Monthly Archives: August 2013

Bhakti Song 194

வந்தேன் உரிமையில்

எனக்காகவே நீ உன்னையும் அளித்தாய்
எதற்காகவோ நீ என்னையும் காத்தாய்
உனக்காக அளிக்க ஒன்றுமே இல்லை
அதற்காக அடியனை நீ புறக்கவும் இல்லை

நான் என்ன தருவது நீ என்ன பெறுவது
எனெக்கென்று என்னிடம் ஏதுதான் உள்ளது
வெறுமையாய் வந்து வெறுமையாய்ச் செல்வேன்
இடையினில் சொந்தம் எதுவென்று சொல்வேன்?

தாய்-தந்தை தந்தது என் இந்த தேகம்
மொழி, செயல், சிந்தை பிறர் தந்த தானம்
ஆன்மாவும் கூட உனது படைப்பாகும்
இவற்றில் என் சொந்தம் எது இங்குஆகும்?

இந்த உண்மை அறிந்தால் போதும்
அந்த உணர்வே என்சொந்தமாகும்
உணர்ந்தபின் நானும் உள்ளபடி வந்தேன்
உனதை உனக்கே உளமாறத் தந்தேன்

ஏற்க மறுப்பதும் உனக்கும் இயலாது
உனதை மறுக்க உன்னாலே முடியாது
இந்த ரகசியம் அறிந்தேன் நானும்
அதனால் வந்தேன் உரிமையில் மீண்டும்

23-09-2013, காலை, 9.00

Bhakti Song 193

என்ன தவம் செய்தனை

என்ன தவம் செய்தனை என் நெஞ்சமே
நிலையான பரம் பொருளை
நீயுமே என்றுமே தொழ–என்ன

அண்டங்கள் படைத்தவனை
ஆதரித்துக் காத்தவனை
அண்டினோர்க்கு எளியோனை
அனுதினம் நாடித் தொழ–என்ன

முன்னோர்களும் முனிவரும்
முனைந்துமே காணாதோனை
முழுமுதற் பொருளை
முக்தேசனைத் தொழவே–என்ன

ஞானிகளும் மேதைகளும்
தம்மறிவால் காணோதனை
பேதைகளுக் கெளியோனைப்
பாடியே நாளும் தொழ–என்ன

பாவத்தைப் போக்கிடவே
பலியாகி உயிர்த்தோனைப்
பாதகரை மீட்டவனைப்
பணிந்துமே நாளும் தொழ–என்ன

நீசர்க்கு அருள்வோனை
நிர்மல ரூபனை
நித்தம் நம்மை ஆள்வோனை
நன்றியுடன் பாடித்தொழ–என்ன

மீண்டுமே வருவோனை
மீட்டெடுத்துச் செல்வோனை
மாறிட மாண்புடைய
மன்னவனை பாடித் தொழ

18-09-13, காலை, 8.40

Bhakti Song 192

நல்லவழி அடைந்தேன்

உன்னில் மகிழ வேண்டும்–உத்தமனே
உன்னோ டிருக்க வேண்டும்
என்னை மறக்க வேண்டும்–எனக்கு
வேறென்ன இனி வேண்டும்?

உன்னை அளித்த பின்னே–இனி
நீ வேறு நான் வேறோ?
என்னைக் கொடுத்த பின்னே–இங்கு
பிரிவேதும் நம்மிடை உண்டோ?

எல்லாமே இங்கு பெற்றாலும்-உன்னை
நான் இழந்து விட்டால்
எவ்விதம் உய்வடைவேன்–இனி
எப்படி மீண்டிடுவேன்?

நீ மட்டும் போதுமெனக்கு–உலகில்
நீதானே சொந்த மெனக்கு
நான்மட்டும் அறிந்தேனே-இந்த
நல்லவழி அடைந்தேனே.

13-09-13, காலை, 8.45

Bhakti Song 191

என்ன முடியும்

என்ன கைமாறு என்னால் முடியும்
எனனை ஆட்கொண்ட உனக்கு நான்செய்ய?

பொன்னாலே பொருளாலே அளித்திட முடியாது
உடலாலே உழைப்பாலே செலுத்திட இயலாது
மனதாலே நினைவாலே நிறைவேற்ற ஆகாது
அதனாலே நான்வந்தேன் உன்னிடம் உளவாறு–என்ன?

