Monthly Archives: May 2017

Bhakti Song 655

எளியனாய் இரு

எத்தனை எளிதாக எடுத்துக் கொண்டேன்நான்
எண்ணிலாக் கேள்விகள் கேட்கிறேன் உன்னைத்தான்
ஆயினும் நீகொண்ட அளவிலாப் பொறுமையால்
அனைத்தையும் அமைதியாய்க் கேட்டுமே கொள்கிறாய்

ஜெபம் என்ற பெயராலே முறையீடு செய்கிறேன்
விடைதேடும் விதமாகப் புத்தியும் சொல்கிறேன்
அத்துடன் என்னிலை நீஅறிந்து கொண்டிட
அடிக்கடி உனக்குமே ஆலோசனை தருகிறேன்

மனிதனாய் வந்தாலும் தெய்வமாய் இருப்பதால்
முழுமையாய் என்னிலை உனக்குமே புரியாது
என்ற எண்ணமும் எனக்குள்ளே இருப்பதால்
என்னைநீ புரிந்திட வைக்கவும் முயல்கிறேன்

இதுஎன் பலவீனம் என்றுமே சொல்வதா
உன்மீது எனக்குள்ள உரிமைதான் என்பதா
பக்தியின் வலைக்குள்ளே அகப்பட்டுக் கொண்டதால்
நீதப்பிக்க வழியில்லை என்றுதான் சொல்வதா

எப்படி ஆயினும் இன்னொன்று சொல்கிறேன்
இறுதிவரையிலும் என்குணம் மாறாது
இந்த உண்மையைப் புரிந்து கொண்டுநீ
எனக்கு எளியனாய் இருப்பதே நல்லது

மத்திகிரி, 30-5-17, இரவு 11.30

Tamil Song 338

வெறும்கையால் முழம்போடுவார்

செல்லாத காசாகி
வாழ்கின்ற போதும்
செருப்படிப் பட்டு
(சிறுமைப் பட்டு)
தாழ்கின்ற போதும்
வீணான கேள்விக்கு
குறைவே இல்லை
வேண்டாத வம்புக்கு
போகாமல் இல்லை

ஏனென்று கேட்க
நாதியும் இல்லை
இருந்தாலும் போனாலும்
கேட்பவர் இல்லை
ஆயினும் ஆர்பாட்டம்
குறையவே இலை
அதட்டல் உருட்டல்
மறையவும் இல்லை

வெறும்கையால் முழம்போட்டு
விலைபேசி விற்கிறார்
இல்லாத பொருளை
ஏலம் விடுகிறார்
வாங்காத பேருக்கு
விளக்கமும் சொல்லி
வீணாக நேரத்தை
விரயமும் ஆக்குறார்

தன்நேரம் பிறர்நேரம்
இரண்டையும் வீணாக்கி
தர்க்கங்கள் பலசெய்து
தத்துவம் பேசுவார்
குண்டு சட்டிக்குள்
குதிரையும் ஓட்டுவார்
குணம்கெட்ட மாந்தரிவர்
வேறென்ன செய்குவார்

மத்திகிரி, 12-7-2017, மாலை 6.15

Bhakti Song 654

இன்நாளைக் கொண்டாடு

இதற்கொரு காரணம்
உன்னிடம் உள்ளது
எனக்கதை மறைப்பது
உனக்குமே நல்லது

புரியாமல் வாழ்வது
ஒருபுறம் சிறந்தது
எல்லாமும் புரிந்தாலே
குழப்பமே ஓங்குது

அன்றாட வாழ்வையும்
கொண்டாடி வாழவே
அனுதினம் அருள்தந்து
அழைத்தாய் என்னையும்

அடுத்தநாள் சிந்தையை
உன்மீது வைத்துமே
அதைப்பற்றிக் கவலையை
விடச்சொன்னாய் உன்னிலே

ஆயினும் சஞ்சலம்
அடிக்கடி வருவதால்
எதிர்கால நிலையெண்ணி
மயங்குறேன் இந்நாளும்

அதைமட்டும் தெளிவாக்க
நீயுமே மறுத்துமே
அன்றாடம் வாழ்ந்திட
அருளினாய் கிருபையை

ஒருவேளை எதிர்காலம்
இதுவெனத் தெளிவானால்
இந்நாளின் வாழ்வுமே
இருளாகிப் போய்விடும்

ஆகையால் என்மீது
இரக்கமும் கொண்டநீ
அதைமட்டும் எனக்குமே
மறைவாக வைத்துள்ளாய்

அந்தஉன் கிருபையை
அண்டிநான் வாழ்வதால்
இந்நாளின் வாழ்வையும்
கொண்டாடி வாழ்கிறேன்
மத்திகிரி, 30-5-17, இரவு 11.00

