Category Archives: Bhakti Theology Songs on Muktinath

Song 740

உள்ளான அமைதி

உள்ளான அமைதி
உள்ளத்தில் இல்லாமல்
புறம்பான அமைதியால்
பயனேதும் உண்டோ
தெளிவான சிந்தை
இல்லாத போது
தெயவத்தை நாடி
பயனுமே உண்டோ
பலவித நெருக்கடி
பலவிதம் நெருக்கையில்
புத்தியால் மட்டுமே
மீட்புமே உண்டோ
கலக்கமும் குழப்பமும்
கலந்து வருகையில்
கவலைப் படுவதால்
விடுதலை உண்டோ
விடைதர ஒருவன்
இருப்பதை மறந்து
வேறெங்கோ அலைவதால்
கிடைப்பதும் உண்டோ
அவனிடம் வந்து
அதை அடையாமல்
தனித்துப் புலம்பினால்
பயனுமே உண்டோ
அவன் தரும்போது
ஏற்கவும் மறுத்து
குறைகூறி நின்றால்
பெறுவதும் உண்டோ
இதனை உணர்ந்து
திருவடி அடைந்து
பேரருள் கிடைத்து
உய்ந்திட வேண்டும்

திருப்பூந்துருத்தி, 14-9-2017, காலை, 10.30

Song 739

ஒரே கவலைமயம்
ஆயிரம் கவலைகள்
இருக்குது எனக்கு
எவைஎவை அவையென
சொல்லிட உனக்கு
பிறந்து முதலே
உடலொடு கவலை
வளர்ந்த பின்னாலே
மனதிலே கவலை
வளரும் போது
உறவுக்குக் கவலை
வாழும் போது
பிறருக்குக் கவலை
இத்துடன் எனக்கு
என்னுடன் கவலை
அத்துடன் என்மீது
நீகொண்ட பரிவை
எண்ணிட எனக்கு
உன்மீதும் கவலை
அதையெண்ணி உனக்கு
என்மீது கவலை
இதையெல்லாம் எப்படி
எழுத்தாக மாற்றி
பாட்டாக மாற்ற
என்கின்ற கவலை
அப்புறம் அதையும்
மற்றவர் எப்படி
புரிந்தது கொள்வார்
என்கின்ற கவலை

திருப்பூந்துருத்தி, 13-9-2017, மாலை, 7.00

Song 738

ஆராய்ச்சி வேண்டாம்

நீயாக வந்து மீட்பைத் தரும்வரை
நானாக மீண்டிட நம்பிக்கை கிடையாது
தானாக வந்துதான் மாட்டிக் கொண்டேன்
ஆனாலும் தாமதம் நீசெய்யக் கூடாது

நீசொன்ன பாதையில் நான்போன போதும்
இடையினில் எத்தனை இடையூறு வந்தன
எதனாலே வந்தது எவறாலே வந்தது
என்பதெல்லாம் எனக்கு நிச்சயம் தெரியாது

உன்துண கொண்டு அவைதாண்டி வந்தாலும்
பின்னாக பலவும் தொடர்ந்தே வருகுது
அத்துடன் எதிரே ஆயிரம் நிற்குது
அவற்றைத் தாண்டி எவ்விதம் செல்வது

ஒருநேரம் ஓயவில்லை ஓய்வுக்கு வழியில்லை
போராட்டம் ஆகிப் போனதே வாழ்க்கை
இதற்கொரு முடிவு வருவது எப்போது
என்பதே எனக்குள்ள கேள்வியும் இப்போது

இதுஎன்ன வாழ்க்கை எனப்புரியாது
அனுதினம் சோர்ந்து தவிக்குது மனது
இதற்காகத்தானா நீயெமைப் படைத்தாய்
எனத் தெரியாமல் கலங்குது மனது

என்னவோ போகட்டும் என்னவோ ஆகட்டும்
இப்போ தப்பிக்க வழிமட்டும் தேவை
கேள்விக்கு பதிலெல்லாம் பிறகு தரலாம்
ஆகிற வழியை இப்போது பார்க்கலாம்

