Bhakti Songs 321-330

321 வழியைச் சொல்லு

 

வேண்டாம் என்றாலும் விட்டு விலகாது

விடுதலை தேடினும் எங்குமே கிடைக்காது

இவற்றின் இடையே நான்படும் பாடு

உன்னையன்றிப் புரிவது வேறிங்கு யாரு?

 

நானே தேடிக் கொள்ளவும் இல்லை

நான் அதை விரும்பியே ஏற்கவும் இல்லை

வேறு எவ்விதம் வந்தது புரியலை

அதை விட்டு விலகிட வழியும் தெரியலை

 

சஞ்சலம் என்ற குணமது கொண்டேன்

சட்டெனக் கோபம் கொள்ளவும் அறிந்தேன்

விட்டுக் கொடுப்பதை முற்றிலும் விரும்பேன்

வாதம் செய்வதை மட்டுமே அறிவேன்

 

பிறரின் நியாயம் புரியவும் மறுத்தேன்

பிறரின் உரிமையை ஏற்கவும் மறுத்தேன்

மற்றவர் வாழ்வதே எனக்கென எண்ணி

எத்தனையோ முறை காலால் மிதித்தேன்

 

ஆயினும் கோபம் அடங்கவும் இல்லை

ஆத்திரம் சற்றும் குறையவும் இல்லை

பழிக்குப் பழி வாங்கும் எண்ணம்

கொஞ்சமும் இன்னும் நீங்கவும் இல்லை

 

இவற்றின் பாரம் தாங்கவும் முடியலை

இன்னும் இவற்றில் விடுதலை இல்லை

என்நிலை புரிந்த உனது மொளனம்

எனக்குச் சற்றும் புரியவும் இல்லை

 

எழுதி இவற்றைப் படிப்பதனாலே

எவ்விதப் பயனும் இல்லை அறிந்தேன்

ஆயினும் அதுமட்டுமே தெரிந்ததால்

அனைத்தையும் எழுதி கணக்கும் வைத்தேன்

 

கணக்கைத் தீர்ப்பது யாரென்று சொல்லு

கடனும் பட்டது எவரென்று சொல்லு

படைத்த உனக்கே பொறுப்பில்லை என்றால்

கடனைத் தீர்க்கும் வழியைச் சொல்லு

 

10-8-15, மத்திகிரி, இரவு 11.30

 

322 மழை கொடு

 

குறையென்ன உண்டாகும்

கூறிடு எனக்கு

கொஞ்சம் இரங்கிட

உனக்கென்ன பிணக்கு?

அண்டம் அனைத்தையும்

படைத்த உனக்கு

எமக்னென வரும்போது

ஏன்னிந்த கணக்கு?

 

அடடா தெரியாதோ

வீண்னிந்த நாடகம்

சரிவிடு போகட்டும்

வேண்டாத கோபம்

சரிக்கு சரிகட்ட

இதுவல்ல நேரம்

யார்பிழை என்பது

வேண்டாத வாதம்

 

எவர் தறாகவே

இருந்தாலும் என்ன?

இத்தனை பிடிவாதம்

தேவையா என்ன?

மழை இல்லாமல்

மண்ணுயிர்த் தவிக்க

தாமதம் செய்வதேன்

நீயதைக் கொடுக்க?

 

சிறியோர் செய்த

சிறுபிழை யெல்லாம்

பெரியோர் ஆயின்

பொறுத்தல் கடனே

எம்பிழை பொறுத்து

இரக்கமும் கொண்டு

பசிப்பிணி போக்க

மழையை அளித்திடு

 

16-8-15, இரவு, 1.000 (17-8-15), மத்திகிரி,

 

 

323 இவ்வளவுதானா?

 

இவ்வளவுதானா உனது இறக்கம்

இதற்கு மேலே என்ன சொல்ல உனக்கும்

எம்நிலை அறிந்த பின்பு நீயும்

இப்படி செய்தால் வேறெங்கு செல்வோம்

 

பசிதவனுக்கு உணவை அளித்து

இடையில் பறித்தால் என்ன செய்வான்

கையில் அள்ளி வாயில் போட

தட்டி விட்டால் ஏது சொல்வான்?

 

அந்த நிலைதான் எமக்கும் கூட

இதை அறிந்த உனக்கு என்ன சொல்ல

’கேட்க’ சொல்லி கொடுத்த நீயே

கொடுக்க மறுத்தால் என்ன செய்ய?

 

நாங்கள் மட்டுமா கடனும் பட்டோம்

நாளும் உன்னை வேண்டிக் கொள்ள

படைத்த உனக்கு கடமை இல்லையோ

பார்த்து செய்யும் பொறுப்பு இல்லையோ

 

முடியா தென்று நீ கூறினால்

போவ தெங்கே வழியும் கூறு

போக்கிடம் வேறு இல்லாததால்

புலம்புறோம் உன்னிடம் வந்து

 

21-8-15, இரவு 8.10

 

 

324 கூடவருமா?

