Bhakti Gita Chapter 4

நான்காம் அதிகாரம்

பக்தி யோகம்
(குருநாதர் கூறினார்:)

 

 1. உண்மையோடும். உணர்வோடும்
  வழிபடுவாய் இறைவனையே.

 

 1. அருவமான இறைவனை நீஉன்
  ஆன்மாவில் தினம் உணர்வாயே.(பக்தன் கூறினான்:)

 

 1. உண்மையான பக்தியுடன்
  வழிபடுவோம் இறைவனையே.(ஆண்டவன் கூறினான்:)

 

 1. அன்பான உள்மனதுடனும்
  ஆன்மீக உயர் பெலனுடனும்,

 

 1. அறிவாலும் உணர்ந்தென்னை
  ஆராதனையும் செய்திடுவாய்.

 

 1. நேசிப்பேன் பக்தனையே
  அளிப்பேன் தரிசனம் அவனுக்கே.

 

 1. மனத்தூய்மை உள்ளவனும்
  நிச்சயம் பெறுவான் என் காட்சி.

 

 1. பக்தியால் என்னை அறிந்தோனை
  நித்தமும் நானும் நடத்திடுவேன்.

 

 1. என் வாக்கை அவன் அறிவதனால்
  என்பின் நடப்பான் என்பக்தன்.

 

 1. என்னை அறிந்தே என்பக்தன்
  தன்நிலை அறிந்து வாழ்ந்திடுவான்.

 

 1. அவனை நானும் அறிந்ததனால்
  தவறி நடக்க விடுவதில்லை.(முனிவர் கூறினார்:)

 

 1. பக்திக்கு உகந்து நாம் வாழ்வோம்
  பரமனுக் குகந்தோராய் நாமாவோம்.

 

 1. இறைநாமம் நம்மில் நிலைநிற்க
  அவனுக்கு உகந்து நாம் வாழ்வோம்.

 

 1. ஐயனின் சித்தமும் அறிந்திட்ட நாம்
  அதன்படி அனுதினம் வாழ்ந்திருப்போம்.(ஐயன் கூறினான்:)

 

 1. குருவென்று என்னைக் கூறுகின்றீர்
  ஆண்டவன் என்றென்னை அழைக்கின்றீர்.

 

 1. உண்மை அறிந்தே உரைத்திட்டீர்
  என்சீடராய் என்றும் நிலைத்திருப்பீர்.

 

 1. சீடர்கள் தம்முள் சோதரராவர்
  பக்தியால் ஒன்றாய் இணைந்து நிற்பார்.(ஒரு சீடன் பதிலாகக் கூறினான்:)

 

 1. ஆண்டவன் விருப்பம் நன்கறிந்து
  அதன் படி ஒன்றாய் வாழ்ந்திருப்போம்.

 

 1. பக்திக்கு ஏற்ப ஒற்றுமையாய்ப்
  பரமன் பிள்ளையாய் இணைந்திருபோம்.(முனிவர் கூறினார்:)

 

 1. ’தினமும் உன்னிடம் வேண்டிடவே
  சொல்லித்தாராய் ஜெபம் ஒன்றை’

 

 1. என்றே வேண்டிய சீடருமே
  ஐயனைப் பணிந்து வேண்டி நிற்க

 

 1. அருள்கொண்டு ஐயனும் அவர்களுக்கு
  உரைத்தானே ஒரு நல்வாக்கு:

 

 1. ’ஊர்மெச்ச வேண்டிப் பலவார்த்தை
  உரைக்க வேண்டாம் ஜெபமென்று

 

 1. மனதின் கதவை மெள்ள மூடி
  மெளனமாய் நீயும் வேண்டிடுவாய்.

 

 1. தளர்ச்சிக்கு இடமும் இல்லாமல்
  முழுவதும் நம்பி வேண்டிடுவாய்.

