Bhakti Songs 381-390

381 நினைக்க வேண்டும்

 

அலைமோதும் மனதுக்கோர் அமைதிவேண்டும்

அடங்காத மதிக்கும் ஓர் எல்லை வேண்டும்

நினைவாலும் மனதாலும் நாடவேண்டும்

நித்தம் உன்பாதமே நான் தொழவேண்டும்

 

கண்ணுக்குப் புறம்பாக நீ நின்றபோதும்

கருத்துக்கு எட்டாது ஆனபோதும்

உணர்வின் ஊடாக என்னுள் வந்து

ஒன்றாகி என்னையும் நிதம் ஆளவேண்டும்

 

சொன்னதைச் சொல்லியே வந்தபோதும்

ஒன்றும் சொல்லாமலே நான் நின்றபோதும்

சொல்லாமலே என்னை அறிந்த நீயும்

சொந்தமாக்கி உன்னுடன் வைக்கவேண்டும்

 

ஆரவாரம் மிகுந்த இவ் வுலகினிலே

அதனிடை வாழ்க்கையின் ஓட்டத்திலே

ஆயிரம் நெருக்கங்கள் சூழ்ந்திருந்தும்

அவற்றிடை உன்னையும் நினைக்க வேண்டும்

 

ஆயினும் நானுன்னை மறந்திட்டாலும்

அதற்கு காரணம் எதுவாயினும்

ஆதியில் நான்கொண்ட அன்பை எண்ணி

ஆட்கொண்டும் மீண்டும் @அருளவேண்டும்

 

31-1-16, மதியம் 2.55, மத்திகிரி

 

 

382 இன்பமயம்

 

எல்லாம் இன்பமயம்

உனைப்பாடி துகிக்கையிலே

உன்படைப்பை நினைக்கையிலே–எல்லாம்

 

விண்படைத்து மண்படைத்து

வெவ்வேறு கோள்படைத்து

விதவித உயிர்படைத்து

என்னையும் உடன்படைத்த–தெல்லாம்..

 

பகலென்றும் இரவென்றும்

பலவித நிலைப்படைத்து

பாங்குடன் வாழ்வதற்கு

விதிபல சமைத்த-தெல்லாம்

 

வாழ வழிகாட்ட

வகையாக நெறிதொக்குது

வாழ்ந்திடும் வாழ்க்கையில்

கடமையும் வகுத்த-தெல்லாம்

 

உன்வழி வாழ்வோர்க்கு

உன்னத நிலைதந்து

உன்வழி மறந்தோர்க்கு

நல்ல அறம்தந்த–தெல்லாம்

 

இத்தனை தந்தபின்னும்

எம்மையும் தருவதற்கு

பத்திஎன்ற ஒருநிலையை

பரிவுடன் அளித்த-தெல்லாம்

 

2-2-16, மதியம் 2.50 மத்திகிரி

 

 

383 முடிவில்லா முக்தி

 

முடிந்தது பயணம் புவியோடு

முடிவில்லா முக்தியை அடையும் போது

இனி பயம்நமக் கேது மில்லை

எரிநரகம் நாம் என்றும் சேர்வதில்லை

 

விட்டுச் சிலகாலம் பிரிந்தாலும்

மீண்டும் சந்தித்து மகிழ்ந்திருப்போம்

புவியின் பாடுக்கு முடிவு கண்டோம்

புதுவாழ்வில் புகுந்து மகிழ்வு கொள்வோம்

 

நமக்கு முன்னாகச் சென்றவரை

நாம்கண்டு ஆனந்தம் கொண்டிடுவோம்

நம்பின் வரப்போகும் பக்தருக்காய்

நாமும் ஆவலாய்க் காத்திருப்போம்

 

பெற்றோர் உற்றோர் துயருற்றாலும்

நம்பிரிவைத் தாளாமல் கணீர்விட்டாலும்

நம் பக்திக் கண்டு அவர்களுமே

நாதனுக் கென்றும் நன்றி சொல்வார்

 

