Monthly Archives: November 2017

Bhakti Song 784

அன்பு

அன்பிலே வாழ அருள் புரிவாய்—அந்த
அன்பையே நீயும் அருளிடுவாய்
தூய உள்ளத்தில் உதித்திடுமே—உனக்கு
தொண்டுகள் செய்ய விழைந்திடுமே
நல்மன சாட்சியை நாடிவரும்
நன்மையை மட்டுமே தேடிச் செய்யும்
மாய்மால மற்ற நம்பிக்கையில்
நாடியே நன்றாய் விளைந்துவிடும்
அன்புக்கு மாற்றாக ஒன்றுமில்லை
அதை அறிந்தாலே துன்பமில்லை
அன்பினை விஞ்சிய பண்புமில்லை
அதை அடைந்தவர் தாழ்ந்ததில்லை
அன்பாலே தீமையை வென்றிடலாம்
அதன்மூலம் அவனியை ஆண்டிடலாம்
அவன் சென்ற பாதையில் சென்றிடலாம்
அவன்போல் அன்பாக வாழ்ந்திடலாம்
அன்பினை விளக்க அவனி வந்தான்
அதைக்காட்ட தன்னையே தானும் தந்தான்
அதுஒன்றே கற்பனை என்று சொன்னான்
அதன்படி நம்மையும் வாழச் சொன்னான்
மத்திகிரி, 21-11-2017, மதியம் ௨,௦௦. 1.தீமோ. 1.5

Bhakti Song 783

உனக்குத் தெரியாதா

என்பெலவீனம் எதுவெனத் தெரியாதா
என்மீது இரக்கமும் நீகொள்ளக் கூடாதா?
அனுதினம் புறம்பே பலவிதம் நடித்தேன்
அதைநீயும் வெல்ல உதவக் கூடாதா
ஒருவித பாரம் உள்ளத்தில் இருக்கு
உணர்ந்தாலும் வெல்ல வழியில்லை எனக்கு
அறிந்தபின் உனக்கு தயக்கமும் எதற்கு
அதுமட்டும் இன்னும் புரியலை எனக்கு
தனித்துநான் தவிப்பதில் உனக்கென்ன இலாபம்
தாமதம் செய்வதால் உனக்குத்தான் பாரம்
போராடும் போதே நீவர வேண்டும்
புரிந்து எனக்கு உதவ வேண்டும்
சுயபெலன் சார்ந்து வாழ்ந்ததும் இல்லை
சுயமாக சுமக்க துணிந்ததும் இல்லை
நானென்னும் எண்ணம் கொண்டதும் இல்லை
நீயன்றி தனித்து வாழ்வெனக் கில்லை
உன்போல் என்னை உணர்ந்தவர் உண்டோ
உனைவிட்டால் மீட்பு வேறெங்கும் உண்டோ
உணர்ந்த உனக்கு நான்சொல்லப் போமோ
வீணான கோபம் நியாயமும் தானோ
உள்ளும் புறமும் ஒன்றாக வேண்டும்
உண்மை ஒன்றே வாழ்வாக வேண்டும்
உன்நீதி ஒன்றையே நாடிட வேண்டும்
உன்னருள் அதற்கு நிறையவே வேண்டும்
பாட்னா (பீஹார்), 19-11-2017, இரவு 8.00

Bhakti Song 782

நன்றி சொல்வேன்

நன்றியே சொல்வது அன்றி
நான்சொல்ல வேறொன்று உண்டோ
நாள்தோறும் என்னையே நடத்தி
நன்மையால் மட்டுமே நிறைத்து
குற்றம் குறைகளை மன்னித்து
குணம்மட்டுமே காண்கின்ற உனக்கு—நன்றி…
உடலோடு மனதையும் நினைந்து
உள்ளான தேவையை அறிந்து
அறிவுடன் ஆன்மாவில் நிறைந்து
அத்துடன் பக்க்தியில் நனைந்து
சொல்லோடு பொருளினைச் சேர்ந்து
சேவடி தன்னையே நினைந்து—நன்றி…
விந்தையான இந்த உலகில்
விதவித உயிர்களைப் படைத்து
அவற்றுடன் வாழ்ந்திட அழைத்து
அற்புதமாய் என்னைப் படைத்து
ஒவ்வொரு நாளுமே துதித்து
உன்புகழ் பாடியே பரவி—நன்றி…
கொல்கத்தா, 17-11-2017, காலை 7.௦௦

Song 780

பிரிவற்ற உறவு

காத்திருந்தேன் காண
கண்விழித்தே நானும்
கண்ணிமைக்க மறந்து
வழிபார்த்திருந்தேன் நாளும்
ஏற்றநேரம் வந்து
ஏற்றுமே கொண்டாய்
என்விழி நீர்வழிய
சேர்த்துமே கொண்டாய்

மெய்மறந்த நானும்
என்னையே இழந்தேன்
மேனியில் மயிர்சிலிர்க்க
கண்மூடி இருந்தேன்
திருவடி இரண்டையும்
சிந்தையில் வைத்தேன்
தெய்வமே உன்னடி
பணிந்துமே இருந்தேன்

மவுனமாய் நானுமே
மோனத்தில் ஆழ்ந்தேன்
மனம்மொழி கடந்து
உன்னுடன் இருந்தேன்
எவ்விதத் தேவையும்
இல்லாமல் இருந்தேன்
என்னையே தந்து
உன்னடி பணிந்தேன்

கண்விழித்த பின்னே
கனவென அறிந்தேன்
கண்கண்ட காட்சி
நிஜமில்லை உணர்ந்தேன்
கனவோ நிஜமோ
ஏதுவான போதும்
கருத்துனுள் வந்தபின்
பிரிவில்லை உணர்ந்தேன்

பிரிவே அறியாது
உறவாடி வாழ்ந்தபின்
பிரிவுக்கு இடமில்லை
அதையும் உணர்ந்தேன்
இனிமேல் உன்னை
எதிர்பார்க்கேனே
எப்போதும் உன்னோடு
வாழ்ந்திருப்பேனே

குருகுலம், 21-10-2017, காலை 11.30

Song 779

நெஞ்சம் கொஞ்சும்

நீவரும் போது
நிறையுது நெஞ்சம்
நீசொல்லக் கேட்க
உருகுது கொஞ்சம்
உன்னையே பாடிட
என்னையும் கெஞ்சும்
உருகியே பாடிட
என்னையும் கொஞ்சும்

நீதரும் நன்மையை
எண்ணிடச் சொல்லும்
நீடூடி வாழ்கென
வழ்த்திடச் சொல்லும்
நன்றியால் நிறைந்து
துதிக்கவும் சொல்லும்
நானுனைப் பாட
மகிழ்ச்சியில் துள்ளும்

திருவடி தரிசனம்
தேடியே ஓடும்
தினம்தோறும் அதையே
நாடி விழையும்
பெற்றபின் அதையே
சூடியும் கொள்ளும்
பிறந்ததின் பயனை
எண்ணியே மகிழும்

நேரம் காலம்
பார்ப்பதும் இல்லை
நினைவை உனைவிட்டு
நீக்குவ தில்லை
புறம்பாக ஆயிரம்
பணிசெய்த போதும்
புந்தியில் வைக்க
மறப்பதும் இல்லை

உன்னை என்னுள்ளே
எப்போதும் வைக்கும்
இதுபோன்ற நெஞ்சம்
எப்போதும் வேண்டும்
இறுதி வரையில்
உனையே எண்ணி
என்னை உன்னுள்ளே
கரைசேர வைக்கும்

குருகுலம், 20-10-2017, காலை 10.30