Bhakti Song 154

இன்று இரவு (15-02-2013) 11.30-க்கு படுக்குமுன் என் கடந்தகால வாழ்வை எண்ணியபோது ’என்னமோ ஒரு வாழ்க்கை வாழ்ந்தேன்’ என்ற வார்த்தை என் வாயிலிருந்து வந்தது. உடன் இப்பாட்டை 15 நிமிடங்களில் எழுதிய பின் படுக்கச் சென்றேன்.

154. வாழ்க்கை

என்னமோ நானும் வாழ்ந்திருந்தேன்
எத்தனை முறையோ தாழ்ந்திருந்தேன்
சின்னத் தனமாகச் செயல் புரிந்தேன்
சித்தம் கலங்கியே நிலை குலைந்தேன்

சொல்லொன்று செயலொன்று என்றபடி
சென்றதே வாழ்க்கை என் எண்ணப்படி
கொள்கை குறிக்கோள் ஏது மின்றி
வாழ்ந்திருந்தேனே என் மனதின்படி

மனதிலும் உடலிலும் போராடினேன்
மனிதரோடும் நான் வழக்காடினேன்
ஆயினும் ஒன்றிலும் வெல்ல வில்லை
அமைதி என்பதைக் காணவில்லை

கணக்கிட்டுப் பார்த்தேன் உள்ளபடி
காலமெல்லாம் செய்த குற்றங்களை
எண்ணிக்கை மிஞ்சிய அவற்றை எண்ணி
என்னையே இகழ்ந்தேன் மனம் கூசி

ஒரு நாள் உன்னிடம் ஓடிவந்தேன்
’உய்விப்பாய்’ என்றே நாடி வந்தேன்
எந்தன் குறைகளை எண்ணாமலே
ஏற்றுக் காத்தாய் உன்னருளாலே

என் குற்றம் ஏற்று நீ பாவியானாய்
என்பாவம் போக்க நீ பலியுமானாய்
சிந்திய உதிரத்தால் மீட்டெடுத்தாய்
சிலுவையில் அதற்கு நீ விலை கொடுத்தாய்

மீட்டு எனக்கு ஓரு வாழ்வளித்தாய்
உன்மேன்மை அறிய மனம்கொடுத்தாய்
பக்தனாய் வாழ அருள்கொடுத்தாய்
அதனால் மீண்டும் வாழுகிறேன்.

15-02-2013. இரவு 11.45