Monthly Archives: October 2017

Song 769

ஒருநாள் வாழிணும்

ஒரு@நாள் வாழ்ந்தாலும்
உன்னோடு வாழணும்
ஒருநேரம் தொழுதாலும்
உன்னடிப் பணியனும்
உன்னருள் தன்னையும்
எண்ணியே பார்க்கணும்
உன்புகழ் தன்னையே
நானுமே உயர்த்தணும்

தினம்தோறும் திருவடி
தேடியே வருகிறேன்
தீந்தமிழ்ப் பண்கொண்டு
உன்புகழ் பாடுறேன்
உணர்வாலும் மனதாலும்
உன்னையே வாழ்த்துறேன்
உனக்காக வாழ்வதில்
மகிழ்ச்சியும் கொள்கிறேன்

அமைதியாய் உன்னடி
அமர்ந்திட வேண்டும்
ஐயன்நீ சொல்வதைக்
கேட்டிட வேண்டும்
அதன்படி வாழ
முயன்றிட வேண்டும்
அதற்கும் உன்னருளுமோ
அதிகமாய் வேண்டும்

சொல்கொண்டு உன்னை
சிலநேரம் துதிப்பேன்
செயல்மூலம் உனக்காக
பணிசெய்து கிடப்பேன்
இரண்டுமே இல்லாமல்
ஒய்வுமே எடுப்பேன்
அதிலும் உன்னருள்
இருப்பதைக் காண்பேன்

பிறரோடு என்னையும்
ஒப்பிட்டுப் பாராமல்
பிறர்காண வேண்டி
ஒருவாழ்வு வாழாமல்
எனக்கென நீதந்த
இன்றைய நாளையும்
உனக்கென நான்வாழ்ந்து
உன்சித்தம் செய்வேன்

நன்றியால் நானுனை
கொண்டாடி வாழ்ந்து
நாள்தோறும் இதுபோல
பண்பாடி மகிழ்ந்து
எதிர்காலம் எண்ணி
கலங்காமல் இருந்து
இதுபோல் வாழணும்
இசைபாடி மகிழ்ந்து

குருகுலம், 9-10-2017, காலை 11.10

Song 768

எனக்கெது நன்மை

தருவதற்கென்றே நீ இருந்திடும் போது
பெருவதற்கிங்கே தடைகளும் ஏது
தருவதை ஏற்க வந்திடும் போது
எனக்குள்ளே வீண் தயக்கமும் ஏது

தேவை எதுவெனத் தெரியாத போதும்
தேவையற்றவை கேட்கின்றபோதும்
தேவை எதுவெனத் தெரிந்த நீயும்
தேவைக்கு ஏற்ப அளிக்கின்றாய் நாளும்

பெறும்வரை ஆயிரம் கேள்விகள் கேட்கிறேன்
பெற்றதில் பலவித குறைகளும் காண்கிறேன்
நான்எதிர் பார்த்தது நடக்காத போது
அதுபற்றி முறையீடு பலவும் செய்கிறேன்

ஆயினும் நாட்களும் ஓடிய பின்னே
அதன்பின் உள்ள இரகசியம் புரிகிறேன்
அதையெண்ணி மனதிலே நாணம்கொண்டு
அறியாது சொன்ன குறைக்காக வருந்துறேன்

எதிர்கால் நிகழ்வை அறியாத நானே
எண்ணிலாக் கற்பனை செய்கிறேன் வீணே
அதன்படி நான் வாழ விரும்புவதாலே
அதை நிறைவேற்ற வேண்டுகிறேனே

எனக்கெது நன்மை என நீத்தெரிந்து
அதைமட்டும் தருகிறாய் கருணையில் நிறைந்து
அனுபவம் மூலம் நானதை அறிந்து
அதையுமே ஏற்பேன் திருவடிப் பணிந்து

குருகுலம், 8-10-2017, இரவு 11.50

Song 767

ஏன் பாடாது

நேரம் தோறும் தாங்குகிறாய்
நிமிடம் தோறும் நடத்துகிறாய்
எண்ணி எண்ணி மகிழ்கின்றேன்
என்றும் உன்னைப் பணிகின்றேன்

ஓடும் நாட்கள் ஓடட்டும்
உருண்டிடும் வாழ்வும் நகரட்டும்
அனுதினம் உன்னைப் பணிகின்ற
அருளும் எனக்குக் கிடைக்கட்டும்

