Bhakti Gita Chapter 16

பதினாறாம் அதிகாரம்

 

ஞான யோகம்

 

(முனிவர் கூறினார்)

 

 1. சத்தியம் பற்றிய ஞானம் பெற்று

அனைவரும் முக்தி அடைந்திட வேண்டும்

 

 1. என்பதே இறைவனின் விருப்பமாய் இருக்க

உண்மை இதைநான் உணர்ந்தே சொன்னேன்.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. மன்னுயிர்காக்க மனுவாக வந்தெனக்கு

அவர்மீது தந்தையே உரிமை நீதந்தாய்.

 

 1. உண்மை இறைவனை உணர்ந்துமே அவரும்

என்மூலம் அடைவதே முக்திவழி யாகும்.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. இவ்வார்த்தை கேட்ட மாந்தரில் பலரும்

ஐயம் கொண்டு விலகினார் உடனே.

 

 1. ’நீங்களும் அவர்போல் நீங்கியே செல்வீரோ’

என்றே ஐயனும் சீடரை வினவ?

 

 1. அவரில் ஒருவன் அவனிடம் உரைத்தான்

’எங்கு செல்வோம் இணையடி நீங்கி

 

 1. முக்தி அடையும் நித்திய வார்த்தை

உன்னிடமின்றி வேறெங்கு காண்போம்’?

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. அடிமை என்றே அழைக்கேனே உங்களை

அடிமை அறியான்தன் ஆண்டவர் செயலை!

 

 1. உண்மை நண்பராய் உங்களை அழைத்ததால்

அனைத்தையும் கூறுவேன் அவசியம் உமக்கு.

 

 1. நான்கூறும் உபதேசம் நீங்களும் மறவாது

பரிசுத்த ஆன்மாவும்* பகருவான் நிச்சயம்.

*ஆவி

 

12 அவனை நீங்களும் அவசியம் அறிவீர்

அவனே உங்களில் நிலையாக இருப்பதால்.

 

 1. வரும் செயல் அனைத்தையும் கூறியே அவனும்

உண்மை வழிதனில் உங்களை நடத்துவான்.

 

 1. என்னிடமிருந்து கேட்ட அனைத்தையும்

ஒளிவின்றி உங்களுக்கு அவன் உவந்துரைப்பான்.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. ஒருவரும் உங்களுக் குணர்த்தாவண்ணம்

ஐயனே அனைத்தையும் அவசியம் சொல்வான்.

 

 1. ஐயனின் ஞானமும் அவனின் சித்தமும்

உங்களில் நிறைய அனுதினம் வேண்டினேன்.

 

 1. ஐயனின் மீதுள்ள அன்பும் வளரட்டும்

ஞானமும், புத்தியும் நாளுமே பெருகட்டும்.

 

 1. இறைவனின் வார்த்தையும் உங்களில் நிலைத்து

ஒருவருக்கொருவர் போதிக்க உதவட்டும்.

 

 1. ஐயனின் ஞானம் அளவில் பெரியது

அவனின் நீதியோ என்றும் உயர்ந்தது.

 

 1. ஒருவரும் அறிவிக்கா உன்னத வழியது

யாரும் அறிந்திடா மாபெரும் நிதியது.

 

 1. தன்பெரும் தியாகத்தால் நம்மையும் காத்து

தன்னுடன் மகிமையில் பங்குமே அளித்து,

 

 1. பக்தியின் வழியிலும் ஆன்மீக நெறியிலும்

செல்லவே நமக்குத் தருவான் நல்லருள்.

 

(ஒரு பக்தன் கூறினான்:)

 

 1. ஐயனை அறியவும் அவனை அடையவும்

அனைத்தையும் விட்டேன் நட்டமென்றே.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. ஐயனை அறிவேன் என்றே உரைத்தும்

அவன் சொல் மீறுவோர் பொய்யனே என்றும்.

 

 1. பாவம் செய்பவன் வாழ்வில் ஒருகணம்

இறைவனை அறியான் அவரையும் காணான்.

 

 1. பொய்யான சிந்தையைப் பின்பற்றும் பேதைபோல்

உங்களின் வாழ்வையும் ஒருக்காலும் மாற்றாதீர்.

 

 1. மாயையைப் பின்பற்றி மனதையும் இருளாக்கி

வாழ்வோர் நிச்சயம் நீங்குவார் இறைவனை.

 

 1. அறியாமை என்னும் அகந்தையில் தடுமாறி

இருளான வாழ்வில் உழன்றுமே வாழ்வோர்,

 

 1. சொல்லாலே இறைவனை உணர்ந்தோராய் நடித்துச்

செயலிலே நிச்சயம் அவனையும் மறுப்பார்.

 

 1. அத்தகையோரின் ஞானமும், தத்துவம்

உங்களை வஞ்சிக்க ஒருநாளும் தாழாதீர்.

 

 1. உலகின் ஞானத்தை உயர்வாக எண்ணியே

ஆண்டவன் வழியை அவருமே புறப்பார்.

 

 1. தன்ஞானச் செருக்காலே அறியாரே யாரும்

அன்பாலே மட்டுமே அறிவாரே அவனை.

 

 1. பதரை உரலிலிட்டுப் பலமுறை குத்தினும்

ஒருமணி அரிசிதான் உனக்கவை தருமோ?

 

 1. எவ்வளவு கற்றாலும் இறையில்லா உன்ஞானம்

மணியற்ற சாவிதானே மனதினிலே கொண்டிடுவாய்!

