடைஓர் உடன்பாடு

இல்லையெனில் நம்நிலை ஆகிவிடும் பெரும்பாடு

பதவிப் போராட்டம் நம்மிடை இனிவேண்டாம்

நானின்றி நீயில்லை நீயன்றி நானில்லை

உன்னைச்சை போல செயல்படும் போதினிலே

என்நிலை தன்னை நீசற்றே எண்ணிவிடு

’மாட்டேன்’ என்று மறுத்தே நீ நடந்தால்

மாற்று உண்டொன்று மருந்தாக என்னிடத்தில்

அடக்கி ஒடுக்க ஆனமட்டும் முயன்றிடுவேன்

அதில்தோற்றால் உன்தனுக்கு ஆகிவிடுவேன் அடிமையாக.

25-08-1993. கோண்டா, உ. பி.

 

15-06-1994-ல் வந்த இண்டியா டுடே என்ற ஆங்கில வார இதழில் படித்த ஒரு செய்தி (ப. 146-152) என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒருவருக்கொருவர் தம் மனைவியை மாற்றிக்கொள்ளும் அவலநிலை பற்றிய செய்தி அது. அப்போது எழுதிய பாடல்:

 

24. மாக்கள்

 

பாரமே இந்த உலகவாழ்க்கை

பாவம் நிறைந்ததோர் கடினவாழ்க்கை

ஆருளார் ஐயகோ இதில் கரைதேற

அழிந்திடும் நம்நிலை முற்றிலும் மாற்ற

காமம், குரோதம், லோபம், மோகம்

கட்டறுத்த நிலையிலே போட்டிடும் ஆட்டம்

எத்தனை முயன்றாலும் இதை மேற்கொள்ள

யாராலும் முடியாது ஐயோ என்சொல்ல

கணநேர சுகமே பெரிதன எண்ணி

காமத் தீயிலே மனதினைத்தள்ளி

கட்டுக் கடங்காமல் இம்’மாக்கள்’ போடும்

காமக் களியாட்டின் முடிவென்ன ஆகும்?

பிறன்மனைவி தன்னையே பெண்டாள எண்ணி

தன்மனைவி தன்னையே தாசியாகப் பண்ணி

தறிகெட்ட மிருகமாய் தம்மையே மாற்றி

தடுமாறும் மாந்தரின் நிலைமையே என்ன?

சீர்கெட்ட இந்நிலை மாற்றிட வேண்டும்

சேதம் பெருகும் முன் காத்திடவேண்டும்

நேர்மை விரும்பிடும் மாந்தரே வாரும்

காரியம் கைமீறும் முன் போராட இன்று.

15-06-1994. லக்னோ

 

ஒருமுறை மனதில் மிகவும் போராட்டம் மிக அதிகமாகியது. அப்போது என்நிலை எண்ணி நானே சிரித்தேன். அப்போது எழுதிய பாடல்

 

25. போராடப் பொழுதில்லை

 

போராட்டம் என்கிறார்

வாழ்க்கையைப் பலர்

பொழுது போக்கு

என்கிறார் சிலர்

பொழுதும் போனது

தீர்மானம் செய்வதில்

போராடப் பொழுதில்லை

அதனாலே இனிமேலே

08-11-1994, மஹரி (ரீவா. ம. பி).

 

எதிர்ப்பார்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் ஏமாற்றமும் வாழ்க்கையின் ஒருபகுதியே. அதை சிந்தித்த போது எழுதிய பாடல்

 

26. எது உண்மை

 

எது உண்மை இங்கு வாழ்விலே

எதிர்பார்ப்போ ஏமாற்றமோ?

எதிர்பார்த்து நின்றால்

ஏமாந்தே போவாய்

ஏமாறுவேன் என்றால்

எதிர்கொள்ள மறுப்பாய்

எதிர்பார்ப்பு ஏமாற்றம்

இவ்விரண்டும் தேவையே

இவை இல்லா வாழ்வுமோ

சிறகில்லா பறவையே

08-11-1994. மஹரி (ரீவா. ம.பி.)

 

ஏமாற்றம் ஏற்படும்போது வாழ்க்கையில் விரக்தியும் வரும். ஆனால் அதை மேற்கொள்வதே உண்மை போராட்டம். இதைக்குறித்து எண்ணியபோது எழுதிய பாடல்.

 

27. வீணில் புலம்பாதே

 

பெருமூச்சு விட்டு வீணில் புலம்பாதே

போனது போகட்டும் புறப்படு இனிமேலே

தோல்வியே காணாத மனிதனும் உலகில்

தோன்றவில்லை இதுவரை தெரிந்துகொள் வாழ்வில்

விரக்தி என்பது வீணான கற்பனை

வீழ்த்திடும் உன்னையும் அதுவுமோ பலமுறை

விலக்கிடு அதனையும் வீரமுடன் இன்று

வீறுகொண்டு எழு எதுவந்தாலும் என்று.

08-11-1994. மஹரி (ரீவா. ம.பி.)

 

மஹரியில் (ரீவா. ம.பி) டாக்டர் சஷிகாந்த் தூபே வீட்டில் இருந்தபோது அவனுக்கு முனைவர் பட்டம் பெறவேண்டி உதவிசெய்ய, அமரிக்க பெண் கவிஞ்ஞர் எமிலி டிக்கன்சன் கவிதைகளை படித்தேன். அவருடைய தனிமை (recluse) வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று என் அறையில் தனிமையில் இருந்து ஜன்னல் வழியக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.  எமிலியின் அத்தகைய வாழ்க்கை எண்ணிய போது என்நிலை எண்ணி எழுதிய பாடல். (இங்கு ஆஸ்ரமத்தில் என் தாயாருடன் இருப்பதால் மாதக்கணக்கில் வெளியே செல்வதில்லை. அது எனக்கு பாரமாகவே இல்லை. எனவே 1994-ல் எழுதிய கவிதை இன்றைய என் நிலைக்கு மிகவும் பொருத்தமாய் இருக்கின்றது. தனிமை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் வெளிஉலகம் பார்க்காத தனிமை மிகவும் பிடித்த ஒன்று)

 

28. சும்மா இரு

 

திறந்த ஜன்னல் வழியாக

தெருவைப் பார்த்திடும் போது

சிறையில் நான் இருப்பதாக

தோன்றிடும் எண்ணம் அப்போது

யாரிருப்பது இங்கு சிறையில்

என்றே என்னை பிறர் கேட்டால்

நானல்ல உலகம் என்றே

நன்குணர்ந்து நான் கூறுவேனே!

ஆனால் இவ்வுலக மாந்தர்

எந்தன் நிலையை எண்ணி

’அந்தோ பரிதாபம்’ என்பர்

அறிந்திடாமல் அவர்தம் நிலையை

அறையில் அடைந்திருந்தாலும்

அடைபடாத என் எண்ணம்

சிறகடித்துப் பறக்கும் நான்

விரும்பும் திசையெங்கும் செல்லும்

சுதந்திரமாக வெளி உலகில்

சுற்றிடும் மனிதர் நிலையும்

சொல்லில் கூற வொண்ணா

சுமையே அவர்க்கு நாளும்

சுறுசுறுப் பென்ற பெயரில்

நாடி ஓடி ஆடிச் சாடி

நாளையும் வீணில் கழிப்பார்

தம் நிலை உணர்ந்திடாமல்

’சும்மா’ இருப்பது சோம்பலல்ல

சுறுசுறுப்பும் வேலை அல்ல

சிறப்பாய் உழைக்க வேண்டுமானால்

’சும்மா இருக்கவும்’ வேண்டும்

11-11-1994. மஹரி (ரீவா. ம.பி.)

 

 

மஹரியில் (ரீவா, ம.பி.) எமிலி டிகன்ஸன் கவிதைகளைப்படித்துக் கொண்டிருந்தேன். அவரது தனிமை வாழ்க்கைகுப் பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று அவரது காதல் தோல்வி; ஆனால் உண்மையான காரணம் எவர்க்குமே தெரியாது. வெறும் கற்பனையிலும், அனுமானத்திலும் பிறர் வாழ்க்கையைப் பற்றி எத்தனைக் கதைகள் கூறுகின்றார்கள். அதில் என்னைப் பற்றி என்ன கூறுவார்கள் என்று எண்ணியபோது எழுதிய பாடல்:

 

29. சுயசரிதை

 

என்னென்ன கூறுவார்கள்

இறந்தபின் என்னைப் பற்றி

இருக்கும் போது கேட்கமாட்டார்

எந்தன் மன நிலைப்பற்றி

துறவரம் இவனும் பூண்டான்

துணிவற்றதால் வாழ்ந்து காட்ட

போட்டதெல்லாம் வெறும் வேஷம்

காணவில்லை அவனில் பெரும் மாற்றம்

காரணம் ஏதாய் இருக்கும், இவன்

வாழ்வைத் துறந்து இங்கு ஓட?

காதல் தோல்வியாய் இருக்கும் என

கதையும் கூறுவார் பலவே

துறக்கவில்லை வாழ்வை நானும்

தோற்கவில்லை வேறெதில் தானும்

வாழ்கிறேன் வாழ்வில் நாளும்

வளமுடனே உம்மைப் போல

காசு, காதல், பெண்டு, பிள்ளை

எல்லாம் உலகின் வெளி வேஷம்

கோகும் போது கூடவாரார் எனவே

இருக்கும் போதும் எனக்கு வேண்டாம்.

11-11-1994.

 

வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது இன்று எழுதிய பாடல்

 

30. ஓர் உளறள்

 

குருடன் வரைவதும் ஓவியமோ

குழந்தை கட்டுவதும் வீடாகுமோ

ஊமையின் உளறலும் பேச்சாகுமோ

பேதைஎன் எழுத்துமே கவியாகுமோ

ஆயினும் உள்ளத்து உணர்வுகளை

அடக்கிட முடியாத காரணத்தால்

எழுத்திலே கூறிட இங்கு வந்தேன்

கவிதை என்ற பெயராலே

ஊமையும் கண்டான் ஓர் கனவு

உணர்த்திட காணான் வார்த்தையினை

ஊமையான என் மனநிலையும்

ஊமை கண்ட கனவதுவே

வாழ்க்கையின் தத்துவம் என்னவென்று

வாழ்ந்திடும் பலரையும் நானும் கேட்டேன்

’மாயையே வீண் மாயையே இது

பேதையே நீயும் உணர்வாய்’ என்றார்

’மாயையே இவ் வாழ்க்கை யென்றால்

வீணில் இப்போராட்டம் உம்மில் ஏன்”;

கேள்விக்கு பதில் இல்லை அவரிடமே

இக்கேள்வியே வீண் மாயை என்றார்

அறிந்தவர் யாரும் இங்கு உண்டோ?

அறியாத இப்பேதைக்கு பதில்லளிக்க

ஊமையின் உளறலே இக்கேள்விதானும்

உளறலைப் பொருத்துமே பதிலளிப்பீர்!

மஹைரி (ரீவா. ம.பி.), 12-11-1994.

 

இந்நாட்களில் நான் எழுதும் பாடலில் ஆன்மீகம், பக்தி, இறைவன் போன்றவை மட்டுமல்லாமல் சாதாரணமான வாழ்க்கையை, பொதுவான எண்ணங்களை பிரதிபளிப்பனவாய் உள்ளன. என்னைப் போன்றோர் ஆன்மீக சம்பந்தமான பாடல்களை மட்டுமே எழுதவேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு பதில் கூறும் முகமாய் எழுதிய பாடல்:

 

31.   இறைவன்

 

எழுதினால் இறைவனைப் பற்றியே

எழுதவேண்டும் இல்லையென்றால்

நீ ஒரு பக்கத்னல்ல

என்கிறார் போலி பக்தருமே

எழுத்தினால் இறைவனைக் கூறிவிட்டால்

சிந்தையே தெய்வமாய் ஆகிவிடும்

தெரிந்தவர் கூறும் பதிலிதுவே

மஹரி. (ரீவா. ம.பி.)12-11-1994.

 

ரீவாவில் உள்ள ஒரு சீடனின் தவறான செயலுக்கு நான் உடன்படாதது மட்டுமன்றி அதை எதிர்த்ததால், அவன் என்னைப் பற்றி மற்றவர்களிடம் பல குறைகள் கூறத் தொடங்கினான். அதுபற்றி சஷிகாந்திடம் பேசிக்கொண்டிருந்த பின் எழுதிய பாடல்:

 

32    . குறை

 

தம்குறை தன்னை உணர்ந்திடாத

தரணியின் மாந்தருமே

பிறர்மீது பழிகூறி, தம்குறை

மறைப்பார் பேதமை அவர் செயலுமே

சொல்லொன்று செயலொன்று

எனக் கொண்டு வாழ்ந்திடும்

சிறுமையான மனிதருக்கே

சுயபிழை தெரியாது, பிறர்பிழை

பெரிதாக்கி கூறுவார் பலகுறையுமே

குறையில்லா மனிதரும்

உலகினில் கிடையாது

உணர்ந்தால் இதை நாமுமே

தம்பிழை போலவே பிறர்பிழை

பொறுப்போம் தயவுடன் நாளுமே!

மஹரி, (ரீவா. ம.பி.) 13-11-1994

 

‘Success is Counted sweet; By those who ne’er succeed; To comprehend A Nector; Requires the sorest need’—Emily Dickinson.

இப்பாடலை படித்த போது எழுதிய பாடல்:

 

33. தோல்வியும் வெற்றியும்

 

வெற்றி என்பது கிட்டாத கனியே

எட்டியே பார்த்து ஏமாந்தவர்க்கு

தோல்வி என்பதும் தாங்காத சுமையே

தளர்ந்தே வாழ்வில் நிற்போருக்கு

வாழ்வெண்ணும் வண்டியை

விபத்தின்றி நாளுமே

வகையாக் கொண்டே செல்லும்

தண்டவாளமே அவையிரண்டும்

மஹரி (ரீவா. ம.பி.) 17-11-1994.

