Bhakti Gita Chapter 3

மூன்றாம் அதிகாரம்

விசுவாச யோகம்
(பக்தன் கூறினான்:)

 

 1. நம்புவோர் அன்றி மற்றொருவர்
  நாதன் அடியைப் பணிவதில்லை

 

 1. ’நம்பினோர் மட்டுமே வாழ்வடைவர்’
  திண்ணமாய் இறைவன் கூறினானே.(முனிவர் கூறினார்:)

 

 1. பார்வை யற்ற இருமனிதர்
  பார்வை பெறவும் விருப்பமுற்று

 

 1. ஐயன் அருளை நாடிவந்து
  ’ஐயா இரங்கும்’ என உரைக்க

 

 1. ’நம்பிக்கை உண்டோ உங்களிடம்’
  என்றே ஆண்டவன் கேட்டவுடன்

 

 1. நம்பியே ஐயா, நாடிவந்தோம்
  அருளும் அதனால் எங்களுக்கும்.’

 

 1. என்று பணிந்து கேட்டதுமே
  இரக்கம் உற்ற ஆண்டவனும்

 

 1. நம்பியபடியே விழி திறந்து
  பார்வை நல்கி அருள் தந்தான்.(ஆண்டவன் கூறினான்:)

 

 1. தெளிவாய்க் கண்டு உய்ந்திடவே
  வந்தேன் உலகில் ஒளியாக.

 

 1. அறிந்தே என்னைப் பின்தொடர்வோர்
  இருளில் கிடந்தினி உழலாமல்

 

 1. ஆன்ம ஞானம் அடைந்திடுவர்
  அனுதினம் ஒளியில் நடந்திடுவர்.

 

 1. இருளில் நடப்போர் வழியறியார்
  எங்கும் இடறி விழுந்திடுவார்.

 

 1. உலகின் ஒளியாய் உள்ள என்னை
  நம்புவோர் இருளில் வாழ்வதில்ல.

 

 1. இரக்கம் கொண்டு உங்களுக்கு
  ஒளியை அருள நான் இருக்க

 

 1. நம்பி என்னைப் பின்தொடர்ந்து
  உண்மை பக்தராய் மாறிடுவீர்.(முனிவர் கூறினார்:)

 

 1. உதிரப்போக்கால் உருக்குலைந்து
  செல்வம் கரைந்து சீரழிந்து

 

 1. வைத்தியம் பலப்பல செய்திட்டும்
  துன்பம் இன்னும் நீங்காமல்

 

 1. துயரப்பட்ட ஒரு நங்கை
  துணிவுகொண்டே தன் நம்பிக்கையால்

 

 1. ’ஐயன் துணியின் ஓரம் தொட
  அடைவது நிச்சயம் சுகம்’ என்று

 

 1. திண்ணமாய் மனதில் நம்பியவள்
  தொட்டாள் ஆடையின் ஓரத்தை.

 

 1. உதிரப் போக்கு உடன் நிற்க
  அடைந்தாள் சுகம் அவள் அக்கணமே.

 

 1. இரக்கம் கொண்ட ஐயனுமே
  திரும்பி நோக்கி அருள்கூர்ந்து

 

 1. ’நம்பியபடியே நலமடைந்தாய்
  மகளே செல்வாய் மகிழ்வுடனே’

 

 1. என்றே கூறி முன் ஏக, இருகரம்
  கூப்பி அவன் முன்னே, ஒரு

 

 1. தாணைத்தலைவன் தாள் பணிந்து
  ’தகுதியற்றவன் நான் ஆயினும் நீர்

 

 1. தயவாய்க் கூறும் ஒரு வார்த்தை
  என்சேவகன் இன்றே நலமடைய’

 

 1. என்றே நம்பி வேண்டி நின்றான்.
  இரக்கமுற்ற ஆண்டவனும் உடன்

 

 1. ’நம்பி நீபோ, நலமடைவான்’
  என்றே ஆறுதல் கூறியதும்

 

 1. சேவகன் அடைந்தான் முழுச்சுகமே
  துதித்துச் சென்றான் தலைவனுமே.(பக்தர்கள் கூறினார்கள்:)

 

 1. வெறுமையிலிருந்து தோற்றுவிக்கும்
  இறைவனை நம்பி நாடுவோர்க்கு

 

 1. நம்பியபடியே வரமளிப்பான் அதை
  மேலும், மேலும் அவன் வளர்ப்பான்.

 

 1. நங்கூரமாக அவன் வாக்கைக்
  கொண்டோருக்கில்லை அவநம்பிக்கை.

 

 1. கூறியபடி செய்யவல்ல நாதனை
  நம்பினால் நலம் பெற்றிடலாம்.

 

 1. ஆயினும் ஐயனே அளித்திடுவாய்
  அவநம்பிக்கையை நீக்கி என்றும்

 

 1. நம்பிக்கை என்னும் நீரூற்று
  நாளும் பெருகிப் பாய்ந்திடவே.(ஆண்டவன் கூறினான்:)

 

 1. கடுகளவேனும் நம்புவோர்க்குக்
  காரியம் வாய்க்கும் அதன்படியே

 

 1. அறவே நீக்கினால் அவநம்பிக்கை
  முடியாச் செயல் என ஒன்றுமில்லை

 

 1. நம்பிடு நீ என் வாக்கினையே
  நடந்திடும் செயலும் அதன்படியே.(அவர்களுக்கு முனிவர் கூறினார்:)

 

 1. நம்பிக்கை கொண்டோருக்கு எல்லாம் நடக்கும்
  கேட்டுப்பார் அதுபோல் நிச்சயம் கிடைக்கும்!(ஒரு பக்தன் கூறினான்:)

 

 1. மென்மேலும் உறுதிப்படச்
  சோதிக்கப் படும் நம்பிக்கை

 

 1. சோர்ந்தே அதனை இழக்காமல்
  கேட்போம் வளர நம்பிக்கை.

