Bhakti Songs 341-350

341 ஒரு தொடர்கதை

குற்றமே சுமத்தி கொன்றாரே அன்று

குறைபல சொல்லி பழித்தாரே அன்று

அத்துடன் முடிந்ததா அக்கதை நன்று

அதனையே செய்கிறோம் நாங்களும் இன்று

 

ஆதியில் தொடங்கிய அகந்தையினாலே

அதை கொண்டவன் வழிவந்த பழக்கத்தினாலே

தலைமுறை தோறுமே தனிமனிதன் கூட

தொடர்கிறான் தான் கொண்ட வழக்கத்தினாலே

 

அதிகாரம் பெற்றுமே அதனையும் மீறினோம்

அரசாள வைத்துமே அதனையும் இழந்தோம்

ஆயினும் அதனை மீண்டும்பெற எண்ணி

அநியாயமாய் உன்னை தருவினில் வதைத்தோம்

 

என்பழி தன்னை உன்மீது போட்டு

என்பாவம் தன்னை உவந்துமே ஏற்று

ஆதியில் கொண்ட அகந்தையை நீக்க

அளிக்கின்றாய் உனை நானுமே வதைக்க

 

யாரோ செய்த மீறுதல் இல்லை அது

எவரோ சிலர்செய்த சதியல்ல அது

அன்றாடம் நான்கொண்ட அகந்தையினாலே

அதையே செய்கிறேன் நானுமே இன்று

 

என்னோடு முடியாது இக்கதை கூட

என்றுமே முடியாத தொடர்கதை போல

தலைமுறை தோறும் தொடர்ந்திடும் இது

தரணியில் கடைமனிதன் தோன்றிடும் வரை.

 

11-10-2015, மத்திகிரி, இரவு. 11.30

 

 

342. வழிகாட்டினானே

நீவிட்ட வழி வேறென்ன செய்ய

நீயே கதியென்று ஆனபின்னாலே

நான் செய்வதெல்லாம் செய்தபின்னாலே

உன்சித்தம் நிறைவேறும் உன்எண்ணம் போலே

 

கலங்கித் தவித்திடத் தேவையும் இல்லை

கவலையில் மூழ்கிடத் தேவையும் இல்லை

உன்சித்தம் சிரமேற் கொண்ட பின்னாலே

அது நிறைவேற என்னைத் தருவதல்லாமலே

 

சுயப் பரிதாபம் கொண்டுமே வாழ்ந்தாலே

சுமையாகிப் போவோம் பிறர்க்கு வீணாலே

அவன் சித்தம் உணர்ந்து தன்னைத் தந்தாலே

அதுபோல் இன்பம் உண்டோ வாழ்வினிலே

 

தன் சித்தம் துறந்து தன்னையே தந்தானே

தருவினில் மாண்டு வழிகாட்டி சென்றானே

அவனடி நடந்து அதுபோல் செய்தாலே

நம் அகத்தை அழித்து ஆவோம் அவன்போலே

 

16-10-2015, மத்திகிரி, இரவு 12-05 (17-10-2015)

 

 

343 எங்கும் கண்டதில்லை

உன்னைப்போல் இரக்கம்

உள்ளவர் எவரையும்

உலகினில் இதுவரை

எவருமே கண்டதில்லை

 

உன்னிலும் தாழ்மை

கொண்டவர் எவரையும்

மானிடர் இதுவரை

எங்குமே கண்டதில்லை

 

தரணியைக் காக்க

தன்னையே அளித்த

தெய்வம் உன்போல்

தேடினும் கண்டதில்லை

 

இரக்கமே குணமாக

தாழ்மையே பண்பாக

கருணையே வடிவாக

கொண்டவர் இருந்ததில்லை

 

அனைத்தையும் ஒன்றாக்கி

அவற்றையும் தனதாக்கி

அன்பே உருவாகி

ஆண்டவர் எவருமில்லை

 

முக்திக்கு வழியாகி

பக்திக்குத் துணையாகி

பாவிக்கு மீட்பாகி

வந்தது யாருமில்லை

 

உவந்தே ஏற்றாலும்

உதறியே தள்ளினும்

உன்நிலை தன்னில்

மாற்றம் இருந்ததில்லை

 

அறியாமல் இருந்தாலும்

அறிந்தே மறுத்தாலும்

ஆதரித்து காக்க

நீயும் மறுத்ததில்லை

 

எத்தனைக் கூறினும்

எப்படி எழுதினும்

உன்னை முழுமையாய்

உணர்ந்தவர் எவருமில்லை

 

ஆயினும் அறிந்ததை

ஆட்கொண்டு மீட்டதை

அறிவிக்க இயலாமல்

இருக்க முடியவில்லை.

