Song 553

மீண்டும் ஏற்றுக்கொண்டாய்

என்னைப் போன்ற மூடன் மட்டும்
உன்னை விட்டே ஓடிடுவான்
இராஜ போக வாழ்வை விட்டு
நாயைப் போல அலைந்திடுவான்

சொந்த வீட்டில் சுதந்திரமாய்
சுகமாய் நலமாய் வாழ்ந்து வந்தேன்
பன்றி போலச் சாக்கடையில்
புரண்டு பார்க்க ஆசைகொண்டேன்

வீட்டுக்கு வீடு பிச்சைக்கேட்டு
வெறும் கையோடு திரும்பிவந்தேன்
எச்சில் சோற்றுக்கு ஏக்கம் கொண்டு
எத்தனை இலைகள் புரட்டிப் பார்த்தேன்

கல்லாலும் கம்பாலும் அடிபட்டேன்
கண்டவர் பலரும் திட்டக் கேட்டேன்
ஒரு கைபிடி சோற்றுக்காக
ஊரெங்கும் நானும் சுற்றி வந்தேன்

வெள்ளித் தட்டில் வகைவகையாய்
விரும்பி உண்டதை எண்ணிக்கொண்டேன்
தங்கக் கிண்ணத்தில் பால் குடித்த
சமயங்களை எண்ணிப் பார்த்தேன்

என்னை நானே நொந்து கொண்டு
திரும்பி உந்தன் வாசல்வந்தேன்
ஓடி வந்து ஏற்றுக் கொண்டு
வீட்டிற்குள் மீண்டும் சேர்த்துக் கொண்டாய்

மத்திகிரி, 19-10-16, மதியம் 1.45