Monthly Archives: September 2017

Tamil Song 393

வேடிக்கைப் பொருளல்ல

வேண்டும் போது கொண்டாடி
வேண்டாம் என்றால் பந்தாடி
வேடிக்கையாக வாழ்ந்தாலே
வினையாய்ப் போகும் வாழ்க்கையுமே

நமக்கென பிறரும் பிறக்கவில்லை
நாம் பந்தாட வாழவில்லை
அதையும் அறிந்து வாழணுமே
அடுத்தவர் வலியைப் புரியணுமே

வேடிக்கை காட்டப் பிறக்கவில்லை
வேடிக்கை பொருளாய் மாறவில்லை
வேடிக்கை ஆக்கிப் பார்க்காதே
வேதனை தந்து மகிழாதே

ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவந்தான்
உலகில் வாழப் பிறந்தவன்தான்
உணர்ந்து அவனுடன் இணைந்துகொண்டு
உலகில் அதனைக் கொண்டாடு

குருகுலம், 18-10-2017, இரவு, 11.10

Song 747

அதனால் பாடுவேன்

பாடினால் பரவசம்
பாடுவேன் அவசியம்
பதம்தந்து மீட்டாய்
அதுவன்றோ அதிசயம்

பாடப் பாட
பக்தியும் பெருகுது
பக்தியும் பெருகிட
பாடலும் வருகுது

பாடலின் பொருளானாய்
பாடவரம் தந்தாய்
பாடியே தொழும்போது
மகிழ்ந்துமே வருகின்றாய்

பாட்டென்னும் பாமாலை
பலவிதம் புனைந்துனை
பாடியே பரவுதல்
பக்திக்கு அழகன்றோ

பலவிதப் பொருள்கொண்டு
பலவிதம் தொழுதாலும்
பாடல் ஒன்றுக்கு
அவையும் இணையாமோ

பலர்கூடி வேண்டினும்
பலசொல்லிப் போற்றினும்
பாடியே துதிக்காமல்
பக்திக்கு நிறைவுண்டோ

பக்தியை விளக்கிட
உரைபல சமைத்தாலும்
பாடலின் எளிமை
அவற்றுக்கும் வருமோ

பாட்டென்னும் மொழியோடு
பக்தியின் துணையோடு
பக்தரின் சபையோடு
பாடஉன் அருளுண்டு

குருகுலம், 25-9-2017, காலை. 6.00

Tamil Song 392

துரத்தாமல் ஓடுறோம்

ஒடுகின்றோமா நாம்
ஒருவரும் துரத்தாமல்
ஒளிகின்றோமா நாம்
ஒருவரும் தேடாமல்
பாடுகிறோமா நாம்
ஒருவரும் கேட்காமல்
தேடுகின்றோமா நாம்
ஒன்றுமே தொலைக்காமல்

அவசர கதியிலே
ஓடுது உலகு
அதிலே பிறருக்கு
நேரமும் கிடையாது
தனக்கே நேரம்
இல்லாத போது
அடுத்தவர்க் கெல்லாம்
இடமே கிடையாது

வசதிகள் ஆயிரம்
வந்த பின்னாலே
வாழ்வினைத் தொலைத்து
ஓடுறோம் அவைபின்னே
ஓடித் தேடிய
வசதிகள் கிடைத்தும்
வாழத்தான் காணோம்
அவைகளினாலே

நாள்தோறும் புதிய
வரவுகள் வந்தன
நேற்றுனாம் பெற்றவை
பழசாகிப் போயின
இன்றைய தேவைக்கே
உதவாது போனபின்
நாளைய குப்பையாய்
நிச்சயம் மாறின

நாளைய தேவைக்கு
இன்றுநாம் தேடுறோம்
நேற்றுநாம் பெற்றதை
துக்கியே போடுறோம்
அனுதினம் இதுஒரு
தொடராகிப் போனபின்
ஓடத்தான் செய்கிறோம்
ஒருவரும் துரத்தாமல்

குருகுலம், 15-10-2017, இரவு 11.50

Song 746

பணிவது எதற்கு

அறியாமல் இருந்தாலும்
அறிந்துனைத் தொழுதாலும்
அனைத்து உயிர்களும்
உனக்கே சொந்தம்

அறியாமல் இருந்தேன்
அறிந்துமே கொண்டேன்
அதனால் ஐயனே
அனுதினம் தொழுகிறேன்

அறியமனம் தந்தாய்
அறிந்திடும்வரம் தந்தாய்
அதனால் உன்னைப்
புரிந்துமே பணிகிறேன்

அறிய விழைவோருக்கு
அருகினில் இருக்கிறாய்
அழைத்தால் குரல்கேட்டு
ஓடியே வருகிறாய்

அறிய மனமின்றி
அறிந்திடும் திறனின்றி
அலைந்திடும் மனிதரை
பொறுத்துமே அருள்கின்றாய்

அறிந்தாலும் அதன்படி
வாழ இயலோர்க்கு*
(*இயலாதவர்களுக்கு)
அதனினும் அதிகம்
அருளை அளிக்கின்றாய்

