Monthly Archives: August 2017

Tamil Song 363

சடிடியிலிருந்து தப்பித்தாலும்

ஆயிரம் சொன்னாலும் அப்படித்தான்
அதற்குமேல் சொல்வதும் எப்படித்தான்
மாறாத மனமும் தேறாத குணமும்
இருக்கின்ற வரையில் போராட்டம் தினம்தான்

ஒதுங்கியே போய் அமைதியாய் இருந்தால்
உள்ளான சஞ்சலம் ஓய்வதே இல்லை
அனைத்திலும் தலையிட்டு அதிகம் பேசினால்
அதைவிட ஆபத்து வேறெங்கும் இல்லை

நாமாகத் தேடிப் போகாவிட்டாலும்
தானாகத் தேடி வந்திடும் போது
கேட்பதா-மறுப்பதா என்கின்ற கேள்வி
முன்னே வந்து தன்போல நிற்கும்

அடுத்தவர் குணம் அறிந்ததால் பலமுறை
தயங்கித் தயங்கி தலையிடச் சொல்லும்
ஆயினும் அவரின் தேவையை அறிந்தால்
வேறுவழியின்றி மனமும் இரங்கும்

உரலில் தலியிட்டு உலக்கைக்குப் பாய்ந்தால்
ஒன்றும் பயனில்லை என்பது புரியுது
இருபக்கம் அடிவாங்கும் மத்தளம் போல
இறுதி வரையில் நம்நிலை ஆகுது

ஆயினும் இதையும் வாழ்கின்ற வரையில்
உதறித் தள்வது இயலாத ஒன்று
சட்டியிலிருந்து துள்ளிக் குதித்தாலும்
நெருப்பில் விழுவது நிச்சயம் உண்டு

மத்திகிரி, 30-8-2017, மதியம் 2.20

Tamil Song 362

வேறு வழியில்லை

எத்தனை செய்தாலும்
குத்தமே காண்கிறார்
எதனைச் சொன்னாலும்
கோபமும் கொள்கிறார்
பொறுமையைக் காட்டினால்
மேலும் அடிக்கிறார்
பொங்கி எழுந்தால்
போக்கிரி என்கிறார்

அருகினில் இருந்து
செய்வதினாலே
அடிக்கடி உரசல்
தன்போல் வந்திடும்
அவசரப்பட்டு
பேசுவதினால்
ஆத்திரம் இன்னும்
பொங்கியே பெருகும்

வீணான கற்பனை
பலவும் செய்வதால்
வேண்டாத எண்ணம்
தன்போல் வந்திடும்
அதன்பின் அதுவும்
உண்மையே என்ற
எண்ணம் மனதில்
உறுதியாய் நிலைக்கும்

இதனைப் போக்க
எத்தனை முயன்றும்
எவ்விதப் பயனும்
இறுதியில் இல்லை
தன்போல் உணர்ந்து
திருந்தட்டும் என்று
விடுவதை தவிர
வழிநமக் கில்லை

மத்திகிரி, 30-8-2017 2.10

Song 723

மனித்தப் பிறவியும் வேண்டுவதே

என்மீது நீகொண்ட இரக்கத்தை நினைக்க
எனக்கது மிகமிக வியப்பாக இருக்குது
எனக்குமே நீசெய்யும் நன்மையை நினைக்க
என்னுள்ளம் நன்றியால் உன்னையே துதிக்குது
பலமுறை இதையே நான்சொன்ன போதும்
பலமுறை அதையேநீ செய்கின்ற போதும்
கணம்தோறும் என்மீது நீகொண்ட இரக்கம்
கற்பனை மீறிய உண்மையாய் இருக்கும்
விளங்கிட முடியாத பேரருள் கொண்டாய்
விளக்கிட இயலாது திகைத்திடச் செய்தாய்
நானதை நினைக்க மனதையும் தந்தாய்
நாள்தோறும் பாடிப் பணிந்திடச் செய்தாய்
உனக்கிது இயல்பான குணமாக இருக்குது
உனக்கிது அனுதினப் பணியாக இருக்குது
ஆயினும் அலசடிப் படுகின்ற எனக்கு
கணந்தோறும் இதுமட்டும் புதிதாய் இருக்கு
நானிதைச் சொன்னாலும் உனக்கிதுப் புரியாது
நானென்ன செய்யட்டும் உனக்குள்ள உயர்விது
மனித-தெய்வமாய் நீவந்த போதும்
மனிதனின் மனநிலை கிடையாது உனக்கு
பாவியாய் இருந்து மீண்டால்தான் புரியும்
பலவித பாரங்கள் சுமந்தால்தான் தெரியும்
பாவ பாரம் சுமந்திட்ட போதும்
பாவம் உனக்கிது எப்படி புரியும்
ஒருவிதம் மனிதப் பிறவியும் நல்லது
உன்னருள் துய்க்கும் வாய்ப்பும் கிடைத்தது
அதையே எனக்கும் நீயும் தந்தது
அடடா என்ன சொல்லித் துதிப்பது
திருப்பூந்துருத்தி, கருணையானந்தர் ஆஸ்ரமம்,

7-9-2017, மாலை 7.00

Bhakti Song 722 – What Else Can I Say?