 

26-10-2015, காலை, 4.00

 

 

344 வரம்

வரமென்ன கேட்பேன்

வள்ளளே உன்தன்

சித்தமொன்றை அறியும்

புத்தியில்லாமல்

 

வேறென்ன கேட்பேன்

வள்ளளே உன்னை

பக்தியின் மூலமே

புரிவதல்லாமல்

 

நானென்ன கேட்பேன்

நாளுமே உன்தன்

பணியினைச் செய்ய

கிருபையல்லாமல்

 

ஆயினும் கேட்பேன்

அண்ணலே உன்னிடம்

அனுதினம் உன்னடி

பணிந்திடும் மனதை

 

ஆயினும் உன்னிடம்

ஒன்றைக் கேட்கேன்

அகந்தையால் உன்னை

மறுத்திடும் செயலை

 

இனியென்ன கேட்பேன்

என்னையே தந்தபின்

இகத்திலும் பரத்திலும்

உன்னைத் தொழுவதல்லாமல்

 

26-10-2015, இரவு, 11.30

 

 

345 என்ன இருக்குது

உன்னடி பணிவது உவப்பாக இருக்குது

உன்னிடம் வருவது மகிழ்வாக இருக்குது

உன்னையே துதிப்பது உயர்வாக இருக்குது

உன்னையே தொழுவது சிறப்பாக இருக்குது

 

உனைச்சரண் அடைவது தெம்பாக இருக்குது

உனைதினம் நினைப்பது நிறைவாக இருக்குது

உனைநாட மற்றவை சிறுமையாய் தெரியுது

உன்மேன்மை சொல்லிட உலகமே வியக்குது

 

எனப்பற்றி சொல்லிட என்ன இருக்குது

எதைப்பற்றி சொன்னாலும் உள்ளமே கூசுது

என்வாழ்வை நினைத்தால திகைப்பாக இருக்குது

ஏனெனை மீட்டாய் வியப்பாக இருக்குது

 

அதைப்பற்றி அறிந்திட ஆர்வமாய் இருக்குது

ஆயினும் உள்ளே நடுக்கமும் இருக்குது

எனக்காக மரித்ததை என்மனம் நினைக்குது

அதையெண்ணும் போது உள்ளமும் வாடுது

 

இதில்நான் செய்ய என்ன இருக்குது

இதைவிட்டால் மீட்பு வேறெங்கு உள்ளது

அதையெண்ணும் போது என்னன்பு பெருகுது

அதனால் என்னாவி உன்னையே துதிக்குது

 

2-11-2015, மத்திகிரி, மதியம் 2.35

 

 

346 புரியாத ரகசியம்

பக்தியால் நாமும் பரமனைத் தொழலாம்

பக்தனாய் நாளும் உன்னடிப் பணியலாம்

இதில் புத்தியைச் சற்றே நுழைத்தே பார்த்தால்

பித்தனாய்ப் போகலாம் பேதையே உணர்வாய்

 

பக்தியைக் கூற சொற்களும் உண்டோ

பக்தனாய்மாற சடங்குகள் உண்டோ

பக்தியைப் புரிய புத்தியும் உண்டோ

பக்தனாய் வாழ்ந்து புரிவதல்லாமல்

 

பக்தியால் பரமனைப் பணியும் போது

புத்தியைக் கொண்டா சொற்களைக் கூறுவார்

பக்தியால் கொண்ட உத்தம உறவை

பரவசத்தில் சில சொற்களில் கூறுவார்

 

அவர்பாடித் தந்த பரவச நிலையை

பகுத்துப் பார்த்து ஆராய முயன்றால்

இறுதிவரையில் விடைகிடைக்காது

பிறர்க்கு அந்த ரகசியம் புரியாது

 

எளிமையாக வாழ்ந்தே முடித்தார்

எண்ணங்களைச் சில சொற்களில் வடித்தார்

பக்தியின் கடலில் மூழ்கியே திளைத்தார்

பாங்காய் அவரும் முக்தியை அடைந்தார்

 

அந்தவழியில் நாமும் முயன்று

அடைவோம் அந்த உன்னத மேன்மையை

ஆராய்ந்து பார்த்து அறிவிழந்தால்

ஆழ்ந்தே கிடப்போம் நம் அறியாமையில்

 

13-11-2-14, மத்திகிரி, 2.50 pm.

 

 

347 பக்தியால் அறியனும்

எத்தனை இனிமை உன்னுடன் இருப்பது

எளிமையாய் பக்தியால் உன்னையும் அறிவது

பலப்பலப் படித்து புத்தியைப் பிசைந்து

பலனற்றுப் போவது எத்தனைக் கொடிது

 

தத்துவம் பேசி தர்க்கங்கள் செய்து

தான்கண்ட வழியிலே வாதமும் செய்து

பிறரை மதிக்காமல் தன்னையும் உணராமல்

பேதயையாய் இருப்பது அதனினும் கொடிது

 

நிகழ்காலம் தன்னில் நிமிடமும் வாழாமல்

கடந்து சென்றதைக் கடிதுடன் ஆராய்ந்து

எதிர்காலம் பற்றி எத்தனையோ பேசி

நிகழ்காலம் தன்னை நிரந்தரமாய் இழப்பர்

 

