Bhakti Song 167

யாரறிவார்

உன்னாலே நான் உய்வடைந்தேன்
உலகோர் அறியா உறவறிந்தேன்
எல்லாம் இனி நீ என்றிருந்தேன்
எனதென்ற எண்ணம் அழித்துவிட்டேன்

நன்று நன்று நம் உறவு
என்றும் உள்ள பழம் உறவு
இடையில் ஏனோ இழந்திருந்தேன்
உன்னால் மீண்டும் பெற்றுவிட்டேன்

சொன்னால் யார் இதை அறிந்திடுவார்
சொல்லால் மொழியால் புரிந்திடுவார்
ஒருவரும் அறிந்திட முடியாது, அதை
உலகால் புரிந்திட இயலாது

நாம்மட்டும் அதை அறிந்திருந்தோம்
நாளும் பழகிப் புரிந்திருந்தோம்
பக்தி என்பார் பலர் அதனை
பரவசம் என்பார் சிலர் அதனை

பக்தி-முக்தி என்பதெல்லாம்
என்வரை வெறும் வார்த்தைகளே
மொழி எண்ணம் கடந்த எல்லை, என்
முக்தேசனுடன் நான் கொண்ட நிலை

ஆயினும் இதை நான் கூறிடுவேன்
அறிந்த வரையில் எழுதிடுவேன்
புரிந்து கொண்டோர் பயனடைவார்
புனிதன் திருவடி அண்டிடுவார்.

01-07-2013, காலை, 8.30, குருகுலம்