Bhakti Gita Chapter 9

ஒன்பதாம் அதிகாரம்

 

பழைய புதிய குணங்கள்

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. நல்ல மரம் தீய கனியும் தராது

தீயமரம் நல்ல கனி தர இயலாது.

 

 1. நல்லோர் செல்வத்தால் நன்மை செய்வர்

தீயோர் தம்குணத்தால் தீயதேசெய்வர்.

 

 1. கொள்ளை, கோபம், கொலையுடன் பொறாமை,

பொய்சாட்சி, திருட்டு, பிறன் மனை விழைதல்

 

 1. கள்ளமனம் கொண்ட கறைபட்ட மனிதரின்

தீய குணத்தையே நன்கு பறைசாற்றும்.

 

 1. வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைபோல் சிலரும்

வெளியாக மட்டுமே ஒளியுடன் இருப்பர்

.

 1. பலமுறை நன்றாகப் புறம்பே கழுவினும்

உள்ளம் களிம்பினால் உள்ளபடி இருக்கும்.

 

 1. மாய்மாலம் நீங்கி உள்ளும், புறமும்

தூய்மையாய் வாழ்வதே உண்மையில் உயர்வு.

 

 

முனிவர் கூறினார்:

 

 1. விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்காது

உண்மையை அறிந்துநீ ஏமாற்றம் அடையாதே.

 

 1. தேகத்தை முதலாக்கிச் செய்கின்ற செயலுக்குத்

தேகத்தில் பலன் கிட்டும் என்பதையும் உணரு.

 

 1. ஆன்மீக மனம்கொண்டு ஆன்மாவில் விதைவிதைக்க

நித்திய வாழ்வுமே நன்மையுடன் நாடிவரும்.

 

 1. தேகத்தின் இச்சையிலே சிந்தையைத்தான் வைத்தால்

தெய்வத்தின் வெறுப்பையே திரளாகப் பெற்றுத்தரும்.

 

 1. அத்தகைய வாழ்வுமோ ஆன்மீக நெறியகற்றி

நரகத்தில் வீழவைக்கும் நன்றாக உணர்ந்திடு.

 

 1. ஆன்மீக சிந்தையுடன் புலனடக்க நெறியுடனும்

அமைதியுடன் வாழ்வளித்து முக்தியை அருளும்.

 

 1. தேகத்தின் இச்சைகளும் ஆன்மீக எதிரி

ஆன்மீக சிந்தனையோ இச்சைகளின் எதிரி.

 

 1. ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு இவை நிற்க

இரண்டிலும் கால்வைத்து வாழவும் இயலாது.

 

(பக்தன் கூறினான்:)

 

 1. நன்மை என்னிடத்தில் நிலையாக நின்றதில்லை

நன்மை என்பதை நானுமே செய்ததில்லை.

 

 1. விரும்பிடும் நன்மைதனைச் செய்யவும் இயலாமல்

விரும்பாத தீமைகளை விரும்பியே செய்கிறேன்.

 

 1. பாவத்தின் கீழாக விற்றுப்போட்ட பாவியாக

நித்தம் நித்தம் வாழ்கின்றேன் பாவமனதிற்கென்று.

 

 1. நீதி, நியாயம் என்ற கடவுளின் கட்டளையில்

மகிழ்வுற்று நின்றாலும் உள்ளான மனதில்

 

 1. மாமிச சிந்தையும், பலவாறு மயக்கி

பாவத்தின் நியமத்தில் சிறையாக்கி வைத்தது.

 

 1. நிர்பந்தமாய் வாழும் மனிதன் என்னையும்

விடுவிப்பார் யார் இந்த மரண சரீரத்தினின்று?

 

(முக்தேசன் கூறினான்:)

 

 1. இச்சையில் பிறந்ததெல்லாம் இச்சையில் வாழும்

ஆன்மீக வழிமட்டும் இறைவனுடன் சேர்க்கும்.

