Bhakti Gita Chapter 11

பதினோராம் அதிகாரம்

 

கன்மமும் கிருபையும்

 

(பிறவிக் குருடனைக் கண்டபோது சீடர்கள் வினவினர்:)

 

 1. இக்கதி அடைந்தது எவர்செய்த பாவம்

இவனோ, இவன் பெற்றோர் செய்ததோ?

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. இறைவன் கிருபை இவன்மூலம் விளங்க

இந்த நிலையிலே இவனும் பிறந்தான்.

 

 1. உலகின் ஒளியாய் வந்தேன் தானே

உங்கள் மத்தியில் வாழ்ந்திடும் நானே.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. பரிவுகொண்டு குருடனை அழைத்து

மண்ணைக் குழைத்துக் கண்ணில் பூசி

 

 1. நீரில் கழுவ ஆணையும் இட்டான்

குறை நீங்கி அவனும் பார்வை அடைந்தான்.

 

 1. ஆயினும் பலரும் இதையும் மறுத்து

ஐயனைப் பாவி என்றே உரைத்தார்!

 

 1. பார்வை அடைந்த குருடனைக் கூட

பாவி என்றே அவரும் அழைத்தார்!

 

(ஆண்டவன் கூறினான்:)

 

 1. நான் வந்து உலகில் பேசாதிருந்தால்

நன்மை பலவும் செய்யாதிருந்தால்

 

 1. இதுவரை எவரும் செய்யாதிருந்த

செயல்பல உலகினில் செய்யாதிருந்தால்

 

 1. பாவம் நிச்சயம் உலகில் இராது

அவருக்கு நான்கூறும் உண்மை யீது!

 

 1. ஆயினும் உண்மை அறிந்தும், பார்த்தும்

அவரோ இறைவனை மனதிலே வெறுக்கிறார்!

 

(முனிவர் கூறினார்:)

 

 1. தீர்த்த யாத்திரை சென்ற சிலரை

வீழ்த்தினர் அன்னிய நாட்டின் வீரர்.

 

 1. அச்செய்தி கேட்டோர் ஐயனைநாடி

’யார்செய்த பாவம்’ என்றே வினவினர்?

 

(ஆண்டவன் கூறினான்:)

 

 1. இக்கதி அவரும் அடைந்ததினாலே

தீயவர் அவர் என்று தீர்ப்புச்செய்வீரோ?

 

 1. தீமையை விட்டுத் திருந்தா விட்டால்

அக்கதி நீங்களும் அடைவது நிச்சயம்.

 

 1. ஆன்மாவைக் கொல்ல வல்லமையில்லா

மானிடர் கண்டு பயம்கொள்ள வேண்டாம்.

 

 1. உடலுடன் ஆன்மாவை அழிக்கவல்ல

இறைவனைக் கண்டு என்றும் அஞ்சுங்கள்

 

(ஒரு பக்தன் கூறினான்:)

 

 1. பாவம் அனைவரும் பலப்பல செய்து

இறைவன் மகிமையை இழந்ததினாலே

 

 1. வேற்றுமை என்பதே நம்மிடை யில்லை

என்பதை நன்கு உணர்ந்திடுவீரே.

 

 1. நம்மிலே பாவம் இல்லை என்றால்

நம்மை நாமே வஞ்சிப்பவர் ஆவோம்

 

 1. பாவம் செய்பவர் எவரே ஆயினும்

அறத்தை நிச்சயம் மீறியே வாழ்கிறார்.

 

 1. இறைவனின் நீதியும் பட்சமில்லாமல்

இத்தகையோரிடம் நிச்சயம் நிகழும்.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. அறத்தை நானும் அறிந்ததினாலே

பாவத்தின்தன்மையை உணர்ந்தே உள்ளேன்.

 

 1. அறம் எதுவெனத் தெரியாதிருந்தால்

பாவம் எதுவெனப் புரியாதிருக்கும்.

 

 1. அறத்தை மட்டுமே அறிந்தவர் என்றும்

நல்லவர் இறைவன்முன் ஆவது இல்லை.

 

 1. அறிந்த அறத்தை அனுசரிப்போரே

ஆண்டவன் முன்னே நல்லோர் ஆவார்.

 

 1. அறத்தை அறிந்து நடக்கா விட்டால்

தயவின்றி நிச்சயம் அழிந்தே மாய்வார்.

 

 1. நீதியை உரைத்திடும் சாத்திரம் பலவும்

நித்தமும் இதையே நன்றாய் உரைக்கும்.

 

 1. கருமத்தின் பெலத்தை மட்டுமே நம்புவோர்

தன்செயல் பாரத்தைத் தாங்கவும்மாட்டார்.

 

 1. இதனை நன்கு உணர்ந்த மனிதர்

இறைவன்முன் வாயைப் பொத்தியே நிற்பார்.

 

 1. செயல்மூலம்தன் சுயநீதி நாட்டுவோர்

அறத்தை முழுமையாய்ப் பின்பற்ற மாட்டார்.