வேறென்ன சொல்ல

என்னநீ சொன்னாலும்

என்னுளம் புரியாது

வந்துநீ சொல்லாமல்

உன்னுளம் விளங்காது

முயற்சியும் செய்கிறேன்

முடிந்த வரையில்

ஆயினும் புரியாது

நீசொல்லும் வரையில்

படைத்ததின் நோக்கத்தை

புரிந்துமே கொண்டேன்

பாவத்தை மன்னித்தாய்

அறிந்துமே கொண்டேன்

உனக்கென அழைத்தாய்

வந்துமே நின்றேன்

அதன்பின் நடப்பதை

மட்டுமே அறியேன்

கேள்விகள் கேட்பதில்

பயனில்லை அறிவேன்

கேட்டாலும் பதிலில்லை

தெளிவாக அறிந்தேன்

இலக்கையும் காட்டாமல்

ஓடவும் சொல்லகிறாய்

இதைமட்டும் ஏனென்று

இதுவரைப் புரியேன்

ஓடிடும் போதே

பாதையை மாற்றுவாய்

இடையில் ஓய்ந்தால்

ஓய்வுமே தருவாய்

தயங்கியே நின்றால்

தட்டியும் கொடுப்பாய்

முடியாது என்றால்

என்னையே நீக்குவாய்

உன்நோக்கம் மட்டும்

ஒருநாளும் நீங்காது

அதுபோல் உன்சித்தம்

எந்நாளும் மாறாது

உடன்பட்டு நான்வர

உடன்சேர்த்துக் கொள்வாய்

உடன்பட மறுக்க

“உன்பாடு” என்பாய்

இனிநான் சொல்ல

ஏதுமே இல்லை

என்ன சொன்னாலும்

நீகேட்ப தில்லை

இனி உன்பாடு

நானென்ன செய்ய

அடிமை ஆனபின்

வேறென்ன சொல்ல

மத்திகிரி, 1-9-2017, , இரவு 11.10

English Translation

Whatever you want to communicate

I cannot understand

Unless you come and explain

My mind won’t comprehend it

I try my best

To understand it

But till you reveal

I cannot understand it

I understood the

Reason for creating me

You forgave my sin

That I realized

You called me for you

And I came accordingly

But what happend further

That I cannot comprehend

I know for sure that

There is no use in questioning you

Even if I ask questions

There is no answer, I understood it

Not showing the goal clearly

You ask me to run

But so far I cannot understand

The reason for that!

While running

You will change the track

If I become tired while running

You will give rest

If I stand with much hesitation

You will encourage me (to run)

If I refuse to oblige

You will remove me

But your plan will

Never go

Accordingly there will be

No change in your will

If give my consent and come

You will take me with you

If I refuse to obey

Then you will say, ‘as you wish’.

So there is nothing

For me to say further

Whatever I say

You are not going to listen

Ok it is your game

What can I do?

Once I become your slave

What else can I say?

Mathigiri, 1-9-2017, 11.10 pm.

I feel that sometimes God, without disclosing all about our future, asks us to run, not even clearly showing what the goal is. Of course the Lord is the final goal, but in this life on earth and in our seva to the Lord, there should be some goal and clarity about future so that we can run with much confidence. But sometimes God not only changes our track, but also asks to run not disclosing the goal and even without clarity. But trusting him is the only option left with us, provided if we want to continue to run.

Song 721

துறக்க முடியாது

மாயையே வாழ்வு என்றுமே எண்ணி
வாழ்க்கையைத் துறந்து ஓடிய போதும்
கூடவே மாயையும் ஓடியே வந்திட
மாயையே ஒருவித வாழ்வாகிப் போகும்

பொருளைத் துறந்து புலன்களை வென்று
இறுதியில் அடையும் நிலையும் கூட
புரிந்திட நானும் முயன்றிடும் போது
பொருளைப் புலனை நாட வேண்டும்

உடலும் மனமும் இருக்கின்ற வரையில்
எதையும்துறக்க முடிவதே இல்லை
மாயை மாயை என்றுமே கூறி
நம்மையே ஏய்த்திடத் தேவையும் இல்லை

ஒவ்வொரு நொடியும் வாழ்கின்ற வாழ்வில்
உடலின் தேவையில் மாயையே இல்லை
மாயை என்று மறுத்திட முனைந்தும்
மனது அதனை ஏற்பதே இல்லை

