Song 569

உறவின் மேன்மை

நம்போல் பிறரையும் இறைவனே படைக்க
நாம்மட்டும் எவ்விதம் தனிப்பட்டு இருக்க
ஊருடன் உறவுகள் அவன் தந்திருக்க
ஒதுங்கி எப்படி நாம்மட்டும் வாழ்ந்திருக்க

உறவன்றி உலகத்தில் ஒன்றுமே இல்லை
உறவின்றி எவையுமே வாழ்வதும் இல்லை
ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றுப் போனால்
ஒருபோதும் அவற்றாலே பயனேதும் இல்லை

அசையும்-அசையாப் படைப்புகள் அனைத்தும்
அடுத்தவையோடு தொடர்பு வைக்கும்
அவற்றைத் தனியே பிரித்து வைத்தாலும்
புதிய தொடர்புகள் உருவாக்கும்

அசையும் படைப்பில் நமக்குமட்டும்
ஆறாம் அறிவைச் சேர்த்துத் தந்தான்
அதனால் உறவின் மேன்மை அறிய
அன்பையும் பண்பையும் வகுத்துத்தந்தான்

உறவுகள் வேண்டாம் என்று வாழ்ந்தால்
ஊருக்கும் உறவுக்கும் நட்டமில்லை
உறவின் உன்னதம் உணர்ந்து வாழ
எவருக்கும் எவ்விதக் கஷ்டமில்லை

மத்திகிரி, 9-11-16, இரவு 11.10