Monthly Archives: July 2017

Bhakti Song 698

பதில் கிடைத்து

எனக்குள்ள சந்தேகம்
எவர்வந்து தீர்ப்பது
எவரிடம் நான்போய்
கேள்விகள் கேட்பது

எவ்விதப் பதிலை
எவரிங்கு தந்தாலும்
எனக்குள்ள கேள்விக்கு
பதிலவை ஆகாது

புத்தியால் புரிந்திட
புறப்பட்டேன் நானும்
புத்தகம் பலவற்றை
படித்தேன் நாளும்

தெளிவாய்ப் புரிந்திட
தேடினேன் சொற்களை
புரிந்ததை எழுதிட
முயன்றேன் வார்த்தையில்

இறுதியில் இவற்றை
தொகுத்துப் படித்தேன்
படித்ததை பலமுறை
யோசித்துப் பார்த்தேன்

இறுதி வரையில்
தேடிய விடையை
எங்குமே காணாமல்
குழம்பியே நின்றேன்

அதனால் நானொரு
முடிவுக்கு வந்தேன்
அமைதியாய் உனது
பாதத்தில் அமர்ந்தேன்

நீதரும் பதிலுக்காய்க்
காத்துமே கிடந்தேன்
நீயே விடையாய்
ஆனாய்ப் புரிந்தேன்

அனுதின வாழ்வில்
உன்னுடன் நடந்து
ஐயனே நீதரும்
பாரத்தைச் சுமந்து

ஒவ்வொரு நாளாய்
உன்னிலே வாழ்ந்து
ஓட்டத்தை முடிப்பேன்
உன்னுடன் சேர்ந்து

இதனிடை எனது
தேவையை அறிந்து
எனக்கு நீதரும்
அருளினை நினைந்து

அதன்மூலம் நீதரும்
பதிலை அடைந்து
அமைதி கொள்வேன்
உன்னடிப் பணிந்து

2-8-2017, இரவு 10.45

Bhakti Song 697

இதுதான் முடியும்

கரங்களும் குவிந்தன
கண்களும் பனித்தன
கருத்திலே உன்னை
வைத்திட முடியல

வார்த்தைகள் வந்தன
வாயுமே திறந்தது
வள்ளலே உன்னை
மனதிலே நிறுத்தல

எதுகையும் மோனையும்
இணைந்துமே வந்தன
எண்ணத்தில் உன்னை
எண்ணிட முடியல

உணர்ச்சி உந்தினும்
உள்ளம் உருகினும்
அலையும் மனதிலே
உனக்கு இடமில

இந்த நிலையிலே
என்னதான் செய்வது
அதுமட்டும் எனக்கு
நிச்சயம் தெரியல

ஆயினும் இத(தை)மட்டும்
சொல்லிடத் தெரியுது
அதுஒன்று மட்டுமே
எனக்கு முடியுது

எனவே இதையும்
துதியாக ஏற்றிடு
வழக்கம்போல் என்மீது
கருணை காட்டிட்டு

மத்திகிரி, 31-07-2017, இரவு 11.10

Bhakti Song 696

பார்வை தந்தாய்

திரும்பித்தான் பாரேன் ஒருமுறை நீயும்
தேவை உள்ளதால் அழைக்கிறேன் நானும்
உனக்குள்ள அவசரம் எனக்கென்னத் தெரியும்
அதற்காக என்னைநீ மறுக்கவா முடியும்

கூட்டத்தின் இரைச்சலில் என்குரல் கேட்குதா
தூரமே நிற்கிறேன் என்னையும் தெரியுதா
நிற்கவே உனக்கும் நேரம் இல்லையா
நீயுமே மறந்திடக் காரணம் உள்ளதா

ஒருவன்தான் என்றுநீ ஒதுக்கிட முடியுமா
ஒன்றுக்கும் பயனில்லை என்றிட இயலுமா
ஒருகாசு தொலைந்தாலும் ஊர்கூட்டித் தேடுவாய்
ஒருஆடு போனாலும் அதன்பின் ஓடுவாய்

உன்னை குறைசொல்லிப் பயனில்லை அறிவேன்
உண்மையில் திருந்திட மனமில்லை அறிந்தேன்
அதற்கெனக் காரணம் ஆயிரம் தேடுறேன்
அத்தோடு உன்மீது பழியும் போடுறேன்

ஆயினும் நீநின்று என்னையும் அழைத்தாய்
அதன்பின் என்மன விருப்பத்தைக் கேடாய்
இதைக்கூடசற்றும் எதிர்பாராத நானும்
ஏதுமே பேசாமல் திகைத்தேன் நானும்

