Bhakti Gita Chapter 12

பன்னிரெண்டாம் அதிகாரம்

 

தெய்வத்தின் தியாகம்

 

(முக்தேசன் கூறினான்::)

 

 1. மானுடர் வாழ்வில் முக்தி பெற, அவர்

முழுமையாய் அடைய நானும் வந்தேன்.

 

(2. பக்தன் பாடினான்:)

 

 1. எங்கும் நிறைந்த பரம்பொருளே

அவன் ஏக சுதனாய் வந்த அருளே.

 

 1. பொங்கும் காதலினால் புவியின் மாந்தரையே

புரக்கத் தனை ஈந்த அருளே.

 

 1. தேவ மகிமையுடன் வாழ்ந்தாய் அந்த

மேன்மை தனை எதற்காய் ஈந்தாய்

 

 1. ஈனப்பாவியாம் என்னை மீட்கவே எண்ணம் கொண்டு

இத்தரை மீதினிற்கே வந்தாய்.

 

 1. தானே தனை அளித்த அன்பு

ஆகா! தாழ்மை உருவெடுத்த பண்பு!

 

 1. மனு உருவெடுத்து மகிமைதனை வெறுத்து

மாந்தரை மீட்க வந்த மாண்பு!

 

 1. தானே தன்னைத் தாழ்த்தி ஈந்தாய் தந்தை

தன் சித்தம் நிறைவேற.

 

 1. மாகோரமான அந்த ஈன மரணமட்டும்

கீழ்ப்படிந்த மகனாய் வாழ்ந்தாய்

 

 1. ஆதலால் தேவன் உன்னை உயர்த்தியே

அருளினானே அந்த மேன்மை.

 

 1. வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோரும்

வணங்கி உன்னை என்றும் பணிய.

 

(ஆண்டவன் கூறினான்:)

 

 1. தானே வளர்க்கும் ஆட்டினைக்காக்கத்

தன்னுயிர் ஈந்திடும் மேய்ப்பனைப் போல,

 

 1. நானிலம் வாழும் மக்களைக் காக்க

என்னையே பணயமாய் ஈந்திட வந்தேன்.

 

 1. என்தேகம் தனை ஆகுதியாக்கி

ஆகுதி தன்னை ஹோம நெய்யாக்கி

 

 1. மன்னுயிர்ப் பாவம் தன்னையே போக்கும்

தெய்வீக யாகமாய் என்னையே தந்தேன்.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. உலகோர் தம்மின் பாவம் போக்கும்

உன்னத பலியாகி இவனே வந்தான்.

 

 1. குற்றமே இல்லா அர்ச்சகனாகி

யாகத்தைச் செய்திட இறைவனே வந்தான்.

 

 1. பாவம் அனைத்திற்கும் ஒருபரிகாரமாய்

ஏற்ற காலத்தில் இத்தரை வந்தான்.

 

 1. பாவத்தின் மூலம் மரணம் பிறக்கப்

பாரில் பிறந்தோர் நிச்சயம் மரிக்கப்,

 

 1. பாவிகளானார் பாரினில் பிறந்தோர்

பாவ குணத்துடன் பிறந்ததினாலே.

 

 1. அவரவர் வழியில் அனைவரும் சென்று

ஆண்டவன் வகுத்த வழியினை இழந்து,

 

 1. தன்னிச்சைபோலே உலகோர் வாழத்

தந்தான் தன்னுயிர் பாவம் போக்க.

 

 1. பாவமே அறியாப் பரமனும் கூடப்

பாவத்தன்மை தன்னிலே ஏற்று,

 

 1. தேவனின் முன் நம் நீதி விளங்கத்

தேடியே வந்தான் மானுடனாக.

 

 1. நம்மீது வைத்த அன்பிற்காகத்

தன்னுயிர் ஈந்தான் பாவம் போக்க.

 

 1. வாக்கை மீறும் மானுடர் போல

அவனையும் ஒருவராய் ஐயகோ எண்ண!

