Bhakti Song 164

போதுமோ

உன்னைத் துதிக்கக் காலம் போதுமோ
உன்புகழ் கூறிட நேரம் போதுமோ
உன்மேன்மை அறிய அறிவு போதுமோ
உன் அன்பை உணர உள்ளம் போதுமோ

உன்கொடை எண்ண எண்ணும் போதுமோ
உன்னருள் அறிந்திட எண்ணம் போதுமோ
உன்னிரக்கம் கூற வார்த்தை போதுமோ
உன்னாட்சி அளந்திட உலகம் போதுமோ

அறிந்திட முடியாத அருளின் மேன்மையை
அறிவிக்க முடியாத இரக்கத்தின் தன்மையை
உணர்ந்திட முடியாத அன்பின் உயர்வை
உரைத்திடத் துணிந்தேன் என்ன மாயை

ஆயினும் தூரமே விலகி இராமல்
மனம் மொழி எல்லையைக் கடந்து நில்லாமல்
என்னுள் நீயே குடியும் கொண்டாய்
இதனை உணரப் பக்தியும் தந்தாய்

இந்த உண்மையின் இரகசியம் அறிந்தேன்
உலகோர் அறிய ஏட்டில் எழுதினேன்
என்னுள் அதனைப் பூட்டி வைக்காமல்’
எழுதி வைத்தேன் இந்த வார்த்தையில்

தாகம் தீர்க்கும் தண்ணீர் போல
பசியைத் தீர்க்கும் உணவைப்போல
நோயை நீக்கும் மருந்து போல
தேடிநீ வந்தாய் இரக்கத்தாலே

எனக்கு மட்டுமே நீ சொந்தமல்ல
என் தனிச் சொத்தாய் ஆனவனல்ல
உலகோர் அனைவர்க்கும் உரிமை ஆனாய்
முக்தேசனாக அவதாரம் செய்தாய்.

26-06-2013. காலை, 8.30 குருகுலம்.