அதன்பின் நடந்ததைச் சொல்லிட முடியுமா
அருகினில் அழைத்ததை மறந்திட இயலுமா
பார்வை தந்ததை மறுத்திட முடியுமா
பக்தனாய் மாற்றினாய் மறந்திட முடியுமா

–மாற்கு, 10. 46-52.
மத்திகிரி, 31-07-2017, மதியம் 2.30௨.௩௦

Bhakti Song 695

துதி

துதியின் மத்தியில் வாழ்கிறாய் நீயும்
துதித்துப் பாடிட வருகிறேன் நானும்
துதிக்க என்னை அழைத்தாய் நீயும்
துதிகள் பாடி வாழ்கிறேன் நானும்

துதிக்கப் பாத்திரம் ஆனவன் நீயே
துதிக்க வென்றே வாழ்கிறேன் நானே
துதிக்கும் துதியில் மகிழ்கிறாய் நீயே
துதிகள் பாடி மகிழ்கிறேன் நானே

துதிக்க எனக்கு காரணம் இருக்கு
துதியின் பின்னே இரகசியம் இருக்கு
எனக்கு செய்ததை எண்ணிடும் போது
துதிக்க மட்டுமே மனதுக்குத் தோன்றுது

படைத்தவை எல்லாம் துதிக்கும் போது
பரனே உனது மகிமை புரியுது
பக்தர்கள் கூடி வாழ்ந்திடும் போது
துதிக்கும் துதிமட்டும் காதில் கேட்குது

எத்தனை இரைச்சல் அனுதின வாழ்வில்
எத்தனை எரிச்சல் அதனால் மனதில்
அதற்கொரு மருந்து துதியில் இருக்கு
அதனிடை மட்டும் அமைதியும் இருக்கு

வேண்டுதல் செய்ய வந்திடும் போதும்
ஒருவித பாரம் மனதினில் தோன்றும்
ஆறுதல் தேடி அழுதிடத் தோன்றும்
அதனுடன் ஒருவித சோகமும் சேரும்

துதிக்கும் போது உவகைப் பொங்கும்
துதிப்பதால் மனதின் கவலை நீங்கும்
உடலோடு மனதின் பாரமும் போகும்
இலவம் பஞ்சாய் காற்றில் மிதக்கும்

இதனை உணர்ந்து துதிக்கிறேன் நானே
இதயம் நிறைந்து வாழ்த்துறேன் நானே
இந்த பேரின்பம் அடைந்தபின்னாலே
துதியன்றி வேறொன்றை நாடேன் நானே

மத்திகிரி, 30-7-2017, இரவு, 11.10

Bhakti Song 694

துதித்துத்தான் பாரேன்

துதித்துதான் பாரேன் தினம்தோறும் அவனை
சொல்லித்தான் பாரேன் நாமத்தின் இனிமை
கேட்டுத்தான் பாரேன் அருளின் மேன்மை
கூறித்தான் பாரேன் அவனின் பெருமை

மனிதனாய்ப் பிறந்ததின் பேறுமே என்ன
மனதார அவனை வணங்காமல் தானே
பக்தனாய் வாழ்வதில் அர்த்தமும் என்ன
பக்தியில் திளைத்துத் துதிக்காமல் தானே

தகுதியும் நமக்கு இல்லாத போதும்
தன்னையே தந்தான் வெகுமதியாக
முழுமையாய் அவனை அறியாத போதும்
முக்தியைத் தந்தான் இலவசமாக

அவன்செய்த செயல்கள் அனைத்தும் புரியாது
அற்புதம் அடையாளம் சரியாய் விளங்காது
ஆயினும் நம்மை மீட்டிட வென்று
அவன்செய்த ஒன்றும் நமக்குமே தெரியும்

அதுவென்ன வென்று அடுத்தவர் அறிவாரோ
அவன்வந்து மீட்டதைச் சொன்னாலும் புரிவாரோ
அவரவர் தேவைக்கு ஏற்ப வந்தான்
அன்பினால் ஆட்கொண்டு அவரையும் வென்றான்

அதைமட்டும் எண்ணித் துதித்தாலே போதும்
அதன்மூலம் உயரும் அவனது நாமம்
அவன் தந்த அருளைக் கூறிடத் தோன்றும்
அவனது பெருமை புரிந்திடும் உலகம்

