Song 578

மனதின் குரல்

முற்றும் துறக்க முடியவில்லை
முழுதும் அறிய ஞானமில்லை
சிலபல தவறுகள் செய்துவிட்டு
திருந்தி வாழப் பழகிக்கொண்டேன்

ஆளுக்குத் தகுந்த வேடமிட்டு
அதற்கு ஏற்ப நடித்துக்கொண்டு
இறுதியில் என்நிலை புரிந்துகொண்டு
என்னை நானே அறிந்துகொண்டேன்

உள்ளே நீயும் இருந்துகொண்டு
ஓசைப்படாமல் பார்த்துக்கொண்டு
தேவைப்பட்டால் எடுத்துச்சொல்லி
திருத்திக் கொள்ளவும் சொல்கின்றாய்

சத்தம் போட்டுக் கூறமாட்டாய்
சட்டென அதட்டிச் சொல்லமாட்டாய்
அமைதியாக என் மனத்துள்ளே
அதையும் புரிய வைத்திடுவாய்

மனதின் குரலாய் இருந்துகொண்டு
மெளனம் என்ற மொழிகொண்டு
புரியும் படியாய் எடுத்துச்சொல்லித்
திருந்திடும் வழியைக் காட்டுகிறாய்

உன்னைப் பெற்றேன் குருவாக
அருளைப் பெற்றேன் நிறைவாக
எண்ணத்தைத் தந்தேன் தெளிவாக
என்றும் வாழ்வேன் உனக்காக

மத்திகிரி 18-11-18, மதியம் 2.25