Monthly Archives: October 2017

Song 778

ஆறுதல் தேவையில்லை

தேவையா எனக்கு
உன்தேறுதல் எதற்கு
தெரிந்துமே செய்தபின்
ஆறுதல் எதற்கு

கொட்டும் தூதனை
கூடவே வைக்கிறாய்
கும்பிட்டுக் வேண்டினும்
நீக்கிட மறுக்கிறாய்

ஏனிதைச் செய்தாய்
என்றுமே கேட்டும்
எவ்வித பதிலும்
தரவும் மறுக்கிறாய்

முயன்று பார்க்கிறேன்
முள்ளினை நீக்க
இருக்கும் இடம்தான்
கண்ணுக்குத் தெரியலே

நான்படும் வேதனை
நீயுமே பார்த்தும்
இரக்கம் மட்டும்
இன்னுமே வரலே

என்னவோ செய்துகொள்
இனிஉன் பாடு
இத்துடன் வாழ்வது
எனக்குத்தான் கேடு

அதனை அறிந்தும்
வைத்திடும் போது
ஆறுதல் தேடிட
அவசியம் ஏது

குருகுலம், 18-10-2017, இரவு 11.40

Song 777

அருளினைப் பெறுவாய்

அருளொன்று இருந்தாலே போதும்
அதனினும் உலகிலே வேறென்னவேண்டும்
தெளிவொன்று இருந்தாலே போதும்
தெய்வத்தின் தாளினைத் தேடிடத் தோன்றும்

குழப்பங்கள் கலக்கங்கள் எல்லாம்
கும்பிட்டால் ஓடியே போகும்
குற்றங்-குறைகள் எல்லாம்
குருவினை அண்டிட விலகும்

உருவாக்கி உலகினில் வந்தும்
உணராமல் இருப்பது பாவம்
உய்ந்திடும் வழியவன் தந்தும்
உய்வின்றி வாழ்வதும் சோகம்

சஞ்சலம் நீங்கிட வேண்டின்
சன்னதி தேடியே போவாய்
சங்கடம் போக்கிட வேண்டின்
சரண்எனத் திருவடி அடைவாய்

வாழ்ந்திடும் போதே நீஅறிவாய்
வீண் வழிகளை விட்டு நீவருவாய்
போனபின் கிடைக்காத் ஒன்றை
போகும்முன் பெற்றிட முயல்வாய்

அதை வேண்டி அவனிடம் வந்து
ஐயனே உய்விப்பாய் என்று
உளமாற அவனையே பணிந்து
உய்ந்திடும் அருளினைப் பெறுவாய்

குருகுலம், 17-10-2017, காலை 10.30

Song 776

ஒரு குறை இருக்கு

ஏதோ இதுவரை வாழ்ந்துவிட்டேன்
எல்லாம் உன்னால் அடைந்துவிட்டேன்
எஞ்சிய வாழ்வை உன்னில் வாழ்ந்து
ஏகும் வழியை அறிந்து கொண்டேன்

என்ன குறையை நீ வைத்தாய்
எதனைக் கேட்டு நீ மறுத்தாய்
எனக்கென உனை தந்த பின்னே
எல்லாம் எனதாய் மாற்றிவிட்டாய்

எனக்குப் பிடித்த வாழ்வையுமே
எனக்கெனத் தனியாய் அமைத்துத் தந்தாய்
என்னுடன் நீயும் வாழ்ந்திருந்தும்
எவ்விதத் தொல்லையும் தர மறுத்தாய்

என்ன எப்போ தேவையென
என்னை கேட்க நீ மறுத்தாய்
எதையும் நானும் கேட்குமுன்னே
எல்லாம் எனக்கு அளித்து விட்டாய்

இன்னும் ஏதும் குறை இருக்கா
என்று மட்டும் கேட்டுக் கொண்டாய்
“இருக்கு” என்று சொல்வேனோவென
என்றும நீயும் பயந்திருந்தாய்

“என்னதைச் செய்தது என்ன பயன்
எனது விருப்பம் ஒன்றிருக்கு”
என்று நானும் முடிக்கும் முன்னே
எனது வாயை மூடிவிட்டாய்

“எனக்குத் தெரியும் என்னவென்று
எப்போ தரணும் அதையும் என்று”
ஏற்ற பதிலை தந்துவிட்டு
எனது பேச்சை மாற்றிவிட்டாய்

“சொல்லும் முன்னே வாயடைத்தால்
சொல்லுவது எப்படி” என கேட்க
“சொல்லியா செய்தேன் இதுவரையில்”
என்று நீயும் பதிலளித்தாய்

அதன்பின் நானும் என்ன செய்ய
அத்தனே உன்சித்தம் அதனச் செய்ய
ஒன்று மட்டுமே நானறிவேன்
உன் விருப்பப் படியே வாழ்ந்திருப்பேன்

குருகுலம், 16-10-2017, மாலை 5.15

Song 775

யாரும் சொல்ல வேண்டாம்

பிறர்வந்து கூறிடத் தேவையே இல்லை
புதிதாகக் கூறிட ஏதுமே இல்லை
என்மன ஓட்டத்தை அறிந்த எனக்கு
இனியொன்று கூறிடத் தேவையே இல்லை