 

எதிர்பார்ப்பது போல

எல்லாமும் நடக்காது

என்விருப்பம் போலவே

எல்லாமும் கிடைக்காது

இப்படி நடப்பது

நமக்குமே நல்லது

இல்லையென்றால் நம்மனம்

இறைவனைத் தேடாது

 

ஆட்டுவிக்கும் அவனன்றி

ஆடத்தான் முடியுமா?

அவன் அளிக்க எண்ணாமல்

நாம்பெற முடியுமா?

நம்தேவை அறிந்துமே

அவன்தரவரும் போது

இடையில் நம்சுயம்

குறுக்கிட இயலுமா?

 

ஆடையின்றி பிறந்ததுபோல்

ஆசையின்றிப் பிறந்தோமா?

பாடைஏறிப் போகும்போது

கூடகொண்டு போவோமா?

சேர்த்து நாம்வைத்தாலும்

சொந்தம் நமக்காகிடுமா?

தெய்வத்தின் அருளன்றி

துய்க்க நாம் முடிந்திடுமா?

 

23-8-15, மத்திகிரி, மதியம் 2.50

 

 

325 உன்லீலைகளே

 

ஏதோ சொல்ல வருகின்றாய்

ஏதோ செய்தி சொல்கின்றாய்

என்னையும் மீறி செயலைச் செய்து

உன்சித்தம் நிறைவேற்றுகின்றாய்

 

நிகழ்ச்சிகள் அனைத்தும் நிமித்தங்களே

மனிதர்கள் கூட உன் கைக்கருவிகளே

உன்சித்தம் மட்டும் என்னில் நிறைவேற

நீசெய்யும் அனைத்தும் உன் லீலைகளே

 

வேண்டாம் என்றாலும் நின்றிடாது

வேண்டும் என்றாலும் நடந்திடாது

உன் அனுமதியின்றி என்வாழ்வில் கூட

ஒரு செயலும் நிச்சயம் நிகழ்ந்திடாது

 

அமைதியாய் இருக்கும் நேரமுண்டு

ஆர்பரித்து அலைமோதும் காலமுண்டு

ஆயினும் உன் அனுமதியின்றி

ஆடவோ அடங்கவோ இயலாது

 

நான் இதை நன்கு புரிந்து கொண்டேன்

நடப்பிக்கும் உன்சித்தம் அறிந்து கொண்டேன்

நான்செய்யும் செயல் ஒன்றும் இல்லையென

நானும் உன்னடி பணிந்து கொண்டேன்

 

26-8-15, மத்திகிரி, இரவு 11.30

 

 

326 உன்சித்தம்போல ஆகட்டும்

 

ஏங்கியே தவிக்குது

ஏழைஎன் உள்ளமே

ஏளனம் செய்வதேன்

நீயுமே இன்னுமே?

 

நானென்ன செய்யனும்

இருந்து இன்னுமே

நானுமே தவிக்கிறேன்

உன்னிடம் வரவுமே

 

புவிவாழ்வு பாரமாச்சே

பொழுதெல்லாம் வீணுமாச்சே

ஏதோதினம் வாழலாச்சே

என்னுளம் தவிக்கலாச்சே

 

கையும் காலும் இருக்கும்போதே

கடைதேற்றக் கூடாதோ

கட்டிலிலே வீழும்முன்னே

அழைக்கநீயும் கூடாதோ?

 

என்னைக்கேட்டா நீ படைத்தாய்

எனைக்கேட்டா நீ எடுப்பாய்

ஏதோசொல்லி புலம்பமட்டும்

வார்த்தைமட்டும் நீ கொடுத்தாய்

 

ஏதோ போச்சு இந்த நாளும்

அதுபோல் போகும் அடுத்தநாளும்

எப்படியோ நாளும் ஓடட்டும்

உன்சித்தம்போல ஆகட்டும்

 

28-8-15, இரவு, 8.50

 

 

327 இதுவே தருணம்

 

இதுவே தருணமையா–ஐயா

இதுவே தருணமையா

உடனென்னை அழைத்துச் செல்ல

உன்னுடன் எடுத்துக் கொள்ள–இதுவே…

 

உள்மன ஏகத்தையே உரைத்திட வார்த்தை இல்லை

உன்னையன்றி புரிந்து கொள்ள உலகில் யாருமில்லை

என்ன சொல்லி புரியவைக்க என்னிடம் மொழியும் இல்லை

எவர்க்கு நான் புரியவைக்க உறவென்று யாருமில்லை

 

உறவு என்று சொல்லிக் கொள்ள உலகில் மாந்தருண்டு

ஆயினும் அவருள்ளே உன்னைப்போல் எவருண்டு

என்னைப் போல அவருமே பலவிதத்தில் ஏக்கங்கொண்டு

இருக்கும் போது அவரிடத்தில் சொல்லி என்ன பயனும் உண்டு?