வெறுமையாய் நானும் வந்தாலும்
நிறைந்துமே உன்னைப் பணிந்தாலும்
அறிந்துமே எனக்கு அருள்கின்றாய்
அன்புடன் ஏற்றுக் கொள்கின்றாய்

திருவடி தரிசனம் கண்டுவிட்டேன்
தேடிய பேறும் பெற்றுவிட்டேன்
அருளுக்குப் பாத்திரம் ஆகிவிட்டேன்
அதிகம் அதையும் அடைந்துவிட்டேன்

இத்தனை பெற்ற பின்னாலே
ஏன் என்மனம் துள்ளாது
எண்ணி எண்ணி உருகிமனம்
எனுனை நாளும் பாடாது

குருகுலம், 8-10-2017, காலை 11.50

Song 766

ஒரு விருப்பம்

இப்படி வாழ்வது ஒருவிதம் நல்லது
எப்படி நானதை உனக்குமே சொல்வது
இதுபோல் வாழ்ந்திட இதயம் ஏங்குது
ஆனால் உன்சித்தம் எதுவாக உள்ளது

சுயநலம் இதுவென நானுமே நினைப்பதா
எனக்கிது தேவை என்றுமே சொல்வதா
இதற்கென அழைத்தாய் எனநான் எண்ணவா
ஏதுநீ செய்தாலும் பணிந்துமே ஏற்பதா

விருப்பம் மட்டுமே இருந்தால் போதுமா
வேண்டுவதெல்லாம் கிடைத்திடக் கூடுமா
சரி-தவறென்று யார்சொல்லக் கூடும்
சிந்தையும் பலமுறை ஏமாற்றக் கூடும்

நட்பது நடக்கட்டும் எனயெண்ண வில்லை
நடத்துராய் அதில்யெனக் ஐயமும் இல்லை
ஆயினும் என்மன ஏக்கத்தை சொன்னேன்
அது நிரைவேற வரமுமே கேட்டேன்

கொடுத்தால் நானும் மகிழ்வுடன் ஏற்பேன்
மறுத்தால் அமைதியாய் பொறுமையும் காப்பேன்
காலம் நேரம் கனியட்டும் என்று
கலகமின்றி உன்சித்தம் அதுவென ஏற்பேன்

குருகுலம், 8-10-2017, காலை 11.30

Song 765

உயிரற்ற வாழ்வு

இறைவனும் பாவம் என்ன செய்வான்
எப்படி நமக்கும் புரிய வைப்பான்
அவரவர் தேவைக்கு ஏற்றவண்ணம்
அவனும் தந்தான் குறைவு இன்றி

பெறுபவர் எவரெனக் கேள்வி இல்லை
பெற்றது எதுவெனக் கேட்கவில்லை
பெற்றதை நாமும் பயன்படுத்தி
பெற்றது எத்தனை என்பதே கேள்வி

உடலைக் கொடுத்தான் உலகில் வாழ
உழைக்கச் சொன்னான் பிழைத்துக் கொள்ள
உடலைக் கொண்டு உழைத்த போதும்
உண்மையில் பெற்றது எதுவென அறியோம்

அறிவைக் கொடுத்தான் அறிந்துகொள்ள
அறிந்து வாழ்வை புரிந்து கொள்ள
அறிவைக் கொண்டு அறிந்த போதும்
புரிந்தது எதுவெனப் புரியக்காணோம்

உள்ளம் தந்தான் உணர்ந்து வாழ
உணர்ந்து வாழ்த்து மகிழ்ந்திருக்க
உணர்ந்து மகிழ்ந்து வாழ்ந்த போதும்
உணர்ந்த மகிழ்வை ஏனோ இழந்தோம்

உடலை, அறிவை மனத்தைக்கூட
இணைத்துத் தந்தான் உயிரின் மூலம்
இணைத்த உயிரை இவைகள் மூன்றும்
படுத்தும் பாட்டைக் கண்டு வியந்தான்

வியந்த அவனும் வருத்த முற்று
நாமும் உய்ய வழியைத் தந்தான்
ஆனால் அதிலே நடந்திடாமல்
அழித்துக் கொண்டோம் உயிரை மட்டும்

அறிவு மனது உயிரினோடு
அழித்துக் கொண்டு வாழ்ந்தபின்னே
உடலில் நாமும் வாழ்ந்த போதும்
வாழும் வாழ்வில் உயிரைக் காணோம்

