Bhakti Gita Chapter 15

பதினைந்தாம் அதிகாரம்

 

தான தருமம் மற்றும் தியாகம்

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. தானம், தருமம், தயைசெய்யும் போது

தாரை ஊதாதே தரணியோர் முன்பு!

 

 1. விண்வாழும் பரமனின் புகழ்பாடும் வண்ணம்

உன்குணம் உலகோர்முன் ஒளிரட்டும் இன்னும்.

 

 1. பொய்யாய் முகம்வாடிப் பிறர்முன்பு வீணில்

விரதம் இருக்கின்றேன் என்றுமே உரைக்காதே.

 

 1. வலது கைதருவதை இடதுகையறியாது

வழங்கிடு பிறர்க்குச் செய்கின்ற கொடையை.

 

 1. சரிக்குச் சரியாகச் செய்யாத ஏழைக்கு

விருந்தோம்பல் செய்திடப் பெறுவாய் நற்பலன்.

 

(பக்தன் கூறினான்:)

 

 1. ஆன்ம நெறியில் வாழ்ந்திடும் அடியார்

ஆன்ம சிந்தையில் மனதையும் வைப்பார்.

 

 1. இறைவனுக்கேற்கும் ஈடில்லா ஈவாய்

உன்வாழ்வு அமையட்டும் உண்மை பக்தியில்.

 

 1. ஆன்மீகப் பலிகளை அளித்திடும் அர்ச்சனாய்

அமையட்டும் நம்வாழ்வு ஆண்டவனுக் குகந்ததாய்.

 

 1. துதிபாடி இறைவனைத் துதிப்போம் நாளும்

துங்கவன் நாமத்தைத் தொடர்ந்தே போற்றுவோம்.

 

 1. இறைவனுக் குகந்து ஏற்றிடும் பலியாய்

இருப்பதை அளித்து இன்செயல் செய்வாய்.

 

 1. தான, தருமம், தியாகமே நாளும்நீ

இறைவனுக் களித்திடும் இனியநல் தூபம்.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. மக்கள் சென்றனர் ஆலயம் தேடி

காணிக்கை செலுத்த இறைவனுக்கே.

 

 1. சிறிய காணிக்கை செலுத்திய செல்வரும்

பிறர்காணப் பகட்டாய் அதை அளித்தார்.

 

 1. ஏழை விதவை ஒருத்தியோ இரண்டு

எஞ்சிய காசைத் தானே அளித்தாள்.

 

 1. வசதி படைத்தவர் தந்ததோ சிறிது

வறிய அவ்விதவை வழங்கினாள் பெரிது.

 

 1. அடுத்த வேளைக்கு இருந்ததை அவளும்

அளித்ததால் முழுமையாய் இறைவனுக் கென்று,

 

 1. வசதி படைத்த செல்வரை மிஞ்சி

வழங்கினாள் அவளும் காணிக்கை தன்னை!

 

 1. உம்மிடம் உள்ள செல்வங்களை நீங்கள்

உவந்து அளியுங்கள் பிறருக்கென்று.

 

 1. மண்ணில் அழியும் செல்வம் திரட்டி

பொருளைப் பெருக்க விரும்பவும் வேண்டாம்.

 

 1. அழிவே இல்லா ஆனந்தம் அளிக்கும்

நித்திய வாழ்வில் செல்வராய் மாறுங்கள்.

 

 1. சேர்த்த செல்வம் எங்கு உளதோ

அங்கே இருக்கும் உங்கள் மனதும்.

 

 1. பேராசை என்னும் தீமையை அகற்றிப்

’போதும்’ என்ற மனதுடன் வாழுங்கள்.

 

 1. வசதியைப் பெருக்கி ஆடம் பரமாய்

வாழ்வது வாழ்வின் இலட்சியம் இல்லை.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. பேராசையோ என்றும் பெரிய நட்டம்

பணத்தாசையே எல்லாத் தீமைக்கும் காரணம்.

 

 1. இதனையே நன்கு உணர்ந்து நீயும்

வாழ்ந்திடு ஆண்டவன் பக்தனாய் என்றும்.

 

 1. நிலை நில்லாத பொருளை நம்பாதே

திரளான செல்வத்தில் பெருமை கொள்ளாதே.

 

 1. எல்லாம் அளித்திடும் இறைவனை நம்பி

வாழ்ந்திடும் வாழ்க்கையைச் செல்வமாய் ஆக்கு.

