Bhakti Songs 301-310

301 இதுமட்டும் உறுதி

 

வேண்டாம் இந்த வீண் விளையாட்டு

வேடிக்கை யல்ல நான்சொல்வதைக் கேளு

நாளும் மனதுடன் போராடு வோர்க்கே

நன்கு புரியும் நான்படும் பாடு

 

சிந்தையில் ஆயிரம் தத்துவக் கேவிகள்

சித்தத்தை மயக்கும் பலப்பல எண்ணம்

விடை தெரியாத வினோதக் கேள்விகள்

விடை தெரிந்தாலும் ஏற்காத மனது

 

எவர்கூறும் பதிலும் இறுதியாய் இல்லை

ஏற்பதா மறுப்பதா புரியவும் இல்லை

என்னிடம் அதற்கு விளக்கமும் இல்லை

நீயன்றி எனக்கு விடைவேறு இல்லை

 

நல்லவேளை நீ கைவிட வில்லை

நான் என்னசெய்தாலும் புறப்பது இல்லை

இறங்கியே என்னை நீயுமே மீட்டாய்

இறுதிவரையில் நீயே காப்பாய்

 

இந்த விடைஒன்று மட்டுமே அறிவேன்

இதையே கைக்கொண்டு நானும் உய்வேன்

இதை உணர்ந்தபின் நீதரும் அமைதி

என்னையும் காக்கும் இதுமட்டும் உறுதி.

 

30-5-15, குருகுலம், காலை. 6.15

 

302 ஓயாத கூச்சல்

 

உள்ளாக என்னைப் பார்த்து

உன்னுள்ளே என்னைப் பார்த்து

புறம்பான செயல்களை நான்

புறப்பதும் எப்போதோ?

 

கண்கண்ட காட்சிப் பார்த்து

கருத்துக்கள் பலவும் கேட்டு

தேவையற்ற எண்ணம் கொண்டு

தெளிவற்று வாழ்கின்றேன்

 

ஆரவாரம் அலையாய் மோத

அவற்றுடன் நானும் சேர்ந்து

ஓயாமல் கூச்சல் போட்டு

உலகிடை வாழ்கின்றேன்

 

தெளிவற்ற சிந்தை கொண்டு

தெரியாத வழியைத் தேடி

தொடர்பற்று உன்னோடு

தொய்ந்துமே போகின்றேன்

 

என்நிலை அறிந்தபின்னும்

ஏண் இந்தவீண் மொளனம்

தடுத்து ஆட்கொண்ட உன்

தயவுமே இன்னும் காணும்

 

போதும் போதும் புறக்காதே

புலம்பிநான் தவிக்காதே

வழக்கம்போல் நீயேவந்து

வாழ்விக்க வேண்டுகின்றேன்

 

2-6-15, குருகுலம், காலை, 6.05

303 அன்றாடம் அளப்பவன்

 

காலையில் எழுந்து கடவுளைப் போற்றுவோம்

கருத்தை அவனுள் வைத்தே மகிழ்வோம்

காத்திடுவான் நம்மை கண்மணிப்போல்

கைபிடித்துச் செல்வான் நம்மையும் அதுபோல்

 

ஒவ்வொரு நாளும் உருண்டே ஓடினும்

அதுபோல நம்வாழ்வும் விரைந்தே ஓடினும்

நிலையாக நிற்பான் நம்மையும் காப்பான்

நிலையில்லா வாழ்வில் நங்கூரமாவான்

 

நேற்று இன்று நாளை என்று

நிமிடமாய் ஓடி வாழ்க்கையும் முடியும்

நிரந்தரமாய் நம்மை தம்முடன் சேர்ப்பவன்

நிழலடி தன்னையே நிலையாக வைப்போம்

 

ஒன்றுக்கும் குறைவில்லை ஒன்றியிலும் குறையில்லை

அன்றாடம் அளப்பவன் நம்முடன் உளவரை

அருளினை பெறவேண்டி அண்டியே அவனடி

அனுதினம் வைப்போம் சென்னியில் மலரடி

 

இதனிலும் இனிமை எதனில் உண்டு

இம்மைக்கும் மறுமைக்கும் அவனருள் உண்டு

இந்த உண்மையை மனதினில் கொண்டு

தொழுதிடும் நமக்கு பேரருள் உண்டு

 

3-6-15, குருகுலம், காலை 6-05

 

  1. உண்மை புரியும்

 

இத்தனை கிருபை எனக்கும் செய்தாய்

இதற்கு மேலாக நீயென்ன செய்வாய்

செத்தவனாகி திரிந்தேன் உலகினில்

தேடி நீவந்து என்னையும் மீட்டாய்

 

