Song 576

இந்த வரம்வேண்டும்

நீதர வரும்போது நானினி மறுப்பேனோ
நீவந்து ஆட்கொள்ள நானதைப் புறப்பேனோ
நீசொல்ல வரும்போது கேட்கவும் மறப்பேனோ
நினைவெல்லாம் நீயாள அதையுமே தடுப்பேனோ

இதற்கெனத் தினம்தோறும் ஏங்கியே தவித்தேனே
எனைத்தந்து உனைப்பெற நானுமே வந்தேனே
உன்னுள்ளே எனைவைத்து உவகையால் திளைத்தேனே
உனைப்போற்றும் வரம்மட்டும் அனுதினம் கேட்பேனே

ஏதோ புரியாத தவிப்புக்கு ஆளானேன்
உன்னிடம் அதைச்சொல்ல விரைந்தோடி நான்வந்தேன்
அருகில் வந்தபின் அனைத்தும் நான்மறந்தேன்
அமைதியாய் உன்னடி தன்னையே நான்பணிந்தேன்

உன்னிரு கரம்நீட்டி என்னிரு தோள்பற்ற
என்னையே மறந்து உன்மீது நான்சாய்ந்தேன்
கண்மூடி உன்மார்பில் என்சிரம் நான்வைக்கக்
கனிவுடன் எனைச்சேர்த்து உன்னுள்ளே புதைத்தாயே

அதன்பின் நடந்தது எனக்குமே நினைவில்லை
அந்நிலை விவரிக்க என்னிடம் மொழியில்லை
அதை மீண்டும் இழந்திட எனக்குமே மனதில்லை
அந்தப் பேரின்பம் துறந்திடத் துணிவில்லை

இதுபோன்ற நிலைஒன்றில் என்னுடல் நான்நீக்க
இரண்டற உன்னுடன் என்னையும் நீசேர்க்க
இனிவேண்டாம் புவிவாழ்வு என்றுமே நானேங்க
இந்த வரம்வேண்டி வந்தேன் உன்னைக் கேட்க

மத்திகிரி, 16-11-16, இரவு 11.100