சஞ்சலம் எனக்கு சொந்தமும் ஆச்சு
சந்தேகப் படுவது என் பழக்கமாச்சு
நிலையில்லா புத்தி நிலையாகிப் போச்சு
நொடியிலே மாறுதல் வழக்கமும் ஆச்சு

இளகியமனசு சற்று இருந்த போதும்
எளிதில் இரங்கி உதவிட மாட்டேன்
உதவிட உள்ளமும் விரும்பிய போதும்
உதவிட மறுக்க காரணம் தேடுவேன்

கருமித்த் தனத்தை காட்ட மறுத்து
எளிமை என்ற போர்வைக்குள் மறைவேன்
காசு-பணம் என்னும் போது
கருத்தாய் கணக்கு அதிகம் பார்ப்பேன்

மெத்த படித்த மேதை என்று
என்னை நானே எண்ணிக் கொண்டு
உளறி கொட்டி, கிளறி மூடி
உருப்படாமல் எழுதி வைப்பேன்

போகும் நேரம் நெருங்கும் போது
புத்தி வந்து பயனும் என்ன
ஏதோ இரங்கி நீயும் மீட்டாய்
அதனை புரிந்து வாழ்ந்திருக்கேன்

குருகுலம், 16-10-2017, காலை 11.10

Bhakti Song 781

இது போதும்
அருளினைத் தருகின்றாய்
அதுஒன்றே போதும்
அன்றாடம் பணிகின்ற
வரமொன்றே வேண்டும்
உனக்கென வாழ்கின்ற
உயர்ஒன்றே போதும்
உரிமையால் உன்னோடு
உறவாட வேண்டும்
வருகின்ற போது
வரவேற்க வேண்டும்
வந்தபின் உன்னடி
தொழுதிட வேண்டும்
சொல்கின்ற போது
கேட்டிட வேண்டும்
சிந்தையில் அதைவைத்து
காத்திட வேண்டும்
அன்றாடம் உன்னோடு
வாழ்கின்ற போதும்
அதையெண்ணி மனதாலே
கொண்டாட வேண்டும்
இந்நாளை எதற்காக
நீதந்த போதும்
அதிலும் உன்சித்தம்
நான்காண வேண்டும்
இதையெல்லாம் துதியாக
நானுமே பாடி
எந்நாளும் உன்னருள்
நாடவே வேண்டும்
27-10-2017, பெங்களுரு, காலை 7.15

Song 774

உள்ளான உணர்வோடு

எனக்குள்ளே ஆழ்ந்து
என்னையும் மறந்து
என்சிந்தை தன்னையே
உனக்குள் வைத்து

நீபேச நான்கேட்க
மனச்செவி திறந்து
நீபெசும் மொழியினை
நானுமே புரிந்து

உள்ளான உணர்வோடு
உவகைப் பெருக்காலே
உன்வேத வாக்காலே
நீசொல்லக் கேட்டு

உணர்ந்திடும் ஒன்றை
கற்பனை என்று
எப்படி ஏற்றக
என்மனம் மறுக்குது

மனதுக்கும் மூளைக்கும்
இடமுமே உண்டு
உள்ளமும் இதனை
உணர்ந்திடும் நன்று

ஆயினும் அவற்றுக்கு
எல்லையும் உண்டு
அவற்றுக்கு அப்பாலே
உறவாடிக் கொண்டு

ஆவியில் அதையும்
புரிந்து கொண்டு
ஆனந்தம் காண்பது
பக்திக்கு உண்டு

குருகுலம், 15-10-2017, காலை 11.10

Song 773

கற்பனையா

எழுதுவ தெல்லாம் அனுபவம் தானா
என்வாழ்வில் இவை நடந்தவை தானா
இதயத்தில் வந்த கற்பனைகளையே
எழுத்திலே வடித்து தண்துவிட்டேனா

சிறு பொறியாக வந்த எண்ணத்தை
சிறகுகள் கட்டி பறக்க விட்டேனா
சிந்தையில் தோன்றிய கற்பனைகளுக்கு
வண்ணங்கள் பூசி உலவ விட்டேனா

அன்பு, அடக்க, பண்பு, பணிவு
ஆத்திரம், கோபம், எரிச்சல், வெறுப்பு
இன்னும் பலவித குணங்கள் எல்லாம்
உண்மையில் உன்னிடம் காட்டிவிட்டேனா

இவைகளை எல்லாம் கற்பனை செய்து
எனக்குள்ளாக நானே பேசி
உன்னுடன் பேசுறேன் என்றுமே எண்ணி
உண்மையில் என்னையே ஏய்த்துக் கொனண்டேனா

உறுதியாய் எனக்குத் தெரியவும் இல்லை
உண்மை எதுவெனப் புரியவும் இல்லை
பிறருக்குக் கூற ஏதுமே இல்லை
பிறர்அதை நம்ப்பிடத் தேவையும் இல்லை

எனக்கும் உனக்கும் உள்ள உறவை
எவருக்கும் சொல்லிடத் தேவையும் இல்லை
எழுத்தில் எழுதிக் காட்டுவதெல்லாம்
என்றும் முழுதாய் இருப்பதும் இல்லை