 

சஷிகாந் தூபே வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று கேட்டதற்கு என் பதிலைக் கூறியபின் எழுதிய பாடல். (What is the purpose of life?–Shashi The purpose of the life to live it–Dayanand)

 

34. வாழ்க்கை மாயையல்ல

 

வாழ்க்கை என்பது வீண் மாயையல்ல

வார்த்தையும் அர்த்தமில்லா உளறல்லல

கூறிடும் வார்த்தையில் அர்த்தமுண்டானால்

வாழ்ந்திடும் வாழ்வில் பயனும் உண்டே

முழுமையாய் வாழ்ந்தவர் யாருமில்லை, இங்கு

வாழ்வின் ரகசியத்தை அறிந்து கொள்ள

முயல்கின்றார் தம்மால் இயன்றமட்டும்

முயன்றிடு நீயும் உன்னால் ஆனமட்டும்

மாயை’ என்கின்ற பெயராலே வீணில்

நாளையும் கழிக்கின்றார் சோம்பலாய்–அந்த

பேதமை நிறைந்த மாந்தரை விட்டு–நீ

புறப்படு நிறைவாய் வாழ்ந்து காட்ட.

மஹரி (ரீவா. ம.பி.), 18-11-1994.

 

மனிதனின் வாழ்க்கை மற்றும் புதிராக இல்லை, மனிதனும் புதிராகவே இருக்கின்றான். இதைக் குறித்து எழுதியபாடல்:

 

35. மனிதன் ஓர் புதிர்

 

மனிதனும் ஓர்

மாறாத புதிரே

மண்ணில் தோன்றிய

நாள் முதலே

புரியாத இப்புதிருக்கு

தெரியாத விடைதேடி

போராடு கின்றான்

வழி அறியாமலே

புரிந்தவர் கூறிய

வழியிலே சென்றாலும்

திரும்புவது என்னவோ

தொடங்கிய இடமே

தொடக்கமும் முடிவும்

ஒன்றே ஆனபின்

தொடர்ந்திடும் வரையில்

புதிரே மனிதனும்

ரீவா, (ம.பி.) 23-11-1994.

 

பலசமயம் நடுஇரவில் உறக்கம் கலைந்தபின் வெகுநேரம் விழித்தவாரே படுக்கையில் இருக்கும்போது, மனிதவாழ்வைக் குறித்து ஆழமாக சிந்திப்பேன். அப்போது மனதில் ஓடும் எண்ணங்களை, பக்கத்தில் வைத்திருக்கும் காகிதத்தில் கவிதையாக எழுதுவதுண்டு. அதில் இப்பாடல் ஒன்று:

 

36. வாழ்க்கை

 

உறக்கமற்ற இரவுகள்

உணர்வற்ற உறவுகள்

கலக்கமுற்ற நினைவுகள்

கலந்ததே வாழ்க்கை

வரவுவரை உறவு

வந்தவரை வரவு

நிறைவற்ற குறைவு

கொண்டதே வாழ்க்கை

உள்ளவரை வருவார்

உதவும்வரை நினைப்பார்

சென்றபின்னே மறப்பார்

வெறுமையே வாழ்க்கை

எதையெண்ணிப் புலம்ப

யாதெண்ணி வருந்த

மனமே நீ கலங்காதே

மாயையே வாழ்க்கை

ரீவா, 29-11-1994.

 

காலை யாதுராம் வீட்டிலிருந்து லலனைப் பார்க்கப் போகும்போது என்னையே எண்ணி நான் சிரித்தேன். என்வாழ்க்கையை பலர் வேஷம் என்கின்றார்கள். ஆனால் நானே என்வாழ்க்கையை ஒரு வேஷம் என்று எண்ணும்போது, பிறர் என்ன எண்ணுவார்கள் என எண்ணாமல், என்னைப் பற்றிய எனது எண்ணங்களே எனக்கு சிரிப்பை வரவழைக்கும். இப்பாடல் ரோடில் நடந்துகொண்டிருக்கும் போதே மனதில் எழுதிக்கொண்டு போய், பின் லலன் அறையில் எழுதியது:

 

37.   ஏமாற்றம்

 

ஏமாற வந்தோம் ஏமாற்ற வந்தோம்

இன்றும் என்றும் வாழ்க்கையிலே

இதுபோன்ற உண்மை வேறொன்றுமில்லை

நான்கண்ட வரையில் இவ்வுலகினிலே

தாய்தந்தை அன்று ஏமாந்ததால் இங்கு

தரணியில் நாம்வந்தோம் ஏமாற்ற இன்று

போடுவதெல்லாம் வெறும் வேடமே என்று

புரிந்துகொள் மனமே அனுதினம் நன்று

போடும் வேடமோ ஏமாற்றவென்று

புலம்பலும் வீண்ணி ஏனிங்கு இன்று

ஏமாறும் மனிதரும் இருக்கின்றவரையில்

ஏமாற்றும் மனிதரும் இருப்பதும் உண்மை

ரீவா, 29-11-1994.

 

எனது நண்பன் ஒருவன், தன் வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு, தன்னில் இருக்கும், தனக்கே தெரியாத தவறுகளுக்காக  இறைவன் அளிக்கும் தண்டனையாக இருக்குமோ என்று எண்ணி எனக்கு கடிதம் எழுதியபோது, அவனுக்கு பதிலாக நான் எழுதியபாடல்:

 

38. யாருமே இல்லை

 

தண்டிப்பதற் கென்றே

இறைவனும் தலைப்பட்டால்

தரணியில் எஞ்சுபவர்

யாருமே இல்லை

குணமன்றி குற்றேமே

காணவும் தலைப்பட்டால்

குறயில்லாத மனிதரும்

உலகிலே இல்லை

தவறெண்ணி வருந்தி

குறையெண்ணி திருந்தி

சோர்வுகளை நீக்கி

செயல்படப் புறப்படு

11-12-1994

 

நான் ஓரளவு பகுத்தறிவு வாதியும், தர்க்கவாதியாகவும் இருந்தும் என்மனதின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக உள்ளது. என்பகுத்தறிவின் மூலம் என் மனதின் மீது முழுக்கட்டுப்பாடு கொள்ளமுடியவில்லை. இதைப்பற்றி யோசித்தபோது எழுதிய பாடல்:

 

39. மனம்

 

சஞ்சலமானதே மனது, அது

தன்போக்கிலே போகும் போது

தடுத்தாட்கொள்ள முடியாது

தவிக்கின்றேன் நானும் அப்போது

அடக்க எண்ணினால் எதிர்க்கும்

எதிர்க்க எண்ணினால் நகைக்கும்

சோர்ந்து நின்றாலே வெறுக்கும்

துணிந்து சென்றாலோ மறுக்கும்

நான் விரும்பும் வகையாக

மாறுவது நீயும் எப்போது

மனமே உன்சித்தம் போல

முடிவுசெய் அதையும் இப்போது.

14-12-1994

 
“Believe not those prattlers”, says one often quoted mystical work, “who boast that they know God”, who knows Him is silent’.—P.V.Kane, History of Dharmasaastras, vol.V, part II, p. 1505.– என்ற வரிகளைப் படித்தபோது, உடன் எழுதிய பாடல்:

 

40. சும்மா இருத்தலே அன்றி

 

இறைவன் இருப்பதும் எங்கே

கேள்வியும் புதிதல்ல இங்கே

சிந்தையால் அறியமுடியாது

சொல்லாலும் கூற இயலாது

சித்தத்தை அவன்பால் அடக்கி

’சும்மா’ இருத்தலே அன்றி

சிறந்த வழியும் கிடையாது

தெய்வத்தைப் பற்றி கூற.

14-12-1994

Tamil Songs 2-20

1970-துகளிலிருந்து நான் எழுதிய பாடல்கள் அனைத்தையும் ஒரு கையேட்டில் தனியே எழுதி வைத்திருந்தேன். பிறகு அதை என் நண்பன் ஒருவனுக்கு படிக்க தந்திருந்தேன். ஆனால் அது எப்படியோ தொலைந்து போய்விட்டது. எனவே இப்பாடல்கள் தற்சமம் என்னிடம் இல்லை. இரண்டொரு பாடல்கள் மட்டும் நினைவில் உள்ளன.  சில பாடல்களின் சில வரிகளும் பல்லவிகளும் நினைவில் உள்ளன. ஆனால் அவற்றை மீண்டும் எழுத முயற்சி செய்யவில்லை. எனவே நினைவில் உள்ளவற்றைமட்டும் முதலில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஆனால் ௧௯௮௨-க்குப் பின் எழுதிய பாடல்களில் பெரும்பான்மையானவை தனியாக உள்ளன. அவற்றை இனி வரும்காலங்களில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

 

இப்பாடல் 1974 அலல்து 1975-ல் எழுதியது. சின்னக் குழந்தைகள் கையையும், காலையும் உதைத்துக் கொண்டு பொக்கைவாய்த் தெரிய சிரிப்பதைக் காண எனக்கு மிகவும் பிடிக்கும். அப்பொழுதெல்லாம் நினைப்பேன் ’இதுபோலவே கள்ளம் கபடம் அறியாத பிள்ளைபோலவே காலம் முழுதும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.!

 

2. குழந்தையாக வேண்டும்

 

குழந்தையாக வேண்டும் மீண்டும்

குழந்தையாக வேண்டும்

இக்குவளையத்தின் கவலை மறக்க

குழந்தையாக வேண்டும்

குஞ்சுகாலும் பிஞ்சுகையும்

கொள்ளையழகுதான்

குறுகுறுக்கும் விழி இரண்டும்

பறக்கும் வண்டுதான்

பொக்கை வாயின் பல்லிரண்டு

மட்டும் தெரிந்திடும்

உன் புன்னகையின் அழகு கண்டு

உலகம் சொக்கிடும்

பரம்பொருளே உன்னை யொன்று

நானும் வேண்டுவேன்

இப்பாரினிலே எதுவரை நான்

வாழ்ந்திருந்தாலும்

கள்ள குணம் அறிந்திடாத

பிள்ளை மனம் போல்

காலமெல்லாம் வாழ்ந்திட

நீ அருள் புரிவாயே.

 

 

3. இன்னும் உறங்காதீர்

 

செவ்வொளி கதிர்பரப்பி செங்கதிரோன் வந்தான்

நல் ஒலி புவிக்குரைத்தே புள்ளினம் விழித்தன

ஒளி-ஒலி உணர்விலாமல் உறங்குகின்ற உலகுலோரே

இவ்விதம் வாழ்வு சென்றால் எவ்விதம் உய்வீர்சொல்

இயற்கையின் ஆட்சியிலே எங்குறக்கம் இல்லைகாண்

பூக்கின்ற மலர்களிலும் பாய்கின்ற நதியினிலும்

வீசிடும் தென்றலிலும் வெவ்வேறு காட்சியிலும்

இளமைத்துடிப்புடனே இயற்கையன்னை நகைக்கின்றாள்

ஆறறிவு பெற்றோமென்றே அறற்றுகின்றீர் பெருமையுடன்

ஓரறிவு புல்லுக்குள்ள உணர்வும்தான் உமக்கும் உண்டோ

காலைப்பொழுதினிலே பனிநீரல் தனைக்கழுவி

காத்திருக்கும் ஆவினிற்கே மனம்மகிழ் உணவாக

சோர்ந்து சோர்ந்து படுத்துறங்கி யாது சுகம் கண்டீர்

சொல்லும் ஓர் பயனுண்டோ உம்மால் இவ்வுலகினிற்கே

படைத்தோனும் உயிரையெல்லாம் பயனின்றிப் படைப்பதில்லை

பகர்கின்றீர் பலபொய்கள் பாழும் இச் சோம்பலுக்கே

இன்னும் உறங்காதீர் எழுவீர் துடிப்புடனே

செய்வீர் உம் தொழிலை செய்யும் முறையுடனே!

–1974 அ 1975

 

நான் விற்பனைப் பிரதிநிதியாக (1975-ல் என நினைகின்றேன்) வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு முறை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு கட்டமொம்மன் கார்போரேஷன் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஓட்டுனர் மிகவும் மெதுவாக ஓட்டினார். இடையிடையே பல நிறுத்தங்கள் வேறு. பல பயணிகளும் மிகவும் எரிச்சலுற்று முணுமுணுக்க ஆரம்பித்தனர். அப்போது உடனே என் கையிலிருந்த நோட்டில் எழுதியபாடல். எனக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும் ஒரு கணவனின் கூற்றாக இதை எழுதினேன்:

 

4.         கட்ட வண்டி

 

கட்டபொம்மா கட்டபொம்மா

உன் கட்ட வண்டியை கட்டமொம்மா

கடிதுடனே ஓட்டிச் செல்வாய்

கதறுகின்றோம் காற்றில்லாமல்

கட்டமொம்மன் பேரும் கொண்டாய்

கட்ட வண்டிபோல் ஓட்டுகின்றாய்

கட்ட வண்டிபோல் ஓட்டிச் சென்றால்

காலம் பூரா பஸ்ஸில் போகும்

காதம் பல கடந்து செல்லவேண்டும்

காலத்தில் வீடுபோய் சேரவேண்டும்

காலத்தில் வீடுபோய் சேராவிட்டால்

என்காதல் மனையாளும் கோபிப்பாளே

காதல் மனையாளும் கோபித்தாலே

காசுக்கு வீண் செலவு வந்துவிடும்

காசுக்கு வீண் செலவு வந்துவிட்டால்

இந்த மாசக்கடைசியில்

நான் என்னசெய்வேன்?