Tamil Song 337

வாழ்வுக்கு அழகு

போனது இந்நாள்
வந்தது போல
அடுத்தநாள் வந்திடும்
வழக்கம் போல

நேற்றைக்கு முன்தினம்
நடந்ததைக் கூட
மறந்திடும் மனமும்
வழக்கம் போல

நாளைய மறுதினம்
வருவதை நினைந்து
நாளும் பொழுதும்
உழைக்கிறோம் முனைந்து

ஆயினும் அதனையும்
கடந்த பின்னாலே
வழக்கம்போல ஓடும்
வாழ்வும் தன்னாலே

நேற்றைய முன்தினம்
நாளைய மறுதினம்
இவற்றைத் தவிர
வேறெதுவும் காணும்

இவற்றின் இடையே
அகப்பட்டுக் கொண்ட
இன்றைய தினம்தான்
உண்மையில் பாவம்

அதற்கென நேரம்
ஒதுக்குவ தில்லை
அதைப்பற்றி சிந்திக்க
நேரமே இல்லை

இன்றைய தினமும்
போன பின்னாலே
அதைப்பற்றி வருந்தி
பயனுமே என்ன?

காலையில் எழுந்து
சுறுசுறுப் பாகி
கடமைகள் செய்கிறோம்
பரபரபப் பாகி

அடுத்த வேளையை
மனதில் கொண்டு
செய்கிறோம் ஆயிரம்
வேலைகள் நன்று

இன்றைக் கென்று
வாழ்ந்திட வென்று
நினைப்பது எப்போது
நாமும் இங்கு

இன்றைய வாழ்வை
தொலைத பின்பு
வாழ்வதில் பயனில்லை
சொல்வதை நம்பு

போனதை எண்ணிப்
புலம்பிட வேண்டாம்
வருவதை எண்ணி
கலங்கிட வேண்டாம்

இன்றைய தினத்தில்
வாழ்ந்திடப் பழகு
அதுதான் நல்ல
வாழ்வுக்கு அழகு

மத்திகிரி, 13-7-2017, மாலை 6.15

Bhakti Song 653

மீண்டும் பொறுப்பாய்

எத்தனையோ முறை
என்பிழை பொறுத்தாய்
இன்னும் ஒருமுறை
பொறுக்கக் கூடாதா

என்மீது நீகொண்ட
இரக்கத்தை மட்டும்
மீண்டும் ஒருமுறை
நினைக்கக் கூடாதா

உத்தமன் எனநான்
ஊருக்குக் காட்டினும்
உண்மை அறிந்தநீ
மன்னிக்கக் கூடாதா

கதறிடும் என்குரல்
காதில் விழுந்துமே
கரம்நீட்டி மீண்டுமே
அணைக்கக் கூடாதா

சொல்லிடத் தெரியாது
தவித்திடும் பேதையின்
உள்ளத்தின் தேம்பலைக்
கேட்கக் கூடாதா

இதுஎன்ன பிடிவாதம்
எத்தனை எகத்தாளம்
எவர்சொல்லித் தந்தார்
ஏனிந்த ஆத்திரம்

பொறுப்பும் உண்டுனக்கு
அதுஉன் கடனென்று
சிறுபிள்ளை நான்சொல்லித்
தரவுமே வேண்டுமோ

“சிறியோர் செய்திடும்
சிறுபிழை எல்லாம்
பெரியார் ஆயின்
பொறுப்பது கடனே”

முதுமொழி மறக்காதே
மூடனை வெறுக்காதே
உன்கடன் மறக்காதே
என்னுரிமையை மறுக்காதே

மத்திகிரி, 29-5-17, இரவு, 10-45

Tamil Song 336

மனமில்லா மனம்

சிரிப்பதா அழுவதா தெரியவில்லை
சொல்வதா மறைப்பதா புரியவில்லை
வாழவும் சாகவும் வழியும்மில்லை
வந்ததால் பயன்னிங்கு ஏதுமில்லை