பசியும் தாகமும் ஒருபுறம் இருக்க
மனதின் தேவைகள் பலபுறம் நெருக்க
உலகின் தேவையும் நேரடியாக
உடலோடு மனதையும் அடித்து நொறுக்க

எதனை மாயை என்றுமே சொல்ல
எல்லாத் தேவையும் இருந்திடும் போது
தேவையின் வலிமையை உணர்ந்த பின்னே
துறக்க இங்கு வாய்ப்புமே ஏது

மத்திகிரி, 1-9-2017, இரவு 10.30

Song 720

எது அமைதி

அமைதி எதுவென அறிந்திட நானும்
அமைதியாக அமர்ந்திட்ட போது
எதிர்மறையான எண்ணங்கள் வந்து
ஏதுவுமே அமைதி இல்லை என்குது

விரும்பியபடியே காரியம் வாய்த்தும்
விரும்பிய அமைதியோ கிடைக்கவும் இல்லை
அடுத்து என்ன நடக்கும் என்ற
கலக்கமும் அமைதியைத் தருவதே இல்லை

புலன்கள் விரும்பிய சுகங்கள் கிடைத்தும்
கிடைத்த இன்னபமும் முழுமையாய் இல்லை
ஒருவித ஏக்கம் அதையும் கூட
முழுமையாய்த் துய்க்க விடுவதே இல்லை

மனதில் ஒருவித சமநிலை வந்தால்
அமைதி அதனிடை நிச்சயம் நிலைக்கும்
என்று எண்ணி சமநிலை நாட
சஞ்சலம் வந்து கூடவே நிற்கும்

இவைகள் அனைத்தையும் முழுமையாய்த் துறந்து
பற்றற்ற பற்றை பற்றிய போதும்
துறவும் ஒருவிதப் பற்றாக மாற
துறவைத் துறக்க இயலாமல் போகும்

இறுதியில் அமைதி இதுதான் என்று
உறுதியாய் நானும் அறியாத போது
இறுதி வரையில் அமைதி என்பது
இங்கில்லை என்ற உண்மை புரியும்

நொடிகள் தோறும் மாறிடும் மனதில்
அமைதி என்பது நிரந்தரம் இல்லை
அதையே நானும் உணர்ந்த பின்னே
தேடிய அமைதி தன்போல் வந்திடும்

மத்திகிரி, 1-9-2017, மதியம் 2.20

Song 719

புலன்களுக்கு அப்பால்

உடலில் தோன்றும் உணர்வுகள் எல்லாம்
ஒருசில நொடிகள் இருந்தபின் மறையும்
உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சியும் கூட
அதுபோல் தோன்றி தன்போல் மறையும்

இவற்றின் மூலம் தோன்றும் அனுபவம்
எதுவரை உண்மை எப்படித் தெரியும்
இவற்றைக் கொண்டு நீதரும் பரவசம்
எப்படி என்னால் அளக்க முடியும்

கண்ணீர் தன்போல் வந்திடக் கூடும்
கரங்களும் தமபோல் குவிந்திடக் கூடும்
வாயும் மனதும் வாழ்த்தியே பாடி
வள்ளலே உன்னைப் போற்றவும் கூடும்

ஆயினும் இவையே அனுபவ நிலையென
ஐயனே எப்படி நான்சொல்லக் கூடும்
அந்த உன்னத பரவச நிலையை
எடுத்துச் சொல்ல எப்படிக் கூடும்

புலன்களைக் கடந்து போக வேண்டும்
புத்தியும் மனதும் ஓய்ந்திட வேண்டும்
எவ்வித உணர்வும் அற்ற போதும்
என்னுயிர் மட்டும் புரிந்திடக் கூடும்

புரிந்த அந்த நிலையைக் கூற
புவியில் எந்த வழியும் இல்லை
பிறரும் அதனைப் புரிந்து கொள்ளத்
தேவை இங்கு ஏதும் இல்லை

மொழியின் தோல்வி இல்லை என்பேன்
மனதின் தோல்வி இல்லை சொன்னேன்
தேவை கொண்டு தேடும் போது
தேடி வந்து தருவாய் என்பேன்