 

 1. ஆயினும் பரிவுடன் அதனையும் பொறுத்து

ஆதரவு நமக்களித்திட வந்தான்.

 

 1. அவனின் பணிவு நீதியை அளிக்க

அனைவரும் அடைந்தோம் புண்ணிய நிலையை.

 

 1. அவனின் நீதிநம் பாவத்தைப் போக்கி

அளித்தது நமக்கு நித்திய முக்தி.

 

 1. மீறி நாம் வாழக், காயமே பட்டான்

மேன்மை அடைய நொறுக்கப்பட்டான்.

 

 1. தேவனும் ஆகி, திரவியம் ஆகி

தன்னையே தகித்தான் தெய்வ யாகத்தில்.

 

 1. தேகத்தில் நாம்செய்த தீமைகள் நீக்க

தேக உருக்கொண்டு தெய்வமே வந்தான்.

 

 1. நீதிமானைக் காக்க ஒருசிலர் மரிப்பார்

நல்லோ ருக்குப்பலர் தியாகம் செய்வர்!

 

 1. பாவியை மீட்க எவரும் வராததால்

பரமனே வந்தான் பாவியை மீட்க!

 

 1. தெய்வத்தின் அன்பைத் திரையிட்டுக்காட்டத்

தொங்கினான் தருவில் தெய்வமே அன்று!

 

 1. தன்தேகத்திலே நம் சுமை ஏற்றுப்

பாவம் நீக்கினான் தருவினில் மரித்து.

 

 1. பணையப் பொருளாய் நமக்காய் மாறிப்

பாவியை ஆக்கினான் நீதிமானாய்!

 

 1. பரம்பொருள் முன்பாகப் பரிகாரமாகிப்

பரிவுடன் நமக்காகப் பேசினான் அவனே.

 

 1. முக்தேசன் என்னும் நீதிமான் உண்டு

முக்தி அடைவோம் அவன்மூலம் இன்று.

 

(ஒரு பக்தன் பாடினான்:)

 

 1. அந்தோ உன்னிலை என்ன சொல்வேன்

ஆரறிவார் உந்தன் அவல நிலை?

 

 1. அங்கமெல்லாம் அடிகளையோ

ஆறாய்ப்பாய்ந்தது குருதி ஐயோ

 

 1. அரை நிர்வாண மேனியுடன்

அங்கமெல்லாம் பட்ட காயத்துடன்,

 

 1. அந்தோ தெய்வ மைந்தன் நீயே

அமைதியாய்த் தருவினைச் சுமந்தாயே.

 

 1. ஏனையா இத்தனை கொடுமையினை

ஏற்றுக்கொண்டாய் நீ பொறுமையுடன்?

 

 1. என்பாவ பாரத்தை நீ ஏற்க

இத்தனை வாதைகள் நீ பொறுக்க!

 

 1. காணவே கண்களும் கூசியதோ

கண்ணீரும் அருவியாய்ப் பாய்ந்ததுவோ?

 

 1. கயவனாம் என்னையும் தான் மீட்க

மனம் கலங்கி முன்னே நீ நடக்க

 

 1. மூன்றாணி காயமே தான் வருத்த

முள்முடி சிரசினில் தான் உறுத்த

 

 1. மனுகுலப் பாவமே உனை அழுத்த

மன்னவா உன்னையே நீ அளித்த!

 

 1. தந்தையும் உன்நிலை தான் வெறுக்க

தரணி யின் மாந்தருமே நகைக்க

 

 1. அன்பரும், நண்பரும் மறுதலிக்க

அவமானம் யாவையும் நீ பொறுக்க!

 

 1. முக்திக்கு ஈசனே உன்னண்டையில்

கடை மனிதன் வந்து அண்டும்வரை,

 

 1. கண்முன்னே இக்காட்சி தான் நிறுத்திக்

கருத்தாய் அவர்க்கு ஜெபித்திடுவேன்.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. நிலத்தில் வீழ்ந்து அழியாவிட்டால்

நிச்சயம் முளைக்காது வித்து தன்னில்!

