Bhakti Song 176

உரிமை இல்லை உனக்கு

என்னதான் புண்ணியம் செய்தேனோ நான்
இனிய உன் அருளைப் பெறுவதற்கே
ஏதுதான் செய்வேன் நான் இனியும்
உன்னடி மறவாமல் இருப்பதற்கே

சொல்வதோ உனக்கு என்நிலைதான்
சொல்லாமல் என்னைநீ ஆட்கொள்ளவே
சொல்லிய பின்னுமே தாமதித்தால்
எள்ளுவார் உலகினர் சொல்லிவிட்டேன்

ஆயிரம் கூறுவார் அவனியோரும்
அதையும் நானும் புறக்கணித்தேன்
ஆனாலும் ஒன்றைநான் பொறுக்கமாட்டேன்
ஐயனே என்னைநீ புறக்கணித்தால்

கூறினேன் நானுமே தினம்தோறும்
கூவினேன் நானுமே கணந்தோறும்
ஆயினும் உன்செவியில் விழவில்லையோ
ஆனாலும் விடமாட்டேன் உன்னைமட்டும்

கேளாமல் இருப்பது என் விருப்பம்
என்றுமட்டும் நீ எண்ணிடாதே
அந்த உரிமை நீ இழந்துவிட்டாய்
அன்றே என்னை நீ ஆட்கொண்டதால்.

1-8-13, காலை, 9,.00, குருகுலம்.