Bhakti Songs 311-320

311. தயவுண்டு அறிவேனே

உன்னையே நினைப்போர்க்கு

உன்னடி வருவோர்க்கு

ஒன்றிலும் குறைவில்லை

உணர்ந்துநான் சொன்னேனே

 

தன்னையே மறப்போர்க்கு

தன்நிலை மறுப்போர்க்கு

தன்னையே தருவோர்க்கு

தயவுண்டு அறிவேனே

 

ஆத்திரம் கொண்டோர்க்கு

அவசரம் உடையோர்க்கு

அமைதி அற்றோர்க்கு

அருளில்லை என்பேனே

 

பொறுமை உடையோர்க்கு

பொறுத்துப் போவோர்க்கு

பொறுப்பை அறிந்தோர்க்கு

பெலனாவாய் அறிவேனே

 

குறையே காண்போர்க்கு

குறைசொல்லி பிழைப்போர்க்கு

குணம்காண மறுப்போர்க்கு

நலமில்லை புரிந்தேனே

 

இவையனைத்தும் கொண்டேனே

ஆதரவிழந்தேனே

ஆனாலும் தள்ளாதே

என்றே வந்தேனே

 

முறையிது ஆகுமோ

முனிவதும் தகுமோ

முறையிடும் அடியேனை

தள்ளுதல் நியாயமோ?

 

எங்குநான் போவேன்

எவரிடம் கூறுவேன்

என்னநீ சொன்னாலும்

உன்னடி விலகேன்

 

19-7-15, நடுஇரவு 12.15

 

312 கிளியே

 

தன்னையே தருவோனை

தாங்கியே அருள்வோனை

தெண்டனிட்டு பணிவேனடி–கிளியே

தினம் தினம் துதிப்பேனடி

 

உய்விக்க வந்தவனாம்

நாமுய்யத் தந்தவனாம்

உலகையே காப்பவனை–கிளியே

உவந்தே வாழ்த்துவேனடி

 

அன்றாடம் அளப்பவனாம்

அருள்தந்து காப்பவனாம்

அன்பருக்கு எளியோனை–கிளியே

என்புருக பாடுவேனடி

 

எளியவர்க்கு ஏற்றவனாம்

எளிமைகொண்டு வந்தவனாம்

எல்லோர்க்கும் ஈசனடி–கிளியே

என்று சொல்லி போற்றுவோமடி

 

தருவினில் மாண்டவனாம்

தன்னைத்தந்து மீட்டவனாம்

தரணிக்கே ஒருமீட்பனடி–கிளியே

தம்பிரானை பணிவோமடி

 

என்னசொல்லி வாழ்த்தினாலும்

எப்படி போற்றினாலும்

என்றுமே மாறானடி–கிளியே

என்னுள்ளே நிலைப்பானடி

 

21-7-15, மத்திகிரி, 2-40 மதியம்

 

 

313 வாழ்வேன் அருளாலே

 

நீசெய்த நமைகள் கொஞ்சமோ சொல்ல

நித்தம் அருளும் அந்த மேன்மையை

நெஞ்சாற நினைக்கிறேன் என் ஐயனே

நேசமாய் பணிகின்றேன் நானும் உன்னையே

 

கொஞ்சமல்ல நான் செய்த குற்றம்

குறைகளை எல்லாம் சொல்லவும் அஞ்சும்

குணம் கொண்டே தினம் வாழ்கின்றேனே

உன்னிடம் அதை முறையிட வந்தேனே

 

என்னுள்ளே நானும் கூசியே நின்றேன்

என்னையே நானும் ஏசியே வந்தேன்

ஏதும் செய்ய இயலாமல் உன்னிடம்

ஏக்கம் கொண்டு மீண்டும் வந்தேன்

 

போனதை எண்ணி புலம்பினாலும்

புழுதியில் அமர்ந்து வருந்தினாலும்

பயனில்லை உணர்ந்தே மீண்டும்

பதம் அடைந்து பணிவேன் என்நாளும்

 

மன்னித்து நீ மீட்டுக் கொண்டாய்

மனதார என்னை ஏற்றுக் கொண்டாய்

அதனாலே இனிமேலே தினம் தினம்

வாழ்வேன் உன் அருளாலே மீண்டும்

 

23-7-15, மத்திகிரி, காலை 5.30

 

 

314 உபசாரம் செய்வேனே

 

மொளனம் என்ற மொழியாலே பாடி

மனம் என்ற வீணையை மீட்டி

சிந்தனையின் ஓட்டத்தில் தாளமும்போட்டு

தினம் பாடுவேன் உன்மீது பாட்டு

 

சதிராடும் ஊளத்தில் மேடையிட்டு

ததும்பும் உணர்வுடன் ஆட்டம் போட்டு

தந்ததம் தந்ததம் என்று முழக்கமும் மிட்டு

நானும் ஆடுவேன் ஆனந்தக் கூத்து

 

இசையுடன் இனிய தமிழையும் சேர்த்து

இன்னமுதம் என்ற அன்பில் குழைத்து

பக்தியின் பரவசத்தில் உன்னையும் அழைத்து

பாங்குடன் அளிபேன் என்னையும் சேர்த்து

 