குருகுலம், 6-10-2017, காலை 11.00

Song 764

குறையறிந்து கொடு

திறமைகள் தருவது
நீயென அறிந்து
திறம்பட செய்ய
பணிவுமே வேண்டும்

தந்த திறமைக்கு
கணக்கு நீகேட்க
உண்மையாய் நானதைத்
தந்திட வேண்டும்

ஒருவிதத் திறமையும்
நீயும் தராமல்
உலகில் எமைநீ
அனுப்பிட வில்லை

ஆயினும் அதையும்
புத்து வைத்தாலே
ஐயனே அதற்குநீ
பொறுப்புமே இல்லை

தந்தற் கேற்ப
திறம்பட செய்ய
அதற்கு ஏற்கப
அதிகம்நீ தருவாய்

ஒன்றுக்கும் உதவாது
புதைத்து வைத்தாலோ
உள்ளதையும் நீ
எடுத்துமே கொள்வாய்

இந்த உண்மை
அறிந்த பின்னும்
எனக்குள்ள கவலை
ஒன்றே ஒன்றுதான்

எண்குணம் அறிந்து
நீதந்திடும் போது
என்குறை அறிந்து
தந்திட வேண்டும்

இல்லை என்றால்
என்னுடன் சேர்ந்து
திறமைக்கு ஏற்ப
நீசெய வேண்டும்

குருகுலம், 4-10-2017, இரவு 11.30

Song 763

குறையாக இருக்குது

உன்னைப்போற்றி பாடாது
ஒருநாள் போவது
உண்மையில் எனக்கொரு
குறையாக இருக்குது

உனைநாடி வந்து
பணியாமல் இருப்பது
உண்மையில் எனக்குமே
வியப்பாக இருக்குது

ஒருநேரம் கூட
ஒருவிதத் தேவையை
ஒருநாளும் நானும்
விடுவதாய் இல்லை

உடலோடு மனதின்
தேவையைத் தேடி
ஓயாமல் நானும்
ஓடாமல் இல்லை

ஆயினும் ஆன்மாவை
அலட்சிய செய்து
வாழ்வது மட்டும்
சரியாக இல்லை

உடலின் தேவைகள்
மறுக்கப் பட்டாலோ
உடலொடு மனமும்
சோர்ந்துதான் போகும்

உள்ளத்தின் தேவையும்
மறுக்கப் பட்டாலோ
மனதோடு உடலும்
ஓய்ந்துமே போகும்

ஆன்மாவின் தேவை
எனவரும் போது
அதைப்பற்றி எண்ணம்
வந்திட மறுக்கும்

ஆயினும் நீயோ
அமைதியாய் வந்து
அதுபற்றி சொல்லி
புரிந்திட வைத்தாய்

அதனால் நானும்
சிலநொடி நேரம்
உன்னடி பணிந்து
தொழுதிட வந்தேன்

அதன்மூலம் நானும்
பெறுகின்ற பேற்றை
சிலவரி கொண்டு
பாடியும் வைத்தேன்

குருகுலம், 3-10-2017, இரவு 11.30

Song 762

என் குணம்

எரிச்சலும் கோபமும்
என்னிரு கண்கள்
எதிர்வாதம் செய்வதே
எனக்குள்ள குணம்
பொறுமையாய் இருப்பதாய்
நடிக்கவும் செய்வேன்
புத்தியை கத்தியை
கைக்கொள்ளத் தயங்கேன்

எளிமை வேடம்
பூண்டுமே வாழ்வேன்
எவ்விதத் தேவையை
குறைத்திட மறுப்பேன்
அமைதியாய் சிலவார்த்தை
சிலமுறை கூறுவேன்
ஆனாலும் உள்ளுக்குள்
எரிமலை ஆகுவேன்

சேவை செய்வதாய்
நானுமே கூறுவேன்
தேவை வரும்போது
நானுமே ஓடுவேன்
தனியாக் வாழ்ந்தும்
தனிமையில் வாழேன்
தனிமையைப் போக்கிட
செயல்பல செய்வேன்

உதவிகள் பலவிதம்
செய்வதாய்க் கூறுவேன்
ஊரறிய நானுமே
பறைசாற்றி கூறுவேன்
கிள்ளிக் கொடுத்ததை
அள்ளிக் கொடுத்ததாய்
கூறியே என்னையே
மெச்சியும் கொள்வேன்

இத்தனை அவகுணம்
இருந்தும் இன்னமும்
எப்படி மனிதனாய்
வாழ்கிறேன் என்பது
இதுவரை எனக்குப்
புதிராக உள்ளது
இதற்கு விடையுமோ
எவரிடம் இருக்கு?