தத்துவம் பேச நேரம் கிடையாது
தர்க்கங்கள் செய்ய தெம்பும் கிடையாது
பிழப்பத்துப் போயி இதையெல்லாம் பாட்டாக
எழுதிட எனக்கு விருப்பமும் கிடையாது

நெருப்பிலே நின்று தவித்திடும் போது
வீணான ஆராய்ச்சி வேண்டாம் இப்போது
தப்பிக்க வழியொன்று தந்தால் அதுபோதும்
பிறகு செய்யலாம் மேற்கொண்டு ஆராய்ச்சி

திருப்பூந்துருத்தி, 13-9-2017, மாலை, 5.10

Song 737

ஒரு ஆனந்தம்
மவுனம் என்ற யாழினை மீட்டி
மோனம் என்ற இராகத்தைக் கூட்டி
தாழ்ந்து பணிந்து தாளத்தைப் போட்டு
ஆனந்த நடனம் ஆடுவேன் நானும்
சிந்தை முழுதும் உன்னிலே வைத்தது
ஸ்ருதிகள் ஐதிகள் அத்துடன் சேர்த்து
அடவு அசைவு அழகாய் அமைத்து
ஆனந்தத் தாண்டவம் ஆடுவேன் நானும்
இராகத்திற் கேற்ப்ப தாளமும் பிறக்கும்
தாளத்திற் கேற்ப்ப ஆடலும் இருக்கும்
ஆடலுக் கேற்ற பாடலும் பிறக்கும்
பாடலும் பாட பக்தியும் சிறக்கும்
பக்தியால் உன்னைப் பணிகின்ற போது
முக்தியின் அனுபவம் தன்போல் கிடைக்கும்
பக்தியால் முக்தி கிடைத்த பின்னே
பரவசம் ஒன்றே என்னுளே நிலைக்கும்
பாரினில் வாழ்வது இதனைப் பெறவே
பக்தனாய் வாழ்வது பாதமே தொழவே
பக்தியும் செய்வது முக்தியைப் பெறவே
முக்தியும் அடைவது பேரருள் பெறவே
அனுதினம் இதுஎன் அனுபவமாச்சு
அதனை அருள்வதுன் கடமையு மாச்சு
அதனைப் பெறுவதென் உரிமையுமாச்சு
அதையும் பாடுதல்என் வழக்கமே ஆச்சு
திருப்பூந்துருத்தி, 13-9-2017, காலை, 4.00
738 ஆராய்ச்சி வேண்டாம்
நீயாக வந்து மீட்பைத் தரும்வரை
நானாக மீண்டிட நம்பிக்கை கிடையாது
தானாக வந்துதான் மாட்டிக் கொண்டேன்
ஆனாலும் தாமதம் நீசெய்யக் கூடாது
நீசொன்ன பாதையில் நான்போன போதும்
இடையினில் எத்தனை இடையூறு வந்தன
எதனாலே வந்தது எவறாலே வந்தது
என்பதெல்லாம் எனக்கு நிச்சயம் தெரியாது
உன்துண கொண்டு அவைதாண்டி வந்தாலும்
பின்னாக பலவும் தொடர்ந்தே வருகுது
அத்துடன் எதிரே ஆயிரம் நிற்குது
அவற்றைத் தாண்டி எவ்விதம் செல்வது
ஒருநேரம் ஓயவில்லை ஓய்வுக்கு வழியில்லை
போராட்டம் ஆகிப் போனதே வாழ்க்கை
இதற்கொரு முடிவு வருவது எப்போது
என்பதே எனக்குள்ள கேள்வியும் இப்போது
இதுஎன்ன வாழ்க்கை எனப்புரியாது
அனுதினம் சோர்ந்து தவிக்குது மனது
இதற்காகத்தானா நீயெமைப் படைத்தாய்
எனத் தெரியாமல் கலங்குது மனது
என்னவோ போகட்டும் என்னவோ ஆகட்டும்
இப்போ தப்பிக்க வழிமட்டும் தேவை
கேள்விக்கு பதிலெல்லாம் பிறகு தரலாம்
ஆகிற வழியை இப்போது பார்க்கலாம்
தத்துவம் பேச நேரம் கிடையாது
தர்க்கங்கள் செய்ய தெம்பும் கிடையாது
பிழப்பத்துப் போயி இதையெல்லாம் பாட்டாக
எழுதிட எனக்கு விருப்பமும் கிடையாது
நெருப்பிலே நின்று தவித்திடும் போது
வீணான ஆராய்ச்சி வேண்டாம் இப்போது
தப்பிக்க வழியொன்று தந்தால் அதுபோதும்
பிறகு செய்யலாம் மேற்கொண்டு ஆராய்ச்சி