 

திருச்சி மலைக்கோட்டையில் என் பெற்றோருடன் வடக்குத் தெருவில் இருந்த (1972-ல்) போது ஒரு நாள் மாலை மேல் மாடியில் நின்று கொண்டிருந்தேன்.  தூரத்தில் காவிரி ஓடுவது தெரியும். அப்போது மாலை நேர ஆராதனைக்காக மலைகோயிலில் மணி அடித்தது. அந்நேரம் மனதிலும் வாழ்க்கையைக் குறித்த சில எண்ணங்கள், கேள்விகள் மனதில் எழுந்தன. வாழ்க்கையின் அர்த்தம், நோக்கம், போராட்டம் ஆகியவை பற்றி எண்ணிய போது எழுதிய பாடல்:

 

5. நானொன்றும் அறிகிலேன்

 

பூண்கொங்கை அன்னையே

போற்றுதும் நின் திருநாமம்

வீண் பிறவி எடுத்தேனை

வினை நீக்கி ஆள்வாயே

நான் என் வினை செய்தேன்

நாயினும் இழி இப்பிறவிக்கு

நான் ஒன்றும் அறிகிலேன்

நான் முகனே பழிக்குறியான்

எடுத்த பிறவி போதும்

இனிப் பிறவி வேண்டிலேன்

தடுத் தென்னைக் காப்பாய்

தயாபரி நீ சங்கரியே

 

திருச்சியில் இருந்தபோது, சில சமயம் திருவானைக்காவல் கோயிலுக்கு செல்வது வழக்கம். ஒரு நாள் அங்கு சென்று வந்தபின் (1972-ல்) எழுதிய பாடல் இது. இதை என் அம்மா, தன் பஜனை மண்டலியிலும் அறிமுகம் செய்து பலரும் பாடியுள்ளனர். இன்றைக்கும் (2011) என் அம்மாவிடம் இப்பாடல் உள்ளது. அதை அவரிடமிருந்து கேட்டு வாங்கி இங்கு வெளியிடுகின்றேன்.

 

6. பாதாதி கேச வர்ணனை

 

 

அண்டமெல்லாம் பூத்து அகிலமெல்லாம் காக்கும்

அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே

தண்டையணி பாதமதில் தெண்டனிட்டு நான் பணிந்தேன்

திருக்கண்டன் இடப்பாகம் கலந்தவளே காத்தருள்வாய்

 

அழகிய நின் பாதமதில் அணிசெய்யும் பொற்கொலுசும்

அண்டமெல்லாம் முழங்கும் மாணிக்கப் பரலழகும்

மஹிடன் தலைமிதித்த திருக்காலின் காப்பழகும்

கண்ட என் உள்ளம் களிகொண்டு கூத்தாடும்

 

சின்னஞ்சிறு மருங்கில் சாற்றிய மென்பட்டும்

சிற்றிடையின் மேல் ஓடும் முத்தான மேகலையும்

கொடி இடை அசைந்தாட குழைந்து வரும் நடையழகும்

கண்ட என் ஊள்ளம் களி கொண்டு கூத்தாடும்

 

ஆசையுடன் நான் சார்த்தும் அழகிய பொன்மாலைகளும்

அடியவர் தான் அளிக்கும் அழகிய பூ மாலைகளும்

வாசமுடன் உன்மார்பில் வலம்வரும் போதினிலே

ஓசையுடன் என் உள்ளம் ஓங்கி நின் புகழ்பாடும்

 

சங்கென்ன வெண் கழுத்தில் தான் ஒளிரும் சிறுதாலி

அகன்ற உன் தோளினிலே அணிசெய்யும் முத்தாரம்

நாற்றிசைக்கும் ஒளிசேர்க்கும் நவமணி மாலைகளும்

நான் கண்ட போதினிலே நயந்து என் உளம் பாடும்

 

எற்பு ஏசிய நாசியிலே எழில் கொஞ்சும் மூக்குத்தியும்

சின்னஞ் சிறுகாதில் திகழ்கின்ற தாடகமும்

நெற்றியிலே மிளிர்கின்ற வாசமிகு குங்குமமும்

கண்ட என் இருவிழியும் களி கொண்டு கூத்தாடும்

 

நிலவன்ன மிளிர்கின்ற நின்முகத் தாமரையும்

காதளவோடு தான் ஓடும் கரிய இரு புருவங்களும்

அடியார்க்கு அருள்கின்ற அழகிய திருக்கண்ணும்

கண்டு கண்டு என் உள்ளம் கனிந்து உனை நாடும்

 

வாள் போல் அமைந்திட்ட ஏற்ற மிகு நாசியின் கீழ்

பவழத்தை இழைத்தாற் போல் இளங்கு கின்ற பனி உதடு

பளிங்கு போல் ஒளிர்ந்திடும் பல்வரிசை தான் கண்டு

பண் அமைத்து என் நா உன் புகழைத்தான் பாடும்

 

ஏற்ற மிகு சிரசினில் ஒளிர்தரும் மணிமகுடம்

இருள் தோளும் வழிந்தோடும் முகிலன்ன கருங்கூந்தல்

தேவி உன் திருமேனி முழுவடிவம் தான் கண்டு

உருகி உருகி என் உள்ளம் உன்திருவடி நாடும்

 

பார்வதியே ஈஸ்வரியே பாற்கடலோன் சோதரியே

பக்தர்க்கு அருள் வழங்கும் பர்வத வர்தினியே

பக்தியுடன் உன் அழகை பாதாதி கேசம் வரை

பதம் அமைத்துப் பாடுவதும் தேவி உன் அருள் அன்றோ.

நான் கண்டபோதினிலே நயந்து என் உளம் பாடும்

 

கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. ஆனால் எல்லா கேள்விகளுக்கும் விடைகிடைப்பதும் இல்லை. அப்படி பல சமயம் என்வாழ்விலும் நிகழ்ந்துள்ளது. 1992-ல், மத்தியப்பிரதேசத்தில் ஒரு மிகவும் உட்பகுதியில் உள்ள கிராமத்தில் என் சீடன் (கேஷவ் மிஸ்ரா, கெகரஹா, ரீவா)வீட்டில் தங்கியிருந்தபோது (1992, டிசம்பர், 29) அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. அப்போது கேள்விக்கு விடைகிடைக்காதது மட்டுமல்ல, கேள்வியே விடையாகவும் பல சமயம் இருப்பதை உணர்ந்தபோது எழுதிய சில பாடல்கள்:

 

7.    கேள்வி-பதில்

 

விடையே இல்லாத

கேள்விதான் வாழ்க்கை

வேடிக்கை இதிலே

என்ன வென்றால்

கேள்வியே விடையாகக்

கொண்டதே வாழ்வானால்

விடையென்ற ஒன்றும்

வேண்டாத ஒன்றே

29-12-1992

 

8. தெளிவான திட்டங்கள்

 

உள்ளான அமைதியொடு

உறவாடும் போது

தெளிவான எண்ணம்

சிந்தை தனையாள

தடுமாறும் வாழ்வில்

திகையாது முன்னேற

தெளிவான திட்டங்கள்

தோன்றி வழி காட்டும்.

29-12-1992

 

9. இவ்வளவே நீ

 

போதும் போதும் இந்தப் போராட்டம்

பொழுதெல்லாம் மனதினிலே பேயாட்டம்

எத்தனை காரணம் காட்டினாலும்

இவ்வளவே நீ என்பது அப்பட்டம்.

29-12-1992

 

10. ஐந்தொகை

 

ஏன்தான் விடிகிறதோ

என்பதே வாழ்வானால்

என்னையும் மனிதனாக

ஏன் அவனே படைத்திட்டான்

பகுத்தறிவு பெற்றதினால்

பயனேது நான் கண்டேன்

படும் பாடு அனைத்தையுமே

பதிவேட்டில் குறித்துவைத்து

ஐந்தொகை பார்க்கத்தான்

அளித்தானோ இவ்வறிவை?

29-12-1992

 

22-01-1993 அன்று, மத்தியப்பிரதேசம், ரீவாவில் மஹரி என்ற கிராமத்தில் என் சீடன் (டாக்டர். சஷிகாந்த் தூபே) வீடில் இருந்த போது, மாலை நேரத்தில் உலவச் சென்றேன். அமைதியான சின்ன நதி, இருபுறமும் அடர்த்தியான மாந்தோப்பு, மேல்வானத்தில் சூரியன் சென்நிறத்துடன் மறையத்தொடங்கும் நேரம். ஒரே ஒரு தாரகை மட்டும் வானில் தோன்ற, பறவைகள் தங்கள் கூடுகளை நோக்கி கூட்டமாக பறந்து சென்றன. அக்காட்சி வெகுநேரம் என் நினைவைவிட்டு அகலவில்லை. அன்று மாலை எழுதியபாடல்:

 

11. இயற்கைப் புகலிடம்

 

தனித்து நின்றதோர் தாரகை

தழலெனச் சென்றான் கதிரவன்

புகலிடம் தேடி புள்ளினம் விரைய

புல்லெரித் தெழுந்தது என்மனம் மெல்ல

ஆகா இயற்கையின் அற்புதக் காட்சியை

ஆண்டவன் அருளிய அளவிலா மாட்சியை

எழுத்தில் வடித்திட எண்ணவும் முயல்வது

என் மன மூடமதியதின் துணிவிது!

பரப்பரப்பான வாழ்வே நமது

பற்பல காரணம் இதற்கும் உள்ளது

ஆயினும் சிலகணம் அமைதி வேண்டிடின்

அண்டிடு இயற்கை மடிதனில் புகலிடம்

 

 

இன்றுமாலைக்(22-01-1993) கண்ட இயற்கைக் காட்சி வெகுநேரம் என் நினைவை விட்டு அகலாதபோது, இரவு 11.30-க்கு எழுதிய பாடல்.

 

12. இயற்கை இன்பம்

 

மெல்ல வீசிடும் தென்றல்

மேனியைத் தீண்டும் போது

சொல்ல வொண்ணா இன்பம்

சிந்தை முழுவதும் ஆளும்

கள்ள மற்ற சிரிப்பு, அது

காமமற்ற உண்மைக் காதல்

அன்னைதன் மென் அணைப்பு

ஆருயிர் நண்பரின் இணைப்பு

பருக பருகவே குறையா

பளிங்கு நீரின் ஊற்று

பார் முழுவதும் நிறைந்த

பரமனின் அருள் ஆட்சி

இயற்கை அளிக்கும் நல்ல

இன்பத்திற்கோ எல்லை இல்லை

இதனை உணராத வாழ்வில்

எஞ்சுவதோ வீண் தொல்லை.

 

22-01-1993 அன்று சஷிகாந்த் கேட்ட சில கேள்விகளுக்கு விடையளித்தேன். அப்போது எழுதிய பாடல்:

 

13. சாரமற்ற தத்துவம்

 

சிற்றின்பம் பேரின்பம் என்றே

சொல்லில் வித்தைகள் காட்டி

செய்திடும் செயலெல்லாம்

சாரமற்றுப் போனால்

அள்ளி உதிர்த்த தத்துவம்

அத்தனையும் செத்த வித்தே!

 

மனிதன் ஒரு சமுதாயம் சார்ந்தவன். சமுதாயம் இல்லாமல் ’மனிதன்’ என்ற சொல்லிற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஆனால் சில சமயம், பலர் நம்மைச் சூழ் இருந்தும், ஒருவித தனிமையை நாம் உணர்கின்றோம். ஆனால் அந்த உணர்வோ, நிலையோ நிரந்தரமாக இருப்பதில்லை. ஒரு சன்யாஸி கூட சமுதாயம் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை. அத்தகைய ஒரு தனிமை எண்ணம் வந்தபோது எழுதிய பாடல்:

 

14.   தனிமை

 

தனிமை என்ற ஓர் நிலமை

தரணியில் அல்லவே புதுமை

தனித்து வந்ததே நம் நிலமை

தவிர்க்க முடியாத உண்மை

சுற்றம் சூழல் என்ப் பலரும்

சூழ்ந்து நமை நின்றபோதும்

தனிமை என்பதே தவிர்க்க முடியாத

தகை சான்ற ஒரு நிலமை

துணிவு கொண்டு அதை ஏற்றால்

தொடர்ந்திடாது உன்னைத் துன்பம்

தயங்கியே பின்னடைந்தால்

தவிர்க்க முடியாது அதை என்றும்

தாய் தந்தை நற் தாரம்

தகை சான்ற நண்பர் அன்பர்

உரிமை கேட்பார் உன் உறவில்

உதவ வாரார் உன்நிலையில்

யாரும் வாரார் உதவ உனக்கு

எதிர் பார்ப்பதும் வீண் கணக்கு

யார்க்கும் உள்ள ஒரு நிலமை

ஏற்றுக் கொள் இந்த உண்மை

மிரண்டிடாதே அதைக் கண்டு

மேற்கொள் அதனை இன்று

பயந்தவன் அதற்கு அடிமை

வென்றவன் அடைவான் வலிமை

24-01-1993

 

ரீவாவில் ஒரு சீடன் வீட்டில் தங்கியிருந்தபோது, கண்டிப்புடன் வளர்ப்பதாகக் கூறி அவன் தன் மகனை மிகவும் கடுமையாக நடத்தினான். அவனுக்கு சில கருத்துக்களைக் கூறியபின் எழுதிய பாடல்:

 

 

15. தன்னம்மிக்கை

 

பாதுகாப்பதாக எண்ணியே

பயிரை சற்றே வறுத்து

பக்குவமாக நிலத்தை உழுது

பாங்காக விதைத்தாலும்

முளையாங்கே வந்திடாது

மூடனே நீ அறிந்திடுவாய்

கட்டுப்பாடு எனச் சொல்லி

கெடுபிடிகள் பலவும் அமைத்து

பிள்ளையை வளர்த்திட்டாலே

பயன் அதில் கிடைத்திடாது

தன்னமிக்கை ஊட்டியே

தகுந்தபடி வளர்த்திட்டாலே

தகைசான்ற குடிமகனாய்

தரணியிலே திகழ்ந்திடுவான்

கண்டிப்பற்ற அன்போவென்றால்

காலமெல்லாம் நிலைத்திடாது

அன்பற்ற கண்டிப்போ என்றும்

அரிதாமே ஜீரணிக்க

அடிக்கின்ற கைதான் அணைக்கும்

அணைக்கின்ற கையே அடிக்கும்

அறிந்திட வேண்டும் பிள்ளை இதை

அனுதின வாழ்வில் முன்னேற

27-01-1993

 

நான் வகுப்புகள் எடுக்க பலமுறை அழைக்கப்பட்டுள்ளேன். அவ்வாறு ஒருமுறை சென்றபோது, என் கருத்துக்களை ஏற்காத ஒருவர், அவற்றுக்கு சரியான பதில் தராமல், என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமசரித்து எனகு ஒரு கடிதம் எழுதினார். அவருக்கு பதில் அளித்தபின், உறுதியான கொள்கை (conviction) ஒருவனுக்கு எவ்வளவு அவசியம் என்று எண்ணியபோது எழுதிய பாடல்:

 

16. விதைப்பும் அறுப்பும்

 

விதை ஒன்று போட

செடி வேறு வாராது

வேடிக்கை அல்ல இதுவே

வீணான எண்ணங்கள்

சிந்தையில் நிறைந்தாலோ

விளைவது நாசமதுவே

சொல்லொன்று செயலொன்று

கொண்டதே வாழ்வானால்

கேவலம் ஆகும் அதுவே

திடமான கொள்கையும்

தெளிவான எண்ணமும்

உயர்த்திடும் உன்நிலையையே

26-06-1993

 

இன்றுமாலை அந்திநேர வானம் மிகவும் அழகாக இருந்தது அப்போது எழுதிய பாடல்

 

17. இயற்கையின் இந்திரஜாலம்

 

இந்திர ஜாலமே புரிகின்றாள்

இயற்கை நங்கை அந்திநேரத்தில்

என்னதான் அவள் கலை வண்ணமோ

ஏதுதான் அவள் கைத்திறனோ?