சென்றவைப் பற்றி ஆராய்ந்து பார்க்கனும்

வருங்காலம் பற்றியும் வகையாய் யோசிக்கனும்

ஆயினும் நிகழ்காலம் அதனில் வாழனும்

அன்றாட வாழ்வினில் ஆனந்தம் காணனும்

 

இதைவிட்டு ஆயிரம் தத்துவம் பேசி

எண்ணற்ற வார்த்தையால் தர்க்கமும் செய்து

பயனற்ற வழியில் வாழ்வையும் போக்காது

பக்தியால் அன்றாடம் உன்னையும் அறியனும்

 

14-11-2015, மத்திகிரி, மதியம் 2.50

 

 

348 ஆராய்ந்து பார்க்கனும்

என்னையே நானும் ஆராய்ந்து பார்க்கனும்

என்னுளே அடிக்கடி உன்னையும் தேடனும்

வெளியிலே எப்படி நான் இருந்தாலும்

உள்ளாக என்னையே ஆராய்ந்து பார்க்கனும்

 

பலவற்றைப் படித்து பலவற்றை எழுதி

புறம்பாக பிறர்க்கு எத்தனைக் கூறினும்

எத்தனை தூரம் என்னுள்ளே அவையெல்லாம்

உண்மை என்று ஆராய்ந்து பார்க்கனும்

 

உள்ளாக என்னிலே நம்பாத கருத்தை

ஒருநாளும் பிறருக்கு கூறாது இருக்கனும்

உண்மையாய் என்னாலே செய்ய முடியாமல்

பிறருக்கு மட்டும் போதிக்க மறுக்கனும்

 

செயல்களை நிறுத்தி சிந்தையை ஒடுக்கி

சற்றேனும் உன்பாதம் நானும் அமரனும்

அந்த நேரத்தில் நீ என்னை ஆராய

அமைதியாக நான் என்னை அளிக்கனும்

 

சிலநொடி ஒதுக்கி சித்தத்தை அடக்கி

சேவடி பணிந்து உன்சிந்தை அறிந்து

அதன்படி வாழ அனுதினம் நானும்

அடிக்கடி என்னைநான் ஆராய்ந்து பார்க்கனும்

 

17-11-15, மத்திகிரி, மதியம் 2.50

 

 

349 வரம் தரும் வள்ளல்

வரங்களைத் தருவது உனக்குமே எளிது

வள்ளலே கொடுப்பதே உன்குண மானதால்

வரம் வேண்டி வருவது என் இயல்பானது

வரியவன் உனைவிடு வேறெங்கு போவது?

 

கொடுப்பதும் உனக்கு எளிமையானது

கொடை குணம் உனது இயல்பு ஆனதால்

கேட்பதும் எனக்கு உரிமை ஆனது

“கேளுங்கள்” என்றுநீ கூறி அழைத்ததால்

 

அள்ளித் தருவது உனியல் பானது

ஆதரித்தருள்வது உன் செயலானதால்

அண்டிவருவது எம்நிலை யானது

அன்புடன் புரப்பவன் நீயுமே ஆனதால்

 

பெற்றதால் நானும் சொல்கிறேன் நாளும்

பெம்மானே உன்மேன்மையை நாவினால்

போறுகின்றேன் உன் குணமதை நானும்

வரமாக அருளை எனக்கும் தருவதால்

 

18-11-15, மத்திகிரி, மதியம் 2.00

 

 

350 மொளனம் காக்கிறேன்

இணைந்திருப்பேனே இணையடி நிழலில்

எனையளிப்பேனே உன்திருவடியில்

உனை நினைப்பேனே என்மனக் கோயிலில்

உனைத்துதிப்பேனே ஓயாது சிந்தையில்

 

உனைவிட்டு வேறிடம் செல்லவும் அறியேன்

உனையன்றி புகலிடம் உலகினில் அறியேன்

உன்சித்தம் அன்றி வேறொன்றை விரும்பேன்

உன்னுடன் இருப்பதை மட்டுமே அறிவேன்

 

என்னவோ சொல்ல உன்னிடம் வருகிறேன்

ஏதுமே சொல்ல அறியாமல் திகைக்கிறேன்

எதைத்தான் சொல்வது எப்படி உரைப்பது

என்றுமே அறியாது மொளனமே காக்கிறேன்

 

சிலநொடி ஒதுக்கி ஜெபதபம் செய்தாலும்

சொல்லாலும் மொழியாலும் எத்தனை சொன்னாலும்

அமைதியாய் வந்து உனருகினில் அமரும்

அந்தப் பரவசம் வேறெங்கும் காணேன்

 

“சும்மா” இருக்கும் சுகத்தை நாடுறேன்

சொல்மொழி கடந்த நிலையைத் தேடுறேன்

உன்னுடன் ஒன்றிடும் உயர்வை கேட்கிறேன்

அதை உணர்ந்திடும் மனதை இன்றே கேட்கிறேன்.

 

22-11-15, மத்திகிரி, 11.05 இரவு.