திருப்பூந்துருத்தி, 13-9-2017, மாலை, 5.10

Song 736

வாய்ப்பே இல்லை
இறைவனும் பாவம்
இனியென்ன செய்வான்
இதைவிட நமக்கு
புரிய வைப்பான்
பிறர்குறை நாம்காண
முயன்றிடும் போது
நம்குறை நமக்கு
காட்டியே கொடுப்பான்
எத்தனை எத்தனை
குறைகள் காண்கிறோம்
எத்தனை விளக்கங்கள்
அவற்றுக்கும் தருகிறோம்
நம்குறை ஒன்றை
காட்டிடும் போது
என்னமாய் அதனை
நியாயப் படுத்தறோம்
பிறர்வந்து சொல்லிடத்
தேவையே இல்லை
பிறர்தரும் விளக்கங்கள்
தேவையும் இல்லை
தன்நெஞ்சே தன்னைச்
சுட்டிடும் போது
தடுத்திட நமக்கு
வாய்ப்புமே இல்லை
இதைத்தான் இறைவன்
நமக்கென வைத்தான்
தப்பிக்க இயலாது
நமக்குள்ளே தைத்தான்
தன்நிழல் தன்னுடன்
வந்திடும் வண்ணம்
நம்நெஞ்சை நமக்கே
நீதியாய் வைத்தான்
ஆயினும் அதையும்
அலட்சியம் செய்து
அதைக்கூட அடக்கி
வைத்திட முயல்வோம்
எத்தனை முயன்றும்
வென்றிட இயலாது
இறுதியில் இறைவனை
திட்டியும் தீர்ப்போம்
பாவம் அவனும்
பொறுமையாய்க் கேட்டு
பிறகு நாமும்
புரிந்திட வைப்பான்
அதன்பின் முடிவை
நம்மிடம் விடுவான்
அதன்படி நம்மை
வாழ்ந்திடச் சொல்வான்
இதைவிட அவனுக்கு
வழியேதும் இல்லை
நம்மைத் திருத்த
மார்க்கமும் இல்லை
தீர்ப்பை நம்கையில்
தந்த பின்பு
தப்பிக்க நமக்கு
வாய்ப்புமே இல்லை

