Bhakti Song 416 – இழந்து பெற்றேன்

என்னிடம் எதிர்பார்த்து

ஏமாந்து போகாதே

என்மீது குறைசொல்லி

ஓய்ந்துமே போகாதே

இல்லாத என்னிடம்

கேட்டென்ன லாபம்

உள்ளதும் இழந்தேனே

என்நிலை பாவம்

இன்நிலை அறிந்தபின்

ஏனிந்த வம்பு

உள்ளதைக் கூறினேன்

சொல்வதை நம்பு

புரியாதவன் போல

நடித்தென்ன செய்ய

புரிந்துதான் செய்கிறாய்

வீணிலே வம்பு

 

என்தன்மை முன்பே

உனக்கும் தெரியாதா

என்னென்ன இழந்தேன்

உனக்கும் புரியாதா

அறிந்தேதான் அழைத்தாய்

அதனாலே வந்தேன்

ஆயினும் கேட்கிறாய்

நானென்ன செய்வேன்

 

மனமென்ற ஒன்று

இருந்தது முன்பு

அதைத்தானே தந்தேன்

உன்னிடம் அன்று

அதனுடன் மற்றவை

உனதான பின்பு

எதை எதிர்பார்க்கிறாய்

அதைமட்டும் சொல்லு

 

உனக்கு தந்ததை

எனதென்று சொன்னேனா

அடிமை ஆனபின்

விடுதலைக் கேட்டேனா

கைகட்டி நின்று

சேவகம் செய்தேனே

கட்டளை எதிர்பார்க்கும்

கடையனாம் நானே

 

ஒருசொல் கூறிட

ஓடி வருவேனே

உன்சித்தம் எதுவோ

அதன்படி செய்வேனே

சன்னதி விட்டு

சற்றும் அகலேனே

சரண் அடைந்தபின்

மீறுதல் அறியேனே

 

இதைவிட உனக்கு

எப்படிச் சொல்ல

இதனினும் தாழ்மை

எப்படிச் செய்ய

இப்போ புரிந்தது

நீயெதிர்ப் பார்ப்பது

அதுமட்டும் வேண்டாம்

சொல்வதைக் கேளு

 

மீட்ட உரிமையால்

கேட்கச் சொல்கிறாய்

மகவென்ற உறவுடன்

வரவும் சொல்கிறாய்

தாயிடம் ஓடும்

சேயைப் போல

தயக்கம் என்னிலே

நீக்கச் சொல்கிறாய்

 

எல்லா உறவும்

நீயே ஆனபின்

எதனைச் சொல்லி

வந்தால் என்ன

உனது எனது

என்றான பின்னே

இதைத் தானே

நீ யெதிர்பார்ப்பது

 

இதுபோல் அதிசயம்

கண்டதும் உண்டோ

இறைவனே சொந்தம்

ஆனதும் உண்டோ

இழந்ததை மீட்டு

அளித்ததினாலே

இதனிலும் மேன்மை

வேறெங்கும் உண்டோ

 

இதைத்தான் என்னிடம்

எதிர் பார்த்தாயோ

இந்தக் குறையை

நீக்கச் சொன்னாயா

எல்லாம் எனக்கே

மீண்டும் தந்திட

உன்னையே தரவேண்டி

மீண்டும் வந்தாயோ

 

29-4-16, மத்திகிரி, இரவு, 11.45