 

 1. நல்லவை செய்வதை நாடி நன்மையில்

செல்வந்தனாகி இரக்கமும் கொண்டிடு.

 

 1. பயனற்ற வாழ்க்கை வாழாது பக்தனாய்ப்

பலருக்கும் நன்மை செய்ய அறிந்திடு.

 

 1. பெருமை உள்ளோருடன் இணங்காது நீயும்

தாழ்மை உள்ளோருடன் இணங்கியே பழகு.

 

 1. இரக்கம் காட்ட எண்ணும் போது

இனிய முகத்துடன் நீஅதைச் செய்திடு.

 

 1. அதிகம் விதைத்தவன் அதிகம் பெறுவான்

குறைவாய் விதைத்தவன் குறைவாய்ப் பெறுவான்.

 

 1. ’கொள்வதைக் காட்டிலும் கொடுப்பதே மேல்’

என்னும் ஆண்டவன் சொல்லையும் மறந்திடாதே

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. புசித்தும் குடித்தும் போதை கொண்டும்

மனம்போனபடி வாழ்ந்து மிராமல்,

 

 1. இறுதி நாளும் சடுதியில் வருமென

உணர்ந்து நீயும் நன்கு வாழ்ந்திரு.

 

 1. பாவம் செய்ய வலதுகண் தூண்டினால்

தயவின்றித் தரித்ததை நீயும் எறிந்திடு.

 

 1. பாவம் செய்திட வலதுகை துணிந்தால்

அதையும் உடன்நீ வெட்டி எறிந்திடு.

 

 1. உன்கண் ஒளியுடன் இருந்தால் என்றும்

உன்னுடல் நிச்சயம் ஒளியிலே இருக்கும்.

 

 1. இருளிலே நீயும் வாழ்ந்தே இருந்தால்

உன்னுளே இருளுமே மிகுந்து விளங்கும்.

 

 1. இதயத்தில் உள்ளதே வார்த்தையில் வெளியாகி

உன்மன எண்ணத்தை உள்ளபடி காட்டும்.

 

 1. பயனற்ற வார்த்தையைக் கூறுவோர் அதன்படி

பயனை அவசியம் பதிலாகப் பெறுவார்.

 

(பக்தர்கள் கூறினார்கள்:)

 

 1. சோதனைக்குள்ளே அகப்பட்டுக் கொள்ளாமல்

ஆண்டவன் வார்த்தைக்கு அவசியம் பணிந்திடு.

 

 1. யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக் குப்பட்டு.

 

 1. இனியவை இருக்க, இன்னாசொல் கூறாமல்

கேட்போர் பயன்பெற நல்லதைக் கூறு.

 

 1. கனிவுள்ள வார்த்தையே எப்போதும்கூறி

புடமிட்ட பொன்னாக உன்வாக்கை மாற்று.

 

 1. மனிதர் மெச்சவே வார்த்தையும் கூறாது

இறைவன் புகழவே வார்த்தையைப் பேசு.

 

 1. தெளிந்த சிந்தையுடன் தூயமனதுடன்

கடவுளிடம் சென்று நீயும் வேண்டு.

 

 1. ’வீழேன் ஒருக்காலும்’ என்றே எண்ணுபவன்

வீழாது நிற்கக் கவனமாய் இருக்கட்டும்.

 

 1. போராடும் வீரனைப்போல் நாமும் எப்போதும்

தேகத்தை ஒடுக்கியே சீராக வாழ்ந்திடுவோம்.

 

 1. பிறருக்குப் போதிப்போர் பயனற்றுப் போகாமல்

கருத்துடன் வாழக் கவனமாய் இருக்கட்டும்.

 

 1. நம்மில் நாமே நியாயமுடன் நடக்க

எவரின் நிந்தைக்கும் இடம் தரமாட்டோம்.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. சோதனைக்கு நீயும் வீண்பலி ஆகாமல்

கருத்துடன் என்றும் உன்னைக் காத்திடு.

 

 1. நான் வரும் நேரத்தை நீயறியாததால்

உணர்வுடன் உன்னில் விழித்தே காத்திரு

 

 1. ஆண்டான் பாராட்ட உழைக்கும் தொழிலாளி

அவசியம் பெறுவான் அவனிடம் வெகுமதி.

 

[தான, தருமம், மற்ற தியாகம் என்ற

பதினைந்தாம் அதிகாரம் நிறைவுற்றது.]