நம்மையும் மீண்டும் பார்க்க வேண்டி

நாளும் பக்தியில் வாழ்ந்திருப்பார்

தம் ஓட்டம் ஒடி முடித்தபின்னே

நம்முடன் வந்து சேர்ந்து கொள்வார்

 

ஆகையால் ஆனந்தம் கொண்டாடிடுவோம்

ஆரவாரம் செய்து பாடிடுவோம்

இந்த நம்பிக்கை பிறரும் பெற

இறைவனை வேண்டிக் கேட்டிடுவோம்

 

4-2-2015, காலை, 10.30, மத்திகிரி

 

 

384 உணர்ந்தும் உணராதவர்

 

உணர்ந்து கொள்ள வில்லை

உன்னை புரிந்து கொள்ளவில்லை

உன்னுடன் வாழ்ந்த போதும்

உனையீன் றெடுத்த போதும்

 

பழகப் பழக புளிக்கும்

பாலும் என்ப துண்மை

பழகி அறிய மறுத்ததால்

பாவம் அவர்தம் நிலமை

 

சொந்தம் அவர்க்காய் ஆனாய்

சொல்லில் செயலில் வாழ்ந்தாய்

எதனைச் செய்த பின்னும்

ஏது ரைத்த போதும்

 

ஆனால் உடன்நீ சென்று

அவர்க்கு அடிமை கொண்டு

அவர்தம் தயவில் வாழ்ந்து

அருளில் பெருகி உயர்ந்தாய்

 

அவரைப் போல ஆனோம்

நீஅறிந்து மீட்ட போதும்

அறியா திருந்தால் நன்மை

அறிந்தும் மறுத்தால் கொடுமை

 

உணர்ந்தும் உணரா எம்மை

உணர்த்தி காப்பதுன் கடமை

அந்து துணிவால் மீண்டும்

அண்டி வந்தோம் அருளும்

 

8-2-16, மத்திகிரி, காலை 5.45

 

385 அஞ்சமாட்டேன்

 

என்னவோ மீட்டெடுத்தாய்

எனக்குமோர் வாழ்வளித்தாய்

அந்த ஒன்றைமட்டும் எண்ணி

ஆனந்தம் கொண்டிடு வேன்

 

என்னைக் கேட்டு மீட்கவில்லை

என்நீசம் பார்க்க வில்லை

உன் கருணை ஒன்றினாலே

என்னை நீ ஆட்கொண்டாய்

 

அதற்கு நானும் உடன்பட்டேன்

அறிந்து கொள்ள செயல்பட்டேன்

எந்தவரை இணங்கினேனோ

அந்தவரை அறிந்து கொண்டேன்

 

பொறுமை நீயும் காதுநின்றாய்

பிழைபலப் பொறுத்துக் கொண்டாய்

என்னைத் தந்து உன்னில்வாழ

ஏற்ற வழிகாட்டி வந்தாய்

 

போகும் தூரம் மிகவிருந்தும்

போராட்டம் பல இருந்தும்

இலக்கு நீயாய் இருப்பதாலே

எதனைக் கண்டும் அஞ்சமாட்டேன்

 

மீட்ட நீயே உடனிருந்து

சேர்க்க வேண்டி முன்நடந்து

ஏற்ற வழி காட்டும்போது

என்ன வேண்டும் இனியெனக்கு?

 

உன்னை முன்னி றுத்தி

உன்னில் எனை நிறுத்தி

அந்த ஒருபெலத்தி னாலே

அன்றாடம் வாழ்கின்றேன்

 

8-2-16, மத்திகிரி, காலை 6.15

 

386. தவம்

இதனினும் தவம் வேறெது கண்டோம்

இவரினும் தவசிகள் வேறெவர் காண்போம்

நொடிகள் தோறும் மரணத்தை நோக்கினும்

நோவால் நொந்து உடல்நைந்து போயினும்

அமைதியாக அதை எதிர் கொண்டு

அவனை நோக்கி மனம் திடம் கொண்டு

நிலையில்லா வாழ்வின் நிலமையை உணர்த்தி

நித்தமும் பக்தியில் திளைத்திடும் இவர்போல்–இதனினும்…

 