இதனினும் நல்ல உபசாரம் ஒன்று

எங்குநீ பெறுவாய் சொல்லதை நன்று

ஏற்றுக் கொள்வாய் இதனைநீ என்று

ஏங்கி நான்வந்தேன் ஏழையும் இன்று

 

ஐயனின் திருப்பாதம் சிரம்மீது கொண்டு

எத்தனை உபசாரம் செய்வேனோ என்று

அரைகட்டி உன்முன்னே பணிவாக வந்து

எதிர்பார்த்து பணிவுடன் காத்திருக்கும் போது

 

வாசலில் நின்றுநீ தட்டவும் வேண்டுமோ

“உள்ளேவா” என்றுநான் சொல்லவும் வேண்டுமோ

ஆவலுடன் உன்வரவை எதிர்பார்க்கும் அடிமைக்கு

இதனினும் ஆனந்தம் வேறெதும் வேண்டுமோ?

 

23-7-15, மத்திகிரி, 11.45 இரவு

 

 

315 மேன்மை வழி

 

என்கோபம் பிறரை ஒன்றும் செய்யாது

என்நீதி இறைவனின் நீதியைக் காட்டாது

சுயநீதிக் கொண்டுநான் குறைகாணும் போது

என்கண் உத்திரம் எனக்கும் தெரியாது

 

அருகினில் நெருங்கினால் நெருப்பும் மிகச்சுடும்

மிகவும் உரசினால் பாதிரம் ஓசையிடும்

தூரத்துத் தாளமோ காதிற்கு இனிதாகும்

சற்றே விலகினால் உறவும் சுகம்தரும்

 

விட்டுப் பிடித்தால்தான் உண்மையும் விளங்கும்

இருபுறம் இழுத்தால் நுலும் அறுகும்

விட்டுக் கொடுப்பது எவரென்ற கேள்விக்கு

சட்டென பதிலோ “பிறர்” எனத்தான் வரும்

 

முதிர்ச்சி அடைந்தோரும் முரண்டு பிடிக்கார்

முதுமை அடைந்தோரும் விட்டே கொடுப்பார்

“துள்ளுகின்ற மாடு பொதிசுமக்கும்” என்பதை

தன்வாழ்வின் மூலம் எவரும் அறிவார்

 

இளம்கன்றோ என்றும் பயமே அறியாது

இளமைக் காலத்தில் பிறர் சுமை புரியாது

ஆயினும் தேகம் ஒடுங்கிடும் போது

ஆட்டம் போட யாராலும் ஆகாது

 

பிறர்க்கு வருவது தனக்கும் வருமென்று

புரிந்து கொண்டோரும் குறைகாண மாட்டார்

இறுதி வரையில் எதுவும் மாறாது

என்று நினைப்போரும் சடுதியில் விழுவார்

 

கோபம் கொண்டாலும் பாவம் செய்யாது

குற்றம் இருந்தாலும் குணம்காணப் பழகி

விட்டுப் பிடித்துத் தட்டிக் கொடுத்து

வாழ்வது அன்றோ மேன்மை வழியாகும்

 

27-7-15, மத்திகிரி, மதியம் 2.30

 

 

316 பாடல் புணைந்தேன்

 

உன்னையே முன்நிறுத்த

உன்கிருபை வழிநடத்த

என்னையே தந்தேனே நான்–என் இறைவா

என்னுடன் நீ இருப்பாயப்பா

 

ஆனந்தம் மேலிடவே

ஆர்வமும் பொங்கிடவே

ஊக்கமுடன் வந்தேனே நான்–என் தலைவா

உடன் நீயும் வருவாயப்பா

 

உன்னருளும் வழிகாட்ட

உன்வேதம் துணைக் கூட்ட

உவந்தே தொழுதேனே நான்–என் துணைவா

உவப்புடன் ஏற்பாயப்பா

 

தொண்டருடன் கூடிக்கொள்ள

தொழுது உன்னைப் பாட்டிக்கொள்ள

புதியபாடல் புணைந்தேனே நான்–என் முதல்வா

பரிவுடன் காப்பாயப்பா

 

என்ன சொல்லி போற்றினாலும்

ஏது சொல்லி வாழ்த்தினாலும்

என்றும் அடிமையானே நான்–என் ஆண்டவா

ஆட்கொண்டு அருள்வாயப்பா

 

28-7-15, இரவு 11.10

 

 

317 வேறென்ன செய்ய?

