Bhakti Song 174

பாராமுகம் ஏனோ

பாராமுகம் ஏனோ ஐயா
பக்தனுக்கிரங்கி நித்தமும் அருளாமல்–பாரா

சித்தமும் கலங்குதே நித்தமும் கலக்கமே
புத்தியின் போக்கையும் சொல்லவும் போகுமோ?
அத்தனே உன்னடி அண்டிய பின்னாலும்
ஆயிரம் காரியம் அலைக்குதே வாழ்க்கையை–பாரா

எத்தனை எதிர்பார்ப்பு என்னிடம் பிறருக்கு
நித்தமும் புதுவழக்கு நிலையில்லா மனிதருக்கு
சற்றேனும் என்நிலை எண்ணியே பாராமல்
கூறிடும் வார்த்தையால் கொன்றிடும் போதிலே–பாரா

என்னதான் செய்வேன்நான் ஏதுவழி இங்குதான்
போக்கிடம் தெரியாமல் புலம்புறேன் உன்னிடம்நான்
ஓர்வழி மூடினால் பலவழி உண்டுதான்
என்றேதான் சொன்னநீ கைவிட்ட பின்புதான்–பாரா

ஆயினும் அறிந்தேனே மீளவும் ஒருவழி
அடைந்தேனே மெய்வழி பக்தியின் பெறுநெறி
திருவடி அண்டுவேன் தினம் உன்னைச் சார்ந்திடுவேன்
புறமேநீ தள்ளினாலும் ’போ’ என்றேசொன்னாலும்-பாரா

18-07-2013. காலை 8.30