Bhakti Song 151

என்ன சொல்லுவேன்

என்ன சொல்லி உன்னை வாழ்த்துவேனோ
எதை எண்ணி உன்னைப் போற்றுவேனோ?

தன்னை அறியாது தாழ்ந்திருந்தேனே
தருமமின்றி உருக்குலைந்தேனே
சின்னத்தனமாகச் சிந்தனை செய்தேனே
சேரும் வழியன்றித் திகைத்திருந்தேனே

பாவம் பல செய்யப் பயப்படவில்லை
பழிபல ஏற்கத் தயங்கிடவில்லை
வாழ்ந்திட்ட வாழ்வில் உண்மை இல்லை
வள்ளளே உன்னைத் தேடவும் இல்லை

சிந்தையில் எத்தனை தடுமாற்றம் கொண்டேன்
செயலிலே எத்தனை போராட்டம் கண்டேன்
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இல்லை
சோர்வின்றி வேறெதும் காணவும் இல்லை

ஆனாலும் நீ என்னைக் கைவிடவில்லை
அறியாத போதும் தள்ளிட வில்லை
நீயாக வந்துதான் மீட்டுக் கொண்டாய்
நித்தமும் என்னைக் காத்துக் கொண்டாய்

என்ன கைமாறு இதற்கு நான் செய்வேன்
எதைத் தந்து உன்கடன் தீர்த்துக் கொள்வேன்
என்னைத் தந்தாலும் இதற்கு ஈடாமோ?
ஈடில்லா அன்பிற்கு எது இணையாகுமோ?

ஆனாலும் ஒன்று செய்ய அறிந்திட்டேனே
அதனைச் செய்ய துணிவு கொண்டேனே
வாழ்ந்திடும் எஞ்சிய வாழ்நாள் முழுதும்
நீ என்னில் வாழத் தந்துவிட்டேனே.
24-01-2013, குருகுலம், காலை, 8.45