Bhakti Song 152

வெளியில் வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு சுடு நீர் போடும்போது, ஆழ்ந்து இறைவனைத் தியானித்தபோது எழுதிய பாடல்

ஒரு கடந்த நிலை

உன்னை நினைத்திடக் காலமெது
உன் கிருபை நினைக்க நேரமெது
என்னையே அளித்திட வந்தபின்னே
உன்னை வேண்டிடத் தேவையெது

கேட்டா என்னை மீட்டெடுத்தாய்
என்னைக் கேட்டோ நீயும் உனையளித்தாய்
அறியாது உன்னை நான் வாழ்ந்தபோதும்
அன்பினால் என்னைத் தேடிவந்தாய்

தெய்வத்தை அறிந்திட ஆர்வமில்லை
தெளிவாகக் கூறிட மதியுமில்லை
ஆழ்ந்து உணர்ந்திட ஆர்வமில்லை
ஆயினும் நீயே ஆட்கொண்டாய்

சொல்லினால் என்ன வேண்டுவதோ
சிந்தையால் என்ன எண்ணுவதோ
மொழி எண்ணம் எல்லாம் கடந்துவந்து
மேலான ஒரு நிலை அடைந்த பின்னே!

08-02-2013, காலை 7.30