Bhakti Gita Chapter 22

அதிகாரம் இருபத்திரெண்டு

 

இறுதி முடிவு

 

(ஒரு பக்தன் கூறினான்:)

 

 1. வையமும் குளிர, வானமும் திறந்தளிக்க

மழைநீர் பருகி மண்ணும் பயனளிக்கும்

 

 1. தன்னைச் சீராக்கித் தளராது உழைப்போர்க்கு

வேண்டும் பலன்தரும் விளையும் பூமியும்

 

 1. பாழ்நிலமதுவோ பலமுறை நீர் குடித்தும்

பயனேதும் தராது, பயிரொன்றும் முளைக்காது

 

 1. முள்ளும் பூண்டுமே முளைப்பிக்கும் பூமியாகி

தீயினால் அழிவதன்றி ஒன்றுக்கும் உதவாது.

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. பயன்தராத பட்டமரமும் வெட்டுண்டு போகும்

வீழ்ந்த பின்னது தீக்கிரையாகும்.

 

(பக்தன் கூறினான்:)

 

 1. ஏற்ற காலத்தில் எல்லாம் அளித்த

இறைவன் பெருமைக்கு உண்டு பலசாட்சி

 

 1. உண்ண உணவளித்து, உடுக்க உடையளித்து,

தேவை அறிந்தே இறைவனே தந்தானே

 

 1. ஆயினும் அனைத்தையும் அலட்சியம் செய்து

எள்ளி, நகையாடி, ஏளனம் செய்தோம்

 

 1. கருணையால் கடவுள் நமக்களித்ததெல்லாம்

குறைநீங்கி மனம்மாறி நன்றாக வாழ்ந்திடவே

 

 1. எண்ணி இதனையும் என்றுமே உணராமல்

தீமை, தினம் எண்ணிச் செய்தோம் பாவம்பல

 

 1. ஆக்கினை என்னும் அணைந்திடாத் தீயை

தலைமேல் குவிக்கிறோம் அனுதினம் நாமே.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. உலகிற்கு ஒளிதரும் உன்னதமானவன்

நம்மிடை வந்துமே மாந்தரும் அறியார்

 

 1. தன்னினத்தோர் இடையில் தயவாய் அவன்வந்தும்

இன்னான் என்றுணர்ந்து ஏற்க வில்லையவர்.

 

(பக்தன் கூறினான்:)

 

 1. நீதி நியாயங்களை அறிந்த மாந்தரின்

நெஞ்சமே அதற்குச் சாட்சி தருவதால்

 

 1. இதய நினைவை அறிந்த இறைவன்முன்

மறைக்க இயலாமல் மாந்தரும் இருப்பர்

 

 1. இருளில் மறைந்திடும் எல்லாச் செயலும்

ஒளியில் வந்திட உலகம் அறிந்திடும்

 

 1. ஈசனை அறிந்தும் ஏற்க மறுத்ததால்

புகலிடம் வேறின்றிப் புலம்புவர் மாந்தரும்

 

 1. நெஞ்சைப் பொய்யாக்கி வஞ்சம் செய்ததால்

நன்றி கொன்றுமே ஐயனை மறுத்தாரே

 

 1. உண்மை அறிந்தும் உளமார ஏற்காமல்

முக்தியை மறுத்து மோசம் போயினரே

 

 1. அநீதி, அதர்மம், அக்கிரமச் செயலில்

ஆசைவைத் தோரும் நாசமே அடைவர்

 

 1. முக்திக்கு வழிதந்த ஈசனை அறியாமல்

உள்ளத்தில் உணராமல் தூரமே விலகுவர்

 

 1. முக்தியை மறுப்போர்க்குத் தப்பிக்க வழியுண்டோ?

ஈசனைப் பகைப்போர்க்கு வேறு தயவுண்டோ?

