Bhakti Songs 331-339

331 உடனே வருவான்

 

உருகி அழைத்தால் உடன் வருவான்

உளமாற பணிவோர்க்கு அருள் தருவான்– உருகி…

 

கன்றின் குரல் அறியா பசுவும் உண்டோ

கண்ணீர் விட்டால் தாயின் (அவன்) உள்ளமும் கரையாதோ

“அடைக்கலம்” என்று (நாம்) அவனடி சேர்ந்தால்

“அபயம்” அளித்து நம்மை ஆதரிக்கானோ–உருகி

 

அவனன்றி நமக்கு கதிவேறு உண்டோ?

நம்மை விட்டால் அவனுக்கு உறவேதும் உண்டோ?

மன்னுயிர் காக்கவே தன்னுயிர் அளித்தவன்

மெளனமாய் இருப்பானோ நாமுமே அழைக்கயில்–உருகி

 

இருவிழி நீர்சொரிய கரம்கூப்பி சிரம் தாழ

மேனியும் விதிர்விதிர்த்து நாக்குழறி பேசிழக்க

ரோமமும் சிலிர்த்தெழ உள்ளமும் கரைந்திட

மொழியின்றி நாமழைக்க மொளனமாய் இருப்பானோ–உருகி

 

பாடிப் போற்ற வேண்டாம் பலவார்த்தை சொல்லவேண்டாம்

ஓடித்தேட வேண்டாம் உணர்ச்சியில் துள்ளவேண்டாம்

மெளனமாய் அமர்ந்(திருந்)து மனதார தொழும்போது

அருகினில் வந்து (நமக்கு) அமைதி தருபவன்–உருகி

 

7-9-15, மத்திகிரி, இரவு 11.30

 

 

332 குருவை அடைந்தேன்

 

யாரென்று தெரியவில்லை

எவரென்று புரியவில்லை

இறைவனைத் தேடினோர்

இதுவரை அறியவில்லை

 

தெரிந்ததைச் சொன்னார்

புரிந்ததைத் தொழுதார்

அறிந்ததை உரைத்தார்

ஆயினும் புரியலை

 

நானுமே முயன்றேன்

தேடியே அலைந்தேன்

பலவழி சென்றேன்

தோல்வியே அடைந்தேன்

 

இனியென்ன செய்வது

ஏன்வீணில் முயல்வது

என்று எண்ணியே

விரக்தியும் கொண்டேன்

 

ஆயினும் ஒருவழி

எனக்கும் கிடைத்தது

மனைஇருள் நீக்கும்

குருவை அறிவது

 

எங்கெங்கோ தேடினேன்

என்வரை முயன்றேன்

நாடிய குருவை

தேடியே அடைய

 

எங்கு தேடினும்

எப்படி முயன்றும்

இறுதி வரையில்

குருவை அடையலை

 

அருளுடன் இறவனும்

எனை நாடிவந்து

ஆட்கொண்டு காட்டினான்

தானே குருவென்று.

 

10-9-15, இரவு, 11.15, மத்திகிரி.

 

 

333 காண வேண்டும்

 

காண வேண்டுமையா

மனக் கண்திறந்து உன்னையும்–காண…

 

குருடரின் கண்திறந்து அவரை குணமாக்க

உன்னைப் பின்தொடர அவரும் வந்ததுபோல்

உன்னை அறிந்தபின்னும் உண்மை புரிந்தபின்னும்

உள்ளம் குருடாகி இருளில் உழலாமல்–காண…

 

அனுதினம் உன்வேதம் தவறாது படித்தாலும்

அமைதியாய் உன்பாதம் தியானிக்க அமர்ந்தாலும்

பலவார்த்தை மிகச்சொல்லி ஜெபமே செய்தாலும்

பதற்றம் பலகொண்டும் நிம்மதி இழக்காமல்–காண…

 

நாளைத் தேவையெண்ணி நல்ல செயல்செய்து

இன்றே பொருளைத் சேர்த்து வைத்தாலும்

வகுத்தான் வகுத்த வகையே அல்லாமல்

தொகுத்து வைத்து துய்க்க உன்சித்தம்–காண…

 

நலமுடன் இந்நாளும் கழிந்தே போனாலும்

நாளைய தினத்தின் பாடெண்ணி கலங்காமல்

இன்று போலவே நாளையும் நடத்திடும்

இறைவனின் துணையும் இருப்பதை நானும்–காண…

 

16-9-15, மத்திகிரி, மதியம் 2.10

 

 

334 குறையன்ன உண்டு?

