Bhakti Song 165

வந்தேன் திருவடி தேடி

வந்தேன் நான் உன் திருவடி தேடி
வள்ளலே உந்தன் இரக்கத்தை நாடி
செல்வேன் எங்கு (உன்) பேரருள் நீங்கி
சொல்வாய் நீயே பக்தனுக் கோர்வழி

நானா சொன்னேன் என்னை மீட்க
நானா கேட்டேன் எனக்காய் மரிக்க
அனைத்தும் ஏனோ நீயே செய்தாய்
ஆதலால் எனக்குப் பதிலும் சொல்வாய்

தாயே தள்ளினால் சேயெங்கு போகும்
தந்தையும் மறுத்தால் கதிவென்னவாகும்
சுற்றமும் வெறுத்தால் அழிந்தே போகும்
எனக் கனைத்துமான உன்பதில் என்ன?

படரக் கொடிக்குக் கொம்பும் வேண்டும்
பறவைக்குத் தங்கக் கூடும் வேண்டும்
பார்க்கக் கண்ணுக்குக் காட்சியும் வேண்டும்
பக்தன் எனக்கு உன் மீட்சியும் வேண்டும்

மரக்கலப் பறவை வேறு புகலிடம்
பறந்து எங்கு திரிந்து தேடினும்
மீண்டும் அங்கே தங்கத் திரும்பும்
நானும் அதுபோல் வந்தேன் மீண்டும்

திருவடியன்றிப் புகலிடம் உண்டோ?
தெய்வமே உன்னைப்போல் காப்பவர் உண்டோ?
முக்தி அடையக் கதிவேறு உண்டோ?
முக்தேசன் அன்றி தெய்வம் உண்டோ?

நீஎன் தாயே நான் உன்சேயே
நீஎன் தந்தையே நான் உன் மைந்தனே
நீஎன் சுற்றமே நான் உன் சொந்தமே
நீஎன் குருவே நான் உன் சீடனே!

எனவே நம்மிடை பிரிவும் இல்லை
என்னைப் போல் அடிமை உனக்கும் இல்லை
உன்னைப் போல் ஆண்டை எனக்கும் இல்லை
அதனால் வந்தேன் திருவடி மீண்டும்

இந்த உறவை யாரே அறிவார்
எப்படிக் கூறினும் யாரே புரிவார்
சொல்லால் கூற முயல்வதும் வீணே
உள்ளம் தன்னில் இதை உணர்ந்தேனே.

27-07-2013. காலை. 7.00. குருகுலம்.