 

 1. நம்பினோர் நிச்சயம் அடைந்திடுவார்
  நம்பிக்கை கொண்டு ஜெபிப்பதினால்.

 

 1. என்சொல் உங்களில் நிலைத்திருக்க
  வேண்டியபடியே நீ பெறுவாய்.

 

 1. எல்லாச் செயலிலும் ஜெபம்செய்து
  இறைவனுக்கு தினம் நன்றிகூறு.

 

 1. பிரார்த்தனை ஒன்றே என்றும் வழி
  பக்தியில் நீயும் நிலைத்திருக்க’(பக்தர்கள் கூறினார்கள்:)

 

 1. வாரீர்! நாமும் சென்றிடுவோம்
  வளமுடன் வாழ அண்டிடுவோம்.

 

 1. தூய மனதுடன் தளர்வறியா
  ஜெபமுடன் நம்பி நாடிடுவோம்.

 

 1. இறைவன் திருவடி தேடிஇன்றே
  ஒன்றாய்க் கூடிப் பயணிப்போம்

 

 1. பக்தியுடன் நல் பண்ணிசைத்து,
  பரமனைப் போற்றிப் பணிந்திடுவோம்.

 

 1. மகிழ்ந்து அவனின் புகழ் பாடி
  மன்னன் திருவடி கூடிடுவோம்.

 

 1. கருணை நம்மேல் பெருகும்படி
  நம்பி மலரடி நாடிடுவோம்.

 

 1. அவனின் சமுகம் நாம் அண்ட
  அளித்தான் அவனே அதிகாரம்.

 

 1. நம்பிக்கையாலே நாம் பெற்றோம்
  நல்ல இந்தப் பேற்றினையே.

 

 1. வேண்டுதல் செய்யவும் அறியாத
  பேதைகளாக நாம் இருந்தாலும்

 

 1. ஆவியின் துணையும் நமக்கிருக்க
  அறிவோம் சரியாய் நாம் ஜெபிக்க.

 

 1. களிகூர்ந்து நாம் மகிழ்ந்திடுவோம்
  களிப்புடன் இறைவனைப் போற்றிடுவோம்.

 

 1. எல்லாச் செயலிலும் மனம்திறந்து
  செய்வோம் வேண்டுதல் எப்போதும்.(ஆண்டவன் கூறினான்:)

 

 1. வேண்டுதல் எதை நீ செய்திடினும்
  அடைவோம் நிச்சயம் என நம்பு.

 

 1. கேட்டது கிடைத்திடும் மகிழ்ச்சியிலே
  என் ஆனந்தம் அடைவாய் மிகவதிகம்

 

 1. இறைவனில் எப்போதும் களி கூறு
  என்னுள் ஆனந்தங் கொண்டாடு.

 

 1. ஆடிப் பாடி ஆண்டவனை
  அனுதினம் நீயும் கொண்டாடு.

 

 1. பத்திக்கு இலக்கணம் வகுப்போனாய்
  அன்பால் பக்தியை வெளிப்படுத்து.

 

 1. ஆன்மீக பெலன் நீ அடைந்திடவே
  அவசியம் தேவை பக்திவழி.

 

 1. துன்பம் சுமந்து தவிக்காமல்
  என்னிடம் வந்து இளைபாறு.

 

 1. என்போதனையைக் கைக்கொண்டால்
  என்றும் பெறுவாய் நீ அமைதி.

 

 1. என்னில் கிடைக்கும் மனமகிழ்ச்சி
  என்றும் உன்னில் நிலைத்திருக்கும்.

 

 1. ஏதும் பறிக்கா என் அமைதி
  என்றும் உன்னுடன் தினமிருக்கும்.(பக்தர்கள் கூறினார்கள்:)

 

 1. பக்தியில் கிடைக்கும் ஆனந்தம்
  சொற்களால் கூற இயலாது.(முனிவர் கூறினார்:)

 

 1. பக்தியால் பரவசம் கொண்ட நங்கை
  பாத பூஜை செய்திடவே, உயர்

 

 1. வாசனைத் திரவியம் ஊற்றி அவன்
  திருவடி தன்னை விழிநீரால்

 

 1. கழுவியே அவள்தன் தலைமுடியால்
  துடைத்துத் திருவடி சேவித்தாள்.