 

 1. மனம்திரும்பி ஆன்மாவில் மறுபிறவி எடுத்தால்தான்

என்னுடைய பரமபதம் என்றும் நீ அடைவாய்.

 

 1. குருஎன் கருணையினால் குருதீட்சையும் பெற்று

என் ஆணை கைக்கொண்டு பரமபதமடைவாயே.

 

(சீடன் கூறினான்:)

 

 1. திருவடி நாடியே திருவருள் அடைந்தோர்

இறைவன் பிள்ளையாய் என்றும் பிறப்பர்.

 

 1. தேகத்தின் சேர்க்கையால் உருவாகிவாராமல்

எடுக்கும் இப்பிறவி இறைவனின் அருளாகும்.

 

 1. அழியாத வித்தான இறைவன் வார்த்தையால்

உண்டான பிறப்பே உண்மையில் பிறப்பு.

 

 

 1. ஐயன் தரும் முக்தியும் நம்பிக்கையும்

அழியாத, மாறாத ஆனந்த நிலையாகும்.

 

 1. பரமனின் பிள்ளைகளாய்ப் பாரினில் வாழ்வதும்

இச்சைவழி செல்லாமல் இறைவனில் வாழ்வதாகும்.

 

 1. ’அத்தனே’ ’அப்பனே’ என்று நாம் அழைக்க

ஐயன்தந்த உரிமையே ஆன்மாவின் சாட்சியாகும்.

 

 1. தூய நல்லாவியின் துணைகொண்டுசெல்வோர்கள்

இறைவன் பிள்ளைகளாய் இவ்வுலகில் வாழ்ந்திடுவர்.

 

 1. உடலிச்சை தனக்கென்று உலகினில் வாழாமல்

ஆன்மாவில் வாழுங்கள் ஆண்டவனின் பிள்ளைகளாய்.

 

 1. உடலின் போராட்டம் உண்டென்றும் வாழும் வரை

ஆயினும் இறையருளால் அவன்வழி வாழுங்கள்.

 

 1. முக்தேசன் கிருபையால் முக்தியும் அடைந்ததால்

இறைநீதி போற்றியே என்றென்றும் வாழுங்கள்.

 

(முனிவர் கூறினார்:)

 

 1. முக்தேசன் தந்த ஆவியினால்

பாவ விடுதலை நாமும் அடைந்தோம்.

 

 1. இச்சையின்படி இனி வாழாந்திடாமல்

அவனாவியின் படி நாம் நடக்கின்றோம்.

 

 1. இறைவன் அருளால் முக்திபெற்றோர்

இயல்பாய் வாழ்வார் அந்தத் தன்மையில்.

 

 1. அத்தகையோர் மீண்டும் பாவம் செய்யார்

இறைவன் தன்மை நிறைந்ததனால்.

 

 1. பாவத்தின்குணத்தைக் களைந்துவிட்டு

பரமனின் குணத்தை அணிந்திடுவீர்.

 

 1. நம்மைப் படைத்த நாதனைப்போல்

நாள்தோறும் புதிதாவோம் நம்குணத்தில்.

 

 1. மனம் புதிதாகி மாறிடுவோம் நாம்

மறுரூபமாவோம் (புது)மலர்ச்சியுடன்

 

 1. போயின பழமை குணங்களெல்லாம்

புதிதாய் ஆனது வாழ்க்கை யெல்லாம்.

 

 1. உலகவழக்கத்தை ஒழித்தென்றும்

உன்னதஎண்ணத்தில் வாழ்ந்திடுவோம்.

 

(முக்தேசனின் எச்சரிக்கை:)

 

 1. உன்னாவி நல்லதை விரும்பினாலும்

உடலிச்சை உன்னையே கறைப்படுத்தும்.

 

 1. சோதனைக் கென்றும் ஆட்படாமல்

தொடர்ந்து என்னையே தியானியுங்கள்..

 

[பழைய புதிய சுபாவங்கள் (குணங்கள்; தன்மைகள்)

என்ற ஒன்பதாம் அதிகாரம் இத்துடன் முடிவடைந்தது.]