Bhakti Gita Chapter 14

பதினான்காம் அதிகாரம்

 

சரணாகதி யோகம்

 

(ஒரு ஞானி முக்தேசனிடம் கூறினான்:)

 

 1. குருவே, உந்தன் திருவடி பணிந்து

வாழும்வரைஉன் பின்னே வருவேன்.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. பறவைக்கும் ஒரு சிறு கூடு உண்டு

பதுங்க நரிக்கொரு குழியும் உண்டு,

 

 1. பாரினில் தெய்வ மைந்தனாய் வந்தும்

தலைசாய்க்க எனக்கோர் இடமேஇல்லை!

 

(முனிவர் கூறினார்:)

 

 1. இதனைக் கேட்ட செல்வந்தன் ஒருவன்

பணிந்து குருவிடம் பாங்காய்க் கேட்டான்:

 

 1. பரம வாழ்வை அடைய நானும்

செய்ய வேண்டிய செயல்கள் யாவை?

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. செல்வம் உன்னிடம் செழிப்பாய் இருந்தும்

உள்ளத்தில் இன்னும் ஏழையாய் உள்ளாய்!

 

 1. செல்வங்கள் அனைத்தையும் சீக்கிரம் விற்று

ஏழைக்கு அளித்தபின் என்பின் வருக.

 

 1. உலகம் முழுதும் கையகப்படுத்தியும்

தன்னை இழப்பவன் தரித்திரவானே!

 

 1. தன்னை ஒறுத்துத் தியாகம் செய்யான்

திண்ணமாய் என்னைப் பின்பற்றி வாரான்.

 

 1. உலகவாழ்வில் என்னிலும் உயர்வாய்

உறவைமட்டும் எண்ணியே வாழ்பவன்,

 

 1. சீடனாய் ஆகிடும் தகுதியை என்றும்

சீருடன் பெற்றிடும் உயர்வை இழப்பான்.

 

 

(சீடர்கள் கூறினார்கள்:)

 

 1. அனைத்தையும் விட்டு ஆண்டவா நாங்களும்

உன்பின் செல்ல உவந்தே வந்தோம்.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. தன்னை ஒறுத்துத்தன் அகத்தினை அழிப்போர்

என்னைப் பின்பற்றி என்றும் செல்வர்.

 

 1. தன் பெலன் கொண்டு தன்னைக் காப்பவர்

தன்னைத்தான் இழப்பார் திண்ணம் இதுவே.

 

 1. எந்தன் நிமித்தம் தன்னை இழப்பவர்

நித்திய காலமாய் நிச்சயம் வாழ்வர்.

 

 1. தனித்தே இருக்கும் தானியம் கூடத்

தானே முளைத்துப் பயனைத் தராது.

 

 1. நிலத்தில் வீழ்ந்து தன்னில் மரிக்க

நிச்சயம் அளிக்கும் பலனை அதிகம்.

 

 1. தரணியில் தனது வாழ்வை நேசிப்போர்

நிச்சயம் இழப்பர் நீஅதை அறிவாய்.

 

 1. நிச்சயம் இல்லா வாழ்வை ஒறுப்பவர்

நித்தமும் அடைவர் முக்தியை என்றும்.

 

(ஒரு பக்தன் கூறினான்:)

 

 1. எத்தனை மேன்மை எய்தினும் நானும்

எம்பிரான் முன்பு எல்லாம் சிறுமையே!

 

 1. எத்தனை தவமும் இங்கு நான்செய்தும்

எம்பிரான் இணையடி எய்தா உலகில்,

 

 1. எல்லா மேன்மையும் குப்பைகளாமே

எல்லா லாபமும் நட்டங்கள்தானே

 

 1. ஏது பயன் இனி இத்தரை வாழ்வில்

இறைவன் இல்லா வாழ்வில் தானே!

 

 1. தொடங்கிய வாழ்வைத் தொய்வின்றி நடத்த

தெய்வமே அருளட்டும் திரளனெ அருளை.

 

 1. ஓட்டத்தில் பலரும் போட்டி இட்டாலும்

பரிசினைப் பெறுவது ஒருவரே அன்றோ!

 

 1. அந்த நபராய் நீயும் இருப்பாய்

ஐயனின் அருளால் பரிசினை வெல்வாய்.

 

 1. தேக முயற்சியோ சற்றே பயன் தரும்

ஆன்மப் பயிற்சியோ நிச்சயம்பலன்தரும்.

 

 1. இம்மைக்கும், மறுமைக்கும் ஈடில்லா அருள்தரும்

ஆன்மப் பணியில் அனுதினம் தொடர்வாய்.

 

 1. அரசனின் சேவையில் அமர்ந்திட்ட வீரன்

எல்லாச் செயலிலும் தலையிட மாட்டான்.

 

 1. எல்லா உரிமையும் எனக்கிருந்தாலும்

எல்லாம் எனக்குப் பயன் தராது.