எனநான் கேட்டு
முடிக்கும் முன்னமே
இறைவனும் கூறினான்
“உன்னிடம் என்று.”
இதுதான் என்னிலை
என்றுமே கூறினான்
இதவெல்ல வழியை
அவனுமே காட்டினான்

காட்டிய வழியிலே
ஓடிதான் பார்க்கிறேன்
கடவுளை அனுதினம்
வேண்டிதான் பார்க்கிறேன்
ஆயினும் மாற்றமோ
அறியவும் இல்லை
ஆயினும் நானும்
விடுவதாய் இல்லை

குருகுலம், 2-10-2017, காலை 11.30

Song 761

புதிரல்ல

கிருபையைத் தருகிறாய்
கேட்காத போதும்
கருணையைப் பொழிகிறாய்
புரியாத போதும்
அழைத்துமே மீட்கிறாய்
அறியாத போதும்
ஆட்கொள்ள வருகிறாய்
உடன்பட்டால் மட்டும்

இறைவன்நீ ஆனாலும்
என்விருப்பம் இல்லாமல்
உன்சித்தம் எனக்கூறி
என்மீது திணிக்காமல்
என்னைநீ கேட்காமல்
என்விருப்பம் அறியாமல்
என்வாழ்வில் ஒன்றையும்
நடப்பிக்க மறுக்கிறாய்

கேட்காமல் நீதரும்
நன்மைகள் அனைத்துமே
இறைவன் ஆனதால்
அனைவர்க்கும் அளிக்கிராய்
ஆயினும் அவற்றையும்
நானுமே அடைந்திட
என்சித்தம் இல்லாமல்
தந்திட மறுக்கிறாய்

புதிர்இது என்பதா
புரியவே இல்லை
புரியாத புதிராக
இருக்கவும் இல்லை
உன்சாயல் தன்னிலே
என்னையும் படைத்தபின்
எனக்கிதை புதிராக
நீயுமே வைக்கலை

தலைவிதி என்றுமே
தவிக்கவும் வேண்டாம்
நான்செய்த கர்மமென
சோரவும் வேண்டாம்
இறைவன் விட்டவழி
எனக்கூற வேண்டாம்
கலியுகம் எனக்கூறி
கலங்கவும் வேண்டாம்

அறிவினால் அறிந்து
ஆவியில் உணர்ந்து
உன்சித்தம் புரிந்து
உடன்பட்டு வந்து
நீதரும் போது
தாழ்மையாய் ஏற்று
உன்சித்தம் செய்வேன்
உளமாறப் பணிந்து

குருகுலம், 2-10-2017, காலை, 10.30

Song 760

எளியவழி

இதுபோன்ற உறவில்தான்
மனம்கொஞ்சம் நிறையுது
இதுபோன்று உரையாட
சிந்தையும் மகிழுது
உனைப்பற்றி அறிய
பலவழி இருந்தும்
இதுஒன்றே எளிதான
வழியாக இருக்குது

வேதத்தைப் படித்து
விரிவாக அறிந்து
ஆழமாய் ஆராய்ந்து
அதையும் விவாதித்து
பல பக்கம் எழுதி
பிறகு படித்து
விவரமாய்ச் சொல்ல
அறிவெனக் கில்லை

தனித்தே இருந்து
தவங்கள் புரிந்து
தேகத்தை ஒடுக்கி
தேவைகள் அடக்கி
உலகத்தைத் துறந்து
ஒதுங்கியே இருந்து
உன்னை அறியும்
வாய்ப்புமே இல்லை

ஓடி ஆடி
உலகிற்குச் சொல்லி
உனக்கெனப் பலவித
பணிகளும் செய்து
ஓய்வு ஒழிவின்றி
உபதேசம் செய்து
உன்னை அறிவிக்க
தெம்புமே இல்லை

அன்றாட பணிகளை
அமைதியாய்ச் செய்து
அவற்றின் இடையே
நேரமும் கண்டு
உன்னுடன் பேசி
உறவுமே கொண்டு
வாழ்வது ஒன்றே
எளிதான ஒன்று

இதுஒன்று மட்டுமே
நானுமே அறிவேன்
இதுவரை இதுபோல
வாழ்ந்துமே இருக்கேன்
எஞ்சிய வாழ்வையும்
இதுபோல வாழ்ந்து
என்றும் உன்னுடன்
மகிழ்ந்துமே இருப்பேன்

குருகுலம், 1-10-2017, காலை, 11.00