எங்கு நோக்கினும் அவள் இளமை

ஏங்க வைக்கும் ஓர் மென்மை

அள்ளித் தழுவிடும் போது

ஆனாந்தம் ஒன்றே மேலோங்குது

காமம் அல்ல இவ்வுணர்வு

மெய்க் காதலாம் அந்நினைவு

காத்து நின்றாள் அவள் பாதம்

கடைக்கண் அருள்வாள் அவளும்

10-03-1993

 

ஒருமுறை ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகள் குறித்து எண்ணி கலங்கிக் கொண்டிருந்தார். அப்போது நான் அவருக்கு, பல பிரச்சனைகள் அவரது கற்பனை என்றும், பல சமயம் அப்பிரச்சனைகள் வராமலேபோகும் என்பதை சுட்டிக்காட்டினேன். அத்தகைய வாராதா எதிர்கால பிரச்சனைக் குறித்து நிகழ்காலத்தில் கவலைப்படுவது, நம் நிகழ்கால நிம்மதியை மட்டுமே கெடுக்குமே தவிர வேறு ஒன்றுக்கும் உதவாது என்பதை அவருக்கு விளக்கினேன். அச் சமயம் எழுதிய பாடல்:

 

18. வாராத பிரச்சனை

 

வாராத பிரச்சனையை

வீணே கற்பனித்து

வருந்தி வருந்தியே

நிகழ்கால நேரத்தை

வீணாக செலவழிக்கும்

பேதயான மாந்தரே

வரும்போது பார்க்கலாம்

மாறாக இப்போது

பொன்னான நேரத்தை

புத்தியாய் செலவழித்து

பெறுவீர் ஞானமதை

பயனுண்டு அதனாலே

11-03-1993

 

பசி பாலுணர்வு இரண்டும் இயற்கையில் இறைவன் அளித்த இரு வரங்கள். மிருகங்கள் அவற்றின் நிறைவுக்காக முயலும்போது இயற்கையின் நியதியை மீறுவதில்லை. ஆனால் மனித வாழ்வில் மட்டுமே அவை இரண்டும் நெருப்பாக அவனை எரிக்கின்றன. சிலர்வாழ்வில் புலனடக்தத்தால் அந்நெருப்பு தீபமாக சுடர்விடுகின்றது. ஆனால் பலர்வாழ்வில் காட்டுத்தீயாகமாறி பலரை அழிக்கின்றது. இது குறித்து ஒருமுறை சிலருடன் பேசியபின் எழுதியபாடல்

 

19. நெருப்பிரண்டு

 

வைத்தான் நெருப்பிரண்டை

வாழ்வென்னும் வண்டியிலே

அடிவயிற்றிலே ஒன்று

அதன்கீழே மற்றொன்று

ஏன்தான் இதைவைத்தான்

என்ன அவன் எதிர்பார்ப்போ?

பிள்ளைத் தலைமீது

பெரும் பாரம் வைத்தாற்போல்

தவிக்கின்றார் மாந்தருமே

பாரமவை தாங்காமல்

நெருப்பை அணைக்கெண்ணி

நெய்வார்க்கும் மூடன்போல்

முயல்கின்றார் மாந்தருமே

முழுமூச்சாய்த் தீயணைக்க

உண்மை நிலையறியாமல்

ஊமைகண்ட கனவுபோல்

உள்வைத்தே வாடுகின்றார்

உய்யும்வகை அறியாமல்

பசியும் பாலுணர்வும்

பரன் அளித்த ஈவுகளே

பக்குவமாய் கையாண்டால்

பலனுண்டு அவையாலே

இயற்கையின் விதிக்கிசைந்து

இவ்விரு உணர்வுகளை

மிருகங்கள் கூட தம்மில்

முறமை அனுசரிக்கும்

மிஞ்சிய மோகத்தால்

காமமெனும் தீயினிலே

கருக்கினால் உடலதனை

நஷ்டம் நமதேயாம்

இல்லற வாழ்வினிலே

இணைந்தே வழிநடந்தால்

எரிகின்ற தீபமாய்

என்றும் அதுவிளங்கும்

உயிர்வாழ வேண்டியே

உடலின் நலம்பேண

அளவாய் உண்டாலே

ஆயுளும் நீடிக்கும்

ஒருவேளை உண்டால்

உண்மையில் யோகியவன்

இருவேளை உணவுண்ன

இருப்பான் போகியாக

மூவேளை முழுங்கினால்

துரோகியாவான் தனக்கே

அதற்குமேல் உணவுண்டால்

ஐயகோ மனிதனல்ல

வாழ்வதற்கு உணவுவேண்டும்

உண்பதற்கே வாழ்வுஅல்ல

பெருந்தீனிக் காரன்

பாரமே இவ்வுலகிற்கு

வாழ்வெண்ணும் வண்டியது

வளமுடன் சென்றிடவே

புலனடக்கம் என்ற அச்சில்

பொருந்திய சக்கரமாய்

இவ்விரு உணர்வுகளும்

இசைவாக உருண்டிட்டால்

உன்வாழ்வு வளமாகும்

உலகிற்கு நீ சுடராவாய்.

25-05-1993

 

கொண்ட கொள்கையில் உறுதியாய் நிலைப்பது அவசியம். ஆனால் பலமுறை இதில் நான் தோல்வி அடைந்துள்ளேன். அதுகுறித்து எண்ணியபோது எழுதியபாடல்

 

20. கொள்கை மாற்றம்

 

எடுத்த தீர்மானம் எத்தனையோ

எண்ணினால் கணக்கிலே அடங்கிடாது

எதையும் நிறைவேற்ற எண்ணாலே

இயலாது என்பதே முடிவானது

ஏன் இந்த தடுமாற்றம் என்னிலே?

எத்தனைக் கேள்விகள் என்வாழ்விலே!

உள்ளான மனதின் தினப்போராட்டம்

ஒயாத கடல் அலைப் பேயாட்டம்

கெஞ்சினால் மிஞ்சும் மிஞ்சினால் கெஞ்சும்

இதுவே என் மனத் தடுமாற்றம்

உறுதி வேண்டும் ஓரு கொள்கையிலே

உரைக்கின்றேன் உபதேசம் ஊருக்குமே

எத்தனை விரைவாக என்வாழ்விலே

மாற்றினேன் கொள்கையை மனம்போலே?

பச்சோந்திகூட நிறம் மாறும்

பாதுகாப்பை மட்டுமே என்றும் நாடி

பலமுறை மாற்றினேன் கொள்கையைப்

பிறர் குறை கூறவே உண்மையில்

என்னையே நீதிமானாய் எண்ணியே

இதுவரை வாழ்ந்ததால் இந்நிலை

சுயநீதி உடையோர்க்கு கொள்கையும்

சூதாட்டம் ஆகுமே தினந்தோறும்

தன்சித்தம் ஒன்றையே நிறைவேற்ற

தயங்கிடார் தந்திரம் பல கையாள

தத்துவம் பேசுவார் தாராளமாய்

குடிகாரன் போலவே ’சுய’ நீதியில்!

15-06-1993. கோண்டா, உ.பி.

Bhakti Songs 221-230

221. எவையென்று நான்சொல்ல

 

நன்றி மட்டுமின்றி

நான் சொல்ல வேறுண்டோ

நாளும் எனக்கு நீசெய்யும்

நன்மையை எண்ணினால்

 

வாழ வாழ்வு தந்தாய்

வாழ ஓர் இடம் தந்தாய்

தேகத்தின் தேவையைத்

தேடியே நீ தந்தாய்

 

மனதை நீ தந்தாய்

அதனுள் குடிகொண்டாய்

மன்னவா உனைப்போற்ற

மகிழ்வுடன் மொழிதந்தாய்

 

எண்ணம் நீ வைத்தாய்

என்னுள் உனைவைத்தாய்

என்றும் உன்பின்வர

இதயமும் நீ தந்தாய்

 

அறிவு நீ தந்தாய்

அதையும் ஆட்கொண்டாய்

அகமதை அழித்தே

அஞ்ஞானம நீக்கினாய்

 

உறவு பல தந்தாய்

உறவாட நீ வந்தாய்

பக்தி நெறி தந்தாய்

பக்தர் குழாம் தந்தாய்

 

முக்தியும் நீ தந்தாய்

முழுமை நீ தந்தாய்

முதலும் முடிவுமாகி

என்னையும் ஆட்கொண்டாய்

 

எத்தனை நான் எண்ண

எவையென்று நான்சொல்ல

என்வாழ்வில் நீசெய்த

நன்மையை எண்ணியே

 

5-01-2014 காலை 10.30

 

 

 

 

 

222. உனக்கது முடியாது

 

ஆதாரம் எனக்கு நீதானையா

அனுதின வாழ்வில் போராடும் எனக்கு–ஆதாரம்

 

பாதார விந்தமே கதியென வந்தேன்

பக்தருக்குப் புகலிடம் நீதானே என்றேன்

வேறாரு அறிவார் என்நிலை தன்னை

விடுவோனோபார் இனி நான் உன்னை–ஆதாரம்…

 

ஆதாரம் எனக்கு நீதானையா

அனுதின வாழ்வில் போராடும் எனக்கு–ஆதாரம்

 

அடியாரைக் காக்கவே அவதாரம் செய்தாய்

அன்பரைப் புரக்கவே உன்னை நீ தந்தாய்

வேறாரும் உன்னைப்போல் செய்ததும் இல்லை

எனவே உன்னை நான் விடுவதாய் இல்லை–ஆதாரம்…

 

ஆதாரம் எனக்கு நீதானையா

அனுதின வாழ்வில் போராடும் எனக்கு–ஆதாரம்

 

உலகில் போராட்டம் ஓயாது என்றும்

இதில் உதவிட நீயன்றி யாரையும் காணும்

அவரவர் பாரம் பெரிதான பின்பு

என்பாரம் சுமப்பது நீயன்றி யாரு?–ஆதாரம்…

 

ஆதாரம் எனக்கு நீதானையா

அனுதின வாழ்வில் போராடும் எனக்கு–ஆதாரம்

 

உனக்கு மறைவாக ஒளிவிடம் கிடையாது

உண்மை இதுபோல் வேறொன்றும் கிடையாது

எனக்கும் மறைவாக நீபோக இயலாது

என்னுள் வந்தபின் உனக்கது முடியாது–ஆதாரம்..

 

ஆதாரம் எனக்கு நீதானையா

அனுதின வாழ்வில் போராடும் எனக்கு–ஆதாரம்

 

6-1-2014, காலை, 10.30

 

223. போதும்

 

இந்த உறவு என்றும் வேண்டும்

இந்த அமைதி எனக்கும் வேண்டும்

உந்தன் கருணை அதற்கும் வேண்டும்

உன்னடி மட்டும் பணிய வேண்டும்

 

உலகில் பலரும் இதனை அறியார்

உந்தன் கிருபை அறிய மறுத்தார்

ஏனோ என்மீது இரக்கம் கொண்டு

உன்னை யளித்தாய் உறவை அறிய

 

ஏதோ என்னுள் மாற்றம் தந்தாய்

ஏனோ என்னை மீட்டுக் கொண்டாய்

காரணம் இதுவரை நானும் அறியேன்

கருணை மட்டும் அதிகம் உணர்ந்தேன்

 

பாவிக்காக உன்னை அளித்தாய்

பாவத்திற்காகப் பலியுமானாய்

ஆயினும் அதற்கு மேலே சென்று

ஆட்கொள்ள என்ன கண்டாய்

 

காரணம் பல கூற முடியும்

கருத்துகள் ஆயிரம் காணமுடியும்

என்வரை அவற்றுக்கு அவசியம் இல்லை

எல்லாம் அறிந்திடத் தேவையும் இல்லை

 

ஆதியில் நாம்கொண்ட உறவுதானே

ஆதி அந்தம் இல்லா நிலையும் தானே

இடையில் சற்று இழந்திருந்தேன்

உன்னால் இங்கு மீண்டும் பெற்றேன்

 

எனவே இந்த உறவு போதும்

என்னுள் தந்த அமைதி போதும்

உந்தன் கருணை நிலைத்து நிற்கும்

உன்னடி என்னுள் பதிந்திருக்கும்.

 

24-02-2014, குருகுலம், காலை. 9.00

 

224.  பாரமாய் ஆனதே

 

உறவுகள் வரும் போகும் ஆயிரம் உலகிலே

உள்ளமும் தடுமாறும் நிலையில்லா வாழ்விலே

உணர்வுகள் அலைமோதும் அடங்கா மனதிலே

உள்ளான அமைதி கிடைப்பது எதிலே?

