Song 559

நீயே மருந்து

நன்மைகள் மட்டும் பெறுவதற்கு
நாளும் நாங்களும் விரும்புகிறோம்
நல்லதை மட்டும் செய்வதற்கு
நாங்களும் உன்னிடம் வேண்டுகிறோம்

குறை கொஞ்சமும் உண்டானால்
கூடவே வந்திடும் கோபமது
நிறைவாய் எல்லாம் தந்துவிட்டால்
கொண்டாடும் எமது மனமிது

போதும் இனி வேண்டாமென
ஒருபோதும் மனம் சொல்லிடாது
நெருப்பில் மீண்டும் நெயூற்ற
அணையும் பேச்சே கிடையாது

பாவம் நீயும் என்னசெய்வாய்
பலவிதம் சொல்லிப் பார்க்கின்றாய்
அதன்பின் என்வழி விடுகின்றாய்
அடிபட்டுத் திருந்தச் சொல்கின்றாய்

பலமுறை பட்டேன் திருந்தவில்லை
பழைய குணமும் போகவில்லை
என்ன செய்வேன் தெரியவில்லை
நீயன்றி இதற்கு மருந்தில்லை

மத்திகிரி, 24-10-16, மாலை 5.30