Monthly Archives: December 2016

Song 598

மாற்றொன்று இல்லை

குறையோ நிறைவோ
சரணம் வந்தேன்
குருவே உன்னிடம்
தஞ்சம் அடைந்தேன்
ஏனிதைச் செய்தாய்
எனபதை அறியேன்
எனக்குன் காவல்
இருப்பதை உணர்ந்தேன்

பிறவிக் குணமோ
போவதாய் இல்லை
போக்கிடம் எனக்கும்
வேறெதும் இல்லை
பலமுறை முயன்றேன்
போகவே இல்லை
பழைய குணமோ
மாறவே இல்லை

இதற்குக் காரணம்
எதுவென அறிவேன்
இதுவென் இயல்பாய்
ஆனதை உணர்ந்தேன்
முயன்றுதான் பார்க்கிறேன்
முடியவே இல்லை
முறையிடுவ தன்றி
மாற்றமும் இல்லை

அதுஒன்றை மட்டும்
அடிக்கடி செய்கிறேன்
ஆகவே மீண்டும்
உன்னிடம் வருகிறேன்
இரங்கிடு மீண்டும்
என்றுதான் கேட்கிறேன்
இதுவன்றி மாற்றொன்று
இலைநான் அறிவேன்

குருகுலம், 29-12-16, மதியம் 2.10

Song 597

எது உன்சித்தம்

சித்தம் எதுசொல்வாய் நீ சாமி
அதுதெரியாது திகைக்கிறேன் பாவி
தேவை உள்ளோரைத் தேடியே செல்லவோ
தனித்தே இருந்து உன்னிலே மகிழவோ–சித்தம்…

மானிட வாழ்வினைத் தந்தாய், அதன்
மாண்பினைப் புரிந்திடச் செய்தாய், ஆனால்
தான் என்னும் எண்ணம் தலைக்குமே ஏறிடத்
தடுமாறித் தவித்திடும் பாவிக்கு நீயுமே–சித்தம்…

தேவைக்கு எல்லாமே தந்தாய், அதைத்
திறம்பட வகுத்துமே வைத்தாய், ஆனால்
அகந்தையால் பாரம் வருந்தியே சுமந்திடும்
அடிமைக்கு மீண்டும் ஒருமுறை நீயும்–சித்தம்…

இடம் பொருள் ஏவலை அறியேன்
என் எண்ணத்தை நானுமே உணரேன்
சத்தம் இட்டே வாதம் செய்வதினாலே
உன் சித்தத்தை அறியா மூடனுக்குமீண்டும்–சித்தம்…

உன்னிடம் வருவதே அல்லால், மறு
வழியினை நானுமே அறியேன், அதை
உணர்ந்த நீயும் அருள்வாய், என்
பிழைகளைப் பொறுத்து மீண்டும் ஒருமுறை–சித்தம்…

குருகுலம், 29-12-16, காலை, 5.30

Bhakti Song 561 – வீண்சிந்தை போக்குவோம்

நல்லவிதமாக நேரத்தைப் போக்கிட

நமக்கும் உள்ளது நல்லவழி பல

தேவை இல்லாத சிந்தையை போக்கி

தேடலாம் இறைவனை அவனருள் நாடி

 

வேண்டாத பலவாதம் நாள்தோறும் இருக்க

அத்துடன் பிடிவாதம் சேர்ந்து கொள்ள

ஆயிரம் தர்க்கங்கள் அவற்றுடன் செய்ய

அமைதியை இழப்போமே மனதினுள் மெள்ள Continue reading

Song 596

பயனில்லை

புரியாத புதிராக புவிவாழ்வு தொடர
புரியாமல் பலபேர்கள் என்னைப் போல நடிக்க
இதற்கொரு விடைகாணச் சிலபேர்கள் துடிக்க
அனைவரும் வழக்கம்போல் வாழ்ந்துமே முடிக்க

இதைப் பற்றி எண்ணாமல் இருப்பதே நல்லது
என்ற முடிவுக்கு நானுமே வந்தபின்
வீணாக நேரத்தை விரயமும் செய்யாது
விருப்பம்போல் என்வாழ்வில் வாழ்ந்துமே இருக்கேன்

அலசி ஆராய்ந்து அவதியும் படமாட்டேன்
ஆழ்ந்து யோசித்து விடைதேட மாட்டேன்
அன்றாட வாழ்வையும் அவன்தரும் வண்ணமே
அமைதியாய் வாழ்ந்து என்னோட்டம் முடிப்பேன்

இது ஒரு புதிராக எனக்குமே இல்லை
வீணான கேள்விகள் நான்கேட்ப தில்லை
அவனே விடையாக எனக்கும் ஆனபின்
அதிகமாய் யோசித்துப் பயனேதும் இல்லை

குருகுலம், 26-12-1916 மதியம் 3.10