மத்திகிரி, 18-07-2017, இரவு 11.10

Bhakti Song 693

அவன் செய்த தவறு

வீணாக இறைவனை
வம்புக் கிழுக்காதே
வேண்டாத கேள்விகள்
அவனையும் கேட்காதே

வீணாக நம்மைப்
படைத்துமே விட்டு
நாளும் புலம்புறான்
வருத்தமும் உற்று

எத்தனை உயிர்களை
அவனும் படைத்தான்
அத்தோடு இயற்கையைச்
சேர்த்துமே சமைத்தான்

ஆனாலும் அவைகளில்
ஒன்றினால் கூட
அவனுக்கு இல்லை
போராட்டம் இதுபோல

ஒன்றா இரண்டா
எதுவென்று சொல்ல
ஒருநாளா இருநாளா
எப்படிச் சொல்ல

ஆயிரம் கேள்விகள்
கேட்கிறோம் அவனையே
அத்துடன் போராட
அழைக்கிறோம் அவனையே

பாவம் என்பதை
அறியாத அவனும்
பாவத்தை நம்மூலம்
அறிந்தான் பாவம்

சோகத்தை ஒருநாளும்
உணராத அவனும்
சோகத்தில் மூழ்கினான்
நம்மாலே நாளும்

பகுத்து அறிகின்ற
அறிவையும் தந்தான்
பகுத்து அறிந்து
நாமுமே வாழ

அத்துடன் படைத்தான்
தன்சாயல் தந்து
அவனை அறிந்து
துதிப்பதற்காக

அதைத்தான் செய்தது
தவறாகிப் போனது
அதனால்தான் அவனுக்கு
ஆபத்தும் வந்தது

விலங்கினை மட்டுமே
படைத்திருந்தாலோ
வீணாக இப்போது
வருத்தம் இருக்காது

அத்துடன் சேர்த்து
என்பாட்டைக் கேட்கும்
அவலமும் அவனுக்கு
வந்திருக்காது

மத்திகிரி, மதியம் 1.15, 18-07-2017

Bhakti Song 692

சரணே புகலிடம்

சரணன்றி புகலொன்று அறியேன்
சந்நிதி அதனாலே வந்தேன்
இறங்கியே ஆட்கொண்டு மீட்பாய்
ஏந்தியே கரத்தினில் காப்பாய்

ஒருநேரம் உவகை
பொங்குது
மறுநேரம் துயரினில் மூழ்குது
இதுஎன் நிலையாகிப் போனது

இதனையும் எப்படி வெல்வது
இனம் புரியாத சோகம்
ஏனோ மனதையே தாக்குது
அடுத்த நொடியிலே மகிழ்ச்சி

ஆனந்தம் மேலிட ஓங்குது
சூழ்நிலை காரணம் இல்லை
சுற்றியுள்ளோர் பொறுப்புமே இல்லை
நிலையிலாப் புத்தியைக் கொண்டேன்

நித்தமும் அத்துடன் போராடுகின்றேன்
சஞ்சலம் எண்குணம் ஆச்சு
சலிப்பது வழக்கமாய்ப் போச்சு
தைரியம் இல்லாது போச்சு

தடுமாறித்தவிப்பது வாடிக்கை ஆச்சு
நன்றாக இதைமட்டும் அறிவேன்
மாற்று நீயென்று உணர்ந்தேன்
அதைநாடி இப்போது வந்தேன்

அடைக்கலம் நீயென்று நின்றேன்
திருவடியில் புகலிடம் தருவாய்
திகையாதே என்றென்னை ஏற்பாய்
சஞ்சலம் தன்னையும் நீக்கிச்

சரண்தந்து என்னையும் காப்பாய்
மத்திகிரி, 17-7-2017, இரவு 11.10

Bhakti Song 691

ஆதியில் கொண்ட அன்பு

ஆதியில் கொண்ட அன்பைவிட்டாய்யென
ஆண்டவன் என்னிடம் சொல்லியபின்
பாதிவழியினில் பாதைவிட்டு நான்
போனது எங்கென்று பார்த்துவிட்டேன்

கூடவே வந்தான் கூட்டியே சென்றான்
கொஞ்சம் குறையாது அன்பையும் தந்தான்
வாட்டமுற்று நான் வாடியே நின்றாலும்
வருந்தா வண்ணம் தாங்கியே நின்றான்

கொஞ்சத்தில் ஏதேனும் குறைவுமே பட்டு
கோபத்தால் நானும் ஊடிய போதும்
கொஞ்சியும் கெஞ்சியும் தாங்கி அணைத்துக்
குறைவு தன்னையும் நீக்கியே விட்டான்

தேவை இதுவெனச் சொல்லிடும் முன்னே
தேவையை அறிந்து முந்தியே தந்தான்
தேவைக்கு மிஞ்சியே போன போதும்
மனத்தாங்கல் வராமல் பார்த்துக் கொண்டான்