அறிந்தும் அறியாத
அறிவிலி எனக்கோ
உன்னையே தந்து
ஐயனே மகிழ்கின்றாய்

அறிவேன் அறியேன்
அதற்காகக் கலங்கேன்
அடிமையை மீட்டாய்
அதைமட்டும் அறிந்தேன்

அதுபோதும் எனக்கு
அறிந்ததும் எதற்கு
அனுதினம் உன்னடி
பணிவது அதற்கு

குருகுலம், 25-9-2017 காலை 5.15

Tamil Song 391

பொறுப்பு

பொறுப்பென வந்ததை
பொறுப்புடன் ஏற்கணும்
திறமையாய் அதையும்
செய்து முடிக்கணும்
அதற்கு நிறைய
பொறுமையும் வேண்டும்
இல்லாது போனால்
விலகியே இருக்கணும்

விலகுவதால் மட்டும்
பொறுப்புமே போகாது
விரும்பாது போனாலும்
விடுதலை கிடையாது
பொறுப்பன்றி உலகில்
பிறந்தவர் இல்லை
பொறுப்பற்று வாழ
முடிவதும் இல்லை

துறந்தபின் துறவிக்கும்
பொறுப்புகள் உண்டு
தொடர்ந்து பாரம்
சுமப்பதும் உண்டு
துறவும் ஒருவித
பொறுப்பான பின்பு
பொறுப்பைத் துறந்த
துறவி எங்குண்டு

படைப்பில் உள்ள
அனைத்து உயிரும்
அவற்றின் நிலைக்கு
ஏற்ற விதத்தில்
பலவிதப் பொறுப்பை
சுமந்தே வாழுது
அதைப்பற்றி நினைவு
அறவே இன்றி

ஆறறி வுள்ள
மனிதன் மட்டும்
அதுபற்றி பலவித
ஆய்வுகள் செய்து

ஆயிரம் கருத்துகள்
அனுதினம் கூறி
வீணே நேரத்தை
விரையம் ஆக்குறான்

பிறந்தது முதல்
போகின்ற வரை
இரண்டற வாழ்வில்
கலந்திட்ட ஒன்று
எவ்விதம் முயன்றும்
நீங்கா போது
இந்த பாடலும்
வேண்டா ஒன்று

குருகுலம், 13-10-2017, இரவு 11.50

Song 745

உனக்குள்ள கடமை

கூப்பிட்டா போதும் வந்திட வேண்டும்
கூப்பிட்டு என்னைக் கேட்டிட வேண்டும்
எப்படி இருக்கிறாய் என்றுமே கேட்டு
என்னை அழைத்துநீ பேசிட வேண்டும்

இதைவிட உனக்கு வேறென்ன வேலை
என்போல் உனக்கு ஏதுண்டு கவலை
படைத்து உலகில் வைத்த பின்னே
பக்தனைப் புரப்பதே தலையாய வேலை

நெருக்கடி ஆயிரம் கொண்டுமே வாழ்வதால்
நினைத்திட எனக்கு நேரமே இல்லை
நேரமும் ஒதுக்கி உன்னிடம் வந்தும்
நின்று பேசிடும் நிலையிலே இல்லை

உடலோடு போராடி ஒருப்பக்கம் சோர
உலகோடு போராடி மறுப்பக்கம் சாய
இடையில் மனதோடு போராடி வீழ
எங்கிருந்து உன்னை நினைந்து கூப்பிட?

ஒருபக்கம் எனக்குள்ளே ஆயிரம் ஓலம்
மறுபக்கம் பலவித வெளியான தர்க்கம்
இவற்றிடை போராடி எத்தனை முயன்றும்
உன்னைக் கூப்பிட நேரமே காணோம்

இதையெல்லாம்நீ அறிந்த பின்னே
நீதானே எனைத்தேடி வரவேண்டும்
இருக்கின்ற நிலையை சரியாக அறிந்து
என்னோடு அமர்ந்து நீபேச வேண்டும்