 

 1. பயிராகிப் பலருக்குப் பயனையும் நல்கத்

தன்னைத்தான் தரவேண்டும் தியாகமாக.

 

 1. பரமேறி நானும் சென்றிடும் போது

பலரும் ஆவார் என்பக்தராக.

(பக்தன் கூறினான்:)

 1. அவனின் ஆகுதி மீட்பும் ஆச்சு

அவனருளால் நம் பாவமும் போச்சு.

 

 1. மீறுதல் யாவையும் மன்னித்து அருளி

மாறாக் கருணையை மழையாய்த் தந்தான்!

 

 1. பாவம் தன்னை மறைக்காமல் நாமும்

பரமன் அடிசேர்ந்து கதறிடும் பொழுது

 

 1. இறைவன் துறைசேர நம்மையும் மீட்டு

இகத்தில் வழியை அவனே தருவான்.

 

 1. அதர்மம் அனைத்தையும் அவனே நீக்கி

அறிந்தே நாம் செய்த பாவம் போக்கித்

 

 1. தூய்மையாய் உலகில் நாமும் வாழ

வழிகாட்டும் அவனே வல்லோன் நல்லோன்.

 

 1. முத்தி தரும் ஈசன் முக்தேசன் என்று

முழுமையாய் அதையும் நாமும் நம்பி,

 

 1. நமக்காய் மரித்த நாதனே மீண்டும்

நலமுடன் உயிர்த்து எழுந்தான் என்று,

 

 1. மனதிலே நம்பி, வாக்கினில் கூற

முக்தியும் வழியும் எளியதாய் மாறும்!

 

 1. விண்ணக வாழ்வும் நமதே ஆகப்

புவியின் வாழ்வும் இனியும் ஏது?

 

 1. விலங்கினைப் பலியாக்கி யாகம் செய்தால்

பாவம் நீங்காது என்பதை உணர்ந்து,

 

 1. உலகோர்பாவத்தை ஒருமித்துப் போக்க

ஒரு பலியானான் ஒருமுறை தானே.

 

 1. இறைவன் சித்தத்தைச் சிரமேற்கொண்டு

யாக பலியானான் கருணை கொண்டு!

 

 1. அவன்செய்த மாபெரும் தியாகத்தினாலே

புண்ணியம் அடைந்தோம் புதுவாழ்வு பெற்றோம்!

 

 1. ஒருமுறை மரித்து உய்வித்தான் என்னும்

உண்மை உணர்ந்த புண்ணியவான்களே,

 

 1. உலகுக்குத் தந்தான் புதுவாழ்வும், வழியும்

புகுவோம் நம்பிப் பேரின்ப வாசல்.

 

 1. தேகத்தில் அவன்செய்த உன்னத தியாகத்தால்

தெய்வத்தின் தாள்சேர வழியைத் தந்தான்.

 

 1. வாருங்கள் நாம்போய் முழுவதும் நம்பி

வணங்குவோம் அவனை அனுதினம் அண்டி.

 

 1. அதர்மம் அனைத்தையும் அழித்தே நம்மில்

அவனுக்காய் வாழ அழைத்தான் நம்மை.

 

 1. தன்மைந்தன் தன்னைத் தயங்காது தந்த

இறைவனும் எதைத்தான் மறுப்பான் இனியும்?

 

 1. பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாண்டு பாடி

பலகோடி வந்தனம் நாமும் சொல்லி,

 

 1. வாழ்த்துவோம், வணங்குவோம், வையகம் தன்னில்

வந்தே மீட்ட நம் நாதனை என்றும்.

 

தெய்வத்தின் தியாகம் என்ற பன்னிரெண்டாம் அதிகாரம்

இத்துடன் நிறைவுற்றது].