Category Archives: Tamil Songs

Tamil Song 396

அன்பின் வடு

அந்த நாட்களை எண்ணிடும் போது
அருவியென கண்களில் நீருமே பாயுது
அளவளாவிக் குலவி வாழ்ந்துமே இருந்தோம்
அன்பெனும் வெள்ளத்தில் நீந்தியும் இருந்தோம்

ஊடலில் ஒருநாள் எல்லை மீறினோம்
ஒருவரை ஒருவர் தாக்கியே பேசினோம்
இறுதியில் இருவரும் காயம் அடைந்தோம்
இனிவேண்டாம் என உறவினை இழந்தோம்

ஆயினும் அடிமன ஆழத்தில் இருந்த
அன்பெனும் ஊற்றை மூட மறுத்தோம்
ஒருவருக்காக ஒருவர் ஏங்கியே
சோக வெள்ளத்தில் மூழ்கியே கிடந்தோம்

தூதென அனுப்ப ஒருவரும் இல்லை
தேறுதல் தந்திட ஆட்களும் இல்லை
இந்த நிலையில் இருவரும் மருக
இறுதியில் இதய ஏக்கதை உணர்ந்தோம்

ஏங்கிய இதயம் நம்மையும் நெருக்க
ஒருவருக்கொருவர் காத்துமே கிடந்தோம்
இருவரும் அழுதோம் பிறருக்காக
அழுதபின் இருவரின் அன்பையும் புரிந்தோம்

அழுதபின் இருவரின் அன்புமே புரிந்தது
அழுகையே புண்ணுக்கு மருந்தாக ஆனது
ஆறிய புண்ணும் அன்பின் வடுவாகி
அதன்பின் நம்மை மீண்டும் சேரத்தது

குருகுலம், 22-10-2017, காலை, 10.30

Tamil Song 395

வாழணும் அனுபவித்து

எங்கேயும் எப்போதும்
எவரையும் எதற்கேனும்
எவ்விதமும் எதிர்க்காதே
எடுத்தெறிந்து பேசாதே

சிறுதுரும்பு ஆனாலும்
பல்குத்த உதவும்
சிந்தையில் இதைவைத்து
எவரையும் புறக்காதே

மூத்தாலும் கூட
முட்டுக்கு உதவுவாள்
என்கிற முதுமொழியை
எப்போதும் மறவாதே

என்னாலே எல்லாம்
ஆகும் எனஎண்ணி
இறுதியில் தோல்வியால்
ஏமாற்றம் அடையாதே

கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை
என்ற கூற்றில்
உண்டு நன்மை

இதை மனதில்வைத்து
பிறரை அனுசரித்து
வாழ்வை சுதந்தரித்து
வாழணும் அனுபவித்து

குருகுலம், 19-10-2017, இரவு 11.50

Tamil Song 394

எப்படி வாழ்வது

உணராமல் இருப்பதால்
உதவாது போகிறேன்
உணர்ந்தாலும் உடனே
மறந்துமே போகிறேன்

நரவேடம் எடுத்து
நடிக்கின்ற போதும்
என்னை முழுதாய்
அறியாமல் இருக்கிறேன்

அறிவின் துணைகொண்டு
ஆராய்ந்து பார்க்கிறேன்
அத்துடன் மனதிடம்
அடிக்கடி கேட்கிறேன்

எத்தனை முயன்றாலும்
என்னைநான் புரியாது
பித்தனைப் போலவே
பிதற்றியே திரிகிறேன்

புரிகின்ற திறனுமே
எனக்கும் இல்லையே
புரிந்தாலும் அதன்படி
வாழவும் இல்லையே

வாழ்கின்ற வாழ்வும்
புரியவே இல்லையே
வாழ்கின்ற போதும்
புலப்பட வில்லையே

இதுவும் ஒருவிதம்
எனக்குமே நல்லது
எல்லாமே புரிந்தால்
எப்படி வாழ்வது

குருகுலம், 18-10-2017, இரவு 11.30

Tamil Song 393

வேடிக்கைப் பொருளல்ல

வேண்டும் போது கொண்டாடி
வேண்டாம் என்றால் பந்தாடி
வேடிக்கையாக வாழ்ந்தாலே
வினையாய்ப் போகும் வாழ்க்கையுமே

நமக்கென பிறரும் பிறக்கவில்லை
நாம் பந்தாட வாழவில்லை
அதையும் அறிந்து வாழணுமே
அடுத்தவர் வலியைப் புரியணுமே

வேடிக்கை காட்டப் பிறக்கவில்லை
வேடிக்கை பொருளாய் மாறவில்லை
வேடிக்கை ஆக்கிப் பார்க்காதே
வேதனை தந்து மகிழாதே

ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவந்தான்
உலகில் வாழப் பிறந்தவன்தான்
உணர்ந்து அவனுடன் இணைந்துகொண்டு
உலகில் அதனைக் கொண்டாடு