 

தொழுது கொள்ள திருவடி யுண்டு

சேர்ந்து கொள்ள தொண்டர்கள் உண்டு

அருளை அளிக்க ஐயனும் உண்டு

அடிமைக்கு இனிவேறு குறையென்ன உண்டு?

 

எத்தனையோ தேவை என்னையும் நெருக்க

எண்ணிலாக் கவலைகள் அனுதினம் கலக்க

இவற்றிடை நானும் அமைதி கொண்டு

என் ஐயனைப் போற்ற கிருபையும் உண்டு

 

மாமிச தேகத்தில் பலவித பாடுகள்

மனிதர்கள் இடைய உள்ளது பிணக்குகள்

ஆயினும் அவை அனைத்தையும் பொறுக்க

ஆன்மாவில் ஆனந்தம் உண்டு களிக்க

 

தீமையே இல்லாத நன்மையும் இல்லை

திருப்பங்கள் இல்லாமல் நிகழ்வுகள் இல்லை

இவற்றின் ஊடே அமைதியும் அளிக்க

இறைவனும் வந்தான் என்னுடன் நடக்க

 

கவலைகள், கலக்கங்கள், கஷ்டங்கள், நஷ்டங்கள்,

நோயுடன் நெருக்கங்கள் நிதம்நிதம் பிணக்குகள்

இல்லாத வாழ்கை எங்குமே இல்லை

ஆயினும் இவைமட்டுமே வாழ்க்கையும் இல்லை

 

இவை போன்ற பலவற்றை அனுமதித்தாலும்

எவ்விதம் என்னை அவன் சோதித்தாலும்

அவன் மீது நான்கொண்ட அன்பும் மாறாது

அவனையும் என்னையும் ஏதுமே பிரிக்காது

 

தொழுது கொள்வேன் திருவடி தன்னை

சேர்த்துக் கொள்வேன் தொண்டருடன் என்னை

அருளை அளிப்பான் ஐயமே இல்லை

இதனினும் மேன்மை வேறெதும் இல்லை.

 

18-9-15, மதியம், 2.00, மத்திகிரி.

 

 

335 நேரம்மாச்சு

 

வாழ்க்கையும் ஓடிப்போச்சு

வாழ்ந்துமே முடிச்சாச்சு

எது எப்படிபோனாலும் இனி

எனக்கென்ன கவலையாச்சு

 

உருண்டு புரண்டும்மாச்சு

ஓடியாடிப் பார்த்தும்மாச்சு

ஒதுங்கி உட்கார்ந்தபின்னே

தெய்வமே துணையும்மாச்சு

 

கஷ்டம் நஷ்டம் பார்த்தும்மாச்சு

கவலை நிறைய பட்டும்மாச்சு

கடைசி இந்த காலத்திலே

காலன்வர நேரம்மாச்சு

 

நேசம் பாசம் பார்த்தும்மாச்சு

நிறைவாக வாழ்ந்தும்மாச்சு

நினைவெல்லாம் போனபின்னே

இடம் காலிபண்ண நேரம்மாச்சு

 

18-9-15, மத்திகிரி, இரவு, 11.15

 

 

336 யார் காத்திடுவார்

 

ஆண்டான் முகம் நோக்கும்

அடிமையைப் போல

முடவனும் துணைவேண்டிக்

கைகோலைக் கொள்வதுபோல்

சிலதுளி நீர்வேண்டி

விண்நோக்கிப் பார்க்கின்றார்

முளைத்த விதைகளுமே

முடமாகிப் போகாமல்

தளிர்த்து செழித்திடவே

நீர்வேண்டித் தவித்திருக்க

விண்நோக்கி கைக்கூப்பி

உன்னைத்தான் வேண்டுகின்றோம்

இரங்கி அருளிடுவாய்

எம்நிலை புரிந்திடுவாய்

இல்லையென்று சொல்லாமல்

எமக்கும் தந்திடுவாய்

ஏனென்றால் உன்னையன்றி

எவரெமைக் காத்திடுவார்

 

19-9-15, மத்திகிரி, 2.00 pm.