 

 1. சுயநீதி தன்னைப் பறைசாற்றி எங்கும்

இறைநீதிக் கென்றும் இணங்கவும் மாட்டார்.

 

 1. சுயநீதி தன்னில் பெருமை கொண்டு

பிறர்குறை காணுவோர் கதையைக் கேட்பீர்:

 

 1. இரண்டுபேர் சென்றார் ஆலயம் நோக்கி

தம்தேவைக்கென்று கடவுளை வேண்ட.

 

 1. சுயநீதி கொண்டவன் பிறனை எள்ளித்

தன்நீதி பெரிதாக்கிக் கூறத் தொடங்கினான்:

 

 1. ’அவனைப் போலவே நானும் இல்லை

அறிவாய் ஆண்டவா நீயும் நன்று!

 

 1. அநியாயம் ஏதும் செய்ததும் இல்லை

அவன்போல் மோசமாய் வாழ்வதும் இல்லை!

 

 1. பொய்யுடன், கோபம், களவு, பொறாமை,

போன்றவை என்னிடம் இல்லவே இல்லை!

 

 1. வாரம் இருமுறை விரதம் இருந்து

வழிபாடு செய்கிறேன் உன்னை நினைந்து!

 

 1. அபிஷேகம், ஆரத்தி, ஆராதனை என்று

அனைத்தும் செய்கின்றேன் உனக்கு நன்று!’

 

 1. ஆனால் மற்றவன் தூரமே நின்று

அமைதியாய்த் தன்னையே நொந்து, நொந்து

 

 1. ஏறிட்டு இறைவனைப் பார்க்கவும் அஞ்சி

“என்மீது கருணைகொள் பாவி நானென்று”

 

 1. இறைவன் கருணைக்குக் கெஞ்சியே நின்றான்

இதயம் நொந்து பணிவுடன் சென்றான்.

 

 1. இருவரில் இறைவனுக் கேற்றவனாகச்

சென்றவன், செயலுக்காய் நொந்தவன்தானே.

 

 1. இத்தகைய எளியோர் முக்தியை இழப்பது

இறைவனுக் கென்றும் சித்தமே அல்ல.

 

 1. இறைவனும் இவர்களைத் தேடியே வந்தான்

பாவம் செய்தோரை நாடியே வந்தான்

 

 1. சுயநீதி உடையோரைப் புறம்பேதள்ளி

இறைநீதி கொண்டோரை ஏற்றுக் கொண்டான்.

 

(பக்தர்கள் கூறினார்கள்:)

 

 1. அனைவரும் முக்தி அடையவென்று

ஆண்டவன் கருணையும் நாடி வந்தது.

 

 1. அந்தக் கருணை வெளிப்பட்ட போது

ஆட்கொண்டான் அவனே அன்புடன் நம்மை.

 

 1. நாம்செய்த பலகோடி நல்ல செயலால்

நாடவே முடியாப் பேரின்ப பதத்தை

 

 1. அவன்கொண்ட இரக்கத்தால் நமக்கும் அளித்து

சுயநீதி தன்னை அழித்தே ஒழித்தான்.

 

 1. அவனது கருணையினால் நீதிமானானோம்

ஆண்டவனின் செல்லப் பிள்ளைகளானோம்!

 

 1. நாதன்மேல் கொண்ட நம்பிக்கையன்றிக்

கோடி செயல்களால் கிடைக்காது முக்தி.

 

 1. ஒருவரும் மேன்மை பாராட்டா வண்ணம்

முக்தி இறைவன் தந்த வெகுமதி.

 

(இறைவன் கூறினான்:)

 

 1. எனது கிருபை உனக்குப் போதும்

பூரணமாகும் என்பெலன் உன்னில்.

 

(பக்தன் கூறினான்:)

 

 1. ஒருவனும் தன்னையே வஞ்சிக்காமல்

இறைவனின் கருணையை ஏற்றுக்கொள்வோம்.

 

 1. நம்பிக்கை ஒன்றையே நாமும் கொண்டு

நாதனின் வாக்கையே நம்பி வாழ்வோம்.

 

 1. முக்தி அளித்த இறைவனின் கருணையால்

முழுமையாய் முக்தியைப் பற்றி நிற்போம்.

 

 1. என்றும் அவனுடன் வாழ்வோம் என்று

ஆனந்தக் களிப்புடன் பாடி மகிழ்வோம்.

 

 1. நம்மிடம் உள்ள நம்பிக்கைப் படியே

நாமும் பெற்றோம் ஆன்மீக முக்தி.

 

 1. உண்மையை, கருணையை உலகம் இன்று

முக்தேசன் மூலம் நன்கு அறிந்தது.

 

 1. அவனின் முழுமுதற் தன்மையினாலே

கருணைமேல் கருணையை நாமும் பெற்றோம்.

 

 

[கன்மமும் கருணையும் என்ற

பதினோராம் அதிகாரம் இத்துடன் நிறைவுற்றது.]