 

 1. சந்தேகம் கொண்டவனும்
  சஞ்சலம் கொள்வான் மனதினிலே.

 

 1. நிலையில்லாத அலைபோல
  நித்தமும் மனதில் கலங்கிடுவான்

 

 1. குந்திக் குந்தி நடப்பவனும்
  கொஞ்சமும் வாழ்வில் முன்னேறான்.

 

 1. இருமனம் தன்னில் கொண்டவனோ
  தடுமாற்றம் கொள்வான் நிச்சயமே.

 

 1. மனதில் உறுதி வந்திடவே
  தினமும் செய்வோம் வேண்டுதலே

 

 1. வரம்பு மீறிச் சோதிக்க
  ஆண்டவன் என்றும் அனுமதியான்.(மக்கள் ஆண்டவனிடம் கேட்டனர்:)

 

 1. இறைவனுக்கு உகந்த செயல்களுமே
  எதுவெனக் கூறும் தெளிவுடனே.(ஐயன் அவர்களுக்குக் கூறினான்:)

 

 1. உங்களைத்தேடி வந்த என்னை
  நம்பி வாழ்வது நிச்சயம் அவசியம்.

 

 1. கடவுளைக் கண்டவர் எவருமில்லை
  அவன் சொல் கேட்டவர் யாருமில்லை.

 

 1. என்னைக்கண்டவர் இறைவனைக் கண்டார்
  என்சொல்லில் அவனின் வார்த்தையை அறிவார்

 

 1. என்னருள் வாக்கினில் இறைவனைக் காண்போர்
  மன இருள் நீங்கி மகிமை அடைவார்.

 

 1. எமனுலகம் அவர் எதுவென அறியார்
  எரிநரகம் தன்னில் என்றும் வீழார்

 

 1. உலகின் ஒளியாய் வந்த என்னை
  உணரார்*, அடையார் முக்தி என்றும்

*உணராதார்

 1. என் அமைதி நான் அருளுவதாலே
  பாடுகள் கண்டு பயம் இனி வேண்டாம்.

 

 1. உன்தேவை எல்லாம் நானறிவேன்
  உளம் நீ வீணில் பதறிடவேண்டாம்

 

 1. கவலைப்பட்டு நீ கலங்கிடாமல்
  குறைகளைக் கூறு என்னிடமே.

 

 1. கேட்கும்முன் அருள நானிருக்க
  வீண் குழப்பம் ஏன் இன்னும் உன்னில்?

 

 1. வானத்துப்பறவைக்கும், வனம்வாழ் உயிருக்கும்
  தேவை அறிந்து புரப்பவன் நான்.

 

 1. கடல் வாழ் உயிருக்கும், நிலம் வாழ்மாந்தருக்கும்
  நித்தம் உணவும் அளிப்பவன் நான்.

 

 1. என்சித்த மின்றி ஒருமுடி கூட
  உதிர்வதில்லை இதை உணர்வாய் நன்று(பக்தர்கள் கூறினார்கள்:)

 

 1. பாரம் சுமந்தே தவித்தோர்க்குச்
  சுமைதாங்கிபோலே தோள் கொடுத்தான்.

 

 1. புவியில் வாழும் நாட்கள் எல்லாம்
  பரமனை நம்பி வாழ்கின்றோம்.

 

 1. வாக்களித்தபடி வாழ்வெல்லாம்
  கூட அவன்வர பயம் கொள்ளோம்.

 

 1. அபயம் அளிக்கும் ஆண்டவனை
  அறிவோம் அனுதின வாழ்வினிலே.

 

 1. புரப்பவன் என்ற பெயருடையோன்
  அளித்துக் காப்பான் அப்படியே.(ஆண்டவன் கூறினான்:)

 

 1. கண்காணாததை நம்புவதே
  விசுவாசம் என எண்ணப்படும்.

 

 1. காண்கின்ற அனைத்தும் நிச்சயமே
  கணநேரத்தில் மறைந்துவிடும்

 

 1. கண்ணில் தென்படாக் கடவுள்மட்டும்
  நிலைப்பது மட்டும் என்றும் நிச்சயம்

 

 1. உறுதியாய்க் கிடைக்கும் என்பதுவே
  விசுவாசத்தின்நல்ல லட்சணம்

 

 1. கண்ணில் தென்படாக் கடவுள்மட்டும்
  காணாதவற்றின் லட்சியம்.

 

 1. நிச்சயம் கொள்வாய் விசுவாசத்தில்
  லட்சியம் கொள்வாய் காணாதவற்றில்(பக்தர்கள் கூறினார்கள்:)

 

 1. இறைவனை மட்டும் நோக்குவதால்
  எங்கள் நம்பிக்கை நிறைவேறும்.

 

 1. கைவிடான் எங்களைக் கணநேரம்
  நம்பி அவன்பின் நடப்பதாலே.

 

 1. நம்பி நாங்கள் முன்னேறி
  என்றும் வாழ்வோம் இறைவனுடன்.

 

 1. எங்கள் அறிவைச் சாராமல்
  வாழ்கின்றோம் அவன் வல்லமையால்.

 

 1. நம்பியே நாடி வருவோர்க்கு
  நிச்சயம் கிட்டும் இறையாசி.

 

[இத்துடன் விசுவாச யோகம் என்ற
மூன்றாம் அதிகாரம் நிறைவுற்றது.]