Bhakti Song 474 – கடன்பட்டேன்

மைமாறு இல்லாத கடன்பட்டேன் நானே

கணக்கைத் தீர்க்க இயலாமல் தானே

எதைத் தந்தாலும் ஈடிணையாகுமா

எனதொன்றும் இல்லாமல் தந்திட முடியுமா

 

பரம்பொருளாக பாருல காண்டாய்

படைத்துக் காத்து பேணியே வந்தாய்

மீறினபோதும் மன்னித்து ஏற்றாய்

மீளாப் பழியை எமக்காய் சுமந்தாய்

 

நாங்கள் அறிந்திட உன்நிலைத் துறந்தாய்

நாங்கள் புரிந்திட எம்முன் வாழ்ந்தாய்

பேதம் இன்றி பணிவிடை செய்தாய்

பேதமை போக்கி ஞானம் தந்தாய்

 

எம்மை மீட்க உன்னையே தந்து

எமக்காக உன்னையே பணயமாய் வைத்து

தருவினில் ஏறி தன்னையே மறுத்து

மீட்பையும் தந்தாய் எம்மையே நினைத்து

 

இவற்றுக் கீடாக எதைத் தருவேன்நான்

என்னை மீட்டதால் உனதான பின்னே

கைமாறு எதிர்பார்த்து நீசெய்யவில்லை

ஆகையால் கடன்தீர்க்க எனக்கியலவில்லை

 

சிலகடன் தீராமல் இருப்பதே நல்லது

சொந்தமுனதானபின் எப்படித் தீர்ப்பது

கொடுக்கல்-வாங்கலில் கடனெங்கு வந்தது

கடன்தீர்த்து விட்டால் சொந்தம் என்னாவது

 

மத்திகிரி, 22-7-16, மதியம் 3.00