 

ஒருநாள் கழிவதும் யுகமாய் ஆகுதே

உலக வாழ்க்கையும் பாரமாய் ஆனதே

சுமக்கவும் முடியாமல் இறக்கவும் முடியாமல்

ஏதோ போகுது நாளுமே வாழ்விலே

 

கூடவே பிறந்தோரும் காணாமல் போனார்

உடல் தந்த பெற்றோரும் மறைந்து போனார்

நட்பாக இடைவந்தோர் மறந்தும் போனார்

நான்மட்டும் தனியாக ஏனோ வாழ்கிறேன்

 

துணை என்ற ஒன்றைத் தேடவும் இல்லை

துணையாக எவரும் உடன் வரவில்லை

அதனால் எதையும் நான் இழக்கவும் இல்லை

ஆயினும் வாழ்க்கையைத் துறக்கவும் இல்லை

 

எதுவரை போகுமோ அதுவரை போகட்டும்

என்னதான் நடக்குமோ அதுவும் நடக்கட்டும்

ஆட்டுவித்தால் ஆடாதார் எவரும் உண்டோ

அவனின்றி நான்செய்ய ஏதுமே உண்டோ?

 

27-02-2014. குருகுலம், காலை 9.00

 

225 ஆட்கொண்டான்

 

அமைதியும் ஆறுதலும் அளித்திடும் திருவடி

அலைபாயும் மனதுமே நிலைநிற்கும் தேரடி

எளிதாக எனைவெல்ல எனக்குள்ள ஒரேவழி

என் ஈசன் எனக்களித்த இணையில்லாத் திருவடி

 

ஒவ்வொரு நாளுமே மாபெரும் போராட்டம்

உலகின் வழ்வுமோ அனைவர்க்கும் திண்டாட்டம்

அதனிடை நான்வாழ வேண்டும் ஒருமாற்றம்

அதனை நான்பெறக் கொண்டேன் பெரும்நாட்டம்

 

அதனைத் தரவேண்டி அவனிக்கும் அவன்வந்தான்

அண்டினோர்க்கெல்லாம் அவனருள் தந்தான்

இனிஇல்லை வீண்கவலை எனக்கில்லை இனிதொல்லை

என்னைக் காப்பதே அவனுக்கு முதல்வேலை

 

இதனினும் இன்பம் எங்கு நான்காண்பேன்

இறைவனே யன்றிக் காப்பவன் எவனென்பேன்

உறவு அவன் கொண்டான் உரிமைமிகத்தந்தான்

என்சொந்தமாகி என்னை ஆட்கொண்டான்

 

4-3-14. காலை. 8.45

 

226 ஒரு கேளிக்கை

 

 

 

புவியின் வாழ்வே மாபெரும் போராட்டம்

புலன்கள் இதனிடை ஆடும் சதிராட்டம்

மனதும் அதற்கு அமைக்கும் ஓர் அரங்கம்

அந்த மேடையில் நிறைவேறும் அரங்கேற்றம்

 

கண்டு களிக்கக் கூடுவார் உலகோரும்

காட்சிப் பொருளாய் ஆவோம் தினந்தோறும்

பிறர் மெச்சப் போடுவோம் பலப்பலவேடம்

கேளிக்கையாகிப் போகும் நம் வாழ்வும்

 

ஆயினும் உள்ள நிலையார் அறிவார்

அறிந்தாலும் உதவ யார் இங்கு வருவார்

ஆயிரம் காரணம் அதற்குமே கூறுவார்

அதுதான் உண்மை நிலைநன்கு அறிவாய்

 

அனைவரின் வாழ்க்கையும் நாடகமானதே

அதனிடை நாம்போடும் வேடம்பலவானதே

அவரவர் மேடையும் தனித்தனியானதே

அதன்மீது நடிப்பதும் நிரந்தரமானதே

 

பிறர்காண நாமுமே நன்கு நடிப்போம்

நாம்காணப் பிறரும் அதுபோல் நடிப்பார்

அவரவர் வாழ்க்கை நாடகமானபின்

அனைவரின் வாழ்வும் கேளிக்கையானதே

 

 

9-3-2014, காலை. 9.00

 

227. மறைந்து போனது

 

உன்னடி நான் வந்திடும் போது

உலகமே எனக்கு மறந்து போகுது

உன்னருள் என்னை அடைந்திடும் போது

உள்ளான போராட்டம் நொடியில் மறையுது

 

அப்படி என்ன மோடி செய்தாய்

அடியேனை மயக்க ஏது செய்தாய்

அடியாரைக் காக்கவே உனை வதைசெய்தாய்

அடியேனை ஆட்கொள்ள வேறன்ன செய்தாய்?

 

உன்வதை தன்னை எண்ணிடும் போது

உள்ளமே என்னுள் மிகவும் நடுங்குது

என்பாவம் தன்னை எண்ணிடும் போது

உன்னை விட்டே ஓடவேதோணுது

 

பாவத்தை மன்னித்தாய் நானறிவேனே

பரிகாரமானாய் அதை உணர்ந்தேனே

ஆயினும் அவைமட்டும் ஆட்கொள்ளப் போதாது

என்றெண்ணி எனக்கு செய்தது வேறெது?

 

அந்த ரகசியம் சொல்லவும் தகுமோ

அதைப் பிறர் உணர என்றும் முடியுமோ

நம்மிடை உள்ள இந்த உறவை

நான்கூட வார்த்தையால் சொல்ல முடியுமோ

 

சரிவிடு போகட்டும் அதைப்பற்றி எண்ண

சமயம் இதுவல்ல என்பதை உணர்ந்து

வேறெதும் எண்ணாமல் நான்வரும் போது

உலகமே மறைந்தது எனக்கு அப்போது

 

10-3-2014,, காலை 9.15 குருகுலம்

 

228. ஓடி முடித்தேன்

 

உன்னருள் என்னைத் தாங்குவதாலே

ஒருநாள் போனது என்வாழ்வினிலே

இன்றைய நாளும் அதுபோல் போக

எனக்கருள் வேண்டும் புதியதாக

 

குழந்தை சிறுவன் வாலிபனாக

வாழ்ந்து முடித்தேன் ஒருவிதமாக

முதுமை இன்று எட்டிப் பார்க்க

ஆயத்தமானேன் முடிவைக்காண

 

இடையில் வந்து போனவர் பலபேர்

இறுதியில் இருப்பவர் நம்முடன் சிலபேர்

ஆயினும் அவரும் உடன் வரமாட்டார்

அதுவே வாழ்வில் உண்மை நிலைபார்

 

தனித்து உலகில் வந்த போதும்

’தனியே’ என்றும் வாழ்ந்ததில்லை

தனித்து நாம் போகும்போதும்

எவரும்  உடன் வருவதுமில்லை

 

ஆயினும் என்பங்கைச் செய்து முடித்தேன்

அடுத்தவர் தொடர ஓட்டத்தை முடித்தேன்

ஆயினும் உன் அழைப்பு வரும் வரை

ஒதுங்கி நின்று பிறர் ஓடப்பார்ப்பேன்

 

18-03-2014 காலை, 9.00

 

 

229. நீயே அடைக்கலம்

 

உன்னிடம் வந்து ஒருநொடி அமர்ந்தேனா

உறவென்று சொல்லி உன்னடி பணிந்தேனா

தன்னிகரில்லாத் தலைவன் நீ என்றேனா

தரணியில் எனக்கு நீ புகலிடம் என்பேனா

 

நினைக்கிறேன் நானும் உன்னிடமேவர

துடிக்கிறேன் மனதிலே உன்னிடமேசொல்ல

ஆயினும் இடையிலே ஆயிரம் காரியம்

அதற்கும் மேலாகப் பலவித அவசரம்

 

ஓய்ந்து போனதால் உடலிலே அலுப்பு

ஓயாத எண்ணத்தால் மனதிலே சலிப்பு

உறசி வாழ்வதால் உறவிலே வெறுப்பு

உன்னிடம் வரவும் இல்லை தவிப்பு

 

ஆயினும் அறிவேன் உண்மை ஒன்று

அடைக்கலம் எனக்கு நீமட்டும் என்று

எப்படிப் போனாலும் வாழ்க்கையில் இங்கு

நீயே ஆனாய் அடைக்கலம் நன்கு

 

1-04-2014, காலை, 11.30

 

230. தரிசனம் தாராயோ

 

பரமனே எனக்கு தரிசனம் தாராயோ

பக்திக்கு இறங்கி என்னிடம் வாராயோ

பாவிதான் கூவினேன் என்நிலை அறியாயோ

பாவியை மீட்டகவே மரித்ததை மறந்தாயோ

 

அண்டம் முழுதும் ஆளுகை செய்வதால்

அடிமைக்கு ஒதுக்க நேரமே இல்லையோ

அப்படி செய்ய நீ மானுடன் இல்லையே

ஆயினும் என்னை புறப்பது நியாயமும்மிலையே

 

எதனாலே உனக்கு என்னிடம் கோபம்

எப்படிக் கூறுவேன் என்மனத் தாபம்

என்னமோ புரியலை உன்னிந்த (வீண்)மொளனம்

விளக்கவும் மொழி இல்லை என்மனப் பரிதாபம்

 

நல்லவனாகித்தான் உன்னிடம் வரணுமோ

நன்மைகள் செய்துதான் உன்னருள் பெறணுமோ

இதுவல்ல உன்நீதி நான்சொல்ல வேண்டுமோ

ஆனாலும் தாமதம் செய்வதும் நியாயமோ

 

சரிவிடு போகட்டும் நான் ஏன் புலம்பனும்

என்சக்திக்கு மிறி நான் ஏன் கலங்கணும்

அடியனைத் தாங்குதல் உன்கடன் ஆனபின்

பணிசெய்யும் என்கடன் பணிவுடன் செய்கிறேன்

 

30-4-14 குருகுலம், காலை 4.30

Bhakti Songs 211-220

211 மகிழ்ந்தோடி வா

 

மகிழ்ந்தோடி நீ வரக்கண்டேன்—நான் மனதார

உனைப்பாடிக் கொண்டாடும் போது

 

அதைவிட உனக்கு வேறென்ன வேலை

அதனினும் உனக்கு வேறென்ன கவலை

இதனினும் உனக்கு உண்டோ ஒரு மகிழ்வு

அதனால் பாடி நான் கொண்டாடும் போது–மகிழ்ந்தோடி

 

எனக்காதத் தானே மனிதனாய் வந்தாய்

எனக்காதத் தானே உன்னையே தந்தாய்

அதனையும் நன்றாக நீயுமே உணர்ந்து

அடியனும் பாடிக் கொண்டாடும் போது–மகிழ்ந்தோடி

 

அடியனைக் காப்பது உந்தன் பொறுப்பாச்சு

அடிமையாய் இருப்பது எந்தன் கடனாச்சு

என் நிலைதன்னில் நான் உறுதியாய் இருந்து

உன்கடன் தன்னை நான் உணர்த்தும்போது–மகிழ்ந்தோடி

 

உளறிவிட்டேன் சற்றே இங்கு நானும்

உணர்த்தும் படியாக நடக்கலை நீயும்

பேதை நான் பேசிய பேச்சு எல்லாம்

குழந்தையின் மழலைபோல் உனக்கும் ஆச்சு–மகிழ்ந்தோடி

 

23-11-2013, காலை, 9.30

 

212. எதைத் துறப்பது

 

அனைத்தையும் மறக்க

அமைதியாய் இருக்க

அண்டினேன் உன்னை

அருள நீ இருக்க

 

எதனை மறப்பது

எதனைத் துறப்பது

எதனைப் பெறுவது

எதனை விடுவது

 

வெறுமையாய் வந்தும்

தனிமையாய் வரவில்லை

எவருடன் பிறப்பது

தீர்மானம் எனதில்லை

 

உறவோடு சொந்தம்

எல்லாம் நீ தந்தாய்

வெறுமையாய் வந்தும்

நிறைவாய்த் தந்தாய்

 

அனைத்தும் படைத்து

எனக்கே அளித்தாய்

அவற்றைக் காக்கும்

உரிமையும் அளித்தாய்

 

பொறுப்பு தந்தபின்

புறப்பது சரியோ

பிறருடன் இணைந்து

காப்பது முறையோ

 

பொறுப்பின் பாரம்

தாங்க முடியாமல்

புலம்பினேன் நானும்

புரியாமல் இன்னும்

 

தனிமையில் நானும்

சுமக்க வேண்டாம்

பிறருடன் நீயும்

கூட இருக்க

 

இதனை உணர்ந்து

பொறுப்பை அறிந்து

பிறருடன் பகிர்ந்து

வாழ்வேன் இங்கு

 

26-11–2013 காலை. 8.30

 

213 வந்திட வேண்டும்

 

ஒன்றையும் தேடாது

ஒன்றையும் நாடாது

உன்னடி தன்னிலே

வந்திட வேண்டும்

 

ஆயிரம் உண்டு

அனுதினம் காரியம்

எண்ணங்கள் உண்டு

ஏராளம் ஏராளம்

 

அவற்றை ஒதுக்க

அமைதி காக்க

ஆயத்த மாக்க

உன்னடி வேண்டும்

 

செயலைத் துறந்தவர்

எவரும் இல்லை

சிந்தை அழிந்தவர்

எவரும் இல்லை

 

செயலொடு சிந்தை

சீர் படுத்த

சேவடி தன்னில்

வந்திட வேண்டும்

 

27-11-2013 காலை. 8.30

 

214 புரியாது உமக்கு

 

என்ன ஓர் இனிமை உன்னுடன் இருப்பது

என்ன ஒரு பெருமை உன்னுடன் நடப்பது

என்ன ஒரு மேன்மை நீ எனக்களித்தது

என்ன ஓர் அருமை உன்னுடன் களிப்பது

 

தனிமையில் அமர்ந்து நாம் இருவரும் பேச

தடைகள் அனைத்தையும் கடந்து நாம் சேர

இடையில் எதுவும் நம்மிடை வருமோ

பிரிவு என்பதும் எண்ணவும் தகுமோ

 