திருப்பூந்துருத்தி, 12-9-2017, மாலை, 6.30

Song 735

நீயே சொல்
நன்மைகள் சின்னதாய் செய்துகொண்டு
நாள்தோறும் உன்னையும் பாடிக்கொண்டு
நல்லவிதமாக நாட்களைக் கழித்து
நாதனே உன்னிடம் வந்துமே சேரணும்
நீதந்ததிந்த வாழ்கையும் தான்
நீயே தந்ததிந்த தேகமும் தான்
அதையும் நன்கு புரிந்துகொண்டு
அதன்படி அனுதினம் வாழவேண்டும்
எல்லோர் மீதும் குத்தம் சொல்லி
எல்லாவற்றிலும் குற்றம் கண்டு
என்நீதி தன்னையே பறை சாற்றி
இனிமேலும் வாழாமல் இருக்கவேண்டும்
நல்லதை சொல்லத்தான் நாவும் தந்தாய்
நல்லதை எண்ணிட சிந்தை தந்தாய்
முடிந்ததை செய்யத்தான் மேனிதந்தாய்
முதலில் இதைத்தான் எண்ண வேண்டும்
இதுவரை செய்த தப்பினையே
இனிமேலும் செய்யாமல் இருக்கவேண்டும்
இப்படிச் சொல்லியே தோற்றது பலமுறை
இனிமேலும் தோற்காமல் இருக்கவேண்டும்
அதற்கு உன்காவல் தேவை இன்னும்
அடிக்கடி நீயதை நினைக்க வேண்டும்
அதையுமே நீசெய்ய மறந்துவிட்டு
அடியேனைக் குறைசொல்லா திருக்கவேண்டும்
இப்போதான் உனக்கு நானும் சொன்னேன்
இனிமேலும் குறைசொல்ல மாட்டேனென்று
ஆயினும் அதையும் மறந்துவிட்டு
ஐயனே உன்மீதே கூறிவிட்டேன்
என்னநான் செய்வது நீயே சொல்லு
எப்படித் திருந்த, வழியும் சொல்லு
பாட்டிலே எழுதிக் காட்டிவிட்டால்
போதாது மீதியை நீயே சொல்லு

திருப்பூந்துருத்தி, 12-9-2017, காலை,7.45

Song 734

ஒருவித பயம்
வெளியாக எத்தனை
வேடமே போட்டாலும்
உள்ளாக ஒருவித
பயமொன்று இருக்கு
எப்படி அமையும்
எதிர்காலம் என்று
எனக்குள் ஆயிரம்
கேள்விகள் தோன்றுது
எதன்மீதும் பற்று
எனக்குமே இல்லை
எவரையும் சார
என்மனம் துணியலை
எந்த இடமும்
நிம்மதி தரவில்லை
என்மீதே எனக்கு
நம்பிக்கை வரவில்லை
ஏதோ போகுது
காலம் தன்போல
என்னையும் மீறி
ஓடுது தன்போல
இழுத்து நிறுத்த
எனக்கில்லை வலிமை
இழுத்தாலும் நிற்காது
இதுதான் உண்மை
காலத்தின் போக்கில்
போவதைத் தவிர
மாற்றொன்று எனக்கு
வேறொன்றும் இல்லை
இதையெல்லாம் உனக்கு
சொல்வது எதற்கு
என்பது மட்டும்
புரியுது எனக்கு
உன்னைத் தவிர
புரிந்திட பிறரக்கு
நேரமும் பொறுமையும்
எங்கே இருக்கு
இதைத்தான் உன்னிடம்
சொல்லிட வந்தேன்
இந்த வேண்டுதல்
கேட்டிடு என்றேன்
இதுவும் கூட
நீதந்த ஒன்று
அதுதான் எனக்கு
மிகவும் நன்று

திருப்பூந்துருத்தி,11-9-2027, காலை, 12.50

Song 733

பொறுமை இல்லை
ஏனென்று கேளாமல் இருப்பதென் தவறா
எதைநீ செய்தாலும் பொறுப்பதென் தவறா
நானென்ற எண்ணத்தை அழித்தது தவறா
நாதனே நானுனைப் பணிந்தது தவறா
ஏனிதைக் கேட்கிறேன் என்பது தெரியும்
எனக்குநீ செய்த நன்மைகள் தெரியும்
ஆயினும் என்மன சஞ்சலம் அறிந்தும்
அமைதிநீ கொள்ள என்ன காரணம்
நொடிகள் தோறும் மாறுது மனது
நிலையற்று தன்போல் பலதிசை ஓடுது
ஒருமுகப் படுத்த முயன்றுமே தோற்றேன்
அதனால் இத்தனை கேள்விகள் கேட்டேன்
ஒன்றிலும் மனது உறுதியாய் இல்லை
ஒன்றிலும் பற்று அதற்குமே இல்லை
பொறுப்பென சிலவற்றை தந்த போதும்
அவற்றை செய்ய பொறுமையும் காணோம்
ஒருவித சோம்பல் வந்தது மனதில்
உடலொடு உயிரும் சோர்ந்தது அதனுள்
உயிர்ப்பிக்க பலமுறை முயன்றுமே பார்த்தேன்
உன்மீதும் கோபம் கொண்டதால் கேட்டேன்
எனக்கினி இயலாது என்பதே உண்மை
இதுதான் இன்றைக்கு எனது நிலமை
உனக்கிதை சொல்வது எனக்குமே நன்மை
இதற்குமேல் சொல்ல எனக்கில்லை பொறுமை

