Bhakti Gita Chapter 2

முக்தியும், மறுமலர்ச்சியும்.
(ஆண்டவன் கூறினான்)

 

 1. மாந்தர் முக்தி பெறவேண்டி
  மனுவாய் வந்தேன் தரவேண்டி.

 

 1. குருடன் பார்வை அடைந்திடவும்
  அடிமை விடுதலை ஆகிடவும்,

 

 1. உலகோர் தண்டனை அடையாமல்
  மீட்பு என்னில் அடைந்திடவும்,

 

 1. துன்ப பாரம் சுமப்போரின்
  துயரம் நீக்கிட நானும் வந்தேன்.

 

 1. நம்பி என்னிடம் வருபவரை
  தள்ளித் துயரம் அளிப்பதில்லை
  (முனிவர் கூறினார்)

 

 1. துயரப்பட்ட மாந்தர் பலர்
  தொடர்ந்து ஐயனைத் தேடிவர

 

 1. அவர் துயர் நீக்கி ஆறுதலாய்
  அவர்க்கு உரைத்தான் ஆண்டவனும்:

 

 1. நலமாய் உலகில் இருப்பவனும்
  நாடுவதில்லை வைத்தியனை.

 

 1. சுய நீதிதன்னில் உடையவனும்
  தேடுவதில்லை இறைவனையே

 

 1. அழைத்தேன் துயருறும் மாந்தரையே
  அவரறிவார் என் அன்பினையே’.
  (முனிவர் கூறினார்)

 

 1. பாவி என்று தள்ளிவைத்த
  மனிதன் தன்னையே தேடிச்சென்ற

 

 1. இறைவன் செயலை அறியாமல்
  கூறிநின்றார் குறை அங்கு பலர்

 

 1. அவரின் மனதின் கடினமதை
  அறிந்தே ஐயனும் கூறினானே:

 

 1. ’தேடிவந்தேன் நான் மீட்டிடவே
  பாவி எனப் புறம் தள்ளினோரை.

 

 1. அத்தகையோர் நித்தம் அழிந்திடாமல்
  அவரைக் காக்க நானும் வந்தேன்

 

 1. மனம் திருந்தும் மாந்தர் கண்டு
  விண்ணுலகோரும் மகிழ்ந்திடுவார்’.
  (முனிவர் கூறினார்)

 

 1. நோய்ப்பட்டு நொந்து கிடந்தோனை
  நம்பிக்கையோடு தூக்கி வர.

 

 1. ’மன்னிதேன் நான் உன் பாவமதை
  மைந்தனே, எழுந்து நடந்திடுவாய்.’

 

 1. என்றே கூறி இறைமகனும்
  இனிதாய் அவனைக் குணமாக்க

 

 1. துள்ளி குதித்துத் துதித்தெழுந்து
  துடியாய் நடந்து சென்றானவன்.

 

 1. பாவ வாழ்வில் பல நாட்கள்
  பழகி வாழ்ந்த பெண்ணொருத்தி

 

 1. தூர நின்று மருகித்தன்னில்
  துயரப்பட்டுப் புலம்பி நின்றாள்.

 

 1. ’போக்கிடமற்ற உன் ஆக்கினையைப்
  போக்கினேன் பெண்ணே, நானுமின்று.

 

 1. பாவம் இனிமேலும் செய்யாமல்
  பாங்குடன் வாழ்ந்திடு’ என்றுரைத்தான்.

 

 1. குஷ்ட வியாதியால் துயரமுற்றுக்
  கூனிக் குறுகி வந்து நின்று

 

 1. ’ சித்தம் உனக்கு உண்டென்றால்
  சாமி சுத்தம் ஆக்கு எனை’ என்றான்.

 

 1. அவனின் துயரம் அறிந்தவனும்
  மனதும் உருகி அவன்மீது

 

 1. தொட்டு அவனின் துயர் நீக்கிச்
  சுத்தம் ஆக்கிச் சுகமளித்தான்.

 

 1. இறுதி நாளில் தன்னுடனே
  இணைந்து தருவினில்தொங்குண்ட

 

 1. கள்வன் கதறிக் கண்ணீருடன்
  கருணை காட்ட வேண்டிடவும்

 

 1. ’இன்றே நீயும் என்னுடனே
  இருப்பாய் மோட்ச வீட்டினிலே’

 

 1. என்று கூறி அவன் துன்பம்
  நீக்கி நல்ல வரமளித்தான்.
  (அப்போது ஒரு பக்தன் கூறினான்:)

 

 1. என்னையும் கூடச் சீடனாக
  ஏற்று எனக்கும் உய்வளித்தான்.

 

 1. நிந்தனை பலமுறை நான்செய்தேன்
  நித்தமும் அவனை ஏசி நின்றேன்

 

 1. ஆயினும் அருளின் கண் திறந்து
  ஆட்கொண்டென் பிழை மன்னித்து

 

 1. பாவி என்னையும் மீட்டெடுத்துப்
  பாங்காய் முக்தி அளிக்க வந்தான்.

 

 1. பாரின் பாவம் தான் சுமந்து
  பலரை மீட்க முக்தேசன் வந்தான்.
  (உடன் ஒரு சீடன் பாடினான்)
  ஆனந்தமே

 

 1. இராகமோ தாளமோ நானறியேன்-இங்கு
  பாடலோ பண்ணுமோ கேட்டறியேன்

 

 1. நெஞ்சத்து உணர்வெல்லாம் எழுத்தாக்கி
  என் நேசனின் பாதத்தில் படைப்பதன்றி!

 

 1. யாப்பின் இலக்கணம் நானறியேன்–இங்கு
  எதுகையோ மோனையோ இணைக்கறியேன்

 

 1. ஆவியில் நான்கொண்ட அனுபவத்தை
  எந்தன் ஐயனின் பாதத்தில் படைப்பதன்றி!

 

 1. பண்டிதன் அல்ல, புலவன் அல்ல–இங்கு
  பார்மெச்சும் ஞானியோ நானுமல்ல

 

 1. பாவத்தில் வாழ்ந்த எனை மீட்டெடுத்த
  பரன் முக்தேசனின் பக்தனன்றி!

 

 1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே–இங்கு
  ஐயனின் புகழ் பாடல் ஆனந்தமே

 

 1. நாதன் பாதத்தில் தாழவீழ்ந்து
  நாளும் பணிவதே என்றும் ஆனந்தமே!

இத்துடன் முத்தியும் மறுமலர்சியும் என்ற
இரண்டாம் அதிகாரம் நிறைவுற்றது.