என்கரத்தை நீ மெள்ளவே பற்ற

ஏதோ ஒருபரவசம் என்னுளே பரவ

தேகமே தளர்ந்து உன்மீது நான் சாய

தேம்பியே அழுதேன் நீஎனைத்தாங்க

 

கைவிடமாட்டாய் கணநேரம் என்னை-என்

காதலை அறிவாய் என்பது உண்மை

பிரிவு என்னை மட்டுமே சுடுமோ-அவ்

வேதனை நமக்கும் எண்ணவும் தகுமோ

 

இந்த உறவுக்கு முடிவுமே இல்லை

நம்மைப் பிரிப்பது எதுவுமே இல்லை

இதனினும் உன்னதமான நிலையை

உலகில் அடைந்தவர் எவருமே இல்லை

 

நமக்குள் உள்ள இந்த நிலமை

எவருமே புரியாத உன்னத உணர்வை

எப்படி உரைப்பேன் இந்த உறவை

இது நமக்கு மட்டுமே உள்ள உரிமை

 

உலகோரே சற்று ஒதுங்கியே இருங்கள்

உறவுக்கு வீணே தடைபோடாதிருங்கள்

எப்படிச் சொன்னாலும் புரியாது உமக்கு

அதைப் புரியவைக்கவும் இயலாது எமக்கு

 

30-11-2013, காலை. 8.45

 

Posted up to this

 

 

215. சொன்னால்தான் புரியுமோ

 

சொன்னால்தான் புரியுமோ

சொல்லவும் வேண்டுமோ

சொந்தமென வந்தபின்னே

தள்ளுதல் முறையாமோ

 

எத்தனை ஊடினோம்

எத்தனை கூடினோம்

எத்தனை கொஞ்சினோம்

எத்தனை கெஞ்சினோம்

 

அத்தனையும் மறந்தாயோ

அன்பையே துறந்தாயோ

அடைக்கலம் தந்ததை

ஐயனே மறந்தாயோ

 

நீயின்றி வாழ்வுண்டோ

நிலையான சுகமுண்டோ

நானின்றி நீகூட

இருந்திட முடியுமோ

 

ஏனிந்த பாராமுகம்

ஏனிந்த உதாசீனம்

என்னதான் செய்தேன்

ஏன் இந்தக் கோபம்

 

எந்னிலை யாறறிவார்

என்தேவை யாருணர்வார்

உன்னைப் போல் உறவாக

எனக்கெவர் வந்திடுவார்

 

11-12-2013, காலை, 9.00

 

 

216. இணைந்து போராடுவோம்

 

என்னுடய போராட்டம்

என்றுமே ஓயாது

என்னுடன் போராட

எவராலும் ஆகாது

என்னுடன் போராட

நீயுமே வந்தபின்

உன்னுடன் போராட

என்னாலே ஆகாது

 

போராட என்று

நீயுமே வரவில்லை

போராடியே தான்

எவரையும் வெல்லலை

உன்னையே தந்துதான்

எம்மையும் வென்றாய்

அதுபோல் நாங்களும்

இழந்திட அழைத்தாய்

 

உணர்தோம் இந்த

உண்மையை நாங்களும்

உறுதி கொண்டோம்

உரிமையைத் துறக்கவும்

ஆயினும் மனதில்

போராடத் தொடங்கினோம்

அதனை மறுக்க

ஆயிரம் கூறினோம்

 

இழந்தால்தான் பெறுவோம்

இதனை அறிந்தோம்

இறந்தாலே உயிர்ப்போம்

அதனை உணர்ந்தோம்

இழந்தும், இறந்தும்

இதை நீ காட்டினாய்

ஆயினும் ஏனோ

பின்செல்லத் தயங்கினோம்

 

இந்தப் போராட்டம்

என்றும் முடியாது

எம்முடன் போராட

உன்னாலும் ஆகாது

ஆயினும் தோல்வியை

நீயுமே ஏற்காது

மீண்டுமே முயன்றாய்

எம்முடன் போராட

 

வெல்வது நானல்ல

நிச்சயம் அறிவேன்

நீயுமே வெல்ல

என்னையே தந்தேன்

இதில்கூட என்னுடன்

போராட விரும்பாது

உன்னையே தந்தபின்

என்னநான் செய்வேன்

 

நம்மிடைஇந்தப்

போராட்டம் வேண்டாம்

நமக்குள் வீணாய்

பிரிவினை வேண்டாம்

ஒன்றாய் இணைந்து

போராடிப் பார்ப்போம்

இருவரும் இழந்து

வெற்றியே காண்போம்.

 

23-12-2013, பெங்களுரு

 

217. வெட்கமாய் இருக்குதடி

 

 

வெட்கமாய் இருக்குதடி தோழி

அவன் விரும்பியே என்னிடம் செய்ததைச் சொல்ல

 

பாவத்தில் வாழ்ந்திருந்தேன்

பாதகம் பல செய்தேன்

பண்பையே மறந்திருந்தேன்

பணிவிடைத் துறந்திருந்தேன்

ஆயினும் எனக்கு அவன் செய்த நன்மையை

அன்பையே நினைந்து அடைக்கலம் தந்ததை–சொல்ல…

 

நாலுபேர் நடுவே நாணியே சென்றேன்

திகைத்துமே நின்றேன் தயங்கியே சென்றேன்

திருவடி தனிலே தாழவே வீழ்ந்தேன்

இருவிழி நீரால் பாதம் நீராட்டினேன்

அதனையும் ஏற்று என்னைப் பாராட்டி

அனைவரின் முன்னே மன்னித்து ஏற்றதை–சொல்ல…

 

எங்குமே கண்டாயோ எவர்சொல்லக் கேட்டாயோ

எனக்கவன் செய்ததை எண்ணியும் பார்த்தாயோ

பாவிகளைக் காக்கவே பாரினில் வந்தானாம்

பக்தியின் வலைதனிலே தானே வீழ்ந்தானாம்

என்பக்தி ஏற்றானே என்னையும் காத்தானே

எவர் சொல்லும் ஏற்காது என்னையும் மீட்டதைச்-சொல்ல….

 

30-12-2013 காலை. 6.00

 

218. எத்தனை கிருபை தந்தாய்

 

எத்தனை முறையோ கிருபை தந்தாய்

இந்த முறையும் உதவி செய்வாய்

அத்தனை செயலிலும் வெற்றி தந்தாய்

இந்த முறை ஏன் குறையும் வைத்தாய்

 

அரைகுறை என்பது உன்னிடம் இல்லை

அவசரம் ஆத்திரம் கொண்டதும் இல்லை

நிறைவாகவே நீ  அனைத்தும் செய்தாய்

என்வரை ஏன் இன்னும் இக்குறை வைத்தாய்

 

முறையாகவே நீ அனைத்தும் செய்வாய்

முழுமையாகவே நீ அனைத்தும் படைத்தாய்

தொடங்கிய காரியம் முடித்தும் வைத்தாய்

என்வரை மட்டும் ஏன் அதனை மறுத்தாய்

 

ஒருநாளில் நானும் வளர முடியாது

உன் உயர்நிலை நான் அடைய முடியாது

என்பதை நீயும் மனதில் கொண்டே

இத்தனை முறையோ எனை வீழவைத்தாய்

 

வீழ்ந்து கிடந்தால் யாருக்கு லாபம்

வீணிலே உனக்கு ஏன் இந்தக் கோபம்

தாழ்ச்சியுற்று நான் தளர்ந்து விட்டால்

தொடங்கிய உன்முயற்சி வீணேபோகும்

 

தொடங்கிய நீயே முடித்தும் வைப்பாய்

தொடர்ந்து உன்னில் வளரவைப்பாய்

தனித்து நான் ஓடத்தேவையும் இல்லை

துணையாக நீயும் வருகின்றவரையில்

 

30-12-2013, காலை. 8.30

 

 

219. நீயன்றி யார்காப்பார்

 

உள்ளமும் உருகவில்லை

உன்னை எண்ணிப் பாடவில்லை

உவந்தே நீ என்னிடம்

வந்ததேனோ இறைவா

 

பாவம் எண்ணி கலங்கவில்லை

பாதகமும் குறையவில்லை

பக்தி கொண்டு பணியவில்லை

பரிவு நீ கொண்டதேனோ

 

நீதி எண்ணி வாழ்வில்லை

நீச குணம் போகவில்லை

பாசம் கொண்டு வாழ்வில்லை

பரிதபித்தே ஆண்டதேனோ

 

ஒன்றுமே உதவவில்லை

உறவுகள் தாங்கவில்லை

குறைவு கொண்டு வாழ்ந்தபோதும்

கனிவுடனே காத்ததேனோ

 

என்தகுதி எண்ணவில்லை

என்நிலை உணரவில்லை

எல்லாமே இழந்தபோதும்

என்னை நீ மீட்டதேனோ

 

உன்னையன்றி யாரறிவார்

நீயன்றி யார்காப்பார்

பாவிகளை மீட்கவென்று

பாருலகில் வந்தபின்னே

 

31-12-2013. காலை. 6.00

 

220. நன்றியால் பாடுவேன்

 

அருளுக்காய் அமைதிக்காய்

அனுதினம் நீதரும் கருணைக்காய்

உறவுக்காய் உரிமைக்காய்

உன்னில் காணும் மகிழ்வுக்காய்

 

வளமைக்காய் வாழ்வுக்காய்

வாழ்வில் நீதரும் நிறைவிற்காய்

செயலுக்காய் சொல்லுக்காய் நீ

சொன்னதைக் காக்கும் தகமைக்காய்

 

எளிமைக்காய் உன் ஏழ்மைக்காய்

ஏழ்மையில் நீகொண்ட தாழ்மைக்காய்

பரிவுக்காய் பண்புக்காய்

பண்பால் ஆட்கொண்ட தன்மைக்காய்

 

மனிதர்க்காய் மரிப்பதற்காய்

மகிழ்வுடன் உனைத்தந்த அன்புக்காய்

பக்திக்காய் நீதந்த முக்திக்காய்

முக்தியால் நான்பெற்ற நன்மைக்காய்

 

நன்றிக்காய் நானுனக்காய்

நாளும் பாடும் பாட்டிற்காய்

நம் மகிழ்விற்காய் அந்த உரிமைக்காய்

மனதில் குடிகொள் உன்மேன்மைக்காய்

 

31-12-2013. காலை. 8.30

Bhakti Songs 201-210

201 என்று அமைதி காண்பேன்

song201

song201a

என்றுதான் என்னில்நான் அமைதி காண்பேனோ

உன்னுடன் இருந்துதான் உறவு கொள்வேனோ

சிந்தையில் நான்கொண்ட சஞ்சலம் கொஞ்சமோ

சொல்லுக்கும் மொழிக்கும் என்னிடம் பஞ்சமோ

 

மொளனமாய் உன்னுடன் சற்றேனும் அமர்ந்து

மெள்ளவே நீகூறும் வார்த்தையை அறிந்து

என்நிலை அதன்மூலம் நன்குமே உணர்ந்து

என்றுநான் அடைவேன் உன்னடி சார்ந்து

 

ஆயிரம் ஓலங்கள் அமைதியை அழிக்க

ஆரவாரம் பல என்னையும் தாக்க

மானிடர் கூச்சலும் மனதையும் அலைக்க

மறந்தேனே ஐயனே உன்னடி நினைக்க

 

ஆதலால் மீண்டுமே ஓடிநான் வந்தேன்

அலையும் மனதையும் உன்னிடம் தந்தேன்

மாறாத உன்னமைதி மட்டுமே தருவாய்

மறந்துமே இழக்காது என்னையும் காப்பாய்

 

10-10-2013, கோயம்புத்தூர், காலை,6.30

 

202. போதும் எனக்கு

 song202

song202a

உள்ளான அமைதி என்னிலே வேண்டும்

உன்னோடு உறவாடும் எண்ணமே வேண்டும்

தள்ளாடும் மனதில் உறுதியே வேண்டும்

தடுமாறும் வாழ்க்கையில் நிம்மதி வேண்டும்

 

அலைஅலையாய் வருது ஆயிரம் கவலை

அடித்தே செல்லுது மனதின் உறுதியை

பலவாய்ப் பெருகுது வாழ்வில் வேதனை

புலப்படவில்லை இன்னும் உன் கருணை

 

எதுமட்டும் நீயும் சோதனை செய்வாய்

எப்படி இதற்கு நீ அனுமதி தருவாய்

கைவிடமாட்டாய் என்பதை அறிவேன்

’காத்திடு’ என்றே கதறியே வந்தேன்

 

போக்கிடமில்லை பேதைக்கு ஒருவழி

புகலிடம் வேறில்லை நீயே என்கதி

இதுவரை தோல்வி அடைந்தது இல்லை

இறுதியில் வெற்றி என்பது உண்மை

 

இடையில் போராட்டம் என்ன வந்தாலும்

எத்தனை பேர் என்னை எதிர்த்து நின்றாலும்

உடன் வர நீயும் உலகையே வெல்வேன்

உன்னுடன் நிச்சயம் ஆளுகை செய்வேன்

 

நீ தரும் அமைதி போதும் எனக்கு

நீமட்டும் ஆவாய் புகலிடம் எனக்கு

நான்மட்டும் கொண்ட இந்த உறவு

யாருக்கும் புரியாத உன்னத அறிவு

 

8-11-2013, காலை, 8.30

 

203. எதிர் நீச்சல் அவசியம்

song203

song203a

சந்னிதி ஒன்றே என்றும் நிரந்தரம்

சஞ்சலம் கொண்ட வாழ்வில் அனுதினம்

கிருபை ஒன்றே எமக்கு ஆதாரம்

கலங்கும் மனதிற்கு ஆகும் நங்கூரம்

 

அலைபோல வாழ்வுமே நிலையாக இல்லை

அதன்மீது துரும்பானால் நிரந்தரம் இல்லை

ஆயினும் கரையேற ஆர்வமும் இல்லை

அலையுடன் போராட்டம் ஓயவும் இல்லை

 

போராடப் பிறந்ததே மனிதனின் நிலை

போராட்டம் ஓயாது இங்கு வாழும்வரை

இதனிடை ’அமைதி’ என்பது என்ன?