இத்தனை அன்பையும் என்மீது காட்டி
அத்துடன் அருளை மேலுமே கூட்டி
முற்றுமாய் என் மோகத்துள் மூழ்கி
மற்றவர் பற்றிய சிந்தை மறந்தான்

ஆயினும் எனது மாமிச சிந்தையால்
அடிக்கடி நானும் சோரமே போனேன்
அப்போதும் என் தப்பிதம் மறந்து
ஆதியில் கொண்ட அன்பையே கேட்டான்

அதனை எண்ணி மனமும் நொந்து
ஐயனே மன்னிப்பாய் என்றுமே வந்தேன்
அதனை ஏற்றுத் தவறை மறந்து
மீண்டும் எனக்கொரு வாழ்வைத் தந்தான்

இப்படி மன்னித்து என்னையும் ஏற்றபின்
தப்பிதம் எப்படி மீண்டுமே செய்வேன்
ஆதியில் கொண்ட அன்பை மறந்தாலும்
மீண்டும் ஒருமுறை நேசித்து வாழ்வேன்

மத்திகிரி, 16-7-2017, மாலை 6.30

Bhakti Song 690

மாற்றம் இல்லை

புதிதாகச் சொல்ல ஏதுமே இல்லை
சொன்னாலும் புரிந்திட வாய்ப்புமே இல்லை
இதுவரை சொன்னதே புரியாத போது
இனிமேலே புரிந்திட வழியுமே இல்லை

புதிதாக அவதாரம் எடுத்து வந்தாலும்
புதுமையாய் எதையேனும் சொல்லி வைத்தாலும்
மனம்மட்டும் புதிதாய் மாறவே இல்லை
மறுபடிப் பிறக்க வாய்ப்புமே இல்லை

மீட்டபோதே மாற்றி விட்டானே
மேலான வாழ்வைத் தந்துவிட்டானே
பக்தனாய் மாறும் பேறு தந்தானே
என்பக்தியில் பரவசம் கண்டு விட்டானே

ஆதிமுதலே மாறாத இறைவன், நம்
ஆணவ மலத்தைக் கழுவி நீக்கியே
பூரண வாழ்வைத் தந்திடவந்து, நம்மைப்
புதிதாய்ப் பிறக்க வைத்தான் தன்னுள்

அவன்தந்த புதிய பிறவி பெற்றவன்
அவனுடன் வாழும் உறவு உற்றவன்
அவன்மேன்மை சொல்லும் வாய்ப்புப் பெற்றவன்
அதற்கவன் தந்த உரிமை பெற்றவன்

அதைமட்டும் புதிதாய் அடிக்கடி சொல்கிறேன்
அதற்கெனப் பாடல்கள் புதிதாய்ப் புனைகின்றேன்
ஆயினும் ஆதியில் கொண்ட அன்பிலே
எவ்வித மாற்றமும் இல்லாமல் சொல்கிறேன்

மத்திகிரி, 16-7-17, மதியம் 2.00

Bhakti Song 689

தொண்டின் மேன்மை

தொண்டர்கள் மனதிலே குடிகொண்டு வாழ்பவன்
தொண்டர்க்குத் தொண்டு செய்திட வந்தவன்
தொண்டின் மூலமே இறைவனின் அன்பினைத்
தொய்வின்றி உலகிற்குக் காட்டிடச் சொன்னவன்

தேடிவந்துமே நமைக் கேட்டிடும் போது
செய்வது கடமைதான் தொண்டுமே இல்லை
தேவை உள்ளோரைத் தேடியே சென்று
கேட்குமுன் செய்வதே தொண்டுக்கு மேன்மை

தேடியே வந்தான் நாம் தேடாத போதும்
தெரிந்துதான் மீட்டான் நாம் குணமற்ற போதும்
நாடியே வருகிறான் நாம் வேண்டாத போதும்
நன்மைகள் செய்கிறான் நாம் நாடாதபோதும்

இதனினும் தொண்டிற்கு இலக்கணம் இல்லையே
இதைவிட்டால் நாமுய்ய வழியுமே இல்லையே
இறைவனே இவ்விதம் இறங்கியே வந்துமே
இன்னும் உணராமல் இருப்பதும் கொடுமையே

வாருங்கள் நாமும்போய்த் தொண்டுகள் ஆற்றுவோம்
வாழ்கின்ற வாழ்விலே இறைவனைக் காட்டுவோம்
தொண்டின் மூலமே இறைவனைப் போற்றுவோம்
தொண்டாற்றும் பேரினை இறைஞ்சியே வேண்டுவோம்

16-7-2017, மத்திகிரி, காலை 5.30