கண் எதிரிலே வாழ்வு கைநழுவ

கதறிடும் குழந்தைகள் மனதையும் கலக்க

ஆயினும் உண்மையை அமைதியாய் ஏற்று

ஆண்டவன் சித்தம் இதுவென உணர்ந்து

இதுவரை பெற்ற நன்மையை நினைந்து

இனியும் காப்பான் என்பதை அறிந்து

மரணத்தை வென்றவன் திருவடி பணிந்து

மண்ணுடல் துறந்து விண்ணுலகடையும்–இதனினும்

 

அவரின் தவமும் வீணாகிடு மோ

அவரின் திண்மை இனிமறைந்திடுமோ

தம் தவம் மூலம் இறைவனை உயர்த்தி

தரணியின் வாழ்வின் உண்மையை உணர்த்தி

வாழ்ந்திடும் நமக்கு பக்தியை விளக்கி

தம்வாழ்வின் மூலம் ஜெயக்கொடி நாட்டி

தோல்வியுற்றோரின் தோள்தட்டி எழுப்பி

செய்கின்றார் தவம் நம்பங்கை நிறப்பி

 

9-2-16 மத்திகிரி, காலை 6.30

 

387 உன்னருள் காட்டிடு

 

உன்னாலே முடியாத ஒன்றையா கேட்கிறோம்

உன்னருள் இன்றியா உன்னிடம் வருகிறோம்

நன்று நன்று நீசெய்யும் காரியம்-இனி

நானென்ன சொல்ல உன்சித்தம் ஆகட்டும்

 

இவ்வுடல் தந்தது யாரென்று சொல்லவோ

அதை உருவாக்கி வளர்த்தது எவரென்று சொல்லவோ

தேகத்தின் தேவைக்கும் தந்தது எவரோ

இவை தெரியாது போனால் வேறென்ன சொல்லவோ?

 

எங்கள் மீறுதல் அழிவைத் தந்தது

எங்கள் பாவமே நோய்கொண்டு வந்தது

கீழ்ப்படிய மறுத்து கட்டளை மீறினோம்

கண்ணொளி இருந்தும் குருடராய் மாறினோம்

 

ஆயினும் நீயும் இரங்க வில்லையா

அழியாமல் எமைக் காக்க உனைத்தர வில்லையா

எங்களின் செயலுக்கு ஏற்ப அளிக்காது

உன்னையே தந்து எமைமீட்க வில்லையா

 

அப்பெரும் செயலை செய்த உனக்கு

அழிவின்று எமைக்காக தெரிந்த உனக்கு

இச்சிறு செயல்செய்ய இரக்கம் இல்லையா

இதுவென்ன கொடுமைஎம் குரல்கேட்க வில்லையா

 

மனுஉரு எடுத்து வந்த பின்னும்

இம்மண்ணுடல் படும்பாடு புரியாது போகுமோ

அதை உணர்ந்த உன்னிட மன்றி

வேறெங்கு சென்று வேண்டுதல் செய்வோம்

 

உன்னாலே முடியும் உடன்நீ இரங்கிடு

உருக்குலைந்த அவன் மேனியை மீட்டிடு

கலங்கிடும் எங்களின் மனதையும் தேற்றிடு

காலமெல்லாம் வாழ்த்த உன்னருள் காட்டிடு

 

 

மத்திகிரி, 9-2-16, மதியம் 2.40

 

 

388 தகுதி

 

என் தகுதியை நினைத்தா வருகிறேன்

என்தாழ்மையை நினைத்து மருள்கிறேன்

உன் அருளினை நினைத்து வியக்கிறேன்

உன் அன்பினை நினைத்தே மகிழ்கிறேன்

 