 

 1. அருகில் இருந்த பண்டிதரும்
  ’ ஆ ஏன் இந்த வீண் விரயம்?’

 

 1. என்று அவளைக் கண்டிக்க
  இறைவனே கூறினான் கையமர்த்தி:

 

 1. ’தன்னால் செய்ய முடிந்தபடி
  பக்தியால் என்னைச் சேவித்தாள்.

 

 1. பணமும், பக்தியும் ஒருசேரப்
  பாரில் வழிபட முடியாது.

 

 1. இறைவனுக் கென்று இழப்பதற்கு
  எதுவும் தடையாய் இருப்பதில்லை.

 

 1. பக்தியின் தன்மை இதுவென்று
  நிச்சயம் நீங்களும் அறிவீரே.

 

 1. இறைவனே செல்வமாய் இருந்துவிட்டால்
  என்றும் வறியவர் ஆவதில்லை.

 

 1. காசுமட்டுமே கடவுள் என்று
  பொருளைத் தினமும் சேர்ப்பவர்க்கு

 

 1. பக்தியின் வழியும் தெரியாது
  பரமனின் ரகசியம் புரியாது.

 

 1. பக்தியில் கிடைக்கும் மன நிறைவு
  காசு, பணத்தில் கிடைக்காது.

 

 1. கோபம் கொண்ட மனதுடனே
  வேண்டுதல் செய்ய இயலாது.

 

 1. பிறரின் பிழையை மன்னித்துப்
  பிறகு வேண்டுதல் செய்துவிடு.

 

 1. பிறர் பிழையை நீ மன்னித்தால்
  உன்பிழை இறைவனும் மன்னிப்பான்

 

 1. ஒருவரை ஒருவர் மன்னித்து
  எந்தன் அன்பை உணருங்கள்.

 

 1. பிறரின் பக்தியை இகழாமல்
  இணைந்து இறைவனைப் போற்றுங்கள்’.(முனிவர் கூறினார்:)

 

 1. எம் பெருமானால் நம்பாவம்
  இறைவன் தானும் மன்னித்தான்.

 

 1. அதுபோல் நாமும் பிறர் பாவம்
  அன்பாய் என்றும் மன்னிப்போம்.

 

 1. பக்தி தந்திடும் அன்பதனால்
  இறைவனை நாமும் வழிபடுவோம்.(ஆண்டவன் கூறினான்:)

 

 1. அமைதி தருவேன் நானுனக்கு
  அவனியும் தராத அளவிற்கு

 

 1. துன்பம் உண்டு உலகினிலே
  துவண்டிட வேண்டாம் அதுகண்டு

 

 1. அமைதி அளித்து அனுதினமும்
  நானும் காப்பேன் அருள்கொண்டு,

 

 1. புத்திக்கு எட்டா என் அமைதி
  பக்தன் அறிவான் இதுஉறுதி.(பக்தர்கள் கூறினார்கள்:)

 

 1. இறைவன் அருளும் நல்லமைதி
  என்றும் நம்மைக் காக்கட்டும்.

 

 1. சொல்லையும், சிந்தையும் தான் கடந்து
  நம்மில் நிலைக்கும் அவன் அமைதி.

 

 1. பக்தி நெறியில் நாம் நின்று
  நம்பி நாளும் முன்னேறி,

 

 1. ஆன்மீகத்தின் பெலன் கொண்டு
  அன்பின் வழியில் நடந்திடுவோம்.

 

பக்தி யோகம் என்ற நான்காம்
அதிகாரம் இத்துடன் நிறைவுற்றது.