குருகுலம், 18-10-2017, இரவு, 11.10

Tamil Song 392

துரத்தாமல் ஓடுறோம்

ஒடுகின்றோமா நாம்
ஒருவரும் துரத்தாமல்
ஒளிகின்றோமா நாம்
ஒருவரும் தேடாமல்
பாடுகிறோமா நாம்
ஒருவரும் கேட்காமல்
தேடுகின்றோமா நாம்
ஒன்றுமே தொலைக்காமல்

அவசர கதியிலே
ஓடுது உலகு
அதிலே பிறருக்கு
நேரமும் கிடையாது
தனக்கே நேரம்
இல்லாத போது
அடுத்தவர்க் கெல்லாம்
இடமே கிடையாது

வசதிகள் ஆயிரம்
வந்த பின்னாலே
வாழ்வினைத் தொலைத்து
ஓடுறோம் அவைபின்னே
ஓடித் தேடிய
வசதிகள் கிடைத்தும்
வாழத்தான் காணோம்
அவைகளினாலே

நாள்தோறும் புதிய
வரவுகள் வந்தன
நேற்றுனாம் பெற்றவை
பழசாகிப் போயின
இன்றைய தேவைக்கே
உதவாது போனபின்
நாளைய குப்பையாய்
நிச்சயம் மாறின

நாளைய தேவைக்கு
இன்றுநாம் தேடுறோம்
நேற்றுநாம் பெற்றதை
துக்கியே போடுறோம்
அனுதினம் இதுஒரு
தொடராகிப் போனபின்
ஓடத்தான் செய்கிறோம்
ஒருவரும் துரத்தாமல்

குருகுலம், 15-10-2017, இரவு 11.50

Tamil Song 391

பொறுப்பு

பொறுப்பென வந்ததை
பொறுப்புடன் ஏற்கணும்
திறமையாய் அதையும்
செய்து முடிக்கணும்
அதற்கு நிறைய
பொறுமையும் வேண்டும்
இல்லாது போனால்
விலகியே இருக்கணும்

விலகுவதால் மட்டும்
பொறுப்புமே போகாது
விரும்பாது போனாலும்
விடுதலை கிடையாது
பொறுப்பன்றி உலகில்
பிறந்தவர் இல்லை
பொறுப்பற்று வாழ
முடிவதும் இல்லை

துறந்தபின் துறவிக்கும்
பொறுப்புகள் உண்டு
தொடர்ந்து பாரம்
சுமப்பதும் உண்டு
துறவும் ஒருவித
பொறுப்பான பின்பு
பொறுப்பைத் துறந்த
துறவி எங்குண்டு

படைப்பில் உள்ள
அனைத்து உயிரும்
அவற்றின் நிலைக்கு
ஏற்ற விதத்தில்
பலவிதப் பொறுப்பை
சுமந்தே வாழுது
அதைப்பற்றி நினைவு
அறவே இன்றி

ஆறறி வுள்ள
மனிதன் மட்டும்
அதுபற்றி பலவித
ஆய்வுகள் செய்து

ஆயிரம் கருத்துகள்
அனுதினம் கூறி
வீணே நேரத்தை
விரையம் ஆக்குறான்

பிறந்தது முதல்
போகின்ற வரை
இரண்டற வாழ்வில்
கலந்திட்ட ஒன்று
எவ்விதம் முயன்றும்
நீங்கா போது
இந்த பாடலும்
வேண்டா ஒன்று