 

(முக்தேசன் மகிழ்ந்து கூறினான்:)

 

 1. ஞானிக்கு மறைத்துப் பேதைக்கு அளித்து

உன்னையே உலகுக்கு உள்ளபடி காட்டினாய்!

 

 1. எந்தையே உந்தன் உன்னத மேன்மையை

என்றும் கொண்டாடி நன்றியும் கூறினேன்.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. ஆவியின் அருளின்றி யாருமே அறியார்

ஆண்டவன் அருள்நெறி அவனின் மெய்வழி.

 

 1. ஆன்மநெறி நடவார், அடையாரே அருள்வழி

அகந்தையால் மறுப்பாரே ஆவியின் அருள்நிதி.

 

 1. உண்மை வழிதனை உணரும் தன்மையை

இழந்த காரணத்தால் இந்தக்கதி அடைவார்

 

 1. ஐயனின் சிந்தையை அறிந்தவர் யாரினி

அவனின் ஆவியைக் கொண்ட அடி யாரன்றி?

 

 1. உலகின் ஞானத்தை உவந்துமே ஏற்காது

ஐயன்தரும் ஆன்மாவை அறிந்துமே அடைந்தோம்.

 

 1. ஒருவரும் காணாத உன்னத மேன்மையை

ஒருவரும் கேளாத உன்னத வார்த்தையை,

 

 1. மாந்தரின் மனதுமே அறியாத நெறிகளை

ஆண்டவன் அளித்திடும் அவிழ்தான அன்பையே,

 

44 கொடையாக நமக்கும் குமரேசன் அளிக்க

அறிந்தோமே அவனை அவனின் அருளாலே.

 

 1. இருளிலே ஒளியை ஒளிர்ப்பித்த இறைவனே

நம்மன இருள்நீக்கித் தந்தானே தன்னொளி

 

 1. ஐயனின் அருள்முகம் நோக்கினோர் அடையவே

அருளினான் இறைவனே அத்தகைய ஞா னத்தை.

 

(முக்தேசன் உவமை மூலம் கூறினான்)

 

 1. என்வார்த்தை கேட்டு அதன்படி நடப்போர்

பன்மடங்கு பலனை நிச்சயம் பெறுவார்.

 

 1. நல்ல நிலத்திலே விழுந்திட்ட விதைபோல

என்சொல் முளைத்துமே பலனைத் தருமே.

 

 1. செய்கையின் மூலமே ஞானம் ஒளிரும்

வாருங்கள் என்னிடம் இதனையும் அறியவே.

 

ஒரு பக்தன் கூறினான்:

 

 1. இறைவன் அருளும் ஞானம் என்றும்

உன்னதம், தூய்மை, இனிமை, புனிதம்,

 

 1. எளிமை, தாழ்மை, நளினம், உறுதி,

வலிமை இரக்கம், அமைதி, மேன்மை

 

 1. கொண்டதாய் விளங்கிடும் உண்மையை நீயும்

அறிந்தே அதன்வழி ஞானத்தைத் தேடு.

 

 1. ஞானம் அடைந்தவர் தாழ்மையாய் வாழ்வார்

தம் செயலாலே மேன்மை அடைவார்.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. இரண்டு சோதரி பணிவிடை செய்ய

இறைவன் சேவடி அண்டியே வந்தார்.

 

 1. திருவடி தன்னில் அமர்ந்த இளையோள்

அமைதி யுடனே அவன்சொல் கேட்டாள்.

 

 1. சஞ்சலம் கொண்ட மூத்தவள் பலப்பல

செயல்கள் செய்துமோ துயரமே அடைந்தாள்.

 

 1. முறுமுறுத்த அந்தமூத்தவளும் குறை

இளையவள் மீதே கூறவே தொடங்கி,

 

 1. ’நானும் தனித்தே காரியம் செய்ய

எப்படி இவளும் மனதும் கொண்டாள்?’

 

 1. என்றுரைத்து அவள் ஐயனிடம் சென்று

தன்குறை சொல்லிப் பணிந்தே நின்றாள்.

 

 1. ஆண்டவன் அவளுக்கு ஆறுதல் கூறி

அன்புடன் அவளிடம் கூறத் தொடங்கினான்:

 

 1. ’பலசெயல் செய்து பதற்றம் அடைந்து

புலம்புவதும் நீ வீணில் ஏனோ?

 

62.பொறுமை யுடனே நல்லதை அறிந்திடத்

திருவடி அமர்ந்தாள் உன்தங்கை, அவள்

 

 1. தன்னை விட்டு எடுபடா நல்ல

பங்கை அறிந்தாள் அந் நங்கை.’

 

(பக்தர்கள் கூறினார்கள்:)

 

 1. இறைவனைச் சரியாய் நாங்களும் அறிய

இறைவனே வந்தான் மனுவாக.

 

 1. இந்த உண்மையை நாங்களும் அறியத்

தந்தான் அறிவை அருளாக.

 

 1. அவனில் நாங்களும் ஐக்கியம் அடைந்து

அறிந்தோம் அந்த உண்மையினை.

 

 1. முக்தியின் வழியும், முதல்வனும் அவனே

என்றே அறிந்தோம் தெளிவாக.

 

ஞான யோகம் என்ற பதினாறாம் அதிகாரம்

இத்துடன் நிறைவுற்றது.]