உத்தம குணமின்றி உறுதி எனிலின்றி

உடலே நிஜமென உலகில் வாழ்ந்தேன்

நித்தமும் சுகம்பல தேடியே ஓடி

கானல்பின் ஓடிய மான்போலும் ஆனேன்

 

கண்ட சுகமெல்லாம் கனவுபோல் மறைய

கதறினேன் என்னில் உண்மையை அறிய

ஓடினேன் தேடினேன் அதனையும் அடைய

உருகுலைந்து போனேன் உள்ளமும் உடைய

 

திசையறியாது திகைத்தே களைத்தேன்

திக்கே தெரியாத காட்டில் தவித்தேன்

தடமே காணாமல் தடுமாறித் திரிந்தேன்

தப்பிக்க வழியன்றி மயங்கியே வீழ்ந்தேன்

 

கண்திறந்தபோது உன் கரத்தில் கிடந்தேன்

களைத்த எனுடலை உன்மடிமீது கண்டேன்

திகைத்து எழுந்து உன்தோளில் சாய்ந்தேன்

ஏறிட்டுப் பார்க்க உன்திருமுகம் கண்டேன்

 

“யார் நீ” என்று கேட்கவும் தெரியாது

“எப்படி மீட்டாய்” என்பதும் புரியாது

சட்டென வீழ்ந்து உன்தாளினைப் பிடித்தேன்

அதைவிட்டுப் பிரியாது இதுவரை கிடந்தேன்

 

மீட்ட உனக்கே காத்திடத் தெரியும்

காத்திட்ட உனக்கே கரைசேர்க்கத் தெரியும்

கரைசேர்த்த உனக்கே உடன்வரத் தெரியும்

உடன்நீவர எனக்கு உண்மையும் புரியும்

 

அன்று தொடங்கி இன்று வரையில்

அறியத் தொடங்கினேன் கிருபையை மனதில்

அதற்கு மேலாக ஒன்றையும் அறியேன்

ஐயனே உன்னடியன்றி வேறொன்றும் வேண்டேன்.

 

15-6-15, குருகுலம், மாலை. 7.30

 

 

  1. ஒளடதமாவான்

 

அமைதியாய் இருந்து

ஆன்மாவில் நினைந்து

இதயத்தில் நிறுத்தி

ஈசனைத் தேடு

உடலைத் துறந்து

ஊக்கத்தை அடைந்து

என்றுமே அவனை

ஏங்கியே தேடு

ஐயமே வேண்டாம்

ஓடியே வருவான்

ஓலத்தைக் கேட்டு

ஒளடதமாவான்

மனதில் நிறைந்து.

 

18-6-15 மத்திகிரி, மதியம் 2.40

 

 

  1. அமைதி காணவேண்டும்

 

எனக்குள்ளாக உன் அமைதிவேண்டும்

என்னுள்ளே நீநிறைய வேண்டும்

எந்த நிலையில் நானிருந்தாலும்

என்றும் உன்னிலே வாழ்ந்திடவேண்டும்

 

புறம்பே ஆயிரம் நிகழ்ந்த போதும்

புலன்கள் ஓய்வின்றி அலைந்த போதும்

சஞ்சலம் கொண்டு மனம் தவித்த போதும்

சன்னிதி வந்து நின்றிட வேண்டும்

 

உள்ளம் கலங்கியே தவித்த போதும்

உணர்ச்சி பொங்கி அலைகழித்தபோதும்

சித்தம் குழம்பி மயங்கிய போதும்

சற்றும் தயங்காது உன்னிடம் வரவேண்டும்

 

ஓசைகள் பல கேட்ட போதும்

ஓய்வின்றி செயல்கள் செய்த போதும்

ஓடியாடி நான் களைத்த போதும்

உன்னடியில் அமைதி காணவேண்டும்

 

18-6-15 மத்திகிரி, 2.50

 

 

307 பிரிவை ஏற்போம்

 

எவர் வந்தாலும் எவர் போனாலும்

என்றுமே இருப்பது இறைவன் மட்டுமே

எவர்வந்து தாங்கினும் எவர்விட்டுப் போயினும்

நம்முடன் இருப்பது அவன்கரம் மட்டுமே

 

நிற்பது அனைத்தும் வீழும் ஒருநாள்

சேர்ப்பது அனைத்தும் சிதறும் ஒருநாள்

பிறப்பவர் அனைவரும் போவார் ஒருநாள்

இப்புவி வாழ்வு முடியும் ஒருநாள்

 

மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று

மற்றவை மாறுவது அனைவர்க்கும் நன்று

பழையன போனால்தான் புதியதும் வந்திடும்

பலருக்கும் அதனால் பயனும் சேர்ந்திடும்

 

