Bhakti Song 415 – உன்னில் வாழவேண்டும்

இலக்கணம் கற்கவில்லை

இலக்கியம் படித்ததில்லை

இதயத்தின் எண்ணங்களை

எழுதிக்காட்டத் தெரியவில்லை

 

உன்முகம் பார்த்ததில்லை

உன்னைமுற்றும் அறியவில்லை

உளமார உன்னைநானும்

உண்மையாய்த் தொழுததில்லை

அடிபணிந்து வரவில்லை

அன்புகாட்ட தெரியவில்லை

அமைதியாய் உன்னையெண்ணி

என் என்பு உருகவில்லை

 

பக்திபண்ணத் தெரியவில்லை

பாவமுற்றும் நீங்கவில்லை

பாவியை மீட்டுக்கொண்ட

உன்பண்புமே புரியவில்லை

 

ஒன்றுமில்லா ஏழையானேன்

உன்னையறியா பேதையானேன்

உய்யும்வகை அறிந்திடாமல்

என்போக்கில் வாழ்ந்திருந்தேன்

 

அறியாத காலத்தை

அன்புகொண்டு மன்னித்தாய்

அண்டிநான் வந்தபோது

ஆட்கொண்டு உய்வித்தாய்

 

உள்ளபடி வந்திடவே

ஊக்கமதை நீயளித்தாய்

உன்பதம் அடைந்தபின்னே

உள்ளமதை தெளிவித்தாய்

 

இனியென்ன அறியவேண்டும்

எதையெண்ணி கலங்கவேண்டும்

என்னையே தந்துநானும்

உன்னில்மட்டும் வாழவேண்டும்

 

28-4-16, மத்திகிரி, மதியம் 2.30