 

விரக்தியின் எல்லைக்கு சென்று இதை சொல்ல வில்லை

வேறு எந்த வழியுமின்றி நான் இதை உரைக்க வில்லை

போதுமென்ற மனதுடனே உன்னிலே இருக்கும் போது

பேச்சிழந்து புலம்புமுன்ன (உன்னுடன்) போவதே நல்லது

 

என்னவோ எனக்கு தெரிந்ததை நானுமே சொல்லி வைத்தேன்

எப்படியோ உன்னிடமே வருவேன் என்று அறிந்து கொண்டேன்

அது இப்போதே இருக்குமானால் நல்லதென்று கூறிவைத்தேன்

இதற்கு மேலே சொல்லி என்ன நீ உணர்ந்து கொண்டால் போதுமென்றேன்

 

28-8-15, இரவு, 9.15

 

 

328 சிலநாள் வாழ்வு

 

சிலநாள் வாழ்வும்

சீக்கிரம் முடியும்

சித்தத்தில் கொள்வாய்

நீயென் மனமே!

 

சிந்தையை அடக்கி

சீர்பட்டுத் தாமல்

சீர்கெட்டு நீயும்

சீரழி யாதே

 

வருகிறேன் என்றவன்

வந்திடு வானே

வரும்நேரம் தன்னை

சொல்லிடு வானோ?

 

அரைநீ கட்டி

ஆயத்த மாகி

அவனுக்கு பணிசெய

முயல்வாய் தினமே

 

தேகத்தின் தேவைக்கு

தேடி அலைகிறாய்

மனதின் நிறைவுக்கு

செயல்பல செய்கிறாய்

 

ஆன்மாவை மட்டுமோ

அலட்சியம் செய்கிறாய்

அதுஉன் னிடம்

முறையிடாது என்பதால்

 

ஆயினும் அதனை

படைத்த வனுக்கு

நீஉன் கணக்கை

நிச்சயம் சொல்லனும்

 

செயல் களையும்

சற்றே நிறுத்தி

சிந்தை தன்னையும்

உன்வயப் படுத்தி

 

ஆன்மா தன்னை

அவனில் நிறுத்தி

அனுதினம் நீயே!

தியானமும் நீயே

 

29-8-15, காலை, 6.10 மத்திகிரி

 

 

329 என்ன குணமிது?

 

கொஞ்சம் இரங்கு

குமுறுலைக் கேட்டிடு

கெஞ்சியே வருவோர்க்கு

கஞ்சமின்றி நீகொடு

 

சிலதுளி கொடுத்தாலே

சோர்ந்த பயிரெல்லாம்

உயிர்பெற்று உவப்புடன்

உன்னைத் துதித்திடும்

 

கருகியே காய்ந்தாலோ

கலங்கிடும் மனது

கடைக்கண் பார்த்து

அருளினைத் தாராயோ

 

உழுதவன் கலங்குறான்

உலகோர் திகைக்கிறார்

படைத்த நீமட்டும்

பொறுப் பின்றிருக்கிறாய்

 

என்ன குணமிது

எங்கிருந்து வந்தது

இதுவரை உன்னிடம்

என்றும் இல்லாதது

 

அரம் பாடினால்தான்

உனக்குமே புரியுமோ

அந்த எல்லைக்கு

போகத்தான் முடியுமோ?

 

என்னவோ செய்திடு

யாரென்ன செய்வது

முறையிட மட்டுமே

முடிந்திடும் எமக்கு

 

1-9-15, மத்திகிரி, மதியம் 2.45

 

 

330 செவி சாய்ப்பான்

 

கடவுளும் எப்படி கண்மூடி இருப்பான்-நம்

கஷ்டத்தைப் பார்த்தும் பொறுப்பின்றி இருப்பான்

தாயடித்தாலும் சேயெங்கு போகும்-தன்

தாயின் மடியில் வீழ்ந் தழுகாமல்

 

இரக்கத்தை மட்டுமே குணமாகக் கொண்டவன்-நம்

எல்லாத் தவரையும் பொருத்தருள் கின்றவன்

பாரா முகமாய் இருந்திடு வானோ?

பாவிகள் நாமென்று வெறுத்திருப்பானோ?

 

அப்படி இருந்திட அவனென்ன மனிதனா

ஆத்திரம் கொண்டிட அவனென்ன மூர்க்கனா

கருணையின் வடிவம் கடவுள் என்றானபின்

கதறிடும் நமக்கு தன்செவி அடைப்பானோ?

 

நம் நிலைதனை அவன் அறிந்தே இருக்கிறான்

நாம் வேண்ட அவனும் காத்திருக் கிறான்

வேண்டும் முன்னே தர அவனும் இருக்க-நம்

வேண்டுதல் கேட்க செவி சாய்த்தே இருக்கிறான்.

 

ஏற்ற சமயத்தில் எல்லாம் தருவான்-நாம்

ஏங்கியே தவிக்காமல் மழை (அருள்) தந்திடுவான்

மரத்தை வைத்தவனும் மறந்திடு வானோ

மன்னுயிர்த் தவிக்க பார்த்திருப் பானோ?

 

3-9-2015 மத்திகிரி, மாலை, 3.55