 

 1. உண்மை ஞானத்தை உள்ளபடி அறிந்தும்

பாவம் செய்வோருக்குப் பரிகாரம் வேறுஇல்லை

 

 1. இறுதி நேரத்தில் இவ்வுலகை நீக்கையில்

நிச்சயம் பெறுவார் நியாயத் தீர்ப்பினை

 

 1. எல்லாம் நன்மையாய் இருந்திட்ட போதிலும்

எதிர்பாரா நாசத்தால் அழிந்து புலம்புவார்

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. வேதம் அறிந்தென்ன? போதனை செய்தென்ன?

சாத்திரம் அறிந்துமே சாதனை செய்தென்ன?

 

 1. என்னுயர் நாமத்தை வீணுரைத்தோரையும்

சத்தியம் நானறியேன் அத்தகைய பேதைகளை.

 

(பக்தன் கூறினான்:)

 

 1. நீடித்த பொறுமையால் நீதி நெறிகாக்கும்

இறைவன் அறிவான் தானுரைத்த வாக்குகளை

 

 1. மனமும் உடைந்து திருந்தி வருவோரை

தடுத்து ஆட்கொள்ளப் பொறுமை காக்கின்றான்

 

 1. ஒருவரும் அழியாமல் உய்வும் அடைந்திட

இரக்கம் கொண்டிறைவன் இன்னுமே காக்கின்றான்

 

 1. மனமும் திரும்பி முக்தேசன் தாள்பணிந்து

முக்தி அடையவே தயவினை அளிக்கிறான்

 

 1. இறுதி நாளிலே எல்லாமும் தீக்கழிய

பக்தி அற்றவரும் அவ்வாக்கினை அடைவர்

 

 1. ஆகாயம், பூமியுடன் அனைத்துப் படைப்புகளும்

இருந்த இடமின்றி என்றுமே மறைந்திடும்

 

 1. இந்நிலை உணர்ந்து சத்தியமும் அறிந்து

பக்தி வழிவாழ்ந்து முக்தியினை அடைய

 

 1. நித்தியமும்* முயன்று உத்தமனாய் வாழ்ந்து

எச்சரிக்கை கொண்டு இறைவனை அண்டு

*நித்தமும்

 

 1. கருணை கொண்டவனும் கடினம் கொண்டிடாமல்

பெருமைகுண மகற்றி அபயம் என்றடைவாய்

 

 1. ’இரங்கிடு’ என்போர்க்கு இரக்கமே அளிப்பான்

எதிர்த்து நிற்போர்க்குத் தண்டனையே தருவான்

 

 1. அதனால் தாழ்மையுற்று அவன்பாதம் அண்டிவிடு

அரவணைத்தாட்கொள்வான் நானறிந்த உண்மையிது.

 

(முக்தேசன் கூறினான்)

 

 1. இறுதி ஆக்கினையில் இரையாகி அழியாமல்

உன்னைக் காத்திடுவேன் உணர்ந்து அமைதியுறு.

 

(பக்தர்கள் பாடினார்கள்:)

 

 1. ஆக்கவும், அழிக்கவும் வல்லவனும்

அவனியில் ஆண்டவன் ஒருவனன்றோ

 

 1. எரியும் நரகத்தில் வீழாமல்

என்றும் நம்மைக் காத்திடவும்

 

 1. நித்திய ஆக்கினை அடையாமல்

நிச்சயம் காப்பவன் முக்தேசன்

 

 1. வருகின்ற தீர்ப்பினில் அழியாமல்

நீதியாய் நிற்பவன் அவனேதான்

 

 1. உலகம் போற்றும் ஆண்டவனே

உந்தன் வழியே, உண்மை வழி!

 

 1. உன் செயல்கள் எல்லாம் மகத்துவமே!

நீ நிலைத்து ஆளும் பரம்பொருளே!

 

இறுதி முடிவு என்ற இருபத்திரெண்டாம் அதிகாரம்

இத்துடன் நிறைவுற்றது.