மனிதனாய்ப் பிறந்தது மிகபெறும்தவறு
மனமும்மிருப்பது அதனினும் கொடிது
அதனுடன் வாழ்வது மாபெருந்துயரம்
அதைப்பற்றி சொல்வது மிகமிகக்கடினம்

இறைவன் என்முன் வந்துவிட்டால்
இதைப்பற்றி நிச்சயம் கேட்டிடுவேன்
அவனுக்கு மனமொன்று இருந்திருந்தால்
படைப்பதை நிச்சயம் நிறுத்திவைப்பான்

நிலையிலா தன்மையை கொடுத்துவிட்டு
நிம்மதி தன்னையும் பறித்துவிட்டு
நாம்படும் துயரினைப் பாராமல்
தான்மட்டும் எங்கோ ஒளிந்துகொண்டான்

மனமொன்று மனதிற்கும் இருக்கவில்லை
மனிதரின் துன்பத்தை அறியவில்லை
மனமில்லா மனதிற்கு புரியவைக்க
மனிதர்க்கு அதனால் வழியுமில்லை

அதையெண்ணி நானும் சிரிக்கின்றேன்
அதன்பின் பிறருடன் அழுகின்றேன்
அனுதினம் இறந்தும் வாழ்கின்றேன்
அததைதான் சொல்லிட முயல்கின்றேன்

மத்திகிரி, 11-07-2017, இரவு 10.45

Bhakti Song 652

அந்த நொடி

அந்த சிலநொடிப் பொழுது
உன்னருகினில் வருகின்ற பொழுது
நெஞ்சமெல்லாம் நீவந்து நிறைய
என்நாவுமே பாடுது துதியே

நேரம் இல்லைஎன்று சொல்லித்
தட்டிக் கழிக்கின்ற போதும்
வார்த்தைகள் ஏதுமே இன்றி
உன்னிடம் வந்திட வேண்டும்

தேங்கித்தான் போனது வாழ்வு
தெளிவற்றுப் போனது மனது
வறண்டுமே போனது உணர்வு
இதனிடை உள்ளதுன் பரிவு

என்னிலை என்னவாய் ஆயினும்
சொல்லிட மொழியற்றுப் போயினும்
மாறாத உன்னன்பை எண்ணி
நானென்னை உன்னிடம் தரணும்

வரண்ட பூமியின் மீது
விழுந்திடும் மழைத்துளி போல
கருணை என்மீது பொழியத்
துளிர்விடும் உணர்வு மீண்டும்

போன உயிரும் வந்து
மீண்டு எழுந்திடும் போது
நாவுமே உன்துதி பாடும்
அந்தநிலையில் பரவசம் கூடும்
மத்திகிரி, 28-5-17, இரவு 11.45

Tamil Song 335

புத்தியில்லா புத்தி

என்னவோ தோணுது எழுதுகிறேன்
என்னக்கு நானே சொல்லுகிறேன்
எப்படி இதனை நிறுத்துவது
எனத் தெரியாமல் புலம்புகிறேன்

சின்னதாய் உருண்டை ஒன்றிருக்கு
தலையின் ஓட்டுக்குள் ஒளிந்திருக்கு
இத்தனை பெரிய உடம்பையுமே
என்னமா கைக்குள் வைத்திருக்கு

அது போடும் ஆட்டத்தையும்
அடக்கிட இங்கு யாருமில்லை
அடுத்தவர் என்னதான் சொன்னாலும்
அதற்கோ புத்தியும் வரவில்லை

தன்னந் தனியே பேசிக்குது
தனக்குள் எதையோ யோசிக்குது
அதையும் என்னை எழுதச்சொல்லி
அடிக்கடி தொல்லை கொடுக்கிறது

எத்தனை எடுத்துச் சொன்னாலும்
என்பேச்சை அது கேட்பதில்லை
எத்தனைக் கெஞ்சிக் கேட்டாலும்
எழுதும் வரையில் விடுவதில்லை

“என்கையில் மட்டும் கிடைத்துவிடு
அப்புறம் தெரியும் உன்பாடு”
என்று மிரட்டிப் பார்த்தாலும்
ஏனோ பயப்பட மறுக்கிறது

“இதற்கு மேலே பேசாதே
என்னுடன் மோதிப் பார்க்காதே
சொன்னதை செய்யும் அடிமைநீ
சொன்னதை மட்டும் செய்வாய்நீ

கேள்விமேல் கேள்வி கேட்காதே
கோபத்தை மேலும் கிளறாதே
சொன்னதை மட்டும் செய்துவிடு
சொந்த புத்தியும் உனக்கேது