மத்திகிரி, 30-8-2017, இரவு 11.10

Song 718

சுடுபட்ட பூனை

என்னையே ஏமாற்ற
நான்செய்யும் வாதமா
இல்லைநீ சொல்லித்
தருகின்ற பாடமா

ஒருபக்கம் பாரம்
மனதையே அழுத்துது
மறுபுறம் சிந்தை
சரிஎன ஏற்குது

இடையில் என்னாவி
உன்னிடம் வருகுது
இதற்குகொரு பதிலையே
உன்னிடம் கேட்குது

என்பக்க நியாயம்
எதுவாக இருந்தாலும்
உன்பக்கத் தீர்ப்பு
தெளிவாக இருக்கணும்

இழுபறியாய் இங்கு
என்னாவி துடிக்காமல்
உன்சித்தம் தெளிவாக
எனக்குமே புரியணும்

உன்னிந்த விளையாட்டு
புரியாத போதும்
நீகொண்ட காரணம்
சரியாக இருக்கணும்

ஆயினும் இப்போது
பிடிக்காத போதும்
எதிர்த்தாலும் நடக்காது
எனக்கது தெரியும்

இதுபோன்ற விளையாட்டு
புதிதான தில்லையே
எதிர்த்துநான் போராடி
வென்றதும் இல்லையே

முன்கண்ட அனுபவம்
பசுமையாய் இருக்கையில்
மீண்டும் ஒருமுறை
தேவையும் இல்லையே

சுடுபட்ட பூனைபோல்
சும்மாக இருப்பது
ஒன்றே எனக்கு
மிகமிக நல்லது

சூடாற்றி நீயாக
தருகின்ற வரையில்
வாதம் செய்யாமல்
இருப்தே சிறந்தது

மத்திகிரி, 30-8-2017, இரவு 10.30

Song 717

இலேசாக ஆச்சு

சொல்லாமல் சொல்கிறேன்
சொல்லிடத் துடிக்கிறேன்
சோர்வுற்று உந்தன்
திருவடிப் பணிகிறேன்

அருகினில் அழைத்து
ஆறுதல் படுத்து
அன்புடன் சேர்த்து
சோர்வினை அகற்று

அழத்தெரியாமல் நான்
அழுகிறேன் உள்ளே
அதுபுரியாமல் நான்
தவிக்கிறேன் வெளியே

சொல்லிட ஆயிரம்
காரணம் இருந்தும்
சொல்லவும் தெரியாது
மனதிலே புலம்புறேன்

உலகில் ஆயிரம்
அவலங்கள் தோன்றுது
உரைப்பதால் பாரம்
அதிகமாய்ப் போகுது

பிறரிடம் சொல்லிப்
பயனில்லை அறிந்தேன்
தனித்தே சுமக்க
இயலாது உணர்ந்தேன்

சிலத்துளி மகிழ்வுக்கு
எத்தனைப் பாடு
நிலையில்லா சுகத்தால்
எத்தனைக் கேடு

தெங்கில் கைவிட்ட
குரங்காய் மாறி
நாங்கள் படுகிற
அவலத்தைப் பாரு

கைக்கு எட்டியும்
வாய்க்கு எட்டாமல்
அதற்கான காரணம்
சரியாகத் தெரியாமல்

எவர்எவர் மீதோ
கோபமும் கொண்டு
ஆத்திரப் படுகிறோம்
வெறுப்புமே கொண்டு

இவற்றை எல்லாம்
பார்க்கும் போது
ஒருவித சோகம்
மனத்தைக் கவ்வுது

அதையே உன்னிடம்
சொல்லிட வந்தேன்
ஆயினும் மொழியின்றி
கலங்கியே நின்றேன்

இப்போ என்மனப்
பாரமும் போச்சு
உன்னிடம் அழுதபின்
இலேசாக ஆச்சு

மத்திகிரி 25-8-2017 இரவு 11.10

Song 716

எப்படிச் சொல்ல

அதுஒரு அனுபவம்
அதை எப்படிச்சொல்ல
எததைக்கொண்டு அதனை
விவரித்துச் சொல்ல

எங்கிருந்தோ அது
எப்படியோ வரும்
எண்ணம் வார்த்தைக்கு
புறம்பாக நிற்கும்

நாமாகத் தேடினும்
தானே வராது
நாமதை மறுத்தும்
நம்மை விடாது

ஒருவிதப் பரவசம்
உள்ளத்தை ஆளும்
உணர்வுடன் உணர்ச்சியும்
மரத்துமே போகும்

எதுவரை இருக்கும்
எவர்க்கும் தெரியாது
எதனால் வருகுது
எவர்க்கும் புரியாது

வந்தபின் ஆராய்ந்தால்
விளக்கம் கிடைக்காது
சென்றபின் விரும்பினும்
தன்போல் வராது

பிறருக்குச் சொல்லிட
முயற்சிக்கக் கூடாது
முயன்றாலும் வார்த்தையால்
விளக்கிட முடியாது

முயன்றாலும் பிரறதை
புரிந்திட இயலாது
புரிந்தாலும் அவர்தேட
அதுபோல் கிடைக்காது

அதுஎன்ன பசியா
ஒருபோல் இருக்க
அதுஎன்ன தாகமா
பொதுவாய் இருக்க

இதற்கும் மேலும்
விளக்கம் கொடுக்க
எனக்கும் முடியலை
அதனால் மன்னிக்க

மத்திகிரி, 24-8-2017, மதியம் 2.50