ஒன்றுமே தெளிவாகப் புரியவில்லை

 

செயலற்று வாழ்வது அமைதி அல்ல

சொந்த பந்தம் துறப்பதால் வருவதும் அல்ல

நங்கூரம் பாய்ச்சி நிலையாக நின்றாலும்

அலைமீது அசைவது நிற்பதும் இல்லை

 

நதிபோகும் போக்கிலே போகாத மீன்போல

எதிர் நீச்சல் போடுதல் வாழ்வில் அவசியம்

மனம்போன போக்கிலே போகாது அதுபோல

இறைவனில் நிற்பது பக்திக்கு அவசியம்

 

9-11-2013, காலை, 8.30

204. நான் உன் சொந்தமே

song204

நீ சொல்ல நான் கேட்பேன்

நீ பார்க்க நான் உய்வேன்

நீ தர நான் பெறுவேன்

நீயன்றி வீணாவேன்

 

நான் உந்தன் சொந்தமே

இதைக் கூற வேண்டுமோ

நீ எந்தன் தெய்வமே

இதைச் சொல்ல வேண்டுமோ

 

இந்த உறவு புதினமல்ல

இந்தச் சொந்தம் புதிருமல்ல

பக்தி என்பது அதன்பெயராம்

புனிதமான ஒரு வழியாம்

 

இந்தப் பேறு நாமும் பெற்றோம்

ஒன்றாய் நாமும் கலந்து விட்டோம்

இறுதிவரையில் இணைந்து இருப்போம்

எல்லை இல்லா  இன்பம் காண்போம்

 

11-11-2013 காலை, 8.15

song205

205. எடுத்துச் சொல்லும் நிலையில் இல்லை.

 

உலகை நானும் துறக்க வேண்டும்

உன்னில் ஒன்றாய்க் கலக்க வேண்டும்

உன்னில் நிலைத்து நிற்க வேண்டும்

உன்னுடன் இணைந்து வாழ வேண்டும்

 

எல்லை இல்லா அந்தப் பரவசம்

எவரும் அறியா உன்னத ரகசியம்

உடல் மனம் ஆவி கடந்து விட்ட

உலகம் காணா உன்னத அதிசயம்

 

வார்த்தை இல்லை இதனைக் கூற

வாழ்க்கை இல்லை வாழ்ந்து காட்ட

உறவும் இல்லை உணர்ந்து கொள்ள

உன்னத நிலையை என்ன சொல்ல?

 

பரவசம் நானும் இங்கு கொண்டேன்

என்னை நீயே ஆளக் கண்டேன்

எவ்விதம் நானும் எடுத்து உரைப்பேன்

எப்படிப் அதனைப் புரிந்து கொள்வேன்

 

தாங்கா முடியாத் தவிப்பு கொண்டேன்

மேனிதாங்கா உயிர்ப்பு கண்டேன்

போதும் போதும் போய்விடு என்றேன்

போக விடாது அணைத்துக் கொண்டேன்

 

என்ன சொல்லுவேன் இந்தநிலையை

எவ்விதம் கூறுவேன் அந்த உணர்வை

எவரும் புரிய அவசியம் இல்லை

எடுத்துச் சொல்லும் நிலையிலும் இல்லை.

 

11-11-2013  காலை. 8.45

 

206. யாராலும் ஆகாது

song206

என்னைச் சரிசெய்ய என்ன செய்வேன்

என்னை நான் வெல்ல ஏது செய்வேன்

புறம்பே போராட்டம் ஆயிரமாயினும்

என்னுள் அமைதி எப்படிக் காண்பேன்

 

என்னை எதிர்ப்போர் வெளியில் இல்லை

என்னை ஆள்பவர் மனிதரும் இல்லை

என்னை நானே எதிர்த்தேன் நாளும்

என்னுடன் போராடி ஓய்ந்தேன் நானும்

 

கவலை இல்லா மனிதர் இல்லை

கலக்கம் காணா வாழ்க்கை இல்லை

ஆயினும் உலகில் வாழ்ந்தாக வேண்டும்

அதனுடன் போராடி வெல்ல வேண்டும்

 

அதற்கு உதவப் பலரும் உள்ளார்

அவரால் இயன்ற உதவி செய்வார்

ஆயினும் தோல்வி நானே அடைந்தால்

அதற்கு எவரும் காரணம் ஆகார்

 

இந்தப் போராட்டம் என்றும் ஓயாது

என்னை மேற்கொள்ள என்னால் ஆகாது

அதற்கு உதவநீ தயங்கக் கூடாது

அதனை ஏற்க என்னால் ஆகாது

 

’வருந்திப் பாரம் சுமப்போரே வாரும்

வந்து என்னிடம் ஆறுதல் காணும்’

என்று உரைத்தவன் நீயும் தானே

அதனால் வந்தேன் உன்னிடம் நானே

 

ஆயினும் நான்செய்ய ஒன்றை மறந்தேன்

பாரம் சுமந்து உன்னிடம் வந்தும்

இறக்கி வைக்க நானே விரும்பாமல்

உன்னைக் குறைகூறி அதையும் சுமந்தேன்

 

என்பாரம் இறக்கவும் என்னாலே ஆகாது

என்னுள்ளே பெலனும் அதற்கும் கிடையாது

வலிய நீவந்து இறக்கி வைக்காமல்

இதற்கு ஒருமுடிவு என்றும் வாராது

 

உலகோர் பாரம் சுமக்க வந்தாயே

வலியச் சுமந்து மரத்தில் மாண்டாயே

அனைவரின் பாரம் சுமந்த உனக்கு

அடிமையின் பாரம் மட்டும் அதிகமோ

 

கேள்விக்கு விடையும் நானும் அறிவேன்

கேள்வி கேட்க மட்டுமே விழைந்தேன்

சுமக்க இறக்க சுதந்திரம் அளித்தாய்

தீர்மானம் செய்யும் உரிமையும் தந்தாய்

 

ஆனாலும் உனக்கு நானொன்று சொல்வேன்

அறியாதோன் போல்நடித்தால் என்னசெய்வேன்

உரிமை தந்த உனக்கு இன்னும் என்

குழப்பம் மட்டும் ஏன் விளங்க வில்லை

 

போதும் போதும் உன் விளையாட்டு

போக்கிடம் எனக்கு வேறிங்கு யாரு

என்னையும் மீறிநீ இறக்கி வைப்பாய்

இல்லையேல் என்னையும் சேர்த்தே சுமப்பாய்

 

அதுவும் உனக்கு எளிதென்று அறிவேன்

அதைத்தான் இதுவரை செய்வதை அறிவேன்

உன்தோளின் மீது இருப்பதை உணராது

என்சுமை மட்டுமே எண்ணிப் புலம்புறேன்

 

இதற்கு மேலும் நீ என்ன செய்வாய்

ஏந்திச் சுமந்து தாங்கியே வந்தாய்

உன்னதமான  என் நிலையை உணராது

என்னைச் சரிசெய்ய யாராலும் ஆகாது.

 

13-11-2013. காலை. 8.30

 

207. தேடாமல் இருப்போனோ

song207

திருவடி தேடாமல் இருப்போனோ -உன்

சன்னிதி வாராமல் இருப்பேனோ

குறைகளைச் சொல்லாமல் இருப்பேனோ-நீ

கேட்க மறுத்தால்  உனைவிடுவேனோ

 

கேட்டால் தருவேன் என்றவன் நீதானே

’தேடி னா ல் கிடைக்கும்’ சொன்னவன் நீதானே

தட்டினால் திறப்பேன் என்றதினாலே

விட்டுவைப்பேனோ உன்னை இனிமேலே

 

 

என்னால் முயன்றதைச் செய்து பார்த்தேன்

இயன்றவரை பிறரிடம் கேட்டுபார்த்தேன்

ஆயினும் காரியம் கைமீறியதால்

உன்னிடம் வாராமல் எங்கு செல்வேன்

 

காரியம் தொடங்குமுன் உன்னிடம் வந்தேனே

’கைகொடுப்பாய்’ என்று வேண்டி நின்றேனே

ஆயினும் ஏனோ நீ தாமதித்தாய்

அதற்குக் காரணம் கூறவும் மறுத்தாய்

 

இவ்விதம் நீ செய்தால் நானென்ன செய்வேன்

வேறெங்கு சென்று முறையீடு செய்வேன்

உன் சித்தம் அறியக் காத்திருப்பேன் நாளும்

இதயன்றி வேறென்ன செய்வது நானும்

 

17-11-2013. காலை, 9.30

 

208. கலக்கத்தை உதறிடு

 song208

உன் வழி என் வழியோ

உன்நினைவு என்நினைவோ

உன்செயல் என்செயலோ

இதைநீ அறியாயோ

 

நீயல்ல நான்தானே

உன்வாழ்வில் நிலையாக

வாழ்கிறேன் என்றாயே

அதைநீ மறந்தாயே

 

என்சித்தம் உன்னிலே

நிறைவேறும் வரையிலே

என் எண்ணம் போலவே

சோதிப்பேன் அறிவாயே

 

ஆயினும் தனியாக

உன்னைநான் விடமாட்டேன்

அனுதினம் உன்கூட

நானும் உடன்வருவேன்

 

உன்னைச் சரிசெய்ய

ஒருசில சோதனை

நானும் அனுமதித்தேன்

இதைநீ உணர்வாயே

 

தண்டிக்கா பிள்ளையும்

தறுதலை ஆகிவிடும்

சோதனை இல்லாமல்

பக்தியும் பதராகும்/வீணாகும்

 

உன்துன்பம் என் இன்பமோ

உன்வீழ்ச்சி எனக்குயர்வோ

உன்வேதனை என்மகிழ்வோ

இதனை நீ அறியாயோ

 

ஏதும் பிரிக்காது

உன்னையும் என்னையும்

எது உன்னை வெல்லும்

நான் உடன் வரும்போது

 

என்கண் பாவை நீ

என்கையின் செல்வம் நீ

என்தனி பக்தன் நீ

என்சொந்தம் ஆனாய்நீ

 

அதனால் கலங்காதே

வீணில் புலம்பாதே

இறுதிவரை நான்

இருப்பேன் திகையாதே

 

உறுதியாய் எழுந்திரு

கலக்கத்தை உதறிடு

முன்போல என்னுடன்

முனைப்பாக நடந்திடு.

 

20-11-2013 காலை 9.00

 

209. கடன் பட்டேன்

song209

இரக்கம் ஒன்றே உனது குணமே

கருணை ஒன்றே உனது வடிவே

தாழ்மை ஒன்றே உனது செயலே

பொறுமை ஒன்றே உனது இயல்பே

 

அன்பு மட்டும் உனது வழியே

அருள மட்டும் அறிந்தாய் நீயே

உருக்கம் மட்டும் கொண்டாய் நீயே

உன்னை அளித்தாய் எனக்காய்நீயே

 

கனிவு கொண்டு காத்து வந்தாய்

காதல் கொண்டு சேர வந்தாய்

கண்ணின் இமைபோல் காத்துவந்தாய்

கைவிடாது என்னை ஆதரித்தாய்

 

என்ன கடனும் நீ பட்டாயோ

என்னைப் படைத்து அதைப் பெற்றாயோ

உன்கடன் தீர்க்க உயிரைத் தந்து

என்னை மீட்க உனையளித்தாயே

 

இந்த உண்மை அறிந்தேன் நானும்

உந்தன் கருணை அடைந்தேன் நானும்

என்கடன் மட்டும் இன்னும் இருக்க

எவ்விதம் அதனைத் தீர்ப்பேன் நானும்

 

தீர்க்க முடியாக் கடன் பட்டேனே

திரும்பத் தரவும் உடன் பட்டேனே

கடனைத் தந்தால் உறவு முடியும்

என்று எண்ணித் தயங்கி நேனே

 

தீர்க்க முடியுமா உனது கடனும்

தந்தால் முடியுமா அந்தக் கணக்கும்

எதனைத் தந்து அதனை அடைப்பேன்

எல்லாம் உனதாய் ஆனபின்னே

 

இறுதி வரையில் தீர்க்க மாட்டேன்

எதையும் தந்து முடிக்கமாட்டேன்

கடனைத் தீர்க்க விருப்பமில்லாமல்

அடிமையாக உனக்காய் வாழ்வேன்.

 

21-11-2013 காலை. 8.45

 

210. எத்தனை முறை மறந்தேன்

 

நீயே எனக்காதாரம்- இதை

எத்தனை முறை மறந்தேனே

நீயே என் தாபரம் இதை

பல முறை எண்ண மறந்தேனே

 

என் எண்ணம் என்விருப்பம்

என இனி வாழ்வதில்லை

என்றுனக்கு நான்தந்த

வாக்கையும் மறந்தேனே

 

வந்திடுவேன் உந்தனடி

வேண்டுவேன் உன் எண்ணப்படி

ஆயினும் என் காரியத்தில்

அத்தனையும் மறந்தேனே

 

’உன்சித்தம் நிறைவேற்று

உன்னிஷ்டம் அதைநடத்து’

என்று நான் சொன்னாலும்

ஏனோநான் மறந்தேனே

 

பேருக்கு உன்பக்தனாகப்

போட்டேனே வேடம்பல

நாடகம் முடிந்தபின்னே

அறிந்தேனே உண்மைநிலை

 

ஆயினும் எங்குசெல்வேன்

ஆதரவு எங்கு காண்பேன்

நீயன்றிக் கதியறியேன்

நானதை நன்கறிந்தேன்

 

நானுனக்குச் சொல்லவேண்டாம்

நன்கு நீயும் அறிந்ததினால்

ஆதலால் என்றும்போல

ஆதாரம் ஆகிடுவாயே

 

22-10-2013, காலை  8.15

Bhakti Songs 191-200

191 என்ன முடியும்

song191

என்ன கைமாறு என்னால் முடியும்

என்னை ஆட்கொண்ட உனக்கு நான்செய்ய?