குருகுலம், 14-10-2017, 11.30

Song 772

என் அயலான்

அடிபட்டுக் கிடந்தேன்
அரைகுறை உயிருடன்
அவ்வழி சென்ற
பலரும் பார்த்தனர்
இதயம் இருந்தும்
இரக்கம் இருந்து
ஏதோ காரணம்
சொல்லியே சென்றனர்

இருந்தேனா இறந்தேனா
எனவும் பார்க்கலை
அடிபட்டு ஏனங்கு
கிடந்தேன் கேட்கலை
அவரால் உதவி
செய்யவும் முடியலை
பிறருக்குத் தகவல்
கொடுக்கவும் வழியிலை

விரும்பா தெய்வம்நீ
விரும்பியே வந்தாய்
அயலாந்தான் நீ
ஆயினும் நின்றாய்
உதவிட எவரும்
சொல்லாத போதும்
பணயமாய் உனைவைத்து
பணிவிடை செய்தாய்

விரும்பாத வேண்டாத
உன்னையும் புரிந்தேன்
என்தேவை அறிந்து
உதவிய போது
உன்மேன்மை உணர்ந்து
உன்னடிப் பணிந்தேன்
வெறுத்த உன்மூலம்
உய்வும் அடைந்தேன்

தேவை உள்ளவர்
அயலார் ஆயினும்
தேவையை உணர்பவர்
தெய்வத்தைக் காட்டிட
தன்னலம் மறுத்து
பணிசெய்யும் போது
மனித நேயம்
மலர்ந்திடச் செய்கிறார்

குருகுலம், 12-(13)-10-2017, இரவு 12.10

Song 771

துதித்து வாழ்வேன்

உன்னைத் துதித்திட
உருகுது நெஞ்சம்
உனக்காக வாழத்
துடிக்குது கொஞ்சம்
அதற்கென அடைந்தேன்
உன்னடித் தஞ்சம்
அருளுக்கு இனியேது
அடிமைக்குப் பஞ்சம்

நினைவெலாம் நிறைந்து
நீயெனை ஆள
நெஞ்சமும் நெகிழ்ந்து
நானுனைப் பாட
அறிவோடு மனமும்
இணைந்து துதிக்க
அதையெண்ணி உயிரும்
மகிழ்ந்து களிக்க

படைத்தது இதற்கு
என உணர்ந்தேனே
படைத்ததின் பயனை
நான் அடைந்தேனே
துதிக்கும் துதியில்
நீ மகிழ்வாயே
துதித்திட மேலும்
அருள் தருவாயே

இதனினும் இன்பம்
எதனில் இருக்கும்
எவ்விதம் தேடினும்
வேறெங்கு கிடைக்கும்
பலமுறை சுவைத்தும்
தெவிட்டாத இன்பம்
இதுபோல் உலகில்
வேறெங்கு இருக்கும்

உன்னை மட்டும்
சிந்தையில் வைத்து
உன்புகழ் பாடி
நாளும் துதித்து
உன்னடி போற்றி
வந்து பணிந்து
உலகினில் இருப்பேன்
நானுமே வாழ்ந்து

குருகுலம், 10-10-2017, இரவு 11.30

Song 770

பலத் தேவைகள்

எனக்கொருத் தேவை
உள்ளத்தில் இருக்கு
உனக்கதை சொல்ல
தேவையும் எதற்கு
தேவை எதுவெனத்
தெரிகின்ற போதும்
தேவையான வார்த்தை
சொல்லிடக் காணோம்

அடிக்கடி உன்னிடம்
வந்திட வேண்டும்
அளவளாவி மகிழ்ந்து
பேசிட வேண்டும்
அன்றாட வாழ்வு
வழக்கம்போல் இருந்தும்
உன்னோடு உறவு
புதிதாக வேண்டும்

நேற்றுபோல் இன்றைய
நாளும் போனது
நாளைய தினம்பற்றி
நிச்சயம் தெரியாது
ஆகவே அனுதினம்
வாழ்ந்திடும் வாழ்வு
அதுமட்டும் உனக்குள்ளே
நிறைவாக வேண்டும்

சிந்திக்க பலவித
எண்ணங்கள் உண்டு
செய்திட பலவித
செயல்களும் உண்டு
எத்தனை நேரம்
இவற்றிலே போயினும்
உனக்கென எனக்குமே
நேரமும் வேண்டும்

வந்தபின் உலகில்
வாழ்ந்துதான் ஆகணும்
வாழ்ந்தபின் ஒருநாள்
போகத்தான் வேண்டும்
ஆயினும் இடையில்
வாழ்வது எதற்கு
அர்த்தம் அதற்கும்
தெரிந்திட வேண்டும்

இதுபோல் தேவை
இன்னமும் உண்டு
எண்ணிட எண்களும்
போதாது இங்கு
தெரிந்த உனக்கு
ஏன்சொல்ல வேண்டும்
புரிந்து நீயே
தந்திட வேண்டும்

குருகுலம், 10-10-2017, இரவு 11.10