 

பிறரல்ல பொறுப்பு

என்மன நிலைக்கு

வெறுப் பொன்றுமில்லை

எவர்மீதும் எனக்கு

தவறெனப் படுவதை

நான்சொல்லும் போது

புலப்படவில்லை அதை

கூறும்வழி எனக்கு

 

நறுக்கென்று கூறினால்

நொறுங்கிடும் மனது

நயமுடன் கூறினால்

அலட்சியம் பிறர்க்கு

எப்படி போனால்

இனியென்ன எனக்கு

எனக்கூறும் மனது

இல்லை எனக்கு

 

தலையிட்டுக் கொண்டாலே

தாங்காது பாரம்

தப்பிக்கும் வழியும்

எதுவும் காணும்

எதுவரை முடியுமோ

அதுவரை சுமக்கணும்

முடியாமல் போனால்

விலகிக் கொள்ளனும்

 

சுமக்கவும் முடியாது

ஒதுக்கவும் இயலாது

இடையில் தவித்திடும்

நிலையும் இப்போது

நடப்பது நடக்கட்டும்

நானென்ன செய்ய

நடத்துர அவனன்றி

வேறென்ன செய்ய?

 

29-7-15, மத்திகிரி, மதியம் 2.50

 

 

318. திரிசங்கு

 

ஏனிந்த பாராமுகம்

ஏனிந்த தாமதம்

எதற்கெடுத்தாலும்

வேண்டாம் வீண்கோபம்

 

வருவேன் எனத்தெரியாதோ

வாடிக்கை மறந்தாயோ

எதிபார்க்க வைப்பாயோ

இதென்ன வேடிக்கையோ

 

உறவென்று சொல்லிக்கொள்ள

உள்ளாக அன்புவைக்க

என்னைவிட்டால் யாருண்டு

இதற்கு பதிசொல்லு

 

ஆயிரம் கவலைகள்

ஆயிரம் வேலைகள்

அவற்றிடை உன்னையும்

நினைப்பதே பெரும்பாடு

 

உன்னைப்போல் இருந்திடவே

உண்மையில் ஆசை

என்னைப்போல் வாழ்ந்தால்

இதனைநீ புரிவாய்

 

முழுமையாத் துறக்காமல்

முனைந்துமே ஏற்காமல்

திரிசங்கு போலவே

தொங்குறேன் வாழ்விலே

 

இந்நிலை உணர்ந்துகொண்டு

என்துன்பம் புரிந்துகொண்டு

இன்னும்கொஞ்சம் இருந்திடு

என்னையும் பொறுத்திடு.

 

3-8-15, மத்திகிரி. 2.15 மதியம்

 

 

319. உன்தொண்டனாய்

 

நன்மைகள் மட்டுமே எண்ணிடுவேன்

நல்லதை மட்டுமே செய்திடுவேன்

நன்றியுடன் மட்டும் வாழ்ந்திடுவேன்

பிறர் நலம் பெற நானும் உழைத்திடுவேன்

 

உண்மையை மட்டுமே உணர்த்திடுவேன்

உள்ளதை மட்டுமே சொல்லிடுவேன்

உள்ளொளி பெருக வந்திடுவேன்

அதை உன்னிடம் மட்டுமே கண்டிடுவேன்

 

எதிர்மரை எண்ணங்கள் நீக்கிடுவேன்

என்சுய நீதியை அழித்திடுவேன்

எல்லோரிடமும் இரக்கம் கொண்டு

இயன்றவரை தொண்டு செய்திடுவேன்

 

எதிர்ப்பார்ப்புடன் மட்டும் வாழாமல்

பிறரின் குறைமட்டும் கணக்கிடாமல்

என்னிலும் மேலாய் பிறரைஎண்ணி

எவர்க்கும் தாழ்மை செய்திடுவேன்

 

உன்குணம் என்னில் என்றும் உருவாக

உன்மேன்மை தினம் நிறைவாக

உன்தொண்டன் என்னும் சொல்நிலையாக

நிலைக்கும் படியே நான் வாழ்ந்திடுவேன்.

 

3-8-15, 4.30 காலை மத்திகிரி.

 

 

320 கர்மம, ஞானம், பக்தி

 

அன்பு, அடக்கம், அமைதி, தாழ்மை,

இரக்கம், ஈவு, எளிமை, பொறுமை,

இனிமை, நேர்மை, நீதி, சேவை,

உண்மை,, வாய்மை, உழைப்பு, கனிவு,

 

இவைகள் போல மேலும் பல

குணங்களோடு வாழ வேண்டி

வரங்கள் வேண்டி வந்தேன் நானே

இவை ஏதுமில்லா ஏழை தானே

 

கர்மம், ஞானம் பக்தி மூன்றும்

கடைதேற எவர்க்கும் வேண்டும்

ஒன்றை விட்டு ஒன்றைப் பற்ற

ஊசலாடும் வாழ்வு என்றும்

 

ஒன்றன் மூலம் ஒன்றை அறிந்து

ஒன்றைக் கொண்டு ஒன்றைப் பற்றி

முப்புரி நூலாய் இணையும் போது

முழுமையாகும் வாழ்வும் கூட

 

கர்மம் அற்ற ஞானம் பாழே

ஞானமற்ற கர்மம் சடங்கே

பக்தி அற்ற கர்மம் ஞானம்

பதராய்ப் போகும் முடிவில் தானே

 

ஞான மற்ற பக்தி கூட

உணர்ச்சியாகி மறையும் உடனே

கர்மமற்ற பக்தியுமே வெறும்

ஓசை யிடும் பாத்திரமே

 

6-8-15, மத்திகிரி, மதியம் 2.30