 

 1. உண்ண, உடுக்க, உறைவிடம் கிடைக்க

போதும் என்பதே பொன்செய்யும் மருந்து.

 

 1. எந்த நிலையிலும் நிறைவாய் இருக்க

இறைவனின் அருளால் பயிற்சியும் பெற்றேன்.

 

 1. சுயபெலத்தில் மட்டும் மகிழ்ச்சி கொள்ளாது

தோல்வி அடைந்தோரைத் தாங்கிட வேண்டும்.

 

 1. ஐயன் அளித்த அழைப்பிற்கு ஏற்க

அனுதின வாழ்வில் வாழ்ந்திட வேண்டும்.

 

 1. பொறுமை, கனிவு. பணிவுடன் வாழ்ந்து

பிறருக்கு என்றும் பணிசெய்ய வேண்டும்.

(முனிவர் கூறினார்:)

 

 1. தொண்டர்கள் குழுமிட எத்தனை பெருமை

ஒருமித்து வாழ்வதில் எத்தனை மேன்மை!

 

 1. சுயத்தை அழித்துப் பிறரை மதித்துச்

சேவை செய்வது எத்தனை மகிமை!

 

 1. தனது என்று எதையும் எண்ணாது

பிறருடன் பகிர்ந்து வாழ்ந்தனர் அனுதினம்.

 

 1. ’குறைபட்டது’ எனச் சொல்லும் வராது

கொடுத்து மகிழ்ந்தனர் ஒருவருக்கொருவர்.

 

 1. பொன், பொருள், உடமை அனைத்தும் பொதுவாய்

வைத்தே வாழ்ந்தனர் உண்மையில் உயர்வாய்.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. எந்தன் நிமித்தம் நிந்தனை செய்யினும்

எல்லாம் பொறுத்து வாழ்பவன் உயர்ந்தோன்.

 

 1. என்னையும் பழித்தே ஏளனம் செய்தனர்

அவ்விதம் உம்மையும் உலகோர் நடத்துவார்.

 

(பக்தர்கள் கூறினர்:)

 

 1. ஐயனின் பக்தராய் வாழ்ந்திடுவோரை

ஆயிரம் குறைசொல்லிப் பழிப்பாரே உலகோர்.

 

 1. ஆண்டவன் நிமித்தம் ஆயிரம் கூறினும்

அவனின் ஆன்மா நம்முடன் தங்கிடும்.

 

 1. நன்மைக்குப் பதிலாய் நிந்தை செய்தாலும்

பொறுமை காப்போரைப் புரப்பானே இறைவன்.

 

 1. தகுதி யில்லாமல் நிந்தை செய்தாலும்

பொறுமையாய் அதனையும் ஏற்பானே பக்தன்.

 

 1. புடமிட்டு நம்மையும் பொலியச்* செய்யவே

ஆண்டவன் அடியராய் அனைத்தையும் தாங்குவோம்.

*பொலிவுற

 

 1. அவனின் பாடினில் பங்குமே ஏற்று

துன்பம் கண்டு இடறவே மாட்டோம்.

 

 1. பக்தியில் மட்டுமே மகிழ்வு கொள்ளாமல்

பாடுகளில் நாம் பங்குமே ஏற்போம்.

 

 1. என்னையும் உனது பக்தனாய் ஏற்றுத்

துன்பத்தில் எனக்கோர் பங்குமே தந்தாய்

 

 1. உன் உயர் மேனி திருச்சபைக்காக

என்மேனிதன்னில் ஏற்பேனே துன்பம்.

 

 1. பொறுமையை வளர்க்கும் துன்பத்தை ஏற்போம்

புனிதனே உன்னுடன் நாங்களும் மகிழ்வோம்.

 

 1. நற்குணம் வளருமே பாடுகள் பட்டிட

நம்பிக்கை அருளுமே நாதனே உன்னில்.

 

 1. புறம்பான மனிதனில் பொலிவிழந்தாலும்

உள்ளான மனதிலே உய்கின்றோம் நாளும்.

 

 1. சிலதினப் பாடுகள் ஆயத்தம் செய்திடும்

நித்தியம் உன்னுடன் ஆளுகை செய்திட.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. ’புடமிட்டுப் பொலிவாக்கிப் புதிதாக்கி நாளும்

புவிக்கு ஒளியாகி மகிழ்வேனே உன்னில்.

 

 1. பாடுகள், சேவைகள், பக்தியும், அன்பையும்

அறிவேனே நானும் ஐயமே வேண்டாம்.

 

 1. இறுதி வரையிலும் உண்மையாய் இருந்திட

முக்தியின் மகுடம்நீ பெறுவது நிச்சயம்’

 

[சரணாகதி யோகம் என்ற பதினன்காம் அதிகாரம்

இத்துடன் நிறைவுற்றது]