மத்திகிரி, 20-9-2017, இரவு, 11.10

Tamil Song 390

கோலை எடுக்கணும்

வாழ்வைத் தொலைத்து
வாழவும் மறுத்து
வாழ்வதும் வாழ்வா
மனதினுள் நிறுத்து

ஒருமுறை கிடைத்த
உலகின் வாழ்வை
உணர மறுத்தால்
மடமை ஆகும்

பிஞ்சிலே பழுத்து
வெம்பியே போனால்
எஞ்சிய வாழ்வு
நரகம் ஆகும்

உணவும் ஆகாது
விதைக்கும் உதவாது
குப்பைக்குப் போவதே
அதன் விதியாகும்

தன்வாழ்வை கெடுத்து
பிறர்வாழ்வைக் குலைத்து
தறுதலை ஆனதால்
பயனனென்ன கண்டார்

பெற்றவர் பாரம்
புரிவதும் இல்லை
பிறர்படும் துயரம்
உணர்வதும் இல்லை

இளமைத் துடிப்பில்
எதையேனும் செய்து
இழப்பது வாழ்வென
புரிவதும் இல்லை

சொல்லியும் திருந்தாது
தொடர்ந்து செய்தால்
திருத்திட நாம்தான்
கோலை எடுக்கணும்

குருகுலம், 13-10-2017, காலை. 6.45

Song 744

இதுஎன் குணம்

இரக்கத்தை அறியேன்
இங்கிதம் அறியேன்
இன்சொல் ஒன்று
பேசிட அறியேன்

எதற் கெடுத்தாலும்
வாதம் செய்வேன்
எடுத்துச் சொன்னாலும்
கேட்க மறுப்பேன்

பணிவு அறியேன்
பண்பும் அறியேன்
பாசம் நேசம்
கொண்டிட அறியேன்

தானென்னும் எண்ணம்
தலைக்கு ஏற
தர்க்கங்கள் செய்து
வெல்ல முயல்வேன்

இதுபோல் எனது
குணத்தைச் சொல்ல
எண்களும் போதாது
எண்ணியே காட்ட

ஆனாலும் என்மீது
நீகொண்ட பரிவால்
அனைத்தும் அறிந்தும்
ஆட்கொண்டு உய்த்தாய்

அதைமட்டும் நாள்தோறும்
அடிமை எண்ணி
உளமாற உனைப்போற்றி
உன்னடிப் பணிகிறேன்

மத்திகிரி, 20-9-2017, மாலை, 5.30

Tamil Song 389

விஜியின் காதல்

காதல் செய்பவன்
கவிதை எழுதினால்
கேட்பவர் காதில்
இரத்தம்தான் வரும்

காதல் தோல்வியில்
கண்ணீர் விட்டால்
காண்பவருக்கு
சிருப்புதான் வரும்

காதலில் எழுதும்
கவிதைகள் எல்லாம்
போதையில் உளறும்
வார்த்தைகள் ஆகும்

காதல் தோல்வியில்
விடுகின்ற கண்ணீர்’
அடுத்த காதல்
வருகின்ற வரைக்கும்

காதல் என்பதும்
திருமணம் வரைதான்
அதன்பின் வருவது
கண்ணீர் மட்டும்தான்

இளமையில் தோன்றும்
காதலுக்காக
முதுமை மட்டும்
கண்ணீர் விடணும்

இதனை அறிந்தும்
ஏற்க மறுத்து
காதல் செய்வது
மடமை ஆகும்

மடமை என்பதை
அறிந்த பின்னும்
காதல் செய்வது
வேடிக்கை ஆகும்

வேடிக்கை காட்ட
காதல் செய்தால்
வேடிக்கை ஆக
வாழ்க்கையும் மாறும்

வேடிக்கை காட்ட
விஜய குமாரும்
ஆயத்தம் ஆனான்
வந்துமே பாரும்

குருகுலம் 11-10-2017, காலை 10.10

Song 743

அறிந்து கொண்டேன்

கொண்டுமுன் செல்கிறாய்
கும்பிட்டுபின் வருகிறேன்
குருவே இதுவன்றி
செய்திட ஏதுமில்லை

குறைகளை எண்ணவில்லை
குற்றம்நீ காணவில்லை
கூறும்படி ஒன்றுமில்லை
கூப்பிட்டதும் ஓடிவந்தேன்

அதன்பின் நடந்ததெல்லாம்
அத்தனே நீயறிவாய்
எத்தனை செய்துமென்ன
என்னிடத்தில் பதிலுமில்லை

பின்னிட்டுப் பார்த்ததுண்டு
பேதலித்து நின்றதுண்டு
பித்தன்போல் உன்னைஏசி
நித்தம்நித்தம் வைததுண்டு

அத்தனையும் கேட்டுக்கொணடாய்
அமைதியாய் பொறுத்துக்கொண்டாய்
அமைதல் அடையும்மட்டும்
ஆறுதல் தந்துநின்றாய்

இத்தனை செயுதபின்னும்
எனக்குள்ள தயக்கமதை
எப்படிச் சொல்லிடுவேன்
என்னிடத்தில் வார்த்தையில்லை

போதுமினி சென்றுவிடு
பேதைஎன்னை விட்டுவிட்டு
பேசியே பயனுமில்லை
போதுமினி ஆளைவிடு

தனியே விடமறுத்து
தட்டினாலும் கைபிடித்து
உன்னிடத்தில் வந்தபின்னே
ஒருபோதும்கை விடமறுத்தாய்

உன்சொந்தம் ஆனபின்னே
என்னுரிமை ஏதுமில்லை
என்றுமே எடுத்துச்சொல்லி
தாங்கியே பிடித்துச்சென்றாய்

ஆதலால் பின்தொடர்ந்தேன்
அழைப்பை அறிந்துகொண்டேன்
அடிக்கடி சோர்ந்த போதும்
அழைப்பையும் ஏற்றுக்கொண்டேன்

மத்திகிரி, 19-9-2017, மாலை 5.30