திருப்பூந்துருத்தி, 11-9-2017, காலை, 11.30

Song 732

கையேந்துங்கள்
தொண்டரே எல்லோரும் வாருங்கள்
துதித்து ஐயனைப் பாடுங்கள்
நன்று நன்று என்று சொல்லும்படி
நாள்தோறும் அவனைப் போற்றுங்கள்
உண்டு உறங்கியே வாழ்ந்துவிட்டோம்
உடலின் தேவைக்குத் தேடிவிட்டோம்
மனதின் தேவையை மறந்துவிட்டு
மணணுலகில் வீணாய் வாழ்ந்திருக்கோம்
எத்தனைப் பெற்றாலும் போதவில்லை
ஏக்கமோ முற்றாகப் போகவில்லை
தேகமே தேய்ந்துதான் ஓய்ந்தாலும்
மனதின் ஆசைகள் மறையவில்லை
தேடித்தேடி தேகமும் ஓய்ந்தது
சேர்த்தவை எல்லாம் ஓடியும்போனது
ஆயினும் நாட்டமோ போகவில்லை
ஆகையால் தேடலும் முடியவில்லை
இறுதி வரையில் இப்படியே
இங்குமே வாழ்ந்து முடித்தபின்னே
மறுமைக்கு வழி என்னஉண்டு
மனதில் இதையும் எண்ணிடுவீர்
உடலில் உயிரும் உள்ளபோதே
உள்ளத்தில் ஆரவமும் வந்தபோதே
சித்தத்தை அத்தன்பால் வைத்துவிடு
சீக்கிரம் வாழ்வும் முடியும்முன்னே
இன்றைக்கு அதற்கும் நேரம்தந்தான்
இன்னுமே ஒரு வாய்ப்பும்தந்தான்
காலமும் கைவிட்டுப் போகும்முன்னே
கையேந்தி அவனை வேண்டிடுவீர்

திருப்பூந்துருத்தி, 11-9-2017, காலை, 5.00

Song 731

நீதான் எல்லாம்

அடித்தாலும் அணைத்தாலும் கரம் ஒன்றுதான்
அளித்தாலும் மறுத்தாலும் அருள் ஒன்றுதான்
வென்றாலும் தோற்றாலும் கதி ஒன்றுதான்
சேர்த்தாலும் தடுத்தாலும் பதம் ஒன்றுதான்
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நீ மாறாயே
போற்றினும் மறுக்கினும் நீ மறுக்காயே
நினைந்தாலும் மறந்தாலும் நீ மறக்காயே
கேட்டாலும் விட்டாலும் நீ மீறாயே
புரிந்தாலும் குழம்பினும் நீ தெய்வம்தான்
ஏற்றாலும் மறுத்தாலும் நீ மீட்பன்தான்
வந்தாலும் விலகினும் நீ காப்போன்தான்
பணிந்தாலும் முரண்டாலும் நீ ஆள்வோன்தான்
இவற்றை அறிந்தபின் கதி வேறில்லை
இவற்றை மறுத்தாலோ மீட்பே இல்லை
இதைச் சொல்ல எனக்குத் தயக்கம் இல்லை
இதனாலே எனக்குத் தாழ்ச்சி இல்லை
உன்னாலே மீட்பை அடைந்த பின்னே
உனைப் போற்றி பாடாத நாவும் வீணே
உன்னோடு அனுதினம் வாழ்ந்த பின்னே
இதனினும் பேறின்பம் நான் தேடேனே

திருப்பூந்துருத்தி, 10-9-2017, மாலை, 7.00