 

 

 

337 வெற்றியும் காணவேண்டும்

 

துணையாக நீ இருக்க

தோள்மீது எனை சுமக்க

எதிர்காலம் எண்ணி

ஏங்கிநான் தவிப்பேனோ?

 

வருங்கால நிலை எண்ணி

வாழ்வின் பல தேவை எண்ணி

நிகழ்கால நிம்மதியை

நானுமே இழப்பேனோ?

 

வருவதே வந்தாலும்

வழியின்றி ஏற்றாலும்

வாழ்ந்துதான் ஆகவேண்டும்

வகையேது ஓடத்தானும்?

 

ஆயினும் எதிர்கொண்டு

ஆண்டவன் துணைகொண்டு

வாழ்ந்து பார்க்கவேண்டும்

வெற்றியும் காணவேண்டும்

 

19-9-15, மத்திகிரி, இரவு. 12.15

 

 

 

338 முடியாத செயலுமில்லை

 

ஊள்ளமும் உருகாதா

ஊனுயிர்க் கரையாதா

உன்னிடம் வரும்போது

என்னுளம் இனிக்காதா

 

தன்நிலை மறக்காதா

தாழ்மையே அளிக்காதா

தஞ்ஞமென வரும்போது

நெஞ்சமும் களிக்காதா

கண்களும் பணிக்காதா

கல்மனம் கரையாதா

கசிந்து ருகும்போது

காட்சியும் கிடைக்காதா

 

பக்தியும் பிறக்காதா

பரவசம் அளிக்காதா

பக்தனாய் வரும்போது

சித்தமும் மகிழாதா

 

வேண்டுதல் பிறக்காதா

வேண்டினால் கிடைக்காதா

வேண்டிடும் அடியார்க்கு

உன்னருள் கிடைக்காதா

 

சுயமுமே நீங்காதா

சுயநலம் அழியாதா

சொந்தமென ஆனபின்னே

உன்பதம் கிடைக்காதா

 

ஆகாத தொன்றுமில்லை

உன்னடியன்றி கதியுமில்லை

உன்னடியார்க்கு ஏதுமே

முடியாத செயலுமில்லை.

 

23-9-15, 2.45 pm, மத்திகிரி.

 

 

 

339 ஏற்றுக் கொள் துதிகளாக

 

உனக்காக உன்னை நாடி

உன்னடி மட்டுமே தேடி

உவப்புடன் உன்னிடம் நானும்

வருவதும் இனி எப்போதோ?

 

ஒவ்வொரு நொடியும் போகுது

உலகின் பல தேவைகள் எண்ணி

உள்ளமும் மிகவும் அலையுது

அவைகளை மட்டுமே நாடி

 

எல்லாம் நிறைவாய்க் கிடைத்தும்

ஏதோஒரு ஏக்கம் உள்ளது

இல்லாத ஒன்றுக்காக தினம்

என்மனம் ஏங்கியே வாடுது

 

கானல்நீர் தேடியே ஓடும்

மானைப் போலவே ஆனேன்

கடைசி மட்டும் நீர்க்காணாமல்

கதறியே வீழ்ந்து கிடந்தேன்

 

அந்த நேரம் இரக்கம்கொண்டு

அந்த நிலையில் மாண்டுவிடாமல்

ஜீவ நீரின் ஊற்றைக்காட்டி

தாகம் தீர்த்து ஆண்டுகொண்டாய்

 

ஆயினும் என் அசுரகுணமும்

அடிக்கடி தலைத் தூக்கி

கிட்டாத பொருளுக்காக என்னில்

முட்டிமோதி தவியாய்த்தவிக்குது

 

எப்போ முடியும் இப்போராட்டம்

என்று ஓயும் மனப்போராட்டம்

உலகில் வாழும் காலம்மட்டும்

கிடைக்காது விடுதலைமட்டும்

 

ஆதலால்சில நொடிகளேனும்

அண்டிவந்தேன் உன்தன் பாதம்

அந்த சில நொடிகளும் கூட

உன்னடி தொழுவும் காணும்

 

இனிநானும் என்ன செய்ய

என்னசொல்லி உன்னிடம் புலம்ப

இந்தஎன் கதறலைக் கூட

ஏற்றுக் கொள் துதிகளாக.

 

24-9-15, மத்திகிரி, 2.30