Bhakti Song 182

இறைவனே துணை

அவனுக்குப் புறம்பாக ஆதரவில்லை
அவனன்றி ஒன்றுமே நடப்பது இல்லை
இறைவனே துணையாக இருந்த பின்னாலே
இகத்திலே நமக்குப் பயமேதும் இல்லை

பணத்தாலே பெலத்தாலே வாழ இயலாது
புறம்பான அதிகாரம் பயனேதும் தாராது
மனிதரின் துணையெல்லாம் கூடவே வாராது
மனத்தின் திண்மையால் வெல்ல முடியாது

சேர்த்து வைத்ததினால் செல்வம் உதவாது
செயலாலே வாழ்வை வெல்ல இயலாது
எவ்வளவு முயன்றாலும் இறுதித் தீர்மானம்
என்றுமே நமதாக இருக்க முடியாது

நம் கடன் அனைத்தையும் நாம் செய்தபின்பு
’நானில்லை நீயேதான் நடப்பித்து வைத்தாய்’
என்ற எண்ணம் இருந்தாலே போதும்
இறைவனே இருப்பான் துணையாக என்றும்

11-08-2013. காலை. 9.00