அடுத்தவர் பேச்சைக் கேட்காதே
ஆபத்தில் வீணாய் மாட்டாதே
எனது பேச்சையும் மீறாதே
எனக்கே புத்தியும் சொல்லாதே

யோசிக்க உனக்கோ மூளையில்லை
எடுத்துச் சொல்லியும் புரியவில்லை
எனக்கும் அடிமை ஆனபின்னே
உனக்கெனத் தனியே வாழ்வும்மில்லை

சொன்னதை மட்டும் குறித்துக்கொள்ளு
சொற்களை அதற்கு சேர்த்துக்கொள்ளு
மறக்கும் முன்னே எழுதிவிடு
மற்றதை என்னிடம் விட்டுவிட்டு

சொன்னதை செய்யும் சிறுபிள்ளை
சுயமாய் சிந்திக்கவும் தெரியவில்லை
என்னை விட்டாலும் வழியில்லை
என்றே என்னை மிரட்டிடுது

இப்படி மூளை சொன்னபின்னே
எனக்கு இனிமேல் வழியேது
அதனால்தான் நான் எழுதுகிறேன்
அதைமட்டும் நீயும் புரிந்துகொள்ளு

நாள்வேளை என்னைப் போல்
நீயோ மாட்டிக் கொள்ளவில்லை
புத்திக்கு அடிமை ஆகாமல்
புத்தியாக இருந்திடு நீ

மத்திகிரி, 8-7-2017, மாலை, 6.15

Tamil Song 334

காலம் கைகொடுக்கும்

எப்போ விடியல் இங்கு வருமென்று
ஏங்கி நிற்பவர் பல கோடியுண்டு
ஏன்தான் அதுவும் வருகிற தென்று
எரிச்சல் படுபவர் பலரும் உண்டு

விடியும் போது விடிந்துவிடும்
விரும்பினும் வெறுத்தும் தன்போல் வரும்
அவரவர் நிலைக்கு ஏற்ற வண்ணம்
அதையும் எதிர்கொண்டு வழவேண்டும்

முன்னேற்றம் வேண்டி முனைவோரும்
விடியலுக்காக காத்து நிற்பார்
விடியும் முன்னே ஆயத்தமாகி
காலத்தை வென்று காட்டிடுவார்

அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்திருப்போர்
அதிகம் சோம்பி கிடந்திடுவார்
விடிந்தும் கூட உணர்வின்றி
படுக்கையில் மட்டும் கிடந்திடுவார்

காலம் எவர்க்கும் காத்திருக்காது, நம்
கொஞ்சலை-கெஞ்சலை பார்த்திருக்காது
காலத்தில் காலதை பயன்படுது வோர்க்கு
கையும் கொடுக்கத் தயங்கிடாது

மத்திகிரி, 6-7-2017, காலை 5.00

Tamil Song 333

உண்மையான கற்பனை

எல்லாம் இங்கே கற்பனைதான்
எதுவும் உண்மை இல்லைதான்
என்னவோ சிலர் கிறுக்கிவைத்தார்
ஏதுமே உண்மை இல்லைதான்

கற்பனை என்னும் சிறகடித்து
காற்றில் ஏறி பறந்து சென்றார்
சொப்பனமாய் கண்ட காட்சிகளை
சொற்களில் நமக்கு வடித்துத் தந்தார்

பிறரின் உளறலை நாம்படித்து
பிறகு அதற்கொரு உரையமைத்து
சான்றுகள் அதற்கு பலபுனைந்து
சந்தையில் கூவி விற்கின்றோம்

ஏமாந்தோறும் வாங்கிச் சென்று
எல்லோருக்கும் படித்துச் சொல்ல
கேட்டவர் உண்மை எனநம்பி
போட்டிப் போட்டு வாங்கிச் சென்றார்

இறுதியில் கற்பனை உண்மையாகி
எல்லோரும் அதை நம்பி
உண்மையான கற்பனையில் இங்கு
உணர்வில்லாமல் வாழ்கின்றார்

இதுவும் எனது கற்பனைதான்
இதையே கிறுக்கினேன் சொற்களில்தான்
எவரேனும் இதில் ஏமாந்தால்
நிச்சயம் சிரிப்பேன் உண்மையில்தான்

மத்திகிரி, 5-7-2017, இரவு 11.30