 

பொன்னாலே பொருளாலே அளித்திட முடியாது

உடலாலே உழைப்பாலே செலுத்திட இயலாது

மனதாலே நினைவாலே நிறைவேற்ற ஆகாது

அதனாலே நான்வந்தேன் உன்னிடம் உளவாறு–என்ன?

 

சொல்லாலே மொழியாலே கூறிட முடியுமோ

சிந்தையால் எண்ணத்தால் புரிந்திட இயலுமோ

வாயின் வார்த்தையால் உரைத்திட ஆகுமோ

வந்தேன் உன்னிடம் அதனாலே உளவாறு–என்ன?

 

எவ்விதம் வந்தேனோ அவ்விதம் ஏற்றாய்

என்னிலே மாற்றமே நீயுமே தந்தாய்

உனதை உனக்கேதான் தந்திட ஆகுமோ

உனக்கென்று ஆனபின் என்னதான் தருவேனோ

 

நீவேறு நான்வேறு ஆகிட முடியுமோ

நீஎன்னில் நான் உன்னில் கலந்தபின் இயலுமோ

இதில்தருவது யாரோ பெறுவது யாரோ, அதைக்

கூறிடமுடியாது அதனாலே இனிமேலே–என்ன..

 

9-9-2013. காலை 9.00

 

 

192. நல்லவழி அடைந்தேன்

song192

உன்னில் மகிழ வேண்டும்–உத்தமனே

உன்னோ டிருக்க வேண்டும்

என்னை மறக்க வேண்டும்–எனக்கு

வேறென்ன இனி வேண்டும்?

 

உன்னை அளித்த பின்னே–இனி

நீ வேறு நான் வேறோ?

என்னைக் கொடுத்த பின்னே–இங்கு

பிரிவேதும் நம்மிடை உண்டோ?

 

எல்லாமே இங்கு பெற்றாலும்-உன்னை

நான் இழந்து விட்டால்

எவ்விதம் உய்வடைவேன்–இனி

எப்படி மீண்டிடுவேன்?

 

நீ மட்டும் போதுமெனக்கு–உலகில்

நீதானே சொந்த மெனக்கு

நான்மட்டும் அறிந்தேனே-இந்த

நல்லவழி அடைந்தேனே.

 

13-09-2013, காலை, 8.45

 

193.  என்ன தவம் செய்தனை

 song193

என்ன தவம் செய்தனை என் நெஞ்சமே

நிலையான பரம் பொருளை

நீயுமே என்றும் தொழ–என்ன

 

அண்டங்கள் படைத்தவனை

ஆதரித்துக் காத்தவனை

அண்டினோர்க்கு எளியோனை

அனுதினம் நாடித் தொழ–என்ன

 

முன்னோர்களும் முனிவரும்

முனைந்துமே காணாதோனை

முமுதற்ப் பொருளை

முக்தேசனைத் தொழவே–என்ன

 

ஞானிகளும் மேதைகளும்

தம்மறிவால் காணோதனை

பேதைகளுக் கெளியோனைப்

பாடியே நாளும் தொழ–என்ன

 

பாவத்தைப் போக்கிடவே

பலியாகி உயிர்த்தோனைப்

பாதகரை மீட்டவனைப்

பணிந்துமே நாளும் தொழ–என்ன

 

நீசர்க்கு அருள்வோனை

நிர்மல ரூபனை

நித்தம் நம்மை ஆள்வோனை

நன்றியுடன் பாடித்தொழ–என்ன

 

மீண்டுமே வருவோனை

மீட்டெடுத்துச் செல்வோனை

மாறிடா மாண்புடைய

மன்னவனைப் பாடித் தொழ

 

18-09-2013, காலை, 8.40

 

194. வந்தேன் உரிமையில்

 song194

எனக்காகவே நீ உன்னையும் அளித்தாய்

எதற்காகவோ நீ என்னையும் காத்தாய்

உனக்காக அளிக்க ஒன்றுமே இல்லை

அதற்காக அடியனை நீ புறக்கவும் இல்லை

 

நான் என்ன தருவது நீ என்ன பெறுவது

எனெக்கென்று என்னிடம் ஏதுதான் உள்ளது

வெறுமையாய் வந்து வெறுமையாய்ச் செல்வேன்

இடையினில் சொந்தம் எதுவென்று சொல்வேன்?

 

தாய்-தந்தை தந்தது என் இந்த தேகம்

மொழி, செயல், சிந்தை பிறர் தந்த தானம்

ஆன்மாவும் கூட உனது படைப்பாகும்

இவற்றில் என் சொந்தம் எது இங்குஆகும்?

 

இந்த உண்மை அறிந்தால் போதும்

அந்த உணர்வே என்சொந்தமாகும்

உணர்ந்தபின் நானும் உள்ளபடி வந்தேன்

உனதை உனக்கே உளமாறத் தந்தேன்

 

ஏற்க மறுப்பதும் உனக்கும் இயலாது

உனதை மறுக்க உன்னாலே முடியாது

இந்த ரகசியம் அறிந்தேன் நானும்

அதனால் வந்தேன் உரிமையில் மீண்டும்

 

23-09-2013, காலை, 9.00

song195

195. உறவாட இது நேரமே

 

உறவாட இது நேரமே -என்

உளமாற உனைப்பாடி உனைநாடி உன்னுடன்–உற..

 

புரியாத புதிரல்ல அறியாத கலையல்ல

தெரியாத உறவல்ல உருகாத மனதல்ல

எனைநாடி எனைத்தேடி என்னுடன் நீவர

உளமாற உனைப்பாடி உனைநாடி உன்னுடன்–உற..

 

மலைத்தேன் நான்களைத்தேன் மனதிலே திகைத்தேன்

தொலைந்தேன் நான் அழிந்தேன் தூரமே இருந்தேன்

எனைத்தேடி அன்புடன் எனைநாடி நீவர

உளமாற உனைப்பாடி உனைநாடி உன்னுடன்–உற..

 

வருந்தேன் நான் கலங்கேன் வாடியே புலம்பேன்

வந்தேன் நான் தந்தேன் வாழ்த்தியே நின்றேன்

வினைகளை நீக்கிட விரும்பியே நீவர

உளமாற உனைப்பாடி உனைநாடி உன்னுடன்–உற..

 

24-09-2013 காலை, 8.40

 

196. வந்தேன் மீண்டும்

song196

வந்தேன் வந்தேன் ஐயா நான்

வள்ளலைப் பாடி வாழ்த்திக் கொண்டாட

கண்டேன் கண்டேன் இங்குதான்

கருணையின் எல்லையைக் காத்திடும் கடவுளை

 

தந்தேன் தந்தேன் என்னை நான்

தாயினும் பரிவு காட்டிடும் உன்னிடம்

கொண்டேன் கொண்டேன் உரிமைதான்

உன்குழவியாய் மாறி வந்ததால் நான்–வந்தேன்…

 

அழும் குரல் கேட்கலையோ உனக்கென்

அவலங்கள் புரியலையோ ஐயா உன்

வீண் இந்த மொளனம் எவ்விதம் ஞாயம்

நானெங்கு போவேன் பதிலும் வேணும்

பாராமுகமும் நீ கொண்டதில்லை

பக்தரிடம் உனக்குப் பிணக்குமே இல்லை

ஆயினும் நீ கொண்ட தாமதம் புரியலை

ஆனாலும் உன்னை நான் விடுவதாய் இல்லை

 

என்போல் பக்தனை எங்கு நீ கண்டாய்

என்போல் அடிமை எவரை நீ கொண்டாய்

ஆயிரம் காரணம் நீயுமே கூறினும்

அவற்றில் காணேன் இம்மியும் ஞாயம்

 

தினம் தினம் நமக்குள் இதுவென்ன வழக்கு

தெரிந்த உனக்கு இதுவல்ல அழகு

பிறர்வந்து ஞாயம் கூறுதல் தகுமோ

பிரிவினை என்பது நம்மிடை புகுமோ

 

25-09-2013. காலை 8. 40

 

இன்றுகாலை குளித்துக்கொண்டிருக்ககையில் சென்றுவிட்ட என் சில நண்பர்கள், உறவுகளை நினைத்தேன்.  உடன் குளிக்கும் போதே முதல் எட்டு வரிகளை மன்தில் எழுதினேன். (பலமுறை நான் இவ்வாறு செய்வது வழக்கம்). தற்சமய அத்வத சித்தாந்தம் பற்றி ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். அதன் சில சிந்தனைகளையும் எண்ணியபோது, மீதமுள்ள வரிகளைப் பால்வாங்கப்போகும் போது மனதில் எழுதி, உடன் வந்து இப்பாடலை எழுதினேன்.

 

197.  ஒரு உண்மை

song197

சென்றாரே எல்லோரும்

சொந்தமென வந்தோரும்

வருவாரே மற்றோரும்

வாழ்க்கையில் உளமட்டும்

 

வந்தவண்ணம் போவது

வாழ்க்கையில் நிச்சயம்

இடையில் நமதென்று

ஏதுமில்லை சத்தியம்

 

உலகும் மாயையல்ல

வாழ்க்கையும் நிலையல்ல

இதனிடை எனதென்ற

எண்ணமும் சரியல்ல

 

கொடுப்பதும் அவனே

எடுப்பதும் அவனே

பொறுப்பு என்பது

மட்டும் நமதே

 

இதனை உணர்வோம்

இணைந்து வாழ்வோம்

இயன்றவரை பிறர்க்கு

உதவியும் செய்வோம்

 

எதிர்பார்த்து உதவாதே

ஏமாற்றிப் பறிக்காதே

தகுதி உடையோர்க்குத்

தன்கை குறுக்காதே

 

கூடவே வாராரே

இறுதிவரை எவரும்

சேர்வதும் பிரிவதும்

வாழ்க்கையில் நிலையாகும்

 

இந்த உண்மைஉணர்வோம்

இறைவனைப் பணிவோம்

இறுதிவரை இருப்பவன்

அவனென்று அறிவோம்.

 

26-09-2013, காலை, 6.30

 

198.  வந்தேன் நானுமே

 song198

வந்தேன் வந்தேன் வந்தேன் நானுமே

வாழ்த்திக் கொண்டாடிடவே

உன்னைப் பாடிக் கொண்டாடிடவே

 

ஒவ்வொரு நாளிலும் உன்னருள் தேடியே

உன்பாதம் பணிந்து நான் உன்னையே வாழ்த்தவே-வந்தேன்

 

என்தேவை என்னென்ன என்று நீ அறிந்ததால்

உன்னிடம் அவை கூறி நானுமே பெறவேண்டி–வந்தேன்

 

கேட்கும் முன் அருளிடும் கோமான் நீ இருக்கையில்

கொஞ்சமும் தயங்காமல் என்தேவை கூறிட–வந்தேன்

 

பால்கேட்டால் விடத்தையே தரும் தாயும் இல்லையே

பரிவுடன் அவளினும் அருள்வாய் நீ என்றுதான்–வந்தேன்

 

ஆயினும் அறிந்திட அனைத்தினும் உயர்வான

உன்சித்தம் எதுவென்று உணர்ந்திட நானின்று–வந்தேன்

 

என்தேவை எதுவென எல்லாம் நீ அறிந்ததால்

உன்சித்தம் ஒன்றையே என்னிலே நிறைவேற–வந்தேன்

 

உன்னை நீ தந்ததால் ஒன்றிலும் குறைவில்லை

ஆதலால் அதுபோல என்னையே தந்திட–வந்தேன்

 

28-09-2013, காலை,8.45

song199

199. உண்மை உணர்ந்தேன்.

 

என்ன என் அறிவீனம்

என்ன என் பேதமை

தன்னையே தந்திட்ட

இறைவனை அறியாத-என்ன?

 

உயர்வான குடிப்பிறப்பு

ஊர்மெச்சப் பலசிறப்பு

எல்லாமே இருந்தும்

இறைவனை அறியாத-என்ன?

 

அழகுடன் அறிவு

ஆண்டிடும் மேனமை

எல்லாமே எனதென்று

எண்ணியே நான்கொண்ட-என்ன?

 

யாரையும் மதிக்காமல்

எவர்சொல்லும் கேட்காமல்

என்ஞானம் ஒன்றையே

உயர்வாக எண்ணிய-என்ன?

 

எத்தனை செருக்கு

என்ன என் இறுமாப்பு

எல்லாமே இழந்து

தடுமாறிய போதும்-என்ன?

 

அறியாத காலத்தை

அவனும் மன்னித்து

அன்புடன் எனைத்தேடி

வந்துமே மீட்டான்

 

என்மேன்மை குப்பையாம்

என்கல்வி நட்டமாம்

என்செயல் வெட்கமாம்

எண்ணினால் துக்கமாம்

 

இறுதியில் உணர்ந்தேன்

இறைவனை அறிந்தேன்

என்னை இழந்தபின்

உண்மை உணர்ந்தேன்.

 

30-09-2013. காலை, 8.30

 

200. தெரியாமல் போச்சே

song200

ஏதோ தெரியாமல் போச்சே

என்னை மீட்ட இறைவன் இவனென்று

 

எங்கெங்கு தேடியும்

ஏதேதோ நான்கற்றும்

எத்தனை செயல்செய்தும்

என்னென்ன தவம்செய்தும்

 

உலகை நான் கற்றும்

உயர்வை நான்பெற்றும்

வாழ்க்கையில் உயர்ந்தும்

வல்லமை நிறைந்தும்

 

முயற்சிகள் பலசெய்தும்

முன்னேற்றம் பல அடைந்தும்

தளர்ச்சி அறியாது

தொடர்ந்து வாழ்ந்திருந்தும்

 

இறுதியில் ஒருநாள்

உண்மை அறிந்தேன்

உதவாது எவையுமே

என்பதை உணர்ந்தேன்

 

நொறுங்குண்டு உள்ளத்தில்

நறுங்குண்டு ஆவியில்

வீழ்ந்தேன் அவன்பாதம்

விரைந்துமே அவன்மீட்டான்.

 

30-09-2013 காலை,9.000