போட்ட விதையும் செடிப் பயிராகி

பூத்து காய்த்து பயன்தருவது போல்

புவியில் மனிதர் வாழ்வும் கூட

புதுப்புது வடிவமாய் பொலிந்து பலன்தரும்

 

இந்த உண்மை ஏறுக் கொண்டு

“எங்கு சென்றாலும் வாழ்க நன்று”

என்று கூறி பிரிவை ஏற்போம்

இறைவன் துணைகொண்டு வாழ்ந்து முடிப்போம்

 

 

7-7-15, மத்திகிரி, மதியம் 2.45

 

 

308 நிறைவுடன் வாவோம்

 

வருவதை ஏற்போம்

வாழ்ந்து முடிப்போம்

எதிர்காலம் எண்ணி

ஏங்கித் தவிக்காமல்

நிகழ்காலம் தன்னில்

நிறைவுடன் வாவோம்

 

மரத்தை வைத்தவன்

தண்ணீர் உற்றுவான்

மனிதரைப் படைத்தவன்

அளந்து கொடுப்பான்

உருவாக்கித் தந்தவன்

உறுதியாய் காப்பான்

 

கல்லினுள் தேரைக்கும்

கருப்பையின் உயிர்க்கும்

ஆழ்கடல் மீனுக்கும்

ஆகாயத்துப் பறவைக்கும்

அளப்பவன் எவனோ

அவனே காப்பான்

 

இதை உணர்ந்தோரோ

நிம்மதி பெறுவர்

ஏங்கித் தவிப்போரோ

சஞ்சலம் கொள்வர்

என்பதே உண்மை

இதனை அறிவோம்

 

12-7-15, மத்திகிரி, மதியம் 2.45

 

309 ஓரு வேண்டுதல்

 

உன்னிடம் அமர்ந்து உரையாட வேண்டும்

உன்னடி அமர்ந்து கேட்டிட வேண்டும்

உன்வார்த்தை அறிந்து ஒழுகிட வேண்டும்

உன்னடியானாக வாழ்ந்திட வேண்டும்

 

சிந்தையில் உன்னையே நிறைத்திட வேண்டும்

சித்தத்தை உன்னிலே வைத்திட வேண்டும்

பக்தியால் புத்தியை புடமிட வேண்டும்

பக்தனாய்ப் பணிவுடன் வாழ்ந்திட வேண்டும்

 

தன்னையே ஒருத்து தாழ்த்திட வேண்டும்

தனிமையில் உன்னிமையை உணர்ந்திட வேண்டும்

தமியனிடம் நீயும் தங்கிட வேண்டும்

தத்தளிக்கும் மனதை ஆட்கொள்ள வேண்டும்

 

உள்ளமும் உன்னிலே கரைந்திட வேண்டும்

உணர்வுடன் உன்னுடன் ஒன்றிட வேண்டும்

உணர்ச்சியும் பொங்கி அலைகழிக் காமல்

ஊக்கமாய் உன்னையே நோக்கிட வேண்டும்

 

13-7-15, மத்திகிரி, 2.45 மதியம்

 

310 உண்மை ஒளி

 

 

 

அருளானந்தரின் அருளுரைகள் (யோவானின் நற்செய்தி)

 

தோற்றம் முதலே இருந்த வார்த்தை

தொன்மையில் தெய்வமாய் நின்ற வார்த்தை

தெய்வம் தன்னுடன் இளங்கிய வார்த்தை

தெய்வமுடன் இணைந்து நின்ற வார்த்தை

தோன்றிய அனைத்தும் அவன்மூலம் வந்தது

அவனன்றி ஒன்றுமே தோன்றாமல் நின்றது

அவனுள்ளே ஜீவன் நிறைவாக இருந்தது

அதுவே மனிதர்க்கு ஒளியாக நின்றது

இருளிலே ஒளிரும் அவ்வொளிதன்னை

இருளும் பற்றாது இருந்தது உண்மை

அவ்வொளி தன்னை அனைவரும் நம்ப

அதற்கு சாட்சியாய வந்தான் (ஒரு)தூதன்

இறைவனே அனுப்பி வைத்தான் அவனை

“அவதூதன்”* என்ற நாமம் கொண்டோனை

உலகத்தில் தோன்றிய மனிதன் எவனையும்

ஒளிர்ப்பிக்கும் மெய்யான ஒளி தன்னையும்

அவ்வொளி தானே இல்லாமல் அவனும்

அதற்கு சாட்சியாய் வந்தானே தானும்

* “அவதூதர்கள்” என்பவர்கள் ஓரிடத்தில் இல்லாமல், சமுதாய (உடை, உணவு போன்ற பல) நியமங்களை கைக்கொள்ளாமல் வாழ்ந்து துறவிகள்].

அதிகாரம் 1:1-9 [15-7-15, மத்திகிரி, மதியம் 2.30