சொல்லாலே மொழியாலே கூறிட முடியுமோ
சிந்தையால் எண்ணத்தால் புரிந்திட இயலுமோ
வாயின் வார்த்தையால் உரைத்திட ஆகுமோ
வந்தேன் உன்னிடம் அதனாலே உளவாறு–என்ன?

எவ்விதம் வந்தேனோ அவ்விதம் ஏற்றாய்
என்னிலே மாற்றமே நீயுமே தந்தாய்
உனதை உனக்கேதான் தந்திட ஆகுமோ
உனக்கென்று ஆனபின் என்னதான் தருவேனோ

நீவேறு நான்வேறு ஆகிட முடியுமோ
நீஎன்னில் நான் உன்னில் கலந்தபின் இயலுமோ
இதில்தருவது யாரோ பெறுவது யாரோ, அதைக்
கூறிடமுடியாது அதனாலே இனிமேலே–என்ன..

9-9-13, காலை 9.00

Bhakti Song 190

ஒரு கலக்கம்

ஏதோ என்னில் ஒரு கலக்கம்
ஏதும் புரியாது ஒரு குழப்பம்
நாளும் செல்லும் வாழ்வை எண்ணி
நானே காணா ஒரு தயக்கம்

சென்ற நாட்களை நான் எண்ணி
சோர்ந்த நேரமும் இங்கு அதிகம்
வரும் காலங்களை எண்ணித் தினம்
வழிகாணா ஒரு மயக்கம்

ஆயினும் ஒன்று மட்டும் அறிந்தேன்
அவனே காப்பான் நன்கு அறிந்தேன்
இதனை நன்றாக நான் உணர்ந்தும்
இன்னும் நீங்கலை மனச் சலனம்

கலக்கம் குழப்பமொடு தயக்கம்
மயக்கம் சலனமொடு சேர்ந்து
நாளும் என்னைத் தாக்கும்போது
சார்ந்துகொள்வேன் அவனைச்சேர்ந்து

இந்த உண்மை நான் அறிந்தேன்
அவனே காப்பான் நான் அறிந்தேன்
ஆயிரம் கேள்வி வந்தபோதும்
அவனே பதிலானால் அதுபோதும்

4-9-2013, காலை, 8.45

Bhakti Song 189

இயற்கையோடு இணைந்திருப்பேன்.

எங்கும் இறைவன் அரசாட்சி
அகத்திலும் புறத்திலும் அவனாட்சி
இயற்கை அறிவிக்கும் அவன்மாட்சி
எதிலும் விளங்கும் அவன்காட்சி

சின்னஞ்சிறிய மலர்களுமே
சில்லென்று வீசும் தென்றலுமே
தவழ்ந்து செல்லும் மேகமுமே
சொல்லும் இறைவன் மேன்மையுமே

ஆர்ப்பரிக்கும் அருவிகளும்
அமைதியான ஓடைகளும்
நிறைந்து நிற்கும் நீர்நிலையும்
நிதமும் கூறும் அவன்புகழும்

எங்கும் அவனின் நிறைவிருக்கும்
எதிலும் அவனின் உயர்விருக்கும்
என்றும் அவனின் புகழிருக்கும்
எல்லாம் அவனைப் பணிந்திருக்கும்

என்ன பேரு நானும் பெற்றேன்
என்னை அவனே மீட்க உற்றேன்
அவனைத் தொழுதிட அருளும்பெற்றேன்
அவனுடன் ஆளும் உரிமைப்பெற்றேன்

இந்தப் பேருக்கு ஏற்றபடி
என்பணி செய்வேன் உள்ளபடி
என்பங்கை நான் அளித்திருப்பேன்
இயற்கையோடு இணைந்திருப்பேன்.

27-08-2013. காலை. 9.00

Bhakti Song 188

உன் பாடு இனி

ஏதுமற்ற ஏழை நானே
ஏதுவழி காண்பேனே
தேடிவந்தேன் உன்னடியே
ஓர்வழி கூறு நீயே

ஓடின நாட்களுமே
ஓய்ந்தது தேகமுமே
ஆயினும் ஆசைகளோ
அடங்கலை என்னில்தானே

எத்தனை எண்ணங்களோ
எத்தனை தேவைகளோ
எத்தனை கலக்கங்களோ
எவ்விதம் சொல்லிடுவேன்

சொன்னாலே வெட்கம்தானே
உள்வைத்தால் துக்கம்தானே
சொல்லிட்டேன் ஆயினுமே
உன்னிடம் நானும்வந்தே