குருகுலம், 13-10-2017, இரவு 11.50

Tamil Song 390

கோலை எடுக்கணும்

வாழ்வைத் தொலைத்து
வாழவும் மறுத்து
வாழ்வதும் வாழ்வா
மனதினுள் நிறுத்து

ஒருமுறை கிடைத்த
உலகின் வாழ்வை
உணர மறுத்தால்
மடமை ஆகும்

பிஞ்சிலே பழுத்து
வெம்பியே போனால்
எஞ்சிய வாழ்வு
நரகம் ஆகும்

உணவும் ஆகாது
விதைக்கும் உதவாது
குப்பைக்குப் போவதே
அதன் விதியாகும்

தன்வாழ்வை கெடுத்து
பிறர்வாழ்வைக் குலைத்து
தறுதலை ஆனதால்
பயனனென்ன கண்டார்

பெற்றவர் பாரம்
புரிவதும் இல்லை
பிறர்படும் துயரம்
உணர்வதும் இல்லை

இளமைத் துடிப்பில்
எதையேனும் செய்து
இழப்பது வாழ்வென
புரிவதும் இல்லை

சொல்லியும் திருந்தாது
தொடர்ந்து செய்தால்
திருத்திட நாம்தான்
கோலை எடுக்கணும்

குருகுலம், 13-10-2017, காலை. 6.45

Tamil Song 389

விஜியின் காதல்

காதல் செய்பவன்
கவிதை எழுதினால்
கேட்பவர் காதில்
இரத்தம்தான் வரும்

காதல் தோல்வியில்
கண்ணீர் விட்டால்
காண்பவருக்கு
சிருப்புதான் வரும்

காதலில் எழுதும்
கவிதைகள் எல்லாம்
போதையில் உளறும்
வார்த்தைகள் ஆகும்

காதல் தோல்வியில்
விடுகின்ற கண்ணீர்’
அடுத்த காதல்
வருகின்ற வரைக்கும்

காதல் என்பதும்
திருமணம் வரைதான்
அதன்பின் வருவது
கண்ணீர் மட்டும்தான்

இளமையில் தோன்றும்
காதலுக்காக
முதுமை மட்டும்
கண்ணீர் விடணும்

இதனை அறிந்தும்
ஏற்க மறுத்து
காதல் செய்வது
மடமை ஆகும்

மடமை என்பதை
அறிந்த பின்னும்
காதல் செய்வது
வேடிக்கை ஆகும்

வேடிக்கை காட்ட
காதல் செய்தால்
வேடிக்கை ஆக
வாழ்க்கையும் மாறும்

வேடிக்கை காட்ட
விஜய குமாரும்
ஆயத்தம் ஆனான்
வந்துமே பாரும்

குருகுலம் 11-10-2017, காலை 10.10

Tamil Song 388

மழை

இப்படிச் செய்தால்
எப்படி உய்வது
இயற்கையும் இப்படி
பழியேன் வாங்குது

காவிரி நீர்தர
கன்னடர் மறுத்தனர்
கண்ணீர் சிந்தி
உழவரும் அழுதனர்

நீதியும் கேட்டு
முறையீடு செய்தனர்
தாமதம் ஆக
திகைத்துமே போயினர்

இறுதியில் இயற்கையை
கேட்டுமே பார்த்தனர்
அதுவும் மறுக்க
கலங்கியே போயினர்

இறைவனும் சற்று
பொறுமையும் காத்தான்
இருப்பக்க நியாயத்தை
கவனமாய்க் கேட்டான்

இருபக்கத் தேவையை
அறிந்த பின்னாலே
எவ்விதத் தீர்ப்பையும்
அள்ளிக்கவும் மறுத்தான்

விதிவிட்ட வழியென்று
விதையைப் போட்டனர்
விண்ணை நோக்கி
ஓலமும் இட்டனர்

அவரின் கண்ணீர்
ஆவியாய் மாறி
ஆகாயம் ஏறி
மழையாய்ப் பெய்தது

அழுததற்கேற்ப
மழையும் பெய்ய
அணைகள் எல்லாம்
நிரம்பி வழிந்தன

நீர்தர மறுத்த
கன்னடர் முகத்தில்
கரியைப் பூச
பெய்தே அழித்தது

இடையில் பருவ
காலமும் தொடங்க
அந்த மழையும்
சேர்ந்து கொண்டது

இரவு பகலென
இடைவிடாமல்
இப்போ மழையும்
கொட்டித் தீர்க்குது

விதைத்தவர் இப்போ
திகைத்துமே போய்
போதும் நிறுத்தென
இறைவனைக் கேட்கிறார்

ஆனால் பாவம்
அவனென்ன செய்வான்
மனிதனின் தவறுக்கு
மாற்றென்ன காண்பான்

இதுபோல் தவறை
இனிமேல் செய்யாமல்
இணக்கமாய் இருக்க
நமக்குமே சொன்னான்

இதுவரை இறைவனின்
பேச்சைக் கேளாதோர்
இனிமேல் எப்படி
கேட்பார் அவன்சொல்

குருகுலம், 11-10-2017, காலை 6.30

Tamil Song 387

இனிமையில்லை தனிமையில்

தனிமை கூட ஒருவிததில் கொடுமைதான்
அது வருவதுமே பலர்வாழ்வில் துயரம்தான்

குடும்பமாக வாழ்ந்து அவர் பழகிவிட்டார்
கூட்டத்திலே கலந்திருந்து மகிழ்ந்து விட்டார்
உரசுவதால் மனதும் உடலும் ஓய்ந்தபோதும்
உறவுடனே வாழ்வதையே விரும்புகிறார்

சொந்த பந்தம் சுற்றமுடன் பிறந்ததினால்
உற்றம் சுற்றம் நண்பரோடு வளர்ந்ததினால்
எத்தனைதான் விரிசல் உறவில் வந்தபோதும்
என்றைக்குமே தனித்திருக்க விரும்பமாட்டார்

தனித்துமே பிறந்து நாமும் வந்தபோதும்
போகும் போது தனித்துமே போனபோதும்
இடையினிலே உறவுடனே வாழ்ந்தபின்னே
தனித்துவாழ இதயமுமே மறுத்துவிடும்

இதையும்கூட புரிந்தது தானே நானும் சொன்னேன்
இதயத்திலே விளங்கியதால் விளக்கிச்சொன்னேன்
ஒருமுறை தனிமையிலே வாழ்ந்தபின்னே
ஒருபோதும் அதையும் அவர் நாடமாட்டார்

அறிந்ததால் இதையும் கூட உனக்குச் சொன்னேன்
அதையும் நீயும் புரிந்துகொள்ள வேண்டிக் கொண்டேன்
ஆகையினால் தனித்து நீயும் வாழ்ந்திடாதே
என்னைப் போல இருந்திடவும் எண்ணிடாதே

குருகுலம், 10-10-2017, காலை 6.30