Song 556

நேரம் ஒதுக்கு

உனக்கென நேரம் ஒதுக்கிவிட்டேன்
உன்னிடம் பேச வந்து விட்டேன்
எனக்கென நேரம் தந்திடுவாய்
என்னுடன் பேசிட வந்திடுவாய்

எனக்குள்ள கவலைகள் உனக்கில்லை
என்போல் பாரம்நீ சுமக்கவில்லை
உன்சித்தம் செய்யப் பலருண்டு
அதன்பின் உனக்கென்ன பாரமுண்டு

ஒருமுறை உலகிற்கு வந்திருந்தாய்
ஒருமுறை எமக்காய் உயிர்தந்தாய்
அதன்பின் உயரத்தில் சென்றுவிட்டாய் (ஒளிந்துகொண்டாய்)
அதனால் என்நிலை மறந்துவிட்டாய்

உனக்கென குடும்பம் இருந்திருந்தால்
உறவுகள் நெருக்கங்கள் தந்திருந்தால்
அதனையும் நீயும் புரிந்திருப்பாய்
அதன்படி எமக்கும் செய்திருப்பாய்

தப்பித்து வாழ எண்ணம் கொண்டு
“தனிமை” வாழ்வைத் தெரிந்து கொண்டு
“துறவு” வேடமும் போட்டுக்கொண்டு
திரும்ப வந்து மாட்டிக்கொண்டேன்

இதையே நீயும் செய்தாயா
என்போல் பாரம் சுமந்தாயா
அதனால் உனக்குத் தெரியாது
என்நிலை உனக்கும் புரியாது

துதித்துப் போற்ற எண்ணம் கொண்டு
அதற்கென நேரமும் ஒதுக்கிக்கொண்டு
உன்னிடம் வந்து நிற்கும் முன்னே
ஆயிரம் வேலைகள் முந்திக்கொள்ள

அவற்றை எல்லாம் முடித்துக் கொண்டு
அதன்பின் உன்னிடம் வருவதற்குள்
அவசரப்பட்டு போகாதே
அதிகம் ஆத்திரம் கொள்ளாதே

பொறுமையாகக் காத்திருந்து
புலம்பினால் முழுமையாய்க் கேட்டிருந்து
அப்புறம் முடிவுக்கு வந்துவிடு
அதற்கும் நேரம் ஒதுக்கிவிடு

மத்திகிரி, 24-10-16, காலை 5.45