நன்றோ கூறு இது
நீ கொண்ட மொளனமுமே
வேறெங்கு போவேன் இனி
கூறிடு நீயும் வழி

’உன்போல பாடுகளும்
பட்டதால் நானும்வந்து
அறிவேன் உன்துன்பம்’ என்று
சொன்னவன் நீயும்தானே

ஆதலால் நானும்வந்தேன்
அடம்பிடித்து இங்கு நின்றேன்
தப்பித்துப் போகும் எண்ணம்
இம்மியும் உன்னில் வேண்டாம்

போராடினால் என்னுடனே
என்ன பயன் கூறு நீயே
ஆதலால் முன்போல
ஐயனே காத்திடுவாய்

என்னுள்ளே கோயில் கொண்டாய்
என்னுடனே வாழுகின்றாய்
ஆதலால் உன்பாடு இனி
அடிமைக்கு நீயே கதி

26-08-2013. காலை. 6.45

Bhakti Song 187

நீவேறு நான்வேறோ?

எல்லாம் நீ ஆனபின்பு
எனதென்று ஏதுமுண்டோ
ஏதுகொண்டு நான்வருவேன்
என்னை நான் தருவதன்றி

நான் எனக்குச் சொந்தமல்ல
நீ வந்து மீட்டபின்பு
ஏது உனக்கு நான் தருவேன்
ஏழை என்னில் ஒன்றுமில்லை

நான் உனக்குச் சொந்தமானேன்
நீவந்து ஆண்டபின்னே
ஆதலால் எல்லாம் பெற்றேன்
உன்னில் நான் நிறைவுற்றேன்

நீயும் நானும் ஒன்றானபின்
நீவேறு நான்வேறாமோ
இனி இந்தப் பேதமையும்
என்னில் இன்று நீங்கியதே

ஆதலால் நாம் இருவரும்
வாழ்ந்திடுவோம் ஒன்றாய்க்கூடி
ஊழி ஊழி காலமெல்லாம்
ஒருபோதும் பிரிவின்றி.

25-08-2013, காலை, 8.45

Bhakti Song 186b

நீ மறவாதே

நெஞ்சமே மறவாதே
நிதம்அவன் தாள்பணிய–நெஞ்

கொஞ்சமோ உலகில் பாடு
அதைக் கூறிட முடியுமோ கூறு
அஞ்சிட்ட நாளை எண்ணி
ஆறுதல் தேடிச் செல்ல–நெஞ்

தஞ்சம்வே றெங்கு உண்டு
தருவது வேறெவர் உண்டு
அதைத் தேடிய நாளை எண்ணித்
தேறுதல் மீண்டும் பெற –நெஞ்

வஞ்சகமே உலகில் வாழ்வு-
அதை வென்றவர் யார்உண்டு கூறு-
அதில்வீழ்ந்த நாளை எண்ணி
விடுதலை மீண்டும் பெற -நெஞ்

அஞ்சிடாதே அவனே காப்பான்
ஆதரித்து மீண்டும் சேர்ப்பான்-
அதை அறியாத நாளை எண்ணி
அடைக்கலம் மீண்டும் பெற –நெஞ்

23-08-2013, காலை 8.45

Bhakti Song 186a

நீ மறவாதே

நெஞ்சமே நீ மறவாதே
நிதம் அவன் தாள்பணியாது–நெஞ்

கொஞ்சமோ உலகத்தின் பாடு-அதைக்
கூறிட முடியுமோ கூறு
அஞ்சிட்ட நாட்களை எண்ணியே
ஆறுதல் தேடி மீண்டுமே செல்ல–நெஞ்

தஞ்சம் வேறெங்கு உண்டு-உனக்குத்
தருவதும் வேறெவர் உண்டு-அதைத்
தேடி இளைத்த நாட்களை எண்ணியே
தேறுதல் பெற மீண்டும் செல்ல–நெஞ்

வஞ்சகமே உலகில் வாழ்வு-அதை
வென்றவர் யார் உண்டு கூறு-அதில்
வீழ்ந்தே புலம்பிய நாளை எண்ணியே
விடுதலை பெற்று மீண்டுமே வெல்ல-நெஞ்

அஞ்சிடாதே அவனே காப்பான்-நம்மை
ஆதரித்து மீண்டுமே சேர்ப்பான்-அதை
அறியாமலே அலைந்த நாட்களை எண்ணியே
அடைக்கலம் பெற மீண்டுமே செல்ல–நெஞ்

23-08-13, காலை 8.45