நான் செய்ததை சொல்ல மனமும் இல்லை

என் செயலால் எனக்குப் பயனும் இல்லை

செய்கையால் மட்டும் குறைவு படாமல்

சிந்தையாலும் நான் கறையே பட்டேன்

 

விடுதலை காணப் புறப்பட்டேன் நான்

வகை தெரியாமல் திகைத்திட்டேன் தான்

விடையே இல்லாத கேள்வியாக என்

வாழ்க்கையும் செல்ல நிலை குலைந்திட்டேன்

 

ஓடிய தூரம் கொஞ்சமல்ல கூற

நாடிய வழிகள் கணக்கல்ல எண்ண

தேடிய நிம்மதியும் கிடைகாமல் நான்

வாடிய நாட்களை என்ன சொல்ல

 

விரக்தியின் எல்லைக்கே சென்ற போது

விடையாக நீயும் வந்தாய், என்

கரைகளை நீக்கி மீட்ட உன்

தகுதியால் மட்டும் வருகிறேன் மீண்டும்

 

13-2-16, இரவு, 11.45, மத்திகிரி

 

 

389 வழங்குவாய்

 

கிருபை என்னைத் தாங்கட்டும்

கருணை மேலும் வளரட்டும்

இரக்கம் தேடி வந்தேனே

இன்னும் என்ன சொல்லட்டும்

 

கருணை கொண்ட கண்களும்

காக்கும் உனது கரங்களும்

அருளை நாடும் அடியார்க்கு

அள்ளி இன்னும் வழங்கட்டும்

 

இரக்கம் கொண்ட மனதிலே

எமக்கும் இடமே இல்லையோ

இதனை நானும் சொல்லவோ

இதயம் உருக வில்லையோ

 

எதற்கு இந்த சோதனை

இனியும் வேண்டாம் வேதனை

எம்மை காக்க வந்தாயே

இதனை ஏனோ மறந்தாயே

 

புலம்பி தவித்த போதிலும்

புரிய மறுத்து கதறினும்

புவியின் வாழ்வும் பாரமே

போதும் போதும் காருமே

 

கூற மொழியும் இல்லையே

கதறத் தெம்பும் இல்லையே

இதற்கு மேலும் சொல்லிட

என்னில் வார்த்தை இல்லையே

 

24-2-16, மத்திகிரி, மதியம் 2.55

 

 

390 உன்சித்தம் அறியனும்

 

உன்சித்தம் அறிய உதவி செய்வாயே

உள்ளாக ஒன்றை நானுமே வைத்து

உதட்டாலே வேறொன்றை உண்மைபோல் பேசி

என்னிச்சை தன்னை உனதென்று எண்ணாமல்–உன் சித்தம்…

 

என்னை ஏமாற்ற எவருமே வேண்டாம்

என்னை பாழாக்க பிறருமே வேண்டாம்

என்சித்தம் முன்வைத்து எத்தனம் செய்து

எத்தனாய் மாறி பித்தனாய்ப் போகாமல்–உன் சித்தம்…

 

தந்திரம் பேசி, தர்க்கங்கள் செய்து

என்சித்தம் நிறைவாக்க எல்லாமே செய்து

உன்சித்தம் அதுவென வாதமும் செய்து

உள்ளான அமைதியை நானுமே இழக்காது–உன் சித்தம்

 

 

ஆயினும் இதுவொன்றே பழக்கமும் ஆச்சு

அனுதினம் தோற்றாலும் வழக்கமும் ஆச்சு

பழக்கமே வழக்கமாய் மாறியும் போச்சு

அந்தோ என்நிலை பரிதாப மாச்சு–உன் சித்தம்…

 

இதனின்று நீஎன்னை மீட்காவிட்டால்

என்னையும் மீறி எனைக் காக்காவிட்டால்

இனிவேரு கதி எனக்குமே இல்லை

இதைக்கூற இனிஉனக்குத் தேவையும் இல்லை

 

25-2-16, மத்திகிரி, மதியம் 2.45