Song 580

மடைதிறந்த வெள்ளம்

ஊருக்கும் உலகுக்கும் சொல்ல வேண்டி
ஒன்றும் செய்யா திருக்க வேண்டும்
உனக்கும் எனக்கும் உள்ள உறவைக்கூட
ஊர்பேசச் சொல்லா திருக்க வேண்டும்

என்னவோ என்னுள்ளத்தில் வாஞ்சை வைத்தாய்
ஓயாது உன்னருள் பாட வைத்தாய்
சில நொடிகளேனும் உன்னிடம் வந்து
சிந்தையை உன்னிடம் சொல்ல வைத்தாய்

இந்த உறவின் உன்னதம் பற்றி
எனக்கே ஒன்றும் புரியாத போது
வார்த்தைகள் கொண்டு எண்ணத்தை வடிக்க
வழிவகைகூட எவ்விதம் கிடைக்கும்

உள்ளான ஒரு உந்துதல் வருது
உன்னிடம் பேசிட உந்தியே தள்ளுது
உவந்தே வந்து உன்னிடம் பேசிட
ஊற்றுப் பெருக்காய் வார்த்தைகள் கொட்டுது

தர்க்கங்கள் ஆயிரம் செய்துமே பார்த்தேன்
தடைகள் பல போட்டுமே பார்த்தேன்
தடையை மீறியே பாயும் நீர்போல
திறந்த மடையாகச் சொற்களைக் கண்டேன்

ஒருபக்கம் நான் உடைப்பை அடைக்க
பல உடைப்பிலே பாயுது நீரும்
தடுத்து எவ்விதப் பயனும் இல்லை
தடுத்து நிறுத்த வழியும் இல்லை

ஆகவே இதையும் எழுதி வைத்தேன்
அடுத்தவர் புரிய வேண்டி அல்ல
உன்னுடன் எனக்குள்ள உறவைச் சொல்ல
இன்னொரு பாடலும் தேவையும் அல்ல

மத்திகிரி, 19-11-16, மதியம் 2.35