Bhakti Song 417 – அழுதால் குறையும்

அழுதால்தான் தீரும்

இந்த பாரம்

யாரிடம் புலம்பி

என்ன லாபம்

போனவர் வந்திடார்

புரிந்திட்ட போதும்

இழப்பைத் தாங்கிட

எவராலே முடியும்

 

ஆண்டுகள் ஓடி

மறைந்திடக் கூடும்

அத்துடன் நினைவுகள்

தேய்ந்திடக் கூடும்

ஆயினும் வாழ்ந்த

உறவு மட்டும்

இடையிடை வந்து

வெறுமையைக் காட்டும்

 

உடலும் ஒருநாள்

மறைந்து போகும்

உறவு மட்டும்

நிலைத்து நிற்கும்

ஏதோ ஒருவிதம்

தலைமுறை தோறும்

உறவின் அருமை

தொடர்ந்து நிற்கும்

 

இந்த மேன்மையும்

இறைவனே தந்தான்

மானுடம் வாழ்ந்திட

உறவினைச் சமைத்தான்

தொடர்ந்து வந்திட

மனிதரை இணைத்தான்

தலைமுறை தலைமுறை

வாழ வைத்தான்

 

சென்ற தலைமுறை

நினைவில் இல்லை

வரும் தலைமுறை

காண்பதும் இல்லை

நம் தலைமுறை

வாழ்ந்திடும் உறவில்

தலைமுறை இணைய

பாலம் அமைத்தான்

 

மரணம் மூலம்

பிரிவினை வைத்து

மானுடம் தொடர

விதிஒன்று வைத்தான்

அந்த பிரிவின்

பாரம் நீங்க

அழுது பார்க்க

மனதும் வைத்தான்

 

உறவும் பிரிவும்

ஒன்றுடன் ஒன்று

இரண்டறக் கலந்து

பின்னிப் பிணைந்து

இன்ப துனபம்

இரண்டிலும் வைத்து

இங்கே வாழ

நம்மை படைத்